*திருப்பாவை பாசுரம் 25*
5 X 5 + 5 ல்: ஐந்தாம் ஐந்தின் நிறைவு. இப்பாசுரத்தில் பிறப்பற்ற இறைவனின் கிருஷ்ணாவதார இரகசியம் போற்றப்படுகின்றது. அடியவர்களைக் காக்கும் பொருட்டு தானும் ஒரு ஜீவாத்மாவைப் போன்றே கருவிலடைந்து பிறந்த பரமாத்மாவின் கருணை பேசப்படுகின்றது. இது இஜ்யா கால பஞ்சகத்தின் கீழ் வரும் பாசுரம். இறைவனுக்கு உளமாரச் செய்யும் ஆராதனை (மானஸீக ஆராதனம்), இறைவனது குணங்களின் பெருமையினைப் போற்றிப் பாடுதல் (அருத்தித்து வந்தோம்) என்பதைக் குறிக்கும் பாசுரம்.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை-
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி,
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பாசுர விளக்கம்:
தேவகி பிராட்டியின் மைந்தனாய் அவதரித்து, பிறந்த அந்த கரிய இரவிலேயே, வசுதேவரால் ஆயர்பாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே யசோதையின் மகனாக, (உனக்குத் தீங்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில்!) நீ ஒளித்து வளர்க்கப்பட்ட காலத்தில், அதைப் பொறுக்காது, உன்னை அழித்து விட வேண்டும் என்ற கம்சனின் தீய நோக்கத்தை பயனற்றதாக்கி, (அவ்வரக்கன் அழியும் காலம் வரை!) அவனது வயிற்றில் (அச்சம் என்கிற) ஓர் அணையா நெருப்பு போல் கனன்று நின்ற சர்வ லோக சரண்யனான கண்ணபிரானே !
நாங்கள் பணிவுடனும், பக்தியுடனும் நோன்புக்கான பறை வேண்டி உனை விரும்பி வந்துள்ளோம் ! எங்கள் விருப்பத்தை நீ நிறைவேற்றுவாய் எனில், இலக்குமிக்கு ஒப்பான உன் செல்வ அழகையும், உன் ஒப்பிலாப் பெருமைகளையும் பாடி, உன் பிரிவினால் வந்த துயர் நீங்கி, பாவை நோன்பிருந்து உன்னை வணங்கி வழிபட்டு, நாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்போம்.
கண்ணனின் அவதார ரகசியம் இப்பாசுரத்தில் பொதிந்துள்ளதாக பெரியோர் கூறுவர். உபநிடதத்தில் பரமனின் அவதாரங்கள் குறித்துச் சொல்லப்பட்ட அஜாயமானோ பஹுதா விஜாயதே என்பதன் பொருள் "பிறப்பற்றவன் பல பிறப்புகள் எடுக்கிறான்" என்பதாகும்!
பாசுர விசேஷம்:
தரிக்கிலான் ஆகி ---- கஞ்சன் வயிற்றில்:
கண்ணன் ஆய்ப்பாடியில் வளர்கிறான் என்ற செய்தி அறிந்தவுடன், கம்சன் தன் உடம்பையே தான் "தரிக்க முடியாமல்" உடலும் மனதும் தகிக்க, நெருப்பில் இட்ட புழுவாக துடித்ததைத் தான் ஆண்டாள் நயமாக ஒரே வார்த்தையில் "தரிக்கிலானாகி" என்கிறாள்! மரணத்தை விட, கம்சனை வாட்டியது இது தான். அவன் செய்த கொடுமைகளுக்கெல்லாம் அவனுக்குக் கிட்டிய கர்மபலன் அது.
கம்சன் கண்ணனுக்கு தீங்கே நினைத்து இருந்திருந்தாலும், சதாசர்வ காலமும் பரமன் எண்ணமாக இருந்தான், தனது பயம் காரணமாக கண்ணனை எங்கும் பார்த்தான், அதனால், கம்சனுக்கும் மோட்ச சித்தியை அருளினான் நீலமேக வண்ணன்!
