திருப்பாவை பாசுரம் 29
(சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை)
தன்னை ஒரு ஆயர்பாடிப் பெண்ணாக, கோபிகையாக உருவகப்படுத்திக் கொண்டு ஆண்டாள் சொன்ன கடைசி திருப்பாவைப் பாசுரம் இதுவாகும். அடுத்த பாசுரம், திருப்பாவைக்கான 'பலஸ்ருதி' ஆண்டாள் தன் வாய்மொழியாகவே உரைப்பது.
"நாராயணனே நமக்கே பறை தருவான்" என்று முதல் பாசுரத்தில் உரிமையோடு சொன்ன ஆண்டாள், இந்த 29-வது பாசுரத்தை, "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உனக்கே நாமாட் செய்வோம்" என்று தெளிவான நோக்கத்தோடு அறுதியிட்டு நிறைவு செய்கிறாள்!
எளிமையாகச் சொன்னால் பரமனிடம் அடியவர் கூட்டத்துடன் சரணாகதி, அவனுக்கு பல்லாண்டு பாடுதல், அவன் அருளும் மோட்சம், பின் சதாசர்வ காலமும் பகவத் சேவை, இது தான் கோதையின் பிரபந்த சாரம்.
இந்த பாசுரம் பகவத் தாஸ்யத்தை (இறையடிமை செய்தல்) போற்றுகிற பாசுரம். பதினைந்தாம் பாசுரமான "எல்லே இளங்கிளியே" பாசுரத்தில் பாகவத தாஸ்யம் (அடியார்க்கு அடிமை செய்தல்) சொல்லப்பட்டது. இரண்டுமே, திருப்பாவைக்கு பெருமை சேர்க்கும் பாசுரங்களாக வைணவப் பெருந்தகைகளால் போற்றப்படுபவை. மிகவும் உயர்வான 'கோவிந்த' நாமத்தை மூன்றாவது முறையாக குறிப்பிடும் பாசுரம் இது . மற்ற பாசுரங்களில், இடைச்சிகள் இறைவனிடம் பறை தருமாறு வேண்டுகின்றனர், சரணாகதி செய்வதைப் பற்றிப் பேசுகின்றனர். இப்பாசுரத்தில் சரணாகதி செய்து நாம் பெறக்கூடிய பறை என்ன என்பதன் பொருளை, அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டியதைப் பற்றி விரிவாகப் விளக்குகின்றனர்.
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்,
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது,
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*_
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்,
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!
பாசுர விளக்கம்:
"மிக்க விடியற்காலைப் பொழுதில் உன்னிடத்திற்கு வந்து உன்னை வணங்கி உனது தங்கத் தாமரை ஒத்த திருவடிகளை மங்களாசாசனம் செய்ய நாங்கள் வந்திருப்பதன் நோக்கத்தை நீ கேட்பாயாக ! மாடுகளை மேய்த்து அவை உண்ட பின் உண்ணுகின்ற குலத்தில் பிறப்பெடுத்த நீ எங்களின் பணிவிடைகளை ஏற்காமல் செல்லுதல் ஆகாது!"
"ஓ கோவிந்தனே ! இன்று உன் அருளை (பறை) பெறுவது மட்டும் எங்கள் விருப்பமன்று. என்றென்றும், ஏழேழு பிறப்புகளிலும் உன்னோடு பொருந்தியவராக, உனது நெருங்கிய உறவினராக நாங்கள் இருக்க அருள்வாயாக! உனக்கு மட்டுமே அடிமை செய்பவராக நாங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும்! இவற்றுக்கு மாறுபட்ட எங்கள் ஆசைகளை நீக்கி அருள வேண்டும்!"
முதல் பாசுரத்தில் நாராயணனே நமக்கே பறை தருவான் என்று சொல்கிறாள். இந்தப் பாசுரத்தில் அந்த நாராயணனே பறை என்கிறாள். எப்போதும் இறைப்பணியே செய்வது என்ற தங்கள் உள்ளக்கிடக்கையை சொல்லும் இடைச்சியர்கள் பாசுரம் . ஸ்ரீமதே நாராயணாய நம: எனும் த்வய மந்திரத்தின் இரண்டாம் வரியைக் குறிக்கின்றது இப்பாசுரம். வைணவக் கோயில்களில் 'சாற்றுமுறையாக' ஓதப்படும் பாசுரங்கள் 29 மற்றும் 30 ஆவது பாசுரங்கள்.
