Popular Posts

Saturday, 25 January 2025

திருப்பாவை 17

 *திருப்பாவை பாசுரம் 17*


சென்ற பாசுரத்தில் காவலர்களிடம் மன்றாடி, அனுமதி பெற்று நந்தகோபனுடைய இல்லத்தில் நுழைந்துவிட்டார்கள். இப்பாசுரத்தில், வீட்டிலுள்ள அனைவரையும் எழச்சொல்லிப் பாடுவதாக வருகிறது.


இந்த பாசுரத்தில், நந்த கோபருடைய திருமாளிகையினுள்ளே ப்ரவேசித்த நம் அன்னை ஆண்டாள், நந்த கோபரையும், யசோதை பிராட்டியையும், பலராமரையும், கிருஷ்ணனையும் உறக்கத்திலிருந்து விழித்தெழ 'திருப்பள்ளி எழுச்சி' பாடுகிறாள். இங்கே ஒவ்வொருவரையும் எழுப்பும் போதும் நல்வார்த்தைகள் சொல்லி, அவர்கள் பெருமையைச் சொல்லி எழுப்புகிறாள்.


அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;

அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த

உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்;

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும்  நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.


பாசுர விளக்கம்:

எமக்கு ஆடையும், நீரும், பல்வகை உணவுப் பண்டங்களையும் தானமாக வாரி வழங்கும் எங்கள் தலைவரான நந்தகோபரே, தாங்கள் எழுந்திருக்க வேண்டும். வஞ்சிக் கொடி போன்ற மெல்லிய உறுதியான இடையுடைய பெண்களுக்கெல்லாம் தலைவியானவளும், நந்த குலத்திற்கு தீபம் போன்றவளும், ஸ்ரீ கிருஷ்ணரை எங்களுக்களித்த யசோதை பிராட்டியே, எழுந்தருளாய்! த்ரிவிக்ரம அவதார காலத்தில், வானளாவி ஓங்கி வளர்ந்து மூவுலகங்களையும் அளந்த தேவர் தலைவனே! விழித்தெழுவாய்! செம்பொன்னால் செய்த வீரக்கழலை அணிந்த திருவடிகளையுடைய செல்வத் திருமகனாய், பலதேவா! உன் தம்பியான கண்ணனும் நீயும் இனியும் உறங்காது எழுந்தருளவேண்டும்!


இப்பாசுரத்தில் நந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் ஆகியோர் வரிசைக் கிரமமாக எழுப்பப்படுவதை முறையே ஆச்சார்யன், திருமந்திரம், திருமந்திரத்தின் பொருள், திருமந்திரத்தின் சாரம் (அஷ்டாட்சரம், மூலமந்திரம்) ஆகியவற்றின் சின்னங்களாகக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இதன் உள்ளுரையாம்.


யசோதை, ஆயர் குலப் பெண்களுக்கு ஒரு சிறு துன்பம் வந்தாலும், மனம் கலங்குபவள். கோபியரின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளும் திறம் படைத்தவள். அதனாலேயே, அவளை கொம்பனார்க்கெல்லாம் கொழுந்து என்றும், குல விளக்கு என்றும், அது போலவே ஆயர் குலத்தைக் காத்து, ஆயர் குலத்தவருக்கு வேண்டியதை தந்து அருளும் நந்தகோபர் எம்பெருமான் என்றும், யசோதையை எம்பெருமாட்டி என்றும் (அதாவது, அவ்விருவருவரையும் பரமனுக்கும், பெரிய பிராட்டிக்கும் இணையான) மிக உயர்ந்த இடத்தில் வைத்து ஆண்டாள் கொண்டாடிப் பாடியுள்ளார்!

[இங்கு ஒரு விசேஷம்: யசோதை பிராட்டியை ஆண்டாள் எம்பெருமாட்டி என்று அழைக்கிறாள். நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களிலும் காணப்படாத இந்த எம்பெருமாட்டி என்ற ஆண்டாளின் இந்த விசேஷ அழைப்பு, யசோதை பிராட்டிக்கும், திருப்பாவைக்கும் பெருமை சேர்க்கின்றது]


பாசுர விசேஷம்:

நந்தகோபருக்கு (அவரது தானம், பராக்கிரமம் மற்றும் செல்வத்தை முன்னிட்டு) திருப்பாவையில் ஐந்து  தடவை மங்களாசாசனம் செய்யப்படுள்ளது.

1) கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் (தி.பா.01)

2) நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே. (தி.பா.16)

3) எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் (தி.பா.17  )

4) நந்தகோபன் மருமகளே நப்பின்னாய் (தி.பா.18  )

5) ஆற்றப்படைத்தான் மகனே அறிவுறாய்! (தி.பா.21  )


அம்பரம் என்பது பரமபதத்தையும், தண்ணீர் என்பது வைகுண்டத்தில் பாயும் வ்ரஜா நதியையும், சோறு என்பது உபநிடத ஞானத்தையும் குறிப்பில் உணர்த்துவதால் நந்தகோபர் ஆச்சார்யர் ஆகிறார்.

இறைவனை அடைய விரும்புகிறவர்கள் நல்லாச்சார்யன் மூலமாக எட்டெழுத்து மந்திரமும், விளக்கமும் உபதேசம் பெற்று, அவனது அடியார்களை முன்னிட்டுக் கொண்டே அடைய வேண்டும், என்பது வைணவ இறைநெறி. அதுவே இப்பாசுரத்தின் உட்பொருள்.

எல்லோருக்கும் எவ்விதப் பாகுபாடுமின்றி எளிதாகக் கிட்டக்கூடிய (ஸௌலப்யம்) இறைவனின் கருணை குணமும் இப்பாசுரத்தின் உட்பொருள்


யாகங்களில் 3 முறை திரிவிக்கிரமனுக்கு அவிர்பாகம் கொடுப்பது போன்றே முதல் பத்து - (3 ஆம் பாசுரம் ஓங்கி உலகளந்த உத்தமன்) இரண்டாம் பத்து - (17 ஆம் பாசுரம் - ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்) - மூன்றாம் பத்து (24 ஆம் பாசுரம் - அன்று இவ்வுலகம் அளந்தாய்) என்று திருப்பாவையில் மூன்று முறை திரிவிக்கிரம அவதாரத்தைப் போற்றுகிறாள் ஆண்டாள்!  


நாளை 18ஆம் பாசுரத்தை அனுபவிப்போம்.


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்,

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

அடியேன்,

No comments:

Post a Comment