*திருப்பாவை பாசுரம் 16*
(நாயகனாய் நின்ற)
16 முதல் 20 வரையிலான ஐந்து பாசுரங்களால், நந்தகோபரின் வீட்டு நபர்களையும் இறுதியாக கண்ணனையும் எழுப்புவது வரை சொல்லப்படுகிறது. இதில் கண்ணனின் தந்தையான அரசன் நந்தகோபனுடைய வீட்டுக் காவலர்களோடு உரையாடி, வாயில் கதவுகளைத் திறக்க வேண்டுகிறாள்.
திருக்கோயில் காப்பவனையும், திருவாயில் காப்பவனையும் முதலில் அணுகி உள்ளே புக அனுமதி வேண்டுகிறாள்.
மேலையார் செய்வனகள் என்பது போல் முன்னோர்கள் காட்டியருளிய நடைமுறை. எம்பெருமானை சேவிக்கப் புகும்பொழுது, கரிமுகர், ஜயத்சேனர், காலர், சிம்ஹமுகர் என்ற நான்கு க்ஷேத்ரபாலர்களையும், குமுதன், குமுதாக்ஷன், ஸுமுகன், ஸுப்ரதிஷ்டன் என்ற நான்கு நகர பரிபாலகர்களையும், சண்டன், பிரசண்டன், பத்ரன், ஸுபத்ரன், தாத்ரு, விதாதா, ஜயன், விஜயன், என்ற எட்டு த்வாரபாலகர்களையும் வணங்கி அனுமதி பெற்ற பிறகே உட்புகவேண்டும் என்ற நியதியைக் கடைபிடிக்கிறார்கள்.
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே!. மணிக் கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை!
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்!
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்!
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா- நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!
பாசுர விளக்கம்:
ஆயர்பாடியில் இடையர்குல மக்களுக்குத் தலைவனாய், அரணாய், அரசனாய் இருக்கும் நந்தகோபன் எழுந்தருளியுள்ள மாளிகைக்குக் காவலானாய் நிற்பவரே! மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தோரண வாயிலைக் காத்து நிற்பவரே! ஆயர்பாடியில் வாழும் கோபியருக்கு வேண்டி, மாணிக்க மணிகள் பதிக்கப்பட்ட வாயிற்கதவைத் திறந்திடுக!
உணர்வதற்கரிய அதிசய குணங்களை உடையவனும், அதிசயமான காரியங்களை நிகழ்த்துகின்ற மாயனும், நீலத் திருமேனி கொண்ட மணிவண்ணனும் ஆன கண்ணன், நாங்கள் நோற்கும் பாவை நோன்பிற்கான பறையை அருளுவதாக எங்களுக்கு நேற்றே வாக்களித்துள்ளான்!
அந்தக் கண்ணபிரானை துயிலெழுப்ப நாங்கள் தூய உடலோடும் உள்ளத்தோடும் வந்திருக்கிறோம். ஆகவே, மறுப்பு தெரிவிக்காமல், காவலனான நீங்கள் எமது அன்னையைப் போன்று கருணை வைத்து, பிரம்மாண்டமான வாயிற்கதவைத் திறந்து, நாங்கள் நோன்பிருந்து கண்ணனை வணங்கி வழிபட அனுமதி தர வேண்டும்.]
பாசுரச் சிறப்பு:-
வைணவ நெறியின் மிக உயர்ந்த தத்துவங்களாகிய ரஹஸ்யத் த்ரயம் (அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம்) பற்றி குறிக்கின்ற பாசுரம். இதுவரை பத்து இடைச்சிகளாக உருவகப்படுத்தப்பட்டவை, 10 இந்திரியங்கள், (கர்மேந்திரியம் 5, ஞானேந்திரியம் 5) ஆகும். இந்தப் பாசுரத்தில் குறிக்கப்படுவது, இவை பத்தையும் பின்னிருந்து இயக்கும் மனம்.
"மனஸ் - மனம்" இறைவனை அடையத் தடையாயிருக்கும் கதவு. குரு தொடர்பினால் அந்த இருளை நீக்கித் தாளைத் திறந்திட்டால், நமது "இதய கமலத்தில் கோயில்" கொண்டிருக்கும் இறைவனைக் காணலாம்.
குரு, மூன்று மந்திரங்களை ரகசிய உபதேசமாக உபதேசிப்பார். பெரிய திருமந்திரம், என்று அழைக்கப்படும் எட்டெழுத்து மந்திரத்தை "மந்த்ர ரஹஸ்யம்" என்றும், சரமஸ்லோகத்தை "விதி ரஹஸ்யம்" என்றும் த்வய மந்த்ரத்தை "அநுஸந்தான அநுஷ்டான ரஹஸ்யம்" என்றும் கூறுவார்கள்.
மந்த்ர ரஹஸ்யம்:
‘கோ' என்பவன் அரசன். அரசர்களெல்லாம் விஷ்ணுவாகிய நாராயணனின் அம்சம். இங்கே 'கோ' என்பதே அரசர்க்கு அரசனாம் ஆண்டவனைக் குறிக்கிறது எனவேதான் கோ உறையும் இல் 'கோயில்' ஆவது தாரக மந்திரமான திருமந்திரம்.
