Popular Posts

Friday, 25 July 2025

நான் ரசித்த கம்பன் பாகம் 2

கண்ணொடு கண் நோக்கின்


விஸ்வாமித்திரரும், ராம லக்ஷ்மணர்களும் அரண்மனையை நெருங்குகிறார்கள். அங்கே கன்னிமாடத்தில் சீதை நிற்கிறாள். அந்தக் காட்சியைக் கம்பர் இப்படி வர்ணிக்கிறார்:

பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல்,

தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம்,

கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு

அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்.

(பாடல் 502)

தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியதுபோன்ற ஓர் உருவம், கன்னி மாடத்தில் நிற்கிறது. அங்கே அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே சீதை தோன்றுகிறாள்.

அப்பேர்ப்பட்ட சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்குகிறது:

எண்ண அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக்

கண்ணொடு கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று

உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட,

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.

(பாடல் 514)

நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள்.

[இந்தக் காட்சி வால்மீகியில் இல்லை. அங்கே ராமன் வில்லை உடைத்தபிறகுதான் சீதையைப் பார்க்கிறான். அதிலிருந்து சற்றே மாறுபட்டு, தமிழுக்காகக் கம்பர் வடித்துத் தந்த அற்புதமான பகுதி இந்த ‘மிதிலை காட்சிப் படலம்  பாடல்கள்.]

கண்களின் வழியே சீதைக்குள் நுழைந்த காதல் நோய், அவளுடைய உடல்முழுவதும் பரந்து வருத்தியது. அவள் துடிதுடித்தாள். சீதை பலவிதமாகப் புலம்பத் தொடங்குகிறாள். அவற்றுள் ஓர் அருமையான பாட்டு:

இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,

சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,

சுந்தர மணி வரைத் தோளுமே அல

முந்தி, என் உயிரை அம் முறுவல் உண்டதே!

(பாடல் எண் 536)

’என்னை வருத்துவது எது? இந்திர நீலம் என்ற உயர்ந்த கல்லைப்போல இருண்ட அவனுடைய தலைமுடியா? நிலவைப் போன்ற முகமா? நீண்ட கைகளா? அழகான ரத்தின மலை போன்ற தோள்களா?’

‘இவை எதுவுமே இல்லை, எல்லாவற்றுக்கும் முன்பாக, அவனுடைய உதட்டில் பரவிய அந்தப் புன்சிரிப்பு, அதுதான் என்னுடைய உயிரை உண்டுவிட்டது!’

சீதையைப் பார்த்துவிட்டு விசுவாமித்திரருடன் சென்ற ராமனும் அப்படிப்பட்ட ஒரு தவிப்பில்தான் சிக்கிக் கிடந்தான்.

விண்ணின் நீங்கிய மின் உரு. இம் முறை.

பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டேகொலோ?

எண்ணின். ஈது அலது என்று அறியேன்; இரு

கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால்.

(பாடல் எண் 619)

அதாவது, மின்னல் தோன்றித் தோன்றி மறைவதுபோல், சீதையின் உருவம் அடுத்தடுத்துத் தோன்றியும் மறைந்தும் நிகழ்வதை புறக்கண்ணாலும்    அகக்கண்ணாலும் காண்கிறானாம்.

திடீரென்று ராமனுக்கு ஒரு சந்தேகம். ‘ஒருவேளை, அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமானவளாக இருந்துவிட்டால்? என்னுடைய காதல் பிழையாகிவிடுமே!’ மறுகணம், அவனே தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்கிறான . இன்றைக்கு நான் இந்தப் பெண்ணைப் பார்த்துக் காதல்வயப்படுகிறேன் என்றால், அவள் எனக்கெனப் பிறந்தவளாகதான் இருக்கவேண்டும்.

பொழுது விடிகிறது. விசுவாமித்திரர் அவனை ஜனகரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்துகிறார். சிவ தனுசு கொண்டுவரப்படுகிறது. யாராலும் தூக்கக்கூடமுடியாத அந்த வில்லை ராமன் எடுத்துப் பூட்டி முறித்துவிடுகிறான்.

ராமனை எண்ணி மயக்கத்தில் இருக்கும் சீதைக்கு ராமன் வில்லை முறித்த செய்தியைக் தெரிவிக்க. ‘நீலமாலை’ என்ற தோழி சீதை இருக்கும் இடத்தை நோக்கி மூச்சு வாங்க ஓடுகிறாள். உற்சாகத்துடன் சீதையிடம் சொல்கிறாள்.

இராமன்’ என்பது பெயர்;  இளைய கோவொடும்.

பராவ அரு முனியொடும். பதி வந்து எய்தினான்;

(724)

மாத்திரை அளவில் தாள் மடுத்து. முன் பயில்

"சூத்திரம் இது” எனதோளின் வாங்கினான்;

ஏத்தினர் இமையவர்; இழிந்த. பூ மழை;

வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே!

(பாடல் 726)

"இளவரசியே, யாரோ ஒருவன், ராமன் என்று பெயராம் தம்பியோடும் முனிவரோடும் வந்தான், பெரிய சிவ தனுசைக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கையில் பிடித்துத் தூக்கினான், ஒரு பக்கத்து முனையைக் காலால் மிதித்தான், ஏற்கெனவே பலமுறை பழகிய ஒரு வில்லைக் கையாள்வதுபோல் சுலபமாக வளைத்தான், அதைப் பார்த்து வியந்த தேவர்கள் பூமாலை தூவிப் பாராட்டினார்கள், மறுகணம், அந்த வில் முறிந்து விழுந்தது, நம் அவையில் உள்ள எல்லாரும் நடுக்கத்துடன் அவனைப் பார்த்தார்கள்!"  என்றாள்.

