*முதலாழ்வார்கள்* (பாகம் 2)
*பொய்கையாழ்வார்*
வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள்
முதலாழ்வார் ஆவார். காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில்
திருவெஃகா எனும் பதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலுள்ள பொய்கையில்
பிறந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி
எனப்படுகின்றது. முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.
*பெயர்காரணம்*
காஞ்சிபுரத்தில் பொற்றாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எனப்
பெயர் பெற்றார்.
*பாஞ்சஜன்ய அம்சம்*
சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப்
பிறந்தவர்கள் என்பது வைணவ கொள்கை. இதன்படி பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம் எனப்படும்
சங்கின் அம்சம் ஆவார்.
*பூதத்தாழ்வார்*
வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள்
ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார்.
மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப்
பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இது நூறு
வெண்பாக்களால் ஆனது.
*அவதாரத்தலம்*
மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலை அண்டிய பகுதியிலேயே இவர் பிறந்ததாகக்
கருதப்படுகிறது. இக் கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் இருந்ததாகத்
தெரிகிறது. இக் கோயிலின் வெளிச் சுவரிலே அதனைப் பூதத்தாழ்வாரின் அவதாரத்தலம் எனக்
குறிப்பிடும் அறிவிப்புப் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
*கௌமோதகி அம்சம்*
திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய
கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார் என வைணவம் நம்புகின்றது. திருமாலின் மீது
இவர் கொண்ட பக்தியைக் காட்டும் இவரது பாடல்களிலே இவருடைய தமிழ்ப் பற்றும்
புலப்படுகின்றது.
*பேயாழ்வார்*
வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள்
ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப்படும் மூன்று ஆழ்வார்களுள் ஒருவர். திருமயிலைஎன
வழங்கிய மயிலாப்பூரைச் சேர்ந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும்
வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் இவராவார், இது
நூறு வெண்பாக்களைக் கொண்டது.
*நந்தக அம்சம்*
சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப்
பிறந்தவர்கள் என்று வைணவம் நம்புகின்றது. இதன்படி பேயாழ்வார் நந்தகம் எனப்படும்
வாளின் அம்சம் கொண்டவர் என்கின்றனர்.
*சைவமும், வைணவமும்*
இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம், வைணவம் என்பவற்றுக் கிடையே போட்டி நிலவிய
கால கட்டத்தில், இவ்விரு சமயப் பிரிவுகளிடையே ஒற்றுமை காண விழைந்தவர் பேயாழ்வார்
எனக் கருதப்படுகிறார்.
இனி, திருமழிசை ஆழ்வாரின் வைபவத்தை அடுத்த பதிவில் காண்போம்.
ஆழ்வார், ஆச்சார்யன் திருவடிகளே சரணம்.
அடியேன்,
சந்தான சேகர்.
No comments:
Post a Comment