*திருப்பாவை பாசுரம் 21*
(ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி)
(இனி வரும் அனைத்து பாசுரங்களுமே நமது வைணவ சித்தாந்தத்தை விளக்குபவை. எனவே சற்றே விரிவான விளக்கம் அளிக்கிறேன்.)
நப்பின்னை உட்பட எல்லாப் பெண்களும், கண்ணனைப் போற்றித் துதித்துத் துயில் எழ வேண்டுவதான பாடல் இது ஆகும்.
இறை அடியவர் விரும்புவதைக் கேட்கும் நிலைக்குக் கண்ணணைத் தயார் செய்யும் படியாக அமைந்த, ஐந்தாம் ஐந்தின் தொடக்கம். முந்தைய மூன்று பாசுரங்களால் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பினர், கோபிகைகளான ஆண்டாளும் அவள் தோழியர்களும். இப்பாசுரத்தில் கண்ணனை எழுப்ப கோபியரோடு நப்பின்னையும் சேர்ந்து கொள்கிறாள். பரமனை எழுப்பி கோபியரின் கோரிக்கையை அவனிடம் எடுத்துச் சொல்லி, பரிந்துரைக்க சரியான சமயம் வேண்டி, தான் காத்திருந்ததை, நப்பின்னை கோபியரிடம் தெளிவுபடுத்துகிறாள். அதன் காரணமாக மிகுந்த உற்சாகமுடன் இப்பாசுரத்தால் கண்ணனை எழுப்புகின்றனர், ஆண்டாள், மற்றும் அவளது தோழியர்கள்!
இன்னும் முனைப்போடு கண்ணனை ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்!" என்று பக்திப் பேருவகையோடு போற்றிப் பாடுகின்றனர். ஆயர் குலத்தினில் ஒருவனாக கண்ணன் வாழ்ந்தாலும், அவனது பரம்பொருள் தன்மையானது "உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே" என்ற விவரிப்பின் வாயிலாக இப்பாசுரத்தில் வெளிப்பட்டுள்ளது!
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய் ! பெரியாய் ! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே ! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!
பாசுர விளக்கம்:
[கறப்பதற்காக வைத்த பாத்திரங்கள் எல்லாம் நிறைந்து வழியும் வகையில் எந்த எதிர்ப்புமின்றி பால் பொழிகின்ற வள்ளல் பெரும் பசுக்கள் கூட்டத்தை, எண்ண முடியாத அளவு கொண்ட நந்தகோபன் மகனே! உறக்கம் கலைந்து சிந்தை தெளிவுறுக!
(அடியவர்களைக் காப்பதில் எப்போதும்) மனவெழுச்சியும் பெருமையும் கொண்டவனே!
பெரியவனே! உலகில் காணும் காட்சியெங்கும் நிறைந்து நின்று உள்ளத்திலும் ஒளி தரும் அருட் சுடரே! துயில் எழுவாய்!
தவறானவர்கள் தங்கள் தவறுகள் எல்லாம் தொலைந்து (நல்லவர்களாய்) உன்னுடைய வாசல் வந்து, நீயின்றி இருக்க ஆற்றாமையால் உன்னுடைய திருவடியைப் பணிவதைப் போலே, நாங்களும் உன்னைப் போற்றிக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் கூறும் புகழ்மொழிகளைக் கேட்டு மனம் திறந்து கருணை செய்வாய்!]
ஆழ்ந்த பொருள் பொதிந்த, விசேஷமான இந்தப் பாசுரத்துக்கு, சற்றே விசேஷமான, விரிவான விளக்கம் அளிக்க முயற்சிக்கிறேன். பிழைகள் இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்.
*பாசுர விசேஷம்:*
1) ஏற்ற கலங்கள்:
ஸ்வாமி தேசிகனின் "நியாய விம்ஸதியில்" சித்தம் ஸத் சம்பரதாயே என்று ஆச்சார்ய லக்ஷணத்தையும், சத் புத்தி: சாது ஸேவி என்று சத் சிஷ்ய லக்ஷணத்தையும் குறிப்பிடுகிறார். இந்த பாசுரத்தில் சத் ஆச்சார்ய லக்ஷணம் - சத் சிஷ்ய லக்ஷணம் விவரிக்கப் படுகிறது.
திவ்யார்த்த தீபிகையில், அண்ணங்கராச்சார்ய ஸ்வாமி, சத் ஆச்சார்யாராக எம்பெருமானாரையும், சத் சிஷ்யர்களாக கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார் மற்றும் குருகைப்பிரான் ஆகியோரை அடையாளம் காட்டுகிறார். இவர்கள் அனைவரும் சிஷ்ய லக்ஷண சம்பன்னர்கள் அதாவது ஒரு சதாச்சாரியாரின் கொள்கைகளை பூரணமாக உணர்ந்து செயல்படுபவர்கள். மேலும் இவர்கள் ஆச்சார்யாதிசய ப்ரபாவசாலிகள் அதீதமான புத்தி கூர்மையாலும் திறமையாலும் ஆச்சார்யரின் உபதேசங்களையும் ஸ்ரீ ஸூக்திகளையும் கிரஹித்து அவற்றை சிறந்த முறையில் பரப்பி, அதன் மூலம் ஆச்சார்யரின் பெருமையை மேலோங்கச் செய்பவர்கள். ஆண்டாள் குறிப்பிடும் ஏற்ற கலங்கள் இவர்களுக்குப் பொருந்தும்.
