Popular Posts

Tuesday, 28 January 2025

திருப்பாவை 23

 *திருப்பாவை பாசுரம் 23*

(மாரி மலை முழைஞ்சில்)  

         


                                                 முந்தையப் பாசுரத்தால் கண்ணனுக்குத் தாங்கள் வந்திருப்பதை இடைச்சிகள்  உணர்த்திய பின் இப்பாசுரத்தில் அவனது சிம்ம நடையைக் காட்டியருள செய்ய ஆண்டாள் வேண்டுகிறாள். இறைவன் அருளைத் தனியாக வேண்டக் கூடாது, அடியார்கள் அனைவரோடும் கூடியே இறையருளைப் பெறுதல் வேண்டுமென உணர்த்துகிறது இப்பாசுரம். கண் முன்னேயொரு சிங்கத்தை அழகுறக் காட்டும் பாசுரம்.


சென்ற பாடல் வரை திருமால் “கிடந்த”  அழகை இரசித்தவள், இந்தப் பாடலில் "கிடந்த, நடந்த, நின்ற, அமர்ந்த" அழகையெல்லாம் இரசிக்கிறாள். இது திருநீர்மலை திவ்யதேசத்தினை (நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்) நினைவு படுத்துகிறது.


மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து,

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்

கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய,

சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


பாசுர விளக்கம்:

கார் காலத்தில் மலைக் குகையை தனது இருப்பிடமாக்கிக் கொண்டு உறங்கிக் கிடக்கும் பெருமை வாய்ந்த சிங்கமானது, தூக்கம் கலைத்து, தீப்பொறி பறக்க தனது சிவந்த விழிகளை திறந்து பார்த்து, மணமுள்ள தனது பிடறி முடி அலை பாயும் வகையில் சிலிர்த்து, உடலை நாற்புறமும் அசைத்து, நெட்டுயிர்த்து, பின் கம்பீரமாக நிமிர்ந்து கர்ஜித்து, குகையை விட்டுக் கிளம்புவது போல, காயா மலர் நிறங் கொண்ட மாயக் கண்ணனான நீ, உனது திருமாளிகையை விட்டு இவ்விடம் வந்து, உனக்கேற்ற வகையில் உருவாக்கப்பட்ட பெருமை வாய்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, அதன் பின், நாங்கள் உனை நாடி வந்த செயலுக்கான காரணத்தை ஆராய்ந்து அருள வேண்டுமாய், பாவை நோன்பிருந்து வணங்கிக் கேட்கிறோம்!]


*பாசுரச் சிறப்பு:*

இப்பாசுரம் திருமாலின் ஐந்து நிலைகளில் விபவ நிலையான "ஸ்ரீநரசிம்ம அவதாரம்" குறிக்கப்படுகிறது. மற்ற அவதாரங்களுக்கெல்லாம் சற்று நேரம் எடுத்துக் கொள்ள முடிந்தது பரந்தாமனுக்கு. ஆனால் இந்த "நரசிம்ம அவதாரம்" நிகழ்த்துவதற்கு கால அவகாசம் நிரம்ப இல்லை. அந்த அவதாரமே குறைவான பொழுதில் நிகழ்ந்து, காரியம் முடித்த அவதாரம். அவசரகாலத்தில் வந்தாலும், அவசர கோலத்தில் வரவில்லை. யாராலும் கற்பனை செய்திருக்க முடியாத உருவத்தில் வெகு கம்பீரமாக வெளிப்பட்டு, அனாயாசமாக ஓர் சம்ஹாரத்தை முடித்துவிட்ட அவதாரம் இது.


கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் குழந்தையாய் வளர்ந்து, விளையாடி, வாலிபம் எய்தி, பின்னர் பாரதப் போரில் பெரும் பங்காற்றி நீதியை நிலைநாட்டுகிறான்.  இராமாவதாரமும் அப்படியே. ஆனால், நரசிம்மாவதாரத்தில் பெருமாள் தோன்றி, உடனே பேருருக்கொண்டு, இரணியனை அழித்து, பிரகலாதனுக்கு அருள் புரிந்து சென்றான். தோற்றத்தின் காரணம் மிகச்சிறிய காலத்திலேயே நிறைவடைகிறது. அதுபோல், நீ இராமனாகவோ, கண்ணனாகவோ எழுந்து வராமல், நரசிம்மனாய் வந்து, உடனே சிம்மாசனத்தில் எழுந்தருளி, எங்களின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்று. கால தாமதம் வேண்டாம் என்று ஆய்ச்சியர் வேண்டுவது போல் அமைந்துள்ளது பாசுரம்.


இன்னொரு சுவை, கொடிய சீற்றத்துடன் துலங்கும் சிங்கம், தனது குட்டிகளிடம் அன்புடனே இருக்கும். அதுபோல், கொடிய இரணியனை வதம் செய்யும்போது கடுஞ்சினத்துடன் இருந்த நரசிங்கம், பிரகலாதனைப் பார்த்தவுடன் மனம் கனிந்துருகி அவனுக்கு அருள் மாரி பொழிந்து நின்றது. அதுபோல் நீயும் எங்களுக்கு அருள் புரிவாய் என்று ஆய்ச்சியர் வேண்டுகிறார்கள். (திங்களும் ஆதித்யனுமான, அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்கு).


