*முதலாழ்வார்கள் மூவர்* (பாகம் 1)
பொய்கையாழ்வார்,
பேயாழ்வார், பூதத்தாழ்வார் எனும் மூன்று ஆழ்வார்கள் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து
விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதல் மூன்று ஆழ்வார்கள். ஒரே காலத்தில்
வாழ்ந்தவராவார். இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம்
பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள்.
ஆனந்தம்
உள்ளடங்காமல் மேலே வழிந்து செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதி
முறையே முதல் திருவந்தாதி (பொய்கையாருடையது), இரண்டாம் திருவந்தாதி
(பூதத்தாருடையது), மூன்றாம் திருவந்தாதி (பேயாருடையது) எனப்பெயர் பெற்றன. இறைவனின்
நாடகம் உண்மையில் நடந்தது என்று இந்து சமயத்தார் நம்புவதற்கு இம்மூன்று
திருவந்தாதிகளிலுள்ள பாடல்களே முக்கிய சான்றுகளாகின்றன.
மூன்று
ஆழ்வார்களையும் ஒரு சேர்ந்து போற்றப்படும் காரணங்கள் பின் வருமாறு.
பொய்கையார்,
பூதத்தார், பேயார் ஆகிய மூவரும் முறையே அடுத்தடுத்த மூன்று நாட்களில்
அவதரித்தார்கள். இவர்கள் த்வாபர யுக முடிவுக்கும் கலியுக ஆரம்பத்திற்கும் இடையிலான
யுக சந்தியில் அவதரித்தார்கள்.
இவர்கள் மூவருமே
அயோனிஜர்கள் – அதாவது தாயின் கருவிலிருந்து பிறவாதவர்கள். இவர்கள் எம்பெருமானின்
தெய்வீக கருணையால் பூமியிலிருந்து தோன்றினர்.
இவர்கள் பிறந்ததிலிருந்தே எம்பெருமான் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் – எம்பெருமானால் பரிபூரணமாக அனுக்கிரகிக்கப் பட்டு, நாள் திங்கள் ஊழிதோறும் (சர்வ காலமும்) பகவத் அனுபவத்தில் திளைத்திருந்தவர்கள்.வாழ்வின் ஒரு தருணத்தில் சந்தித்துக் கொண்ட இவர்கள் மூவரும், அப்போதிலிருந்து ஒன்றாகவே தங்கவும், பற்பல திவ்ய தேசங்களுக்கு பயணிக்கவும் செய்தனர். இவர்கள் “ஓடித் திரியும் யோகிகள்“ – அதாவது எப்போதும் யாத்திரை செய்பவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே,வெவ்வேறு இடங்களில் பிறந்து எம்பெருமானை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தார். தனது அடியார்களை தனது உயிராக கொண்டிருக்கும் எம்பெருமான் (கீதை – *ஞானி து ஆத்ம ஏவ மே மதம்*) இவர்களை ஒரு சேர காண திருவுள்ளம் கொண்டான். ஆதலால் அவன் ஒரு தெய்வீக திருவிளையாடல் புரிந்து மூவரையும் திருக்கோவிலூருக்கு ஒரு இரவுப் பொழுதில் வரவழைத்தான்.
அந்த இரவு பலத்த மழை பெய்த காரணத்தால், நக்ஷத்திர ஒளியும் மறைந்து, எதிரில் இருப்பவர் தெரியாத அளவு மேலும் இருட்டானது. ஒருவர் பின் ஒருவராக ஒரு சிறிய கொட்டாரத்தை
(இடை கழி) வந்தடைந்தனர். அந்த இடமோ ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்கிற
அளவாகவே இருந்தது. மூவரும் வந்ததால் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் தங்கள் தங்கள்
முகவரியை பற்றி விசாரித்துக் கொண்டனர். அவர்கள், எம்பெருமானின் கல்யாண குணங்களையும், தங்கள் இறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கையில்
திடீரென்று எம்பெருமான் திருமாமகளோடு அந்த இருட்டு மிகுந்த இடை கழியில்
புகுந்தான். தன் அடியார்கள் இருக்கும் இடத்தில் தான் எம்பெருமானுக்கு எவ்வளவு ஆசை!
