*இன்று போய் நாளை வா*
எப்போதோ தினமணி நாளிதழில், சம்பூர்ண ராமாயணம் படத்தில், *இன்று போய் நாளை வாராய்* என்ற பாடல் காட்சியை கம்பனின் இரு பாடல்களை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட ஒரு கட்டுரையை படித்தேன். வெகு நாட்களாக அதை ஒரு விரிவான கட்டுரையாக எழுத நினைத்திருந்தேன். இன்று அது கைகூடியது.
गच्छानुजानामि रणार्दितस्त्वं प्रविश्य रात्रिंचरराज लङ्काम् |
आश्वस्य निर्याहि रथी च धन्वी तदा बलम् द्रक्ष्यसि मे रथस्थः ||
க³ச்சா²நுஜாநாமிரணார்தி³தஸ்த்வம் ப்ரவிஶ்ய ராத்ரிம்சரராஜ லங்காம் |
ஆஶ்வாஸ்ய நிர்யாஹி ரதீ² ச த⁴ந்வீ ததா³ ப³லம் த்³ரக்ஷ்யஸி மே ரத²ஸ்த²꞉ ||
[வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம் (6 - 59 - 142)]
ராமன் சொல்கிறான், "நீ போகலாம். உனக்கு நான் அனுமதி அளிக்கிறேன். இன்று நன்றாக யுத்தம் செய்து அடிபட்டு களைத்து இருக்கிறாய். மீண்டும் இலங்கைக்குள் போய் களைப்பை போக்கிக் கொண்டு ஒரு தேரையும் வில் அம்புகளையும் எடுத்துக் கொண்டு நாளை மீண்டும் யுத்தத்துக்கு வா. அப்போது என் பலத்தை நான் காண்பிக்கிறேன்."
இதைக் கம்பனின் வரிகளில்,
ஆளய்யா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளையாயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா என நல்கினன், நாகு இளங்கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.
(முதல் போர் புரி படலம் -
7271)
இதுதான் அந்தப் பாடல். முதல் நாள் யுத்தத்தில் போர்க்களத்தில் இராவணன் நிராயுதபாணியாக நிற்கும் நிலை கண்டு இராமபிரான் அவனை இன்று போய் ஓய்வு எடுத்துக் கொள், போர்க்கு நாளை வா, என்று பெருந்தன்மையோடு அனுப்பி வைக்கும் காட்சி இது.
இந்த பாடலில் கண்ட "ஆள் ஐயா" எனும் சொல்லுக்குப் பல பொருள் சொல்லலாம். முதலாவது, மூவுலகங்களையும் ஆளும் வல்லமை படைத்த ஐயா. இரண்டாவது, வேதங்களை எல்லாம் கற்று சிவபெருமானைத் தன் சாமகானத்தால் வயப்படுத்திய ஐயா என்பது. மூன்றாவது, சர்வ வல்லமை படைத்த நீ இன்று வெறுங்கையனாய் நிற்கும் பரிதாபத்திற்குரிய ஐயா என்பது. நான்காவது, எல்லா குண நலங்களும் இருந்தும் பிறன் மனை நோக்கி பீடிழந்த ஐயா என்பது. இப்படிப் பல பொருள் சொல்லலாம். என்ன ஆளய்யா நீ…! என்பதுபோன்ற குறிப்பு.
தன் எதிரிக்கு உயிர் பிச்சை அளித்துப் போருக்கு இன்று போய் நாளை வா என்று சொன்ன வள்ளன்மையை என்னென்பது? இங்கு கம்பனின் சொல்லாண்மை வெளிப்படுகிறது. நவின்றான், பகன்றான், செப்பினான், உரைத்தான், என்ற சொற்களைத் தவிர்த்து *நல்கினன்* என்றான். நல்குதல் என்றால் அருள் செய்தல். இங்கு ராவணனுக்கு உயிர் பிச்சை அருளினான். அதனால்தான் கம்பன் இங்கு இராமனை "கோசல நாடுடை வள்ளல்" என்றும் அந்த கோசல நாட்டை வாளை மீன்கள் தாவிக்குதிக்கும் வளமிகுந்த கோசல நாடு என்றும் கூறுகிறான்.
அப்போது இராவணனின் நிலை என்ன? மானுடரை மிகத் தாழ்வாக எண்ணுபவன் இராவணன். அப்படிப்பட்ட ராவணன், தன்னை ஒரு மானுடன் 'இன்று போய் நாளை வா' என்றானே என்று வருந்துகிறான். அவன் ஊர் திரும்பிய காட்சி பரிதாபமானது. தலை குனிந்து, மகுடங்களை இழந்து வெறும் தலையனாய், கையில் ஆயுதங்கள் எதுவுமின்றி, உடலெங்கும் காயத்துடன், மனம் முழுதும் வருத்தம் மேலிட, மண்மகள் முகம் நோக்கி மெல்ல நடக்கும் காட்சி நம் கண்முன் வந்து நிற்கிறது.