ஆண்டாள் திருப்பாவையின் முதல் பாசுரத்திலேயே, கண்ணனை சிம்மத்துடன் ஒப்பிட்டுப் பாடி விடுகிறார், "ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்" என்று. இப்பாசுரத்தில் அந்த கிருஷ்ண சிம்மத்தை, அவனது பெருமைக்குரிய சிம்மாசனத்தில் அமர்ந்து, தங்கள் தேவைகளையும், குறைகளையும் கேட்டு, ஆராய்ந்து பின் அருள் செய்யுமாறு ஆண்டாள் நாச்சியார் வேண்டுகிறாள். இங்கு  இப்பாசுரத்தில் அவளின் கவிநயம் மிக அழகாக வெளிப்படுகிறது . விழித்தெழும் பரமனின் கம்பீரத்தையும், அவன் வீறு நடையையும் அற்புதமாக வர்ணிக்கிறாள் ஆண்டாள்.


இங்கே கண்ணனின் ஆளுமையையும், வலிமையையும் முன்னிட்டே, ஆண்டாள் அவனை சிம்மத்தோடு ஒப்பிடுகிறாள். பிற இயல்புகளைச் சொல்ல, பூவை பூவண்ணா என்று விளிக்கிறாள். அதாவது கண்ணனை, "நீ காயாம்பூ நிறம் கொண்டவன் என்று நம் கோதை நாச்சியார் போற்றுகிறாள்.

"காயாம்பூவைப் போன்ற நிறம் படைத்தவனே! உன் கோயிலை விட்டு இங்கு வந்து, பரமபதத்திலே தர்மாதிபீடத்தில் அமர்ந்து பிரபஞ்சங்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் ஆராய்ந்து செய்து வருவது போல், நாங்கள் வந்த காரியங்களை ஆராய்ந்து, அருள் செய்யவேண்டும்", என்று வேண்டுகோள் வைக்கிறாள் ஆண்டாள்.


பரமபதத்தில் ஒரு கட்டில் உள்ளது. தர்மம், அறிவு, வைராக்கியம், நியமை, அதர்மம், அஞ்ஞானம், அழிவு, அநாச்சார்யம் (தண்டனை) எனும் எட்டு தத்துவங்களை உணர்த்தும் எட்டுக்கால்களை உடைய கட்டில் பீடம். அதற்கு தர்மாதிபீடம் என்று பெயர். 

பகவான் தர்மாதிபீடத்தில் அமர்ந்துதான், அனைத்து பிரபஞ்சங்களுக்கும் தேவையானவற்றை ஆராய்ந்து அருள்பாலித்துக் கொண்டிருப்பார்.


பக்த பிரகலாதனுக்காக அவனுடைய வார்த்தையை மெய்ப்பிக்க வேண்டும் என தூணிலும் துரும்பிலும் நிறைந்திருந்த ஸ்ரீமகாவிஷ்ணு, ஹிரண்யகசிபு ஒரு தூணைக்காட்டி இங்கு உள்ளானா நாராயணன், என்று கேட்டு, அதை உதைத்ததுடன் உடனே நரசிம்மமாக அவதாரம் எடுத்து பிரகலாதனுக்கு அருள்பாலித்தார் ஸ்ரீநரசிம்மர்.

எனவேதான், ஆண்டாள் தம்மை சரணாகதி அடைந்தோருக்கு சிம்மத்தின் வேகத்தில் வந்து அருள்புரிவான் என உணர்த்துவதற்காக, சிம்மத்தின் நடையை இதில் மறைமுகமாக வைத்துள்ளார்.

மேலும், இந்தப் பாடலை தினந்தோறும் பாடி வருவோருக்கு அவர்களின் கோரிக்கைகளை அதாவது நேர்மையான, நியாயமான கோரிக்கைகளை, பகவான் ஆராய்ந்து அருள் செய்வார் என்பது உறுதி.

கேட்பவர்களுக்கு நன்மை யாதென்று தெரியாது. அதை அளிக்கும் பகவான் மட்டுமே அறிவார். ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு நன்மை பயப்பதையே, அளிப்பது போல், நன்மையே அருள்வார் என்பதை சூசகமாகவும் நயமாகவும் சொல்லி உணர்த்திப் பாடுகிறாள் ஆண்டாள்!


ஸ்ரீகண்ணனின் கிடந்த அழகை பார்த்தாகி விட்டது, அடுத்து அவனது "நடை"யழகை கோபியர் அனுபவிக்க வேண்டும் அல்லவா? அது தான், ஸ்ரீகண்ணனை அவனது திருமாளிகையை விடுத்து நடந்து அரசவை மண்டபத்துக்கு வருமாறு இடைச்சியர் வேண்டுகிறார்கள். பக்தைகள் எல்லாம் மண்டபத்தில் இருக்கும்போது, பரமனும் அங்கு தானே எழுந்தருள வேண்டும்! என்ன ஒரு ரசம்!