உன்னை அருத்தித்து வந்தோம்---மகிழ்ந்தேலோர் எம்பாவாய்:
கோபியர் கண்ணனிடம் 'உன்னையே உன்னிடம் வேண்டி நிற்கிறோம்! நிலையான செல்வமாகிய பிராட்டியை மார்பில் தரித்தவன் நீ! சதாசர்வ காலமும் உனக்குச் சேவை செய்யும் பெருஞ்செல்வத்தை நீ எங்களுக்கு அருளும் பட்சத்தில், நாங்களும் திருத்தக்க செல்வம் பெற்றாராகி, உனக்கும் பிராட்டிக்கும் ஊழியஞ்செய்து, இதுகாறும் பிறவிகள் பல எடுத்த வருத்தமும் தீர்ந்து, உன்னை என்றும் பிரியாத பேரானந்த நிலையை அடைந்து மகிழ்வோம்' என்று சொல்கிறார்கள்.
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி:
கண்ணனுக்கு கைங்கர்யம் செய்வதற்கு முன், அப்பரமனின் மார்பில் குடியிருக்கும் தாயாரை முதலில் போற்றி வணங்க வேண்டியதை வலியுறுத்துவதாகக் கொள்ளலாம். 'திருத்தக்க செல்வம்' என்பதற்கு திருவை (திருமகளை) உடைமையால் வந்த செல்வம் என்றும், திருவும் விரும்பத்தக்க செல்வம் (திருமார்பன்!) என்றும் கூட பொருள்படும் !
சில விசேஷ அர்த்தங்கள்:
ஒருத்தி மகனாய்:
கண்ணனைத் தன் கருவில் சுமந்து ஈன்று தந்த பெருமை தேவகிக்கு கிடைத்தது. பிரஜாபதி சுதபாவும் அவர் மனைவி ப்ரச்னியும், குழந்தை வரம் வேண்டி விஷ்ணுவை நோக்கி தவம் இருந்தனர். தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணுவும் அவர்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். தம்பதியர் “உங்களைப்போல ஓர் பிள்ளை வேண்டும்” என்று கேட்டனர். ஆர்வமிகுதியால் ஒருவர் மாற்றி ஒருவராக மூன்று முறை கேட்டனர். பகவானும் “அப்படியே ஆகட்டும்” என்று வரமளித்தார்.
அவர்களுக்கு பகவான் ப்ரச்னிகர்பனாகப் பிறந்தார்.
பிறகு அவர்களே அதிதி – கஸ்யபராக இருந்தபொழுது உபேந்திரனாக, (வாமனனாக) பிறந்தார்.
இப்போது தேவகி வசுதேவருக்கு கண்ணனாகப் பிறந்தார்! ஆக, தன் தாய்க்குக் கொடுத்த வாக்கை, அவளிடம் மூன்று முறை பிறந்து, சத்யமாக்கினான், அப்படிப்பட்ட பெருமையுடைய ஒருத்தி தேவகி!!
இப்படிப்பட்ட பாக்கியத்தை தேவகி செய்ததை ஒட்டித்தான் அவள் 'ஒருத்தி' என்று குறிக்கப்படுகின்றாள்.
அவளைப் போன்றே போற்றுதலுக்கு உரியவள் கண்ணனை நெஞ்சிலே சுமந்து வளர்த்தெடுத்த யசோதை! கண்ணன் அவளை பாடாய் படுத்தியபோதும், யசோதையைப் போல் வளர்ப்புப் பிள்ளையை வாஞ்சையுடன் கவனித்துக் கொண்ட தாய் அவனியில் கிடையாது. பெரியாழ்வார், கண்ணன் அடித்த சேஷ்டைகளால் யசோதா தெம்பிழந்த கதையை ஒரு பாசுரத்தில்,
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்;
எடுத்துக் கொள்ளில் மருங்கையிறுத்திடும்;*_
ஒடுக்கிப்புல்கில் உதரத்தே பாய்ந்திடும்;
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்;
என்று அழகாகச் சொல்கிறார். (பெரியாழ்வார் திருமொழி 1-2-9) அப்பேர்ப்பட்ட யசோதையையும் ஆண்டாள் "ஒருத்தி" என்று தானே அழைக்க வேண்டும்!
திருவிலேனொன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதைபெற்றாளே என்ற குலசேகர ஆழ்வாரின் தேவகி புலம்பலால், அவளைக் காட்டிலும் உயர்ச்சியுடையவள் யசோதை என்பது புலனாகிறது. ஆகவே தான் அவளையும் ஒருத்தி என்று புகழ்கிறாள் ஆண்டாள். ஒருத்தி, என்ற குறிப்பால் இருவரின் பெருமையையும் உரைக்கிறாள்.
