சாளரம்தோறும் சந்திர உதயம்
கம்பனைப்போல் பெண்(களின்) முகத்தை நிலவோடு ஒப்பிட்டு வர்ணிப்பது கம்பனுக்கே உரித்தானது.
காட்சி: பால காண்டம்
(மிதிலை காட்சிப் படலம்.)
சீதையின் சுயம்வரத்துக்காக விஸ்வாமித்திரர், ராமன் இலக்குவனுடன் மிதிலை நகருக்குள் நுழைகிறார். சுயம்வரத்துக்கு வரும் மன்னர்களையும், வீரர்களையும் காணும் ஆர்வத்துடன், அரண்மனைக்குச் செல்லும் சாலைகளின் இருபுறமும் மக்கள் கூட்டம். இருபுறமும் மாளிகைகளின் உப்பரிக்கைகளின் சாளரங்கள் வழியே பார்க்கும் அழகிய பெண்களின் ஒளிபொருந்திய முகங்களை வர்ணிக்கிறான் கம்பன்.
வாளரம் பொருத வேலும்,
மன்மதன் சிலையும், வண்டின்
கேளொடு கிடந்த நீலச்
சுருளும், செங் கிடையும். கொண்டு,
நீளிருங் களங்கம் நீக்கி,
நிரை மணி மாட நெற்றிச்
சாளரம்தோறும் தோன்றும்
சந்திர உதயம் கண்டார்.
அரத்தால் (file) தீட்டப்பட்ட வேல் போன்ற கூர்மையான விழிகளும், மன்மதனின் வேல் போல வளைந்த புருவங்களும், வண்டுகளின் நிறத்தைப் போன்ற கருநீல மணிச்சுருளும், செந்நிற மணிகளால் ஆன நெற்றிச்சுட்டியும் அணிந்த முகங்கள், முத்து-மணிகளினாலும், ரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்ட மணி மாடங்களின் நெற்றிப் பகுதியான உப்பரிக்கைகளின் ஒவ்வொரு சாளரத்திலிருந்து பார்க்கும் ஒவ்வொரு பெண்ணின் முகமும் ஒவ்வொரு சந்திரன் உதயமாவது போலவே தோன்றுகிறதாம்.
அதுவும் எப்படிப்பட்ட சந்திரன்? நீளிருங்களங்கம் நீக்கிய, அதாவது, வானத்து நிலவுக்கும் கருமையானதொரு களங்கம் உண்டு. அதுகூட இல்லாமல் ஒளிரும் முகம்.
என்ன ஒரு கற்பனை! எத்தனை அழகிய வர்ணனை!!
ஒரு கவியரங்கத்தில்நான் முதலில் கேட்ட இந்த ஒரு பாடலே என்னைக் கம்பனிடம் ஈர்த்தது.
அடுத்த பதிவில் மீண்டும் கம்பனை ரசிப்போம்.
No comments:
Post a Comment