இடைச்சியர் கண்ணனிடம், "நீ எங்கள் குறைகளை பள்ளியறையில் வைத்து ஆராய்தல் சரியாகாது. நீ குருஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு சொன்ன வார்த்தைகள் போல, ஸ்ரீராமனாக சேதுக்கரையில் வீபிஷணாழ்வானுக்கு அளித்த அபயம் போல, நீதியரசனாக பெருமை வாய்ந்த நியாய ஆசனத்தில் அமர்ந்து எங்கள் குறைகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவது தான் முறை" என்று குறிப்பில் சொல்வதாகவும் அறியலாம்.


அதோடு, விடியலில் எழுந்திருந்து, நோன்பின் பெருமையையும், ஸ்ரீகண்ணனின் திருநாமங்களையும் பாடி, ஒவ்வொரு அடியவராக (இடைச்சியர்) எழுப்பி, திருமாளிகை காப்பானின் அனுமதி பெற்று, நந்தகோபர், யசோதை, நப்பின்னையை பிராட்டியை எழுப்பி, என்று மிகவும் சிரமப்பட்டு கோபியர் கண்ணனிடத்தில் வந்து சேர்ந்ததிலும், ஸ்ரீகோதை நாச்சியார் ஒன்றைக் குறிப்பால் உணர்த்துகிறாள். அதாவது, சரணாகதி (ப்ரபத்தி) என்பது, "எல்லாம் அவன் செயல்" என்று வெறுமனே இருப்பதாகாது, அதற்கு சுயமுயற்சியும், உழைப்பும் அவசியமாகிறது!


மாரி மலை முழைஞ்சில் ----அறிவுற்றுத் தீ விழித்து:

என்பது, பாவ புண்யங்களுக்கு அப்பாற்பட்ட திவ்ய ஞானத்தைப் பெற, லஷ்மி நரசிம்மரைப் பற்ற வேண்டியதை உள்ளர்த்தமாக வலியுறுத்துகிறது.


வேரி மயிர் பொங்க ------போதருமா போலே:

என்பது, லஷ்மி நரசிம்மரின் கல்யாண குணங்களை போற்றிப் பாடி, திசைகளெங்கும் பரப்பும் அடியார்கள், பரமபதம் அடைவர் என்பதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது !


பூவைப்பூ: - கருநீல நிறத்து சங்க கால மலர். பெண்கள் நெற்றியில் அணியும் பொட்டைப் போல இருக்கும் அதனால் பூவை (பெண்) + பூ. கண்ணனுடைய கம்பீரத்திற்கு உவமையாக சிங்கத்தைச் சொன்ன ஆண்டாள் கண்ணனுடைய மேனி நிறத்தைக் குறிக்கப் பூவினை உவமையாக்குகிறாள்.


கோயில் நின்று  இங்கனேப் போந்தருளி:  ஆண்டாள் அரங்கர்க்குப் பண்ணிய திருமாலையல்லவா திருப்பாவை? கோயில் என்பது ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு திருவரங்கத்தையே குறிக்கும். அதனால் தான் படுத்திருக்கும் பரந்தாமனது அழகைப் பாடினாள். ஆயினும், அவனே எழுந்து நடந்து வந்தால் அந்த அழகு எப்படி இருக்குமென்று காண விரும்பியே, கண்ணனை அவனது மாளிகை நீங்கி, சபைக்கு எழுந்து நடந்து வர வேண்டுகிறாள். திருவரங்க திவ்யதேசத்தில் நம்பெருமாளின் நடையழகு கண்டவர்கள் இப்பாசுரத்தை இனிதே அனுபவிப்பர்.


ப்ரபத்தி என்பது எல்லாம் அவன் அருள் என்று சும்மாக் கிடப்பதல்ல, அதன் அளவில் அதுவும் ஒரு போராட்டமே! என்று குறிப்பால் உணர்த்துகிறாள். இப்படி நாங்கள் கஷ்டப்பட்டு உன்னை அடைந்திருக்கிறோம். "ப்ரஜை கிணற்றில் விழுந்தால்றோ நோக்காதே பரிய விட்டாளென்பார்கள்" என்றார் பெரியவாச்சான் பிள்ளை தமது வியாக்கியானத்தில். இப்படி நாங்கள் கஷ்டப்பட நீயன்றோ காரணம்! ஆகையால் இப்படி நாங்கள் வந்ததை நீ ஆராய்ந்து, அறிவுற்று பார்த்தால், அருளுவாய் என்று சொல்கிறாள். இன்னும், இவர்கள் தாம் வந்த காரியத்தை சொல்லவில்லை. அதை  சிற்றஞ் சிறுகாலே  (திருப்பாவை-29) பாட்டில்  வைக்கிறாள். இங்கே எழுந்து வந்து நாங்கள் வந்த காரியத்தை ஆராய வேண்டும் என்று ப்ரார்திக்கிறார்கள்.


நாளைய பாசுரம், ஒரு போற்றி பாசுரம். பரமனின் கல்யாண குணங்களைப் போற்றி பாடுகிறாள் ஆண்டாள்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

அடியேன்,

No comments:

Post a Comment