எவர் புகுந்தார் என்று பார்ப்பதற்காக, புகுந்தவன், அவர்களை நெருக்கத் தொடங்கினான். மூவரும் ஒருமித்த குரலில், “எம்மை யார் இப்படி நெருக்குவது” என்று வினவ, “விளக்கேற்றிப் பாரும்” என்ற விடை கேட்டது. அந்த மழையிலும் இருட்டிலும் விளக்குக்கு எங்கே போவது? ஆனால் இவர்கள் தெய்வப் பிறவிகள் ஆயிற்றே!! உடனே, பொய்கை ஆழ்வார்
வெளிச்சம் உண்டாக்க,
*வையம் தகளியா வார்கடலே நெய்யாக-*
*வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய*
*சுடராழி யான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை–*
*இடராழி நீங்குகவே*
என்று இவ்வையத்தை (உலகத்தை)
தகளியாக (விளக்கு), கடலை நெய்யாக மற்றும் கதிரவனை விளக்கொளியாக ஏற்றினார்.
பூதத்தாழ்வாரும் ஒளி உண்டாக்க,
*அன்பே தகளியா,
ஆர்வமே நெய்யாக*
*இன்புருகு சிந்தை
இடுதிரியா … நன்புருகி*
*ஞானச்சுடர்
விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு*
*ஞானத் தமிழ்
புரிந்த நான்.*
என்று, தன் அன்பையே
விளக்காக, ஆர்வத்தையே நெய்யாக மற்றும் தன் சிந்தையை (ஆன்மாவை) விளக்கொளியாக
ஏற்றினார்.
மேலே கூறியபடி
மற்ற இரண்டு ஆழ்வார்கள் ஏற்படுத்திய ஒளியில், பேயாழ்வார் கண்களில் முதலில் தென்பட்டது, நான்காவதாக வந்தவர் அணிந்திருந்த சால்வை சிறிதே விலக, அங்கே வீற்றிருந்த திருமகள்தான். திருமாமகளோடு
கூடிய சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையனான எம்பெருமானின் ஒப்பற்ற அழகினை கண்டு,
அதற்கு இவ்வாறு மங்களாசாசனம்
செய்கிறார்.
“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் – திகழும்*
*அருக்கண் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்*
*பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்–*
*என்னாழி வண்ணன் பால் இன்று”
கண்டதோடு
மட்டுமல்லாமல் தான் கண்டதை மற்ற இரு ஆழ்வார்களுக்கு காட்டியும் மகிழ்ந்தார் (கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் என்ற பேயாழ்வாரைப் பற்றிய திருவரங்கத்தமுதனாரின்
இராமானுச நூற்றந்தாதி பாசுர வரிகளை நினைவில் கொள்வது சுவை கூட்டும்)
இவ்வாறு
இம்மூவரும் இந்த லீலா விபூதியில் (நித்ய லோகமான ஸ்ரீவைகுண்டத்தை தவிர்த்த மற்றைய
லோகங்கள் லீலா விபூதியாகும்) இருக்கும் காலத்தில் திருக்கோவலூர் ஆயனையும் மற்றும்
பல திவ்ய தேச எம்பெருமான்களையும் ஒன்று கூடி அனுபவித்து மகிழ்ந்தனர்.
தனது ஈடு
வியாக்கியானத்தில் நம்பிள்ளை முதலாழ்வார்களின் பெருமைகளை தகுந்த இடங்களில்
வெளிக்கொணர்கிறார். அவற்றில் சில உதாரணங்களை நோக்குவோம்:
நம்மாழ்வார்
முதலாழ்வார்களைத் தான் புகழ்ந்து ஏற்றுவதாக தெரிவிக்கிறார். ஏனெனில்
முதலாழ்வார்கள் தான் முதலில் எம்பெருமானின் பெருமைகளை தேனிலும் இனிய தமிழில்
பாடினவர்கள்.
இன்கவி பாடும்
பரமகவிகள் – இங்கு நம்பிள்ளை, ஆழ்வார்களின் தமிழ் பெரும்புலமையைத்
தெரிவிப்பதற்காக, பொய்கையாரும் பேயாரும் பூதத்தாழ்வாரை எம்பெருமானின் கல்யாண
குணங்களை பாடுமாறு விண்ணப்பிக்க, அவரும் அங்கே அப்பொழுதே பாடியதைக் கொண்டு
குறிப்பிடுகிறார். இது எது போல் எனில்,
*பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன் நின்று*
*இரு கண் இளமூங்கில் வாங்கி, அருகிருந்த*
*தேன் கலந்து நீட்டும் ---*
பெண் யானை கேட்க ஆண் யானை எவ்வாறு, இரண்டு கணுக்களை உடைய இளசான மூங்கில் குருத்தைப் பிடுங்கி, அதை அருகிலுள்ள தேன்கூட்டிலுள்ள தேனில் தோய்த்துக் கொணருமோ அது போலவே, பூதத்தாழ்வாரும் தேன்போன்ற இனிய செந்தமிழ் பாக்களால் பாடினாராம் (இரண்டாம் திருவந்தாதி - 75 ஆம் பாசுரம்)
முதலாழ்வார்களுக்கு “செந்தமிழ்
பாடுவார்” என்னும் திருநாமமும் இருப்பதை குறிப்பிடுகிறார்.
