Popular Posts

Sunday, 26 January 2025

திருப்பாவை 17a (இணைப்பதிவு)

 திருப்பாவை 17a

(இணைப்பதிவு)

நப்பின்னை வைபவம்


திருப்பாவையில் – நப்பின்னை

(இது நப்பின்னை பிராட்டியைப் பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரை)


நாளைய பாசுரம் முதல், தொடர்ந்து மூன்று பாசுரங்களில் ஆண்டாள் நப்பின்னையைப் பாடுகிறாள்.


18ல் நந்த கோபலன் மருமகளே நப்பின்னாய் என்றும், 19ல் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை  என்றும், 20ல் நப்பின்னை நங்காய்!திருவே! என்றும் கொண்டாடுகின்றாள். இந்த நப்பின்னையைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோமா?

திருப்பாவையில் மூன்று பாடல்களில் தொடர்ந்து (18,19,20) கோதை ஆண்டாள் தொல்குடியான ஆயர்குல நப்பின்னையை பற்றிக்  கூறுகிறாள். வேறு எந்தப் பிராட்டியின் பெயரையும் சொல்லவில்லை. கோதை ஆண்டாள் தன்னை ஆயர்குலத்தில் பிறந்தவளாகக் கருதிக்கொண்டு, பாவை நோன்பு இருப்பதால், இயல்பாகவே அவளுக்கு ஆயர்குலத்தில் பிறந்த நப்பின்னையின் மீது தனிப் பிரியம் ஏற்படுவது இயல்பு அல்லவா?

நப்பின்னை என்பது யார்?

யசோதையின் சகோதரனான கும்பன் என்ற நக்னஜித் அயோத்தியின் மன்னனாக இருந்தான். அவனுடைய மகளை சத்யா, சௌந்தர்யவதி என்றும் நக்னஜிதை என்றும் அழைத்தனர். இவள்தான் நப்பின்னை என்று வைணவப்பெரியோர் கருதுகின்றனர். இவள் கிருஷ்ணனுக்கு மாமன் மகளாகிறாள்.


நக்னஜித் வளர்த்துவந்த அடங்காக் காளைகள் ஏழினை, மிக நுட்பமாக ஏறுதழுவல் மூலம் வென்று கண்ணன் நக்னஜிதையின் கரம்பிடித்தான. (வெந்திறல் ஏறெழும் வென்ற வேந்தன் - பெரிய திருமொழி 2-2-4),  


நக்னஜித்துக்கு, சந்திரன், அசுவசேனன், சித்திராகு, வேகவான், விருசன், ஆமன், சங்கு, வசு, குந்தி என பத்து மைந்தர்கள். இருந்தனர் என்றும்,  "பத்திரவிந்தன்" முதலான பல மைந்தர் அவருக்கு இருந்ததாக, விஷ்ணு புராணம் சொல்கின்றது.

நக்னஜிதை என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். சத்யா என்றும் அழைக்கப்படும் இவள், எண்மரில் ஆறாவது ஆவாள். இவள் வரலாறு, பாகவதம், விஷ்ணு புராணம், ஹரிவம்சம், முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.

நக்னஜிதை, அயோத்தியிலிருந்து கோசல நாட்டை ஆண்ட மன்னன் நக்னஜித்தின் மகள் ஆவாள். சத்யை, கோசலை என்று இவளைப் பொதுவாக அழைக்கின்றன பாகவதம் முதலான நூல்கள். மகாபாரதமும், "சத்யா" என்ற எண்மனையாட்டியரில் ஒருத்தி பற்றிக் குறிப்பிடுகின்றது. 


இவளே தமிழ் மரபில் நப்பின்னையாக அறியப்படுகின்றாள் என்பர்.

பழந்தமிழ் இலக்கியங்கள் சிலப்பதிகாரத்திலும், சீவகசிந்தாமணியிலும் நப்பின்னை   பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கலித்தொகை (முல்லைக்கலி – மருதம் திணை) முதலான சங்க இலக்கியங்கள் அவளை மணக்கக் கண்ணன் ஏறுதழுவிய செய்தியைச் சொல்கின்றன.


1) சீவக சிந்தாமணியில்: (பாடல்  283)

நிலமகட்குக் கேள்வனும் நீள்நிரை நப்பின்னை_

இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே


2) இன்னிலை: எனும் நூலில்,

நப்பின்னை ஞாலம் ஒருங்கு அறிக

துப்பாராய்த் தூமலரின் மென்மையுறு தோற்றத்தே,

வைத்துய்க்க ஏமக் கிழத்தி அறிந்து.