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையே மீண்டு
போனான்.
(கும்பகர்ண வதைப் படலம் -
7272)
மருப்பு ஒடிய அடர்த்த பொன்-தோள்
(சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலம் 3070)
இராவணன் திக்கு விசயப் பொழுதில் ஐராவதம், புண்டரீகம், வாமநம், குமுதம்,
அஞ்சனம், புட்ப தந்தம், சார்வ பௌமம், சுப்பிரதீகம் என்ற எட்டுத் திசை யானைகளோடு
பொருத, அவற்றின் கொம்புகள் இவன் தோள்களின்
வலிமையால் முறிந்தன என்பர்.
எட்டு திசைகளையும் காக்கும் யானைகளோடு மோதி போரிட்டு, அதனால் அவற்றின் தந்தங்கள் தனது மார்பில் புக, அவற்றை அப்படியே ஒடித்து விட்டு, மார்பில் தந்தங்கள் பதியப் பெற்ற பெருமையை உடையவன்.
அடுத்து,
*வரையினை எடுத்த தோள்*.
இராவணன் சிறந்த சிவ பக்தன். உலகை சுற்றி வரும்போது திருக்கயிலாய மலை பக்கமாக வந்தான். அந்த திருக்கயிலாய மலையை சுற்றிச் செல்வது நமது வீரத்திற்கு இழுக்கு என்று கருதி அம்மலையை அகற்றி வேறு பக்கமாக வைத்துவிட்டு செல்வதென முடிவெடுத்தான்..
அதன்படி, மலையை பெயர்க்க முற்பட்டபோது, மலையின் ஆட்டத்தைக்கண்டு உமையவள் அஞ்ச, அதைக்கண்ட இறைவர், தனது கால் விரலால் சற்றே திருக்கயிலாய மலையை அழுந்தினாராம். அதில் இராவணன் சிக்கிக் கொண்டு பரிதவித்தான்.
இராவணன் தனது தலையில் ஒன்றை பிய்த்து, கைகளில் ஒன்றை பிய்த்து, நரம்புகளை பிய்த்து - அதன் வழி ஒரு வீணை செய்து சாம கானம் வாசித்தான் என்பதும், அதைக் கேட்டு மகிழ்ந்த இறைவர் இராவணனை மன்னித்து வரம் பல தந்து மகிழ்ந்தார்.
முன்நிற்பவர் இல்லா முரண் அரக்கன் வடகயிலை
தன்னைப்பிடித்து எடுத்தான் முடி தடந்தோளிறவூன்றிப்
பின்னைப் பணிந்து ஏத்தப் பெருவாள் பேரொடும் கொடுத்த….
(முதல் திருமறை -
திருவீழிமிழலை - 01-011-8)
நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை
உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற
வரங்கள் கொடுத்து அருள் செய்வான் வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து….
என்கிறார்.
(தேவாரம் - திருக்கெடில வடவீரட்டானம் 4
- 2 - 10)
பிறகு "நாரத முனிவருக்கேற்ப நயம்பட உரைத்த நாவுடையவன்". சாம கானத்தால் தன் நா வலிமையை நிலை நாட்டியவன். மாலைகளை அணிந்த மணிமுடிகளைத் தன் தலைகளில் தாங்கியவன். இயல்பாக இவனுக்கு அமைந்த வீரம். இத்தனைப் பெருமைகளையுடைய இராவணன், அவை அத்தனையையும் களத்தில் போட்டுவிட்டு வெறும் கையனாகத் திரும்பிப் போகிறான் என்று கம்பர் வர்ணிக்கிறார்.
இத்தனைப் பெருமைகளை உடையவன் அவற்றை எங்ஙனம் இழந்தான். பார்க்கலாமா?
*வாரணம் பொருத மார்பு*
முதல் நாள் யுத்தத்தில் அனுமனோடு நேருக்கு நேர் நின்று போரிட்ட போது அனுமன் விட்ட குத்து ஒன்றினால் அவன் மார்பில் பதிந்திருந்த அஷ்ட திக் கஜங்களின் தந்தங்கள் எல்லாம்
அனுமனின் குத்தின் விசையை உணர்த்துமாறு அவன் முதுகின் வழியே வெளியேறின. அதனால் அந்தப் பெருமை ஒழிந்தது.