பலரடியார்
முன்பருளிய – நம்மாழ்வாரின் திருவுள்ளத்தை நம்பிள்ளை இங்கு மிக அழகாக வெளிக்
கொணர்கிறார். இந்த பாசுரத்தில், ஸ்ரீ வேதவியாசர், ஸ்ரீ வால்மீகி, ஸ்ரீ பராசரர்
மற்றும் முதலாழ்வார்களுக்கு பதிலாக தன்னை திருவாய்மொழி பாடுவிக்க எம்பெருமான்
தேர்ந்தெடுத்து அருளாசி வழங்கியமையை ஆழ்வார் தெரிவிக்கிறார்.
*செஞ்சொற் கவிகாள்* – இங்கு நம்பிள்ளை முதலாழ்வார்களை “இன்கவி
பாடும் பரமகவிகள்” “செந்தமிழ் பாடுவார்” என்றெல்லாம் குறிப்பிட்டு, இவர்கள் அநந்ய
பிரயோஜனர்கள் (எம்பெருமானை பாடுவதற்கு கைம்மாறாக எதையும் எதிர்பாராதவர்கள்) என்று
கண்டு கொள்கிறார்.
மாமுனிகள் தனது
உபதேசரத்தினமாலையில் இவர்களை “முதலாழ்வார்கள்” என்று குறிப்பிட்ட காரணத்தை
அருளிச்செய்கிறார்.
*மற்றுள்ள
ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து*
*நற்றமிழால் நூல்
செய்து நாட்டையுய்த்த–*
*பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்கள் என்னும்*
*பெயரிவர்க்கு
நின்றதுலகத்தே நிகழ்ந்து.*
இம்மூன்று
ஆழ்வார்களும் ஏனைய ஏழு ஆழ்வார்களுக்கு முன்னே அவதரித்து இந்த நாட்டை தமிழ்
பாசுரங்களைக் கொண்டு உய்வித்தபடியால் இவர்களுக்கு “முதலாழ்வார்கள்” என்ற பிரபலமான
பெயர் ஏற்பட்டது.
மேலும் ஐப்பசி
ஓணம், அவிட்டம், சதயத்தின், புகழை முதலாழ்வார்கள்
இந்த மூன்று நாட்களில் பிறந்தபடியால் வெளிக்காட்டுகிறார் மாமுனிகள்.
பிள்ளை லோகம்
ஜீயர் தனது வியாக்கியானத்தில் சில அருமையான கருத்து கோணங்களை அருளிச்செய்கிறார்.
அவையாவன:-
முதலாழ்வார்கள்
பிரணவம் போல – எப்பொழுதும் தொடக்கமாகிற படியால்.
திருமழிசை ஆழ்வாரும்
இவர்கள் காலத்தில் அவதரித்தார் (துவாபர-கலியுக சந்தி / இடைவெளிக்காலம்).
இவர்களையடுத்து கலியுக தொடக்கத்தில் மற்ற ஆழ்வார்கள் ஒருவர் பின் ஒருவர்
அவதரித்தார்கள்.
முதலாழ்வார்களே
திராவிட வேதமாம் திவ்ய பிரபந்தத்திற்கு உயர்ந்த திராவிட மொழியில் (தமிழ்) அஸ்திவாரம்/
அடித்தளம் இட்டனர்.
பெரியவாச்சான்
பிள்ளையின் “திருநெடுந்தாண்டகம்” வியாக்கியான அவதாரிகையில் கண்டுகொண்டபடி,
முதலாழ்வார்கள் எம்பெருமானின் பரத்துவத்தில் ஆழங்கால் பட்டு அதிலே அதிகம்
ஈடுபட்டனர். இதனாலேயே இவர்கள் த்ரிவிக்ரமாவதாரத்தை அடிக்கடி போற்றி பாசுரங்கள்
பாடினர். மேலும் இயற்கையிலேயே அர்ச்சாவதார எம்பெருமான்கள் மீது எல்லா
ஆழ்வார்களுக்கும் ஈடுபாடு உண்டாதலால், பல அர்ச்சாவதார எம்பெருமான்களை இவர்கள்
மங்களாசாசனம் செய்தனர்.
இனி, இந்த முதலாழ்வார்கள் மூவரின் வரலாற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.
அடியேன்,
சந்தான சேகர்
No comments:
Post a Comment