3) சிலப்பதிகாரம்:

அ) ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன்

 தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண்

பிஞ்ஞையோடாடிய குரவை ஆடுதும் யாமென்றாள்"

இந்தப்பாடலில் நப்பின்னை பிஞ்ஞை என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறாள்.

பின்னை, நம்பின்னை, பிஞ்ஞை போன்ற பெயர்களில் ஆய்ச்சியர் குரவை முழுவதும் இடம்பெறுகிறாள் நப்பின்னை. 

அ)"வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்

பெய்வளைக் கையாள் நம் பின்னை தானாமென்றே

ஐ என்றாள் ஆயர் மகள்"


ஆ) கண்ணனும் அவன் அண்ணன் பலராமனும் நடுவே ஆய்மகளான பின்னையும் நிற்கும் கோலத்தில் ஆயர் குலப்பெண்கள் நடனமாடத் தயாராகிறார்கள். 

மாயவன் என்றாள் குரலை விறல் வெள்ளை

ஆயவன் என்றாள் இளிதன்னை- ஆய்மகள்

பின்னையாம் என்றாளோர் துத்தத்தை,

நப்பின்னையானவள் முல்லை நிலத்து தமிழ்க் கடவுள் மாயோனை மணந்த ஆயர் மகள். வள்ளியானவள் குறிஞ்சி நிலத்து தமிழ்க் கடவுள் சேயோனை மணந்த குறமகள்.


வடமொழி இலக்கியங்களில் காணக்கிடைக்காத  வள்ளி மற்றும் நப்பின்னை இருவரையும் பற்றி பழந்தமிழ் இலக்கியங்கள் மட்டுமே அதிகமாக பாடுகின்றன.

வைணவ இலக்கியங்கள், ஆண்டாள் தன் திருப்பாவையிலும் நம்மாழ்வார் பின்னை மணாளன்  என்றும், திருமழிசையாழ்வார்  பின்னைகேள்வ என்றும், இன்னும் பலவிதமாகவும், ஆழ்வார்கள் அருளிச்செயலான நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பலவிடங்களில் கண்ணனையும் நப்பின்னையையும் போற்றிப் புகழ்கின்றன.


சைவ இலக்கியங்களளில் மாணிக்கவாசகர், திருமாலை,  ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் என்றும், சுந்தரர் பின்னை நம்பும் புயத்தான் என்றும் பாடுகின்றனர்.


தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் நப்பின்னை பற்றிய குறிப்புகள், வேறெந்த வடமொழி இலக்கியங்களி்லும் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. எனவே யாரிந்த நப்பின்னை என்பதில் இன்றளவும் குழப்பம் நீடிக்கின்றது. பொதுவாக நப்பின்னையை, சுபத்திரை, நீளாதேவி, ராதை, நக்னசித்தி, ஆகியோருடன் இணைத்தே ஆய்வாளர்கள் தத்தம் வாதங்களை முன்வைக்கின்றனர்.


காலத்தாற் பிந்திய திருவள்ளுவமாலையின் பாடலொன்றில், இவள் உபகேசி என்ற பெயரில் சுட்டப்படுகின்றாள்.

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான். உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப

என்பது திருவள்ளுவமாலையில் உள்ள பாடல். உபகேசி என்பது "நப்பின்னைப் பிராட்டியார்" என்று நேமிநாத உரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.


தமிழ் நாட்டில் மட்டும் வழங்கி வந்த நப்பின்னை வரலாற்றை நெல்லிநகர் வரதராச ஐயங்கார் தம் காவியத்தில் சேர்த்துக் கொண்டுள்ளார். நப்பின்னைப் படலம் என அப்பகுதிக்குப் பெயரிட்டு, யசோதையின் தமையன் கும்பகன் மகள் நப்பின்னை என்று குறிப்பிட்டுள்ளார்.

கண்ணன் ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னையை மணந்து கொண்டானாம்.


திருமாலுக்கு மனைவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்பர். இம்மூவரைப் பற்றியும் சூக்தங்கள் உள்ளன. நீளா தேவியை பற்றிய சூக்தம், ஆயர் குல சாயலை வெளிப்படுத்துகின்றது

நீளா தேவி நெய்யும், பாலும் நிரம்பப் பெற்றவள். பூவுலகுக்கும், விண்ணுலகுக்கும் ஏற்படும் தொல்லைகளைப் போக்குபவள் என்பதே அதன் முக்கியக் கருத்து. நப்பின்னை நீளாதேவியின் அவதாரம் என்று வைணவ மரபு உண்டு. எனவே இவரை இளையபிராட்டி  என்பதும் ஒரு சம்பிரதாயம்.