கைக் குத்துஅது படலும், கழல்
நிருதர்க்கு இறை கறை நீர்
மைக் குப்பையின் எழில் கொண்டு ஒளிர்
வயிரத் தடமார்பில்,
திக்கில் சின மத யானைகள் வய வெம் பணை
செருவில்
புக்கு இற்றன, போகாதன, புறம் உக்கன,
புகழின்.
(முதற் போர்புரி படலம் – 7192)
*வரையினை எடுத்த தோளும்*
ப்ரம்மாஸ்திரத்தினால் மயங்கி விழுந்த இலக்குவனை தூக்க முயன்ற ராவணன் தூக்க இயலாது பெருமூச்சு விட்டான்.
மிடுக்கு இலாமையின், இராவணன்
வெய்துயிர்ப்பு உற்றான்;
இடுக்கில் நின்ற அம் மாருதி புகுந்து
எடுத்து ஏந்தி,
தடுக்கலாதது ஓர் விசையினின் எழுந்து,
அயல்
சார்ந்தான்.
(முதற்
போர்புரி படலம்
– 7228)
கைலை மலையை பெயர்த்தெடுத்த பெருமை அவன் தோள் வலிமைக்குச் சான்று கூறின. முதல் நாள் போரில் தோல்வியுற்று, மயங்கி கீழே சாய்ந்த இலக்குவனைத் தூக்க முடியாமல் தவித்திருந்த போது அனுமன் ஒரு குரங்கு தன் குட்டியைக் கவ்வி எடுத்துச் செல்வது போல மிக சுலபமாக இலக்குவனை எடுத்துச் சென்றபோது தன் தோள் வலிமை போய்விட்டது என்பதை உணர்ந்தான்.
*நாரத முனிவர்க்கேற்ப நயம் பட உரைத்த நாவு*
இந்தப் பெருமையை, இராமன் இவனைப் பார்த்து "போர்க்கு, இன்று போய் நாளை வா" என்றதும் நா உலர்ந்து அந்தப் பெருமையும் போயிற்று.
*தாரணி மவுலி பத்து*
மாலைகள் அணிந்த அவன் பத்துத் தலைகளிலும் அழகு செய்த கிரீடம். அவை அனைத்தையும் இராமன் ஒரே கணையினால் அடித்து வீழ்த்தி அந்தப் பெருமையை அழித்துவிட்டான்.
*சங்கரன் கொடுத்த வாள்* சந்திரஹாசம் அறத்திற்குட்பட்ட எந்த போரிலும் வெற்றி தர வல்லது. ஆனால் இராவணன் அறத்திலிருந்து மாறுபட்டு தர்மவான் ஜடாயுவை அதனால் கொன்றதனால் அதன் வீரியம் போய்விட்டது. சந்திரஹாசத்தின் பெருமை அழிந்தது. இறுதியாக அவனிடம் இருந்தது வீரம் ஒன்றுதான். அதுவும் போரில் தோற்று குனிந்த தலையுடன், பூமித்தாயின் முகம் பார்த்து மெல்ல நடந்த போது போயிற்று.
எல்லா பெருமைகளுக்கும் சொந்தக்காரனாக இருந்த இராவணன் முதல் நாள் போர் முடிந்ததும், ஒரே நாளில் அத்தனைப் பெருமைகளையும் இழந்து மிகச்சாதாரண நிலைக்குத் தள்ளப்பட்டான். பெருமையோடு தலை நிமிர்ந்து ஆணவத்தோடு ஆட்சி புரிந்த இராவணன் ஒரே நாளில் அத்தனை பெருமைகளையும் இழந்து தலை குனிந்து இன்று சாதாரண மனிதனாக நடந்து செல்லுகிறான்.
அதுவும் எப்படி,
மாதிரம் எவையும் நோக்கான், வள நகர் நோக்கான், வந்த
காதலர் தம்மை நோக்கான், கடல் பெருஞ் சேனை நோக்கான்,
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித் தனி
நோக்க,
தான் அப்
பூதலம் என்னும் நங்கைதன்னையே நோக்கிப் புக்கான்.
(கும்பகர்ணன்
வதைப்படலம் – 7274)
{மண்
மகள் முகம் கண்டே
மனம் நலிந்திடும் நிலையின்று
– கண்ணதாசன்}
வான் நகும்; மண்ணும் எல்லாம்
நகும்;--நெடு வயிரத்
தோளான்--
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று,
அதற்கு
நாணான்;
வேல் நகு நெடுங் கண், செவ்வாய், மெல்
இயல்,
மிதிலை வந்த,
சானகி நகுவள்--என்றே நாணத்தால் சாம்புகின்றான்.
(யு.கா-
கும்பகருணன் வதைப்படலம் 7282)
மீண்டும் சந்திப்போம்.
அன்பன்,
சந்தான சேகர்,