விதி ரஹஸ்யம்:
கொடி என்று சொல்வது பெண்மையைக் குறிப்பது கொடியிடையார் இல்லையா? பெண்டிருள் மேன்மையான தாயார் திருமகளைக் குறிக்கும் 'ஸ்ரீ' ஸப்தம் த்வய மந்திரத்தில் தானே தோன்றுகின்றது? ஆகவே தான் 'கொடி தோன்றும் வாயில், "தாயாய் இறை ஞான அமுதூட்டி ஜீவர்களைக் காத்து நிற்கும் போஷக மந்திரமாம் த்வயத்தைக் குறிக்கிறது".
அநுஸந்தான அநுஷ்டான ரஹஸ்யம்:
இறைவன் தன் வாய்மொழியாக அளித்த வாக்கு, "சரணம் செய்தவர்களைக் காப்பேன் என்னும் உறுதிமொழி. ஆகவே "வாய் நேர்ந்தது" ஜீவாத்மாக்களுக்குப் பலனைத் தருவதாக, மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதான, அனுபவித்து சுகமடையச் செய்வதாக விளங்கும் போக்ய மந்திரமாகும், சரமஸ்லோகத்தைக் குறிக்கின்றது.
அர்த்த பஞ்சகத்தின் கீழ் வரும் இப்பாசுரமும் (16), அடுத்த பாசுரமும்(17) ஜீவாத்மா, நித்யஸூரிகளை அணுகி, குருவைப் பணிந்து சரணடைதல் பற்றிச் சொல்கின்றன. மேலும், குறிப்பாக, அவதார பஞ்சகத்தின், வ்யூஹத்தின் விளக்கமாக வரும் பாசுரம் இது.
இறைவனைத் தொழும் போது, அவனுடடைய பரிவாரங்களையும் சேர்த்துத் தொழுவதை விளக்கும் கால பஞ்சகத்தின் கீழ் 'இஜ்யை' எனும் இறைவனைத் தொழுதலாகிய ஆராதனை காலத்தைக் குறிக்கும் பாசுரம் இது.
ஐந்து உணர் புலன் (ஞானேந்திரியம்) ஐந்து செய் புலன்களோடு (கர்மேந்திரியம்) பதினொன்றாம் புலன், மனம். அதுவே ஜீவாத்மாக்கள் இகவுலகின் பிடியில் கிடந்துழல, கட்டுக்களை விதிக்கும் புலன். அந்தக் கட்டிலிருந்து விடைபெற, மனத்தைச் சூழ்ந்துள்ள ரஜோ, தமோகுணங்கள் நீங்கி இறையனுபவம் பெற, இதய கமலத்தில் உறைகின்ற இறைவனைத் துதித்தே (ஆராதனை செய்தே) வீடு பேறடைய வேண்டும்.
பிரமாணம், பிரமேயம் மற்றும் பிரமாதா ஆகிய மூன்றும் இப்பாசுரத்தின் உட்பொருளில் வெளிப்படுவதாகப் பெரியோர் கூறுவர்.
ப்ரமாணம்:
வேதம், ஸ்மிருதி, புராண இதிகாசங்கள், திவ்யபிரபந்தம், பிரம்ம சூத்ரம் ஆகியவை.
ப்ரமேயம்:
பரமபதத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமன் நாராயணன், வியூகம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி.
ப்ரமாதா:
ஆச்சார்யர்கள். சுருங்கச் சொன்னால், பிரமாணம் மூன்று மந்திரங்களையும், பிரமேயம் எம்பெருமானையும், பிரமாதா, மந்திரங்களை உபதேசிக்கும் ஆச்சார்யனையும் குறிக்கின்றன. எம்பெருமானைப் பற்ற மந்திரம், பரதேவதா, ஆச்சார்யன் ஆகிய மூன்றின் பேரிலும் பரிபூர்ண நம்பிக்கை அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இப்பாசுரத்தில் "கோயில் காப்பான்" - அஷ்டாக்ஷரம் என்றும் கொடி தோன்றும் தோரண வாயில் காப்பான் - த்வயம் என்றும், நென்னலே வாய் நேர்ந்தான் - சரம ஸ்லோகம் என்றும் பூர்வர்கள் கருதினர்.
_‘மணிக்கதவம் தாள் திறவாய்'_ என்பது மேற்கூறிய மூன்று மந்திரங்களை உபதேசிக்குமாறு ஒரு சிஷ்யன் ஆச்சார்யனை வேண்டுவதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது.
சிஷ்யனானவன், ஓர் ஆச்சார்யனை அடைந்து உபதேசம் பெறத் தயாராகும் கணத்திலேயே, எம்பெருமானின் கருணைக்கு பாத்திரமாகி விடுகிறான் என்ற உட்கருத்தை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் என்பது குறிக்கிறது.
நாளை 17ம் பாசுரத்தை அனுபவிப்போம்.
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
அடியேன்,
No comments:
Post a Comment