15 ஆம் பாசுரத்தில் இறைவனின் அடியார்க்கு அடியாராக இருப்பதன், பாகவத தாஸ்யத்தின் பெருமை பேசப்படுகின்றது. இந்த 29 ஆவது பாசுரத்தில் ஆண்டவனுக்கு அடியாராக, பகவத் தாஸ்யத்தில் ஈடுபடுவதைப் பற்றிக் கூறி சரணாகதி தத்துவத்தின் பலனே இறைவனுக்கு என்றும் பணிசெய்வது தான் என்று முடிக்கப்படுகிறது. 28 ஆம் பாசுரத்தில் த்வய மந்திரத்தின் முற்பகுதியான உபாயம் (இறைவனை அடையும் வழி) குறித்து, அதாவது சரணாகதியை உபாயம் என விளங்குகிறாள் ஆண்டாள்.
இப்பாசுரத்தில் த்வய மந்திரத்தின் பிற்பகுதியான உபேயம் (அடையும் பேறாகிய இறைப்பணி) குறித்து விளக்குகிறாள். இறைவனைச் சரணம் செய்து அடையும் வீடுபேற்றின் நோக்கமே, என்றும் இறைவனோடு இருந்து நம்மாலான தொண்டினை செய்வதே உண்மையான பேரின்பம் என்ற தன் எண்ணத்தை உறக்கக் கூறி முடிக்கிறாள்.
பாசுர விசேஷம்:
சிற்றம் சிறுகாலை: குளிரின்னும் நீங்காத விடியல் காலத்திலே, மிகவும் சிறிதாகவே கண்ணுக்குப் புலப்படக்கூடிய, அழகியதும் சிறியதுமான குட்டிக்கண்ணன் காலைக் காண, அவன் காலடியில் பணிந்து தொழ, இந்த ஆயர்பாடிப் சிறுமிகள் சிறுகாலைப் பொழுதில், அதாவது விடியல் வேளையிலேயே வந்தனராம்! முனிவர்களும் யோகிகளும் உள்ளத்தில் குடி கொண்டுள்ள இறைவனது யோக நித்திரை கலையாமல் மெல்லக் கண்விழித்து அரியென்னும் பேரரவம் செய்யும் காலை நேரம் என்பர்.
வந்துன்னை சேவித்து:
அடியவருக்கு அருளும் உன் கருணையை எண்ணித் தொழுது. ஏற்கனவே சொன்னது போல, இவர்கள் மார்கழிக் குளிரில் தன்னைத் காண வந்ததே கண்ணனுக்குப் பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது. வந்தவர்கள் மேலும் கண்ணனைக் கரங்கூப்பித் தொழுது (சேவித்து) நிற்பதைக் கண்டு அவன் மனம் பாகாய் உருகிவிடுமாம். அவன் அவ்வளவு கருணையாளன்.
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்!:
கண்ணனைப் பார்த்து "மிகவும் கஷ்டப்பட்டு உன்னைச் சரணடைந்தேன். ஆகவே, உன் தாமரைத் திருவடிகளை போற்றுவதற்கான காரணத்தை நீ கேட்டே ஆக வேண்டும். நீ எங்கள் குலத்தில் வந்து உதித்தவன். அதற்காகவேனும், நான் சொல்ல வருவதை நீ கேட்டுக் கொண்டாக வேண்டும். என்9 குற்றேவலை நீ கொள்ளத் தான் வேண்டும்" என்று தன்னை ஒரு இடைச்சிறுமியாக எண்ணிக் கொண்டு சூடிக் கொடுத்த ஶ்ரீகோதை ஆண்டாள் நாச்சியார் குறிப்பால் சொல்வது சிறப்பாகும்.
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து:
பசுக்களை மேய்க்கும் ஆயர்குலத்தில் கண்ணனாகப் பிறந்த இறைவா. பசுக்கள் உணவு உட்கொள்ளாமல் இடையர்கள் உண்ணுவதில்லை. இடையர்களைக் காக்கும் பெரும் இடையனாம் கண்ணனும், அவனது பசுக்களான ஜீவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கக் கூடாது என்று குறிப்பாகத் தூண்டுகிறாள், ஆண்டாள்.
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்:
இங்கே 'போற்றும்' என்றால், இறைவனிடம் எதையோ எதிர்பார்த்துப் போற்றுவதல்ல. இறைவனைப் போற்றுவதே நாம் பெரும் பலன், இப்பிறவி பெற்றதன் பொருள் என்று உணர்ந்து, வேறு பலனெதுவும் எதிர்பாராமல் இறைப்புகழைப் போற்றுவது.