2) வள்ளல் பெரும் பசுக்கள்:
ஸ்ரீ அண்ணங்கராச்சாரி ஸ்வாமி, பூர்வச்சார்யர்களில் ஸ்வாமி ஆளவந்தாரை, ஸ்வாமி ராமானுஜருக்காக, ஐந்து "வள்ளல் பெரும் பசுக்களை" நன்கு உருவாக்கினார் என்று குறிப்பிடுகிறார் (ஆற்றப்படைத்தான்). அவர்கள்,
பெரிய நம்பி, திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான் மற்றும், ராமானுஜர் முதலில் சந்தித்த குரு திருக்கச்சி நம்பி. இவர்களிடம் பயின்றதால், ஸ்ரீ ராமானுஜருக்கு பஞ்ச ஆச்சார்ய பதாஸ்ரியர் என்ற சிறப்பும் உண்டாயிற்று. "மகனே" என்பது இங்கு ராமானுஜரைக் குறிக்கும்.
3) "மாற்றாதே பால் சொரியும்"
ஆச்சார்யரின் ஸ்ரீஸூக்திகளையும் வ்யாக்யானங்களையும் சற்றும் பிறழாமல் பரப்புவதே ஒரு சத்-சிஷ்யனுக்கு ஏற்றம்.
ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்தில் அவரின் முகவுரையே இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
பகவத் போதாயன-க்ருதம், விஸ்தீரணம், ப்ரஹ்மஸூத்ர வ்ருத்திம், பூர்வச்சார்யா: சஞ்சிக்ஷிபு:।
தன்மாத் அனுசாரேண சூத்ர அக்ஷராணி வ்யாக்யாஸ்யந்தே।।
இதன் பொருள் - நிஷ்க்ருதமான பொருளை நிலை குலையாமல் சொல்லுதல். "மாற்றாதே" என்பதற்கு மற்றொரு பொருள் " மனிதற்கே இயல்பான துர்குணங்களில் ஒன்றான Ego வினால், தம் சொந்தக் கருத்துகளை திணித்து பிரமாணங்களை மாற்றுவது. இது ஏற்கத்தக்கதல்ல.
4) ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே!
இங்கு பரம்பொருளின் அவதாரங்கள் விளக்கப்பட்டுள்ளன.
௧) ஊற்றமுடையாய்: பரவாஸுதேவர்- ஜகத்ஸ்ருஷ்டியில் ஆர்வமுடையவர்.
௨) பெரியாய்: வ்யூஹ ரூபமான எம்பெருமான்.
௩) உலகினில்: விபவ அவதாரமான ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர் போன்றவர்.
௪) நின்ற:
திவ்ய தேசங்களில் உள்ள அர்ச்சாவதாரம்.
௫) சுடரே: நமக்குள்ளே ஜ்யோதிஸ்வரூபமாக இருக்கும் அந்தர்யாமி, பிரம்மன்.
இந்தப் பாடலில் பால் என்பது ஞானத்தைக் குறிக்கும். பாலின் வெண்மை ஞானத்தின் தூய்மையைக் குறிக்கும். அப்படிப்பட்ட தூய அறிவுக்கு தமிழில் வாலறிவு என்று பொருள். வால் நிறம் என்பது வெண்மை. சிறிதும் குற்றமில்லாத அறிவை உடையவர்களைத் தொழுது நல்வழி தேட வேண்டும். அதுவே கல்வியின் பெருமை. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்ற குறளில், வாலறிவன் என்பதற்கு ஆண்டவன் என்பதை விடவும் தூய அறிவுடையவன் என்பதே மிகப் பொருத்தம்.
சரி! பால் என்றால் ஞானம். அதைக் கொடுக்கின்ற பசுக்கள் யார்?
இந்த இடத்தில் பசு என்பது சீடனுக்கு அறிவு சொல்லும் ஆசிரியரைக் குறிக்கும். வைணவ சம்பிரதாயத்தில் இந்த வரிகள் இராமானுஜருக்கும் அவருடைய உத்தம சீடர்களான கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், போன்றவர்களுக்கும் இடையே உள்ள குரு-சிஷ்ய உறவைப் போற்றுவதாகக் கருதப்படுகிறது.
இதுவும் புரிந்தது. அதென்ன ”மாற்றாதே பால் சொரியும்”? மாற்றமே இல்லாமல் ஒரே மாதிரியாக பாடம் சொல்லித் தருவதா?
