Popular Posts

Monday, 27 January 2025

திருப்பாவை 20

 *திருப்பாவை பாசுரம் 20*

(முப்பத்து மூவர்)


இதற்கு முந்தைய பாசுரத்தில் பகவான் ரக்ஷகத்வத்துக்கும், பிராட்டியின் புருஷாகாரத்துக்கும், அவர்களுக்குள்ளேயே போட்டி ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தடுத்துக் கொண்டிருப்பது தத்துவமன்று என்று துவங்கிய ஆண்டாள் இந்த பாசுரத்தில் அதன் தொடர்ச்சியாக அந்த திவ்ய மிதுனமான தம்பதிகளை போற்றி மங்களாசாசனம் செய்கிறாள்.

(கண்ணனையும் நப்பின்னை பிராட்டியையும் மறுபடி எழுப்புதல்)


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!

செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா ! துயிலெழாய்;

செப்பன்ன மென்முலை செவ்வாய்ச் சிறுமருங்குல்,

நப்பின்னை நங்காய் ! திருவே ! துயிலெழாய்!

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.


பாசுர விளக்கம்:

கண்ணனை எழுப்புதல்:

தேவர் கூட்டத்தையும், அவர்களூக்குத் தலைவர்களாக விளங்கும் முப்பத்து மூன்று தேவர்களையும், இடர்கள் நெருங்குவதற்கு முன்னமே, அவர்கள் அச்சத்தை விலக்கி, காத்தருளும் நாயகனே கண்ணா! கண் விழிப்பாயாக! எடுத்த காரியத்தை நிறைவுறச் செய்பவனே! குற்றமில்லாதவனே! மிக்க வலிமை பொருந்தியவனே! எங்கும் நிறைந்தவனே! பகைவருக்கு துன்பங்களைக் கொடுப்பவனே! உறக்கம் விட்டு எழுவாயாக!


நப்பின்னையை எழுப்புதல்:

கவிழ்த்த செப்பைப் போன்ற மென்மையான மார்பகங்களையும், சிவந்த இதழ்களைக்கொண்ட வாயையும், மெல்லிய இடையையும் உடைய நப்பின்னை பிராட்டியே! திருமகளைப் போன்றவளே! துயில் விட்டெழுவாய்! எங்கள் நோன்புக்குத் தேவையான ஆலவட்டத்தையும் (விசிறியையும்), தட்டொளியையும் (கண்ணாடியையும்) வழங்கி, உன் கணவனான கண்ணனையும் எங்களுடன் அனுப்பி, நாங்கள் நோன்பு நீராட வழி செய்வாயாக!"


பாசுர விசேஷம்:

திருப்பாவையில், இதுவே நப்பின்னை பிராட்டியை  துயிலெழுப்பும் கடைசிப் பாசுரம்.  (பாசுரங்கள் - 18,19,20) ஆனால், கண்ணன் தெளிவாக துயில் விலக இன்னும் இரண்டு பாசுரங்கள் ஆகும்

5 X 5 + 5 இல் இது நான்காம் ஐந்தின் இறுதிப் பாசுரமாகும். 


இப்பாசுரத்திலும் புருஷாகார தத்துவத்தின் அடிப்படையில் , நப்பினையையும், கண்ணனையும் சேர்த்துத் துயில் எழுப்புவதாக வருகிறது. சென்ற பாசுரத்தில் உனக்குத் தத்துவமன்று, தகாது என்றெல்லாம் கடிந்து கொண்டார்கள் அல்லவா?  இங்கே நைச்சியமாகப் பேசி, அவள் அழகிய சொரூபத்தைப் போற்றிப் பணிந்து, புருஷாகாரம் செய்யச் சொல்லி விண்ணப்பிக்கிறாள் நம் கோதை ஆண்டாள் !


இந்த 20வது பாசுரம் உபநிடதம், கீதை சார்ந்த சில விஷயங்களை உள்ளடக்கியிருப்பதாக பெரியோர் கூறுவர்.

'அம்பரமே' எனத் தொடங்கும் 17 ஆம் பாசுரத்தில் முதலெழுத்து 'அ 'காரம். 'உந்து மத' எனத் தொடங்கும் 18 ஆம் பாசுரத்தின் முதலெழுத்து 'உ'காரம். 'முப்பத்துமூவர்' எனத் தொடங்கும் 20 ஆம் பாசுரத்தின், முதலெழுத்து 'ம'காரம். இந்த மூன்று எழுத்துகளும் , 'அ'காரம் +'உ'காரம் +'ம'காரம் , சேர்ந்தால் வருவதே பிரணவம்(ௐ) . நடுவில் வரும் 19 ஆம் பாசுரம் 'குத்துவிளக்கெரிய' அதன் முதலெழுத்து 'கு' இது வினையையும் பெயரையும் இணைக்கும் வேற்றுமை உருபு. எனவே 17,18,20 ஆகிய பாசுரங்களை இணைக்கும் பாசுரம் 19. இவை நான்கும் ஒன்றோடொன்று தொடர்புடைய வகையில் அமைந்து ப்ரணவத்தைக் குறித்தன. தமிழின் சிறப்பும், ஆண்டாளின் திறமையும் ஓங்கி விளங்கும் இடங்களில் இவையும் ஒன்று!


அர்த்த பஞ்சகத்தின் கீழ் வரும் இந்த மூன்று பாசுரங்கள் 18,19,20, இவை ஜீவாத்ம நிலையானது , புருஷகாரத்தை முன்னிட்டுச் சரணடைதல் பற்றிச் சொல்கின்றன.

இப்பாசுரத்திலுள்ள ஒரு நுணுக்கத்தை கவனிக்க வேண்டும், கோதை நாச்சியார், பரமனை இரண்டு முறை  துயிலெழ வேண்டுகிறாள் 

1) கப்பம் தவிர்க்கும் கலியே!_ துயிலெழாய்!:

2)வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்:

இங்கு, அவனைச் சரணடைவதே பிரதானம் என்கிறாள் கோதை ஆண்டாள். 


முப்பத்து மூவர்:

தேவர் கூட்டத்துக்கு தலைவர்கள் 33 பேர், (8 வசுக்கள், 11 ருத்ரர்கள், 12 ஆதித்யர்கள், 2 அஸ்வினி தேவர்கள்.)


🔹அடுத்து பிராட்டியை அவள் பெருமைகள் தோன்ற மங்காளாசாசனம் செய்கிறார்கள். _செப்பென்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்_ என்று நாயகனான பகவான் உகந்து பிராட்டியும் உகப்பிக்கும் அவயவ லக்ஷணங்களைச் சொல்லி அவர்களுக்குள் நெருக்கத்தைச் சொல்லி, திருவே! துயிலெழாய்! என்று அந்த மஹாலக்ஷ்மியே இங்கே நப்பின்னை என்று திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார்கள்.

🔹உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு:

இங்கே பூர்வாசார்யர்கள் ‘உக்கமும் தந்து, தட்டொளியும் தந்து, உன் மணாளனையும் தந்து’ என்று அர்த்தம் சொல்கிறார்கள். இது மனித உறவாக இருந்தால், மனைவியிடமே கணவனைக் கொடு என்று ஒரிருவரல்ல, பஞ்ச லக்ஷம் கோபிகைகளும் போய் நின்று கேட்க முடியுமா! இது தெய்வீக சம்பந்தம். எல்லோருக்கும் துளி துளி எடுத்துக் கொடுத்தாலும் அப்போதும் அது பூரணமாக இருக்கும் ப்ரஹ்மமாயிற்றே! (பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவஷிஷ்யதே।। - ஈஷாவாஸ்ய உபநிஷத்)

எப்படி தசரதன் ராமனை ‘தந்தேன்!’ என்று விஸ்வாமித்திரரிடம் எடுத்துக்கொடுத்தானோ அப்படி உன் மணாளனை தூக்கி எங்களிடம் கொடுத்து விடு என்கிறார்கள். அது பகவானிடம் பிராட்டிக்கு உள்ள உரிமையையும் எடுத்துக்காட்டுகிறது. அசேதனங்களை எடுத்துக்கொடுப்பது போல், பகவானையும் தூக்கி பக்தர்களிடம் சேர்ப்பிக்கக் கூடியவள் அவள்.


உக்கம் என்பது விசிறி, தட்டொளி என்பது முகம் பார்க்கும் கண்ணாடி. ஒன்று கைங்கர்யத்துக்கு. ஒன்று ஸ்வரூபத்தைக் காட்டுவதற்கு. கைங்கர்யமும், ஸ்வரூப ஞானத்தையும் பிராட்டியிடம் கேட்டுப் பெற்று ப்ரஹ்மத்தை அடைவதே மோக்ஷம். அதை தரவேண்டும் என்று மஹா லக்ஷ்மியான நப்பின்னையிடம் வேண்டுகிறார்கள்.


🔹இப்போதே எம்மை நீராட்டேலோரெம்பாவாய்

 உடனே எங்களுக்கு மோட்ச சித்தியை அருள வேண்டும் என்று அடியவர் கட்டளையிடுகின்றனர்!

நீராடல் என்பது பரமனுடன் ஒன்றறக் கலப்பதையே உள்ளர்த்தமாக கொண்டிருக்கிறது (திருப்பாவையில் எல்லா இடங்களிலும்)

⭐ நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

⭐ நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

⭐ *நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்*

⭐ மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

⭐ குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

⭐ இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

⭐ மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்

ஆகிய பாசுரங்களில் நீராடல் பற்றி கூறுகிறாள்.

நாளை 21ம் பாசுரத்தை அனுபவிப்போம்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

அடியேன்,

No comments:

Post a Comment