பொற்றாமரை அடியே: இறைவனை அடைவதற்கு ஒரே வழி - உபாயம் அவன் திருவடிகளில் சரணம் செய்வது தான். வேறெந்த வழியிலும் ஈடுபடுவது (உபாய விரோதி) பயனற்றது.
உன்தன்னோடு உற்றோம் ---- ஆட்செய்வோம்: இறைவனை சரணடைந்த பின் நாம் அடையக் கூடிய ஒரே இன்பம் (ப்ராப்யம்), அவனுக்குப் பணி செய்வதே (கைங்கர்யம்). வேறெந்தப் பலனும் எதிர்பார்ப்பது தவறு (ப்ராப்ய விரோதி).
சென்ற 28ம் பாசுரத்தில் "உன்னுடனான உறவைப் பிரிக்கவே முடியாது" என்று பாடியவள் இப்பாசுரத்தில் ஒரு படி மேலே போய், "கண்ணா! “(எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்) எக்காலத்திலும் நீயே எங்கள் உறவு, இதற்கு நீ அருள வேணும்! இந்த நோக்கத்திலிருந்து எங்கள் மனம் திரும்பாமல் இருக்கும்படியான வைராக்கியத்தை எங்களுக்கு அளிப்பதும் உன் சித்தமே" என்று இடைச்சியர் சொல்வதாக ஶ்ரீகோதை ஆண்டாள் நாச்சியார் சாதுர்யமாக எல்லா பொறுப்புகளையும் அப்பரந்தாமன் மேலேயே விட்டு விடுகிறாள்.
இப்பாசுரத்தில் மூன்றாவது முறையாக கோவிந்த நாமம் (இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா) எழுப்பப்படுகிறது. இதற்கு முன், 27வது பாசுரத்தில், "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" என்றும், 28வது பாசுரத்தில் "குறைவொன்றும் இல்லாத கோவிந்தா" என்றும் ஶ்ரீஆண்டாள் பாடியுள்ளாள். பொதுவாக, சங்கல்பத்தின் போது, "கோவிந்த கோவிந்த கோவிந்த:" என்று மூன்று முறை சொல்வது ஶ்ரீவைஷ்ணவ மரபு.
நோன்புக்காக பறை வேண்டுவதின் சரியான அர்த்தம் இப்பாசுரத்தில் வெளிப்பட்டுள்ளது. அதாவது, உன் திருவடிகளில் கைங்கர்யம் செய்திருத்தல், உன்னை விட்டுப் பிரியாதிருத்தல், மேற்கூறிய இரண்டுக்கும் ஒவ்வாத எண்ணங்களை நீக்க வேண்டுதல் ஆகியவையே ஆகும்.
இப்பாசுரத்தில், சொரூப விரோதியும், பிராப்ய விரோதியும் விலகுவது சொல்லப்பட்டுள்ளது.
த்வயத்தின் முற்பகுதியான உபாய சொரூபம் சென்ற பாசுரத்தில் (கறவைகள் பின் சென்று) வெளிப்பட்டது. இதில், பிற்பகுதியான உபேய சொரூபம் (பரம்பொருள் வடிவம்) வெளிப்படுகிறது.
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது:
குற்றேவல் என்றால் - குறு ஏவல். இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற "சிறு தொண்டுகள்" செய்தல். காலால் இட்டதைத் தலையால் செய்வதே குற்றேவல்.
"எங்களுக்குப் பெருமை தந்த உனக்கு எம்மால் ஆனதான நாங்கள் புரியும் தொண்டினை ஏற்க வேண்டும். அப்படிப் பட்டத் தொண்டை உனக்கு நாங்கள் செய்ய வேண்டும் கண்ணா! அதை நீ மறுக்கக் கூடாது! இந்தப் பசுக்களைக் காப்பதற்கு நாங்கள் பலர் இருக்கிறோம். ஆனால் எங்கள் எல்லோரையும் சேர்த்துக் காப்பவன் நீ ஒருவன் தானே! உனக்கு அடி பணிந்து தொண்டு செய்வது எங்களுக்குப் பெருமை. அதை எங்களுக்குக் கட்டாயம் அளிக்காமல், தவிர்க்காதே! " என்கிறாள்.
உனக்கேநாம் ஆட்செய்வோம்:
"எங்களைக் காப்பது உன் தொழிலே அன்றோ? அது போன்றே எங்களால் சேவகம் செய்யப்பெற வேண்டியவனும் நீயன்றோ? அதை ஏற்காமலிருப்பது உன் இயல்புக்கு அழகில்லையே,"என்று சொல்கிறாள்.
மற்றை நம் காமங்கள் மாற்று:
உனக்குப் பணி செய்யும் ஆசையைத் தவிர நாங்கள் கொள்ளுகின்ற வேறெந்த விருப்பங்களையும் போக்கிவிடு. "எப்போதும் எங்களைப் பற்றியே எண்ணிக்கொண்டு, ஆசை விருப்பம், கோபம் தாபமென்று சிற்றின்பங்களில் உழன்று கொன்டு, ஸம்ஸாரத்திலேயே நினைவை வைத்துக் கொண்டிருப்பது எங்கள் பிழை. உனக்குத் தொண்டாற்றுவதைத் தவிர்த்ததான எங்களது வேறு விருப்பங்களை, லௌகீக ஈடுபாடுகளை, மாற்றித் திருத்தி விடு!" என்கிறாள் நம் அன்னை ஶ்ரீகோதை ஆண்டாள்.
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு:
பரமபதத்திலோ, தேவருலகிலோ, மண்ணுலகிலோ, நீயெங்கு தோன்றினாலும் தானும் கூடவே தோன்றும் உன்னை என்றும் நீங்காமல் இருக்கும் திருமகள் போல், நாங்களும் உன்னோடே எப்போதும் இருந்து பணி செய்யும் பேறு வேண்டும். இது ஸ்ரீமதே நாராயணாய நம: எனும் த்வய மந்திரத்தின் இரண்டாம் வரியைக் குறிக்கின்றது.
உன்தன்னோடு உற்றோமே:
திருமந்திரத்தின் பிரணவத்தை குறிக்கும் சொற்றொடர்.
உனக்கே நாம் ஆட்செய்வோம். உன்னையே சரணம் அடைந்தோம். மாம் ஏகம் சரணம் எனக் கண்ணன் சொன்னதற்கிணங்க, பரமன் ஒருவனையே பணிதல்,
திருமந்திரத்தின் நாராயண ஒலியைக் குறிக்கும் சொற்றொடர்.
மற்றை நம் காமங்கள் மாற்று:
தன்னைச் சரணடைந்த பின்னர், அந்த ஜீவனை வேறெதிலும் சிக்கவிடாமல், அப்படி வழிமாறிப் போனாலும் தடுத்தாட்கொண்டு அருள் செய்யும் கருணை உடையவன் இறைவன் என்று பொருள். திருமந்திரத்தில், எதுவும் எனதல்ல எல்லாம் பரமனுடையதே என்பதைக் குறிக்கும் 'நமஹ'என்ற ஒலியினைக் குறிக்கும் சொற்றொடர்.
மற்றைக் காமங்கள் மாற்று: நமக்கு நம் மனத்தைக் கட்டுப்படுத்தி, ஒருமுகப்படுத்தி தியானத்திலாழ்ந்து, இறைவனைக் காண வேண்டுமானாலும், அதுவும் இறைவன் அருளால் தான் முடியும். ஆகவே தான் ஆசைகளால் அலைப்புறுத்தப் பட்டு அங்குமிங்கும் பாய்கின்ற மனத்தைக் கட்டுப்படுத்த, ஆண்டவனிடமே முறையிடுகிறாள் ஶ்ரீஆண்டாள்.
அர்ஜுனன் கீதையில் கண்ணனிடம் சொன்னதையொட்டியே இவ்வரி உள்ளதென்பர்.
ச1ஞ்ச1லம் ஹி மன: க்1ருஷ்ண ப்1ரமாதி2 ப3லவத்3த்3ருடம் |
த1ஸ்யாஹம் நிக்3ரஹம் மன்யே வாயோரிவ ஸுது3ஷ்க1ரம் ||
"(பகவத் கீதை 6-34)
"கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உன்னுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்." என்கிறான் அர்ச்சுனன்.
தன்னை அடைந்த அடியவரின் குறைபாடுகளைக் கண்டு வெறுத்து ஒதுக்காதவன் பரந்தாமன். ஆகவே, அவன் மீதான பற்றுதலைத் தவிர அடியார்களுக்கு இருக்கக் கூடிய வேறு ஆசைகளை, குறைகளை நீக்கி, எப்போதும் தன்னையே நாடும் குணத்தை அருள்வான். ஆகவே இப்படியொரு கோரிக்கையை வைக்கிறாள் ஶ்ரீகோதை ஆண்டாள்.
அடுத்த பதிவில், திருப்பாவை பிரபந்தத்தின் பலஸ்துதியான 30ம் பாசுரத்தை சேவிப்போம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்,
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
அடியேன்,
No comments:
Post a Comment