சீதைக்கு மகிழ்ச்சி. காரணம், 'யாரோ ஒருவன், தம்பியோடும் முனிவரோடும் வந்தான்’ என்கிற வர்ணனை, அவள் மனத்தில் உள்ள அந்த ஆணுக்குப் பொருந்திப்போகிறது. வில்லை முறித்தவன் அவன்தானா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனாலும், அவனாகத்தான் இருக்கவேண்டும் என்று அவளுடைய உள்ளுணர்வுக்குத் தோன்றுகிறது.

மகிழ்ச்சி அடைந்த சீதை "நான் அவனை மனத்தில் நினைத்திருக்கிறேன், உடனே ஒருவன் தோன்றி என்னுடைய சுயம்வர வில்லை முறிக்கிறான், அப்படியானால் இருவரும் ஒருவராகதான் இருக்கவேண்டும்" என்று திருப்தி அடைகிறாள்.

ராமனுக்கும் அதே போன்ற ஒரு குழப்பம்தான். "வில்லை முறித்துவிட்டேன், அதற்காக ஓர் இளவரசியை எனக்குத் திருமணம் செய்து தரப்போகிறார்கள். ஆனால், இந்த இளவரசியும், நான் அன்றைக்குக் கன்னிமாடத்தில் பார்த்த அந்தப் பெண்ணும் ஒருவர்தானா? அதை எப்படி உறுதிசெய்துகொள்வது?"

இதற்கான வாய்ப்பு ராமனுக்கோ சீதைக்கோ உடனே கிடைக்கவில்லை. நெடுநேரம் கழித்து, (கோலம் காண் படலத்தில்) சீதையைத் தசரதன்முன்னால் அழைத்துவந்து அறிமுகப்படுத்தும்போதுதான், அவளும் ராமனும் மறுபடி சந்திக்கிறார்கள்.

ராமன் சீதையை நிமிர்ந்து பார்க்கிறான். குழப்பம் தீர்ந்து மகிழ்ச்சியடைகிறான். அந்தக் காட்சியை ஒரு மிக அழகான பாடலில் அளிக்கிறார் கம்பர்:

அன்னவளை அல்லள் என, ஆம் என அயிர்ப்பான்,

கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்,

உன்னு உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு,

இன் அமிழ்து எழக் களிகொள் இந்திரனை ஒத்தான்.

(பாடல் 1146)

சீதையை அங்கே பார்ப்பதற்கு முன்புவரை, ராமனின் மனத்தில் ஒரே தடுமாற்றம், "நான் அன்றைக்குப் பார்த்த பெண்ணும், இப்போது என் மனைவியாகப்போகிற இந்தப் பெண்ணும் ஒருவர்தானா? இல்லையா?" என்று தவிக்கிறான்.

இப்போது, அவளை நேரில் பார்த்தாகிவிட்டது. ‘அவள்தான் இவள்’ என்று ஆனந்தம் அடைகிறான். இங்கே ராமனை இந்திரனுக்கு ஒப்பிடுகிறார் கம்பர்.

இந்திரனுக்கும் ராமனுக்கும் என்ன சம்பந்தம்? பாற்கடலில் அமுதத்தைத் தேடிப் பல காலம் கடைந்தார்கள். அதிலிருந்து அமுதம் எழுந்து வந்தது. அதைக் கண்ட இந்திரன் மகிழ்ந்தான்.

அதுபோல, இன்றைக்குச் சீதை சபையில் எழுந்து நிற்கிறாள். அவளைக் கண்ட ராமனுக்குக் குழப்பம் தீர்ந்தது ஒருபக்கம், இன்னொருபக்கம், அவளைப் பார்த்து உறுதி செய்துகொண்டுவிட்ட காரணத்தால், போன உயிர் திரும்பக் கிடைக்கிறது, அதனால்தான் சீதையைக் ‘கன்னி அமிழ்தம்’ என்கிறார் கம்பர்.

ராமனின் சந்தேகம் தீர்ந்தது, சரி, ஆனால். சீதையின் நிலைமை என்ன?

எய்ய வில் வளைத்ததும், இறுத்ததும் உரைத்தும்,

மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடல் உற்றாள்,

ஐயனை அகத்து வடிவே அல, புறத்தும்,

கை வளை திருத்துபு கடைக்கணின உணர்ந்தாள்.

(பாடல் எண் 1153)

"ஒருவன் வில்லை வளைத்தான், உடைத்தான்" என்கிற செய்தி கேட்டதுமே சீதையின் சந்தேகம் பெருமளவு தீர்ந்துவிட்டது. என்றாலும், தன் மனத்தில் உள்ள அவன்தான் இங்கே நிஜத்திலும் இருக்கிறான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள அவள் விரும்பினாள். கையில் இருக்கும் வளையல்களைச் சரி செய்வதுபோல், ஓரக்கண்ணால் ராமனைப் பார்த்தாள், ’அவனே இவன்’ என்று மகிழ்ந்தாள்.

அப்புறமென்ன? காதல் நோயால் வாடிக் கிடந்த சீதையின் உடல் மீண்டும் பழையபடி ஆகிறது. 'ஆரமிழ்து அனைத்தும் ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள்’ என்கிறார் கம்பர். ‘அரிய அமுதம்' முழுவதையும் தனி ஆளாகக் குடித்துவிட்டவளைப்போலப் பூரித்துப்போனாள்.

இப்படியாக, அன்றைக்குக் கன்னிமாடத்தில் தொடங்கிய பார்வை நாடகம், இங்கே ஓர் ஓரப்பார்வையில் வந்து இனிதே முடிகிறது!

அடுத்த பதிவில் மீண்டும் கம்பனை ரசிப்போம்.

No comments:

Post a Comment