கி.பி.19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த மதுரகவி ஸ்ரீநிவாச ஐயங்காரின்  நப்பின்னைப் பிராட்டியார் திருமணம் எனும் நூல், தமிழில் வெளிவந்துள்ள நப்பின்னை பற்றிய இறுதியான, முழுமையான நூலாக இனங்காணப்படுகின்றது.

ஆழ்வார்களது பாசுரங்களை வைத்துப் பார்க்கையில், நப்பின்னை, திருமாலின் மூன்றாவது துணைவியான நீளாதேவியே என்று ஓரளவு உறுதியாகவே சொல்லலாம்.

நம்மாழ்வார் ஒரு பாசுரத்தில், திருமாலின் மூன்று தேவியரையும் சுட்டிக்காட்டுவதோடு, ஏறு தழுவி கண்ணன் நப்பின்னையை மணந்தான் என்ற செய்தியையும் தருகிறார்.


என் திருமகள் சேர் மார்வனே! என்னும் என்னுடை ஆவியே* என்னும்,       நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே! என்னும், அன்று உருவேழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள்அன்பனே!  என்றும், நப்பின்னை, நீளாதேவியின் அவதாரமானவள் என்கிறார். நீளாதேவி நீருக்கு ஆதாரமானவள் என்பதால், பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனே இவள் மடியில் தலை வைத்து சயனித்திருப்பதாகச் சொல்வது ஐதீகம்!)


திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தில்,

இரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ்சேர்"…என்று மூன்று தேவியரையும் ஒரு சேரச் சுட்டுகிறார். நிலமங்கை – பூதேவி, மலர்மங்கை – ஸ்ரீதேவி (திருமகள்) & புலமங்கை – நீளாதேவி (நப்பின்னையாக அவதரித்தவள்)

குறிப்பு: ”புலம்” இங்கு இந்திரியத்தைக் (ஐம்புலன்கள் சார்ந்த உணர்ச்சி) குறிக்கிறது. அதனால் புலமங்கை எனும்போது, அது திருமாலின் தெய்வீகப்புலன் உணர்வில் நிறைந்த நீளாதேவியைக் (கண்ணனின் நப்பின்னையை) குறிக்கிறது.

நீளாதேவியின் அவதாரம் தான் நப்பின்னை என்பதை ஆழ்வார்களுக்குப் பின் வந்த வைணவ ஆச்சாரியார்கள் ஏற்றுக்கொண்டு சம்பிரதாய விளக்கங்களிலும் சொல்லியிருக்கிறார்கள். பகவானின் அவதாரங்களில் கிருஷ்ணனின் அவதாரம் பல வகைகளிலும் சிறப்பு வாய்ந்தது. 


ராமாவதாரத்தில் கூட, மகாலக்ஷ்மி பிராட்டி மட்டுமே சீதையாக அவதரித்தார். பூமி தேவியோ நீளா தேவியோ அவதாரம் செய்யவில்லை. ஆனால், கிருஷ்ணன் அவதரித்தபோது பகவானின் மூன்று தேவியருமே இந்த உலகத்தில் அவதாரம் செய்தனர். மகாலக்ஷ்மி ருக்மிணியாகவும், பூமிதேவி சத்யபாமாவாகவும், நீளாதேவி நப்பின்னையாகவும் அவதரித்து கிருஷ்ணனை மணந்துகொண்டனர்.

இந்த மூவரில் நப்பின்னையை மட்டும் ஆண்டாள் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், ருக்மிணியும் சத்யபாமாவும் கிருஷ்ணனை மணந்துகொண்ட பிறகுதான் நந்தகோபனுக்கு மருமகள்கள் ஆகின்றனர். ஆனால், இந்த நப்பின்னையோ ஆயர்குலத்தில், யசோதையின் சகோதரனுக்கு மகளாகப் பிறந்தவள். எனவே முன் இருவர்களை விடவும் ஆண்டாள் நப்பின்னையை மட்டும் குறிப்பாக சிறப்பித்து அழைக்கிறாள்.


கண்ணன் ஆய்ப்பாடியில் இருக்கும் வரை, அவனை ஆண்ட "ஆண்டாள்" (நப்பின்னை) இவளே ஆவாள்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்,

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்

அடியேன்,

No comments:

Post a Comment