ஓர் இரவில்:
அப்படிப்பட்ட இரவு அதற்கு முன்பும் நிகழவில்லை, பின்னரும் இருக்கவில்லை! ஆதலால் எப்படி 'ஒருத்தி' என்ற பதம் போலவே 'ஓர் இரவு' என்ற பதமும் குறிக்கப்படுகிறது. கண்ணன் பிறப்பிடம் வடமதுராவில் சிறைச்சாலை என்றாலும், தன்னை வெறுத்த மாமன் கம்சனின் இடத்தில் அவன் ஒரு இரவு கூட தங்கவில்லை. மாடு மேய்க்கும் காடு வாழ் சாதியனர் வாழும் ஆயர்பாடியான கோகுலத்திற்குச் சென்று விட்டான் அல்லவா?
இதன் கருத்து துன்பங்கள் என்னும் இருள் நிறைந்த இம்மண்ணுலகில், இறைவன் அவதாரம் செய்து லீலைகள் புரிகின்ற இம்மண்ணுலகில், ஸம்ஸாரமென்னும் இருள் தான் இரவு. மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பாவ புண்ணியங்களுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் ஜீவாத்மாக்கள் தான் இந்த இரவில் வாடும் உயிர்கள். அவர்கள் மீதில் கருணை கொண்டே இறைவன் தன்னுடைய நிலையினின்று கீழிறங்கி, நமக்கு இரங்கி , தன்னுடைய தெய்வத்தன்மைகளை ஒளித்துக் கொண்டு அருள் செய்கிறான். இதை கோயில்களிலுள்ள சிலை வடிவங்கள் சொல்லும்.
ஒளித்து வளர:
பிறந்த போதே இவன் இறைவன் என்று அறியும் வகையால் தன் விஸ்வரூபத்தைப் பெற்றோருக்குக் காட்டியருளிய கண்ணன், தன்னுடைய அடியவர்களின் மீது தனக்கிருக்கும் அன்பின் காரணத்தால், தான் யாரென்பதை மறைத்துக் கொண்டு சாதாரணச் சிறுவனாக ஆயர்பாடியில் வளர்ந்தான். அரக்கன் கம்சனுக்கு அஞ்சி ஒளியவில்லை. அவனைக் கொல்வதற்கான சமயம் வரும் வரை காத்திருந்தான். எங்கே கம்ஸனால் கண்ணனுக்குத் தீங்கு வந்து விடுமோ என்று அஞ்சிய தேவகியின் மனம் சமாதானம் ஆவதற்காகவே, கண்ணன் மதுராவை நீங்கி ஆயர்பாடியில் யசோதையிடம் வளரத் தலைப்பட்டான். ஒருபோதும் கம்ஸனுக்கு அஞ்ச வேண்டிய அவசியம் கண்ணனுக்கு இல்லை.
எப்படி ஜீவாத்மாக்களின் உள்ளே அந்தர்யாமியாக இறைவன் மறைந்திருக்கிறானோ, அப்படித்தான் கண்ணன் மண்ணுலகில் மறைந்திருந்தான். அவனைத் தெரிந்தவர்களுக்குத் தெரிவான், மறுப்பவர்களுக்குப் புலப்படான்.
தனது இறைத்துவத்தை நிலைநாட்டுவதற்கு தெய்வம் விரும்புவதில்லை, அப்படிச் செய்ய வேண்டிய அவசியமும் அதற்கு இல்லை. நிர்குணப் பரப்பிரம்மமாகவே இறைவன் இருக்கிறான். பாவச்சுமையை அதிகப்படுத்திக் கொள்ளும் ஜீவாத்மாக்கள் தாமே தான், தம்முடைய அழிவுக்குக் காரணமாகிறார்கள்.
தன்னை அண்டிய இந்திரனுக்காக அல்ல வாமனாவதாரம், தனது பக்தன் மஹாபலிச் சக்ரவர்த்தியின் பெருமையை உலகில் நிலைநாட்டவே!
ஸ்ரீநரசிம்ம அவதாரமோ தனது பக்தன் பிரஹலாதனின் வாக்கை மெய்ப்பிக்க வந்தது. இராமாவதாரத்தில் நல்லவர்களுக்கும், தவசிகளுக்கும் தனது அரக்கப் பிரதிநிதிகளின் மூலம் இடையூறு விளைவித்து அச்சமூட்டியதோடல்லாமல் தன் மனைவியையும் கவர்ந்து என்று பிழையிழைத்தமைக்காகவே இராவண வதம்.
தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து:
கம்சனின் எண்ணத்தைப் பொய்யாக்கி, குழந்தையாக இருந்த போதிலிருந்தே கண்ணனைக் கொன்று விடவேண்டி பூதனை, கேசியசுரன், தேனுகாசுரன், சகடாசுரன், கபித்தாசுரன், வத்ஸாசுரனென்று பற்பலரை ஏவியபடியே இருந்தவனல்லவா கம்சன்? ஆயினும் கண்ணனைக் கொல்லும் அவனது தீய எண்ணம் நிறைவேறவில்லையே ! அவற்றையெல்லாம் கண்ணன் பொய்த்துப் போகும்படிச் செய்திட்டானே!
வயிற்றில் நெருப்பென்ன நின்ற:
கம்சனுக்கு உயிரச்சம் ஏற்படுத்தும் நெருப்பாக, அவன் வயிற்றெரிச்சலாக இருந்து கடைசியில் கொன்றும் போட்ட கண்ணன். தன்னுடைய அன்பர்களின் மத்தியில் சாதாரனச் சிறுவனாக வளர்ந்த கண்ணன், அசுரர் குணங்கள் நிறைந்த கம்சனுக்கு வயிற்றிலிட்ட நெருப்பாக தகித்தான். கண்ணன் பிறக்கும் வரை தேவகியின் வயிற்றில் கம்சன் அச்சத்தை நெருப்பாக வைத்தான். கண்ணன் பிறந்த பின்னே அதே நெருப்பை கம்சனின் வயிற்றுக்கு மாற்றி விட்டான்.
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்:
உன்னைப் போற்றி பணிகின்ற எமக்கு நோன்பிற்குரிய பறைக்கருவியை அளிதப்பாய். "கண்ணா, எங்கள் நோன்பிற்குண்டான பறையை நீ எப்படிக் கொடுப்பதற்குத் தகுதியுடையவனாக இருக்கிறாயோ, அதைப் போலவே நாங்களும் அந்தப் பறையைப் பெறுவதற்குத் தகுதியோடு, உன்னைப் பணிந்து, அருத்தித்துப் போற்றிப் பாடி வந்தோம். நீ அன்று மஹாபலியிடம் மூன்றடி மண்ணுக்கு யாசகம் செய்யவில்லையா ? அதைப் போலவே இன்று நாங்கள் உன்னிடம் பறையை யாசித்து வந்துள்ளோம். அன்று உனக்குக் கிடைத்தது மூன்றடி நிலம். இன்று நாங்கள் வேண்டுவதோ ஒன்றே ஒன்று, பறை. அதை எங்களுக்கு நீ கொடு கண்ணா ! " என்கிறாள் ஆண்டாள்.
திருத்தக்க செல்வமும் சேவகமும்:
அந்தப் பறையை எங்களுக்குக் கொடுத்தால், ஸ்ரீலக்ஷ்மி பிராட்டி விரும்பத்தக்க உனது நற்குணங்களையும் வீரத்தையும் நாங்கள் பாடி “வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தே”, உன்னை அடைவதற்குத் தடையானவற்றைக் கடந்து வந்த வருத்தங்கள் மறைந்து, இன்பம் பொங்குமாறு இருப்போம்.
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து:
கர்மவினைகளால் மீண்டும் மீண்டும் அடைகின்ற பிறவிப்பிணியின் துன்பங்கள் தீர்ந்து இறைப்பணியில் [பகவத் கைங்கர்யம்] மகிழ்ச்சியோடு ஈடுபடுவர். நீ எங்களுக்கு இறைப்பணியென்னும் [பகவத் கைங்கர்யம்] செல்வத்தைக் கொடுத்தால், நாங்கள் உன்னையும் உன் பிராட்டியான மஹாலக்ஷ்மியையும் திருத்தக்க செல்வமாக, என்றும் நிலையான செல்வமாக பெற்று, உங்களுக்கு சேவகம் செய்து, இதுவரை பிறவிகள் பல எடுத்த வருத்தமும் தீர்ந்து, பரமானந்த நிலையை அடைந்து மகிழ்வோம் என்று சொல்கிறாள்.
இனி தங்கள் தேவைகளை பட்டியலிடும் 26ம் பாசுரத்தை நாளை அனுபவிப்போம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்,
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
அடியேன்,
No comments:
Post a Comment