Popular Posts

Wednesday, 25 December 2024

திருப்பாவை - அறிமுகம்

 திருப்பாவை - ஓர் அறிமுகம்.


மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷ: அஹம்

[கீதை 10 - 35]

"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது கீதையில் இம்மாதத்தை சிறப்பித்துக் கூறிய மார்கழி மாதத்தின் முப்பது நாட்களும் ஒவ்வொரு விடியலிலும், நகரெங்கும், தெருவெங்கும் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் