*திருப்பாவை பாசுரம் 14*
இப்பாசுரத்தால் எழுப்பப்படும் அடியவள் மிகவும் சாமர்த்தியமாகப் பேசுபவள். கண்ணனிடம் தங்கள் ஆசையை எடுத்துச் சொல்லி எப்படியேனும் நிறைவேற்றித் தருவாள் என்று அவளையும் எழுப்பிக் கூட்டிச் செல்லுமாறு அமைந்துள்ளது.
வெட்கத்துக்குரிய தவறுகளை இழைத்தவர் கூட, கண்ணனைச் சரணடைந்து அவனிடம் முறையிட்டு, அவன் அருளுக்குப் பாத்திரமாக முடியும் என்பது இப்பாசுரத்தின் ஒரு செய்தி. 'நாக்கு' என்பது உண்பதற்கும், வீண் பேச்சு பேசுவதற்கும் அல்ல, இறைவனுடைய பெயர்களை சொல்லிப் பெருமை பாடுதலும், தாமறிந்த உயர்ந்த கருத்துகளைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லுதலுமே நாக்கு பெற்றதன் (பேச்சு வன்மை) காரணம், என்பது இப்பாசுரக் கருத்து.
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்,
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்,
செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்,
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்,
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்,
பங்கயக் கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்.
[உங்கள் வீட்டு புழக்கடைத் தோட்டத்தில் உள்ள சிறிய குளத்தில் செங்கழுநீர் மலர்கள் இதழ் விரிந்து, கருநெய்தல் மலர்கள் இதழ் குவிந்து (அழகாக) இருப்பதை காண்பாயாக! செங்கல் நிறத்தில் உடை (காவியுடை) தரித்த, வெண்மையான பற்களையுடைய தவசிகள், சங்கை முழங்கி அறிவித்தவாறு, தங்கள் திருக்கோயில்களைத் திறக்கச் செல்லுகின்றனர். அழகிய பெண்ணே! எங்களை முன்னரே எழுப்புவதாக நீ எங்களுக்கு வாக்களித்து விட்டு, அவ்வண்ணம் செய்யாமலிருந்தும், செய்யவில்லையே என்ற வெட்கம் துளியும் இல்லாதவளே! இனிமையான துடுக்கான பேச்சுடையவளே! துயிலெழுவாயாக! சங்கு, சக்கரம் தரித்து, விசாலமான திருக்கைகளையுடையவனும் தாமரை மலர் போன்ற சிவந்த கண்களையுடையவனுமான கண்ணபிரானின் பெருமைகளைப் பாடி நோன்பிருக்க வருவாயாக!]
*பாசுர விசேஷம்:*
அவதார பஞ்சகத்தின் கீழ் வரும் இப்பாசுரத்தில், "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்"என்பதன் மூலம் "பரவாசுதேவ நிலை" (பரம்) குறிக்கப்பட்டுள்ளது.
"இறைநெறியில் ஈடுபட்டு சரணம் புக" என்னும் ஜீவாத்மாக்களுக்கு, நல்லாசான் ஆனவர். இவர், இறைஞானத்தை அனுமானம், ப்ரத்யக்ஷம், சப்தமாகிய வேதம் (மறைகளனைத்தும் ஒலியின் வடிவிலேயே அருளப்பட்டவை) இவற்றின் வழியில், ஊட்டுகிறார். ஆசானைப் பணிந்து அணுகினால், இறைவனை அடைகின்ற சரணாகதி மார்கத்தை நமக்கு அவர் போதிப்பார் என்பது கருத்து.
ப்ரமாதா ஆகிய ஜீவாத்மா, அறிவைப் பெறுவது இந்தப் ப்ரமாணங்களால். அறிவைப் பெறும் வழிமுறைகளால், அடையும் ப்ரமேயமே (அறிந்துகொள்ளும் பொருள்) இறைவன். அவனே வீடு பேறை வழங்கவல்ல நாராயணன் என்பது இங்கு கருத்து.
மேலும், பிரத்யட்சம், அனுமானம், சப்தம் (சாத்திரம்) என்ற மூன்று பிரமாணங்களும் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டுள்ளன.
உங்கள் புழைக்கடை என்பது அனுமான பிரமாணம்
"தங்கள் திருக்கோயில் சங்கிடுவான்" என்பது பிரத்யட்ச பிரமாணம்.
எங்களை முன்னம் எழுப்புவான்" என்ற ஆப்த வாக்கியம் (சப்தம்) சாத்திரப் பிரமாணம்.
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து:
உலகப் பற்றுகளில் உழன்று கொண்டிருக்கும் ஒருவனுக்கு ஞானம் துளிர்க்கத் தொடங்குவது உள்ளர்த்தமாம்
ஆம்பல்வாய் கூம்பினகாண்
காமம், குரோதம் போன்ற அஞ்ஞானம் சார் உணர்வுகள் விலகின.
செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
மிக்க ஞானமுடைய ஆச்சார்யனின் சம்பந்தம் ஏற்படப் போவதை குறிப்பில் உணர்துவதாம்.
எங்களை முன்னம் எழுப்புவான்
நாங்கள் சம்சார பந்தம் என்ற நித்திரையிலிருந்து வெளிவர உத்தம அதிகாரியான நீயே அருள வேண்டும்!
நாணாதாய்
நாணம் என்பது தன்னடகத்தை மட்டும் குறிப்பதாகாது, அது அகங்காரத்தையும் குறிப்பதாம். அதனால், அகங்கார-மமகாரங்கள் அற்றவள் அப்பெண் என்பதால், "நாணாதாய்" என்ற பதம் அவளுக்கு பொருத்தமே!
நாவுடையாய்:
சகல சாத்திரங்களையும், வித்தையையும் பேசும் (நல்வாக்கு அருளும் ஹனுமன், உடையவர் போன்ற) சான்றோர் அனைவரும் நாவுடையவரே! அதனால், இதுவும் உறங்கும் பெண்ணின் சிறப்பையே சொல்கிறதாக கூறுவார்.
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
சங்கும் சக்கரமும் பரமனது பரத்துவத்தை உணர்த்துவதாம். பெருமானை உபாசனை செய்யும் மார்க்கத்தை உபதேசிக்க வேண்டுவது என்பது உள்ளுரை.
அடுத்து, திருப்பாவை பிரபந்தத்துக்கே மணி விளக்காக அமைந்த எல்லே இளங்கிளியே என்று துவங்கும் 15ம் பாசுரத்தை அனுபவிப்போம்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்,
அடியேன்,
No comments:
Post a Comment