இல்லை! மெய்ஞானக் கருத்துகளை சீடருக்கு உபதேசிக்கும் போது, அதன் மையக் கருத்தை மாற்றாமல் நல்லதை உள்ளபடி பாடம் சொல்லிக் கொடுப்பதுதான். (இவ்விடத்தில் ரானுஜருக்கும் அவரது குரு யாதவப்ரகாசருக்கும் இடையில்,
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரிகமேவமக்ஷிணீ என்ற சாந்தோக்ய உபநிஷத் (1.6.7) வாக்கியத்தின் பொருள் விளக்கத்தில் ஏற்பட்ட விவாதத்தை நினைவு கூர்கிறேன். இதை தனியாகப் பதிவிடுகிறேன்.)
மாற்றாதே பால் சொரிதல். ஏற்கனவே உள்ள கருத்துகளை வேண்டுமென்றே திரித்து, சொல்ல வேண்டிய கருத்தை மாற்றக்கூடாது என்பதே இதன் பொருள்.
இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும்? இன்றைய சீடனே நாளைய ஆசான். குரு பரம்பரை செழுமையாகத் தொடர வேண்டுமென்றால் மேலே குறிப்பிட்டபடிதான் நடக்க வேண்டும்.
“மாற்றார் உனக்கு வலி தொலைந்து” என்பது மிகச் சிறப்பான கருத்து. மாற்றார் என்றால் ஏறுக்கு மாறாக நடப்பவர். அப்படி நடந்துகொள்கின்றவரை அழிக்காமல், அவர்களை ஏறுக்கு மாறாக எது நடந்துகொள்ள வைக்கிறதோ, அதை அழிப்பதுதான் இறைவன் கருணை.
அப்படிப்பட்ட கருணையுள்ள இறைவன் எங்கே இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? இந்தக் கேள்விகளுக்கு திருக்குறளைப் போல ஒன்றே முக்காலடியில் விடை சொல்கிறாள் ஆண்டாள்.
”ஊற்றம் உடையாய்* பெரியாய் உலகினில் தோற்றமாய் *நின்ற சுடரே”
ஊற்றம் உடையாய் பெரியாய்:
இது வைகுண்டத்தில் இருக்கும் பரவாசுதேவனைக் குறிக்கும். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் பெரியவன் அவன்.
உலகினில் தோற்றமாய்: –
இந்த உலகில் காணும் காட்சியெங்கும் நிறைந்தவன் என்பது பொருள். வைணவ சம்பிரதாயத்தில் உலகில் திருமால் எடுத்த அவதாரத் தோற்றங்களையும் திருக்கோயில்களில் நாம் காணும் வடிவங்களையும் குறிக்கும்.
அதெல்லாம் சரி. நூற்று எட்டாவது திவ்யஷேத்திரமான வைகுண்டத்துக்குப் போனால்தானே பரவாசுதேவனைப் பார்க்க முடியும். உயிரோடு எப்படிப் போவது? இறைவன் அவதாரங்கள் எடுத்து காலங்களும் யுகங்களும் மாறிவிட்டன. இப்போது எப்படிப் பார்ப்பது? உலகத்தில் இருக்கும் அத்தனை கோயில்களுக்கும் எல்லோரும் போய்விடத்தான் முடிகிறதா? பிறகு எப்படித்தான் பார்ப்பது?
அதற்கான விடை *நின்ற சுடரே* என்பது. நம் உள்ளத்துக்குள் ஒளியாய் நின்ற சுடரே இறைவன். மாலவனைத் தேடி எங்கும் ஓட வேண்டாம். உள்ளம் என்னும் கோயிலில் சுடரொளியாய் உறைகின்றான் சுடராழி தாங்கும் திருமால்.
அதனால்தான் இந்த மூன்று இடங்களைப் பட்டியல் இடும்பொழுது “உள்ளத்தில் ஒளிரும் சுடரை” மிக உயர்வாக வைத்தாள் ஆண்டாள்.
அதைத்தான் வைணவம் இப்படி வரிசைப்படுத்துகிறது.
௧) ஊற்றம் உடையாய்: -
பரம் (வைகுண்டம்)
௨) பெரியாய் – வியூகம் (பாற்கடல்)
௩) உலகில் தோற்றமாய் – விபவம் (திருமாலின் பத்து திருவவதாரங்கள்)
௪) நின்ற – அர்ச்சை (திருக்கோயில்களில் சிலையாய் நிற்பது)
௫) சுடரே – அந்தர்யாமி (உள்ளொளி)
மேலும் சொல்லலாம். கட்டுரை இப்போதே நீண்டுவிட்டது.
(ஆதாரம் - அண்ணங்கராச்சாரியார் அருளிச்செய்த திவ்யார்த்த தீபிகை, திருப்பாவை ஜீயரின் ஸ்ரீபாஷ்யம்)
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.,
அடியேன்,
No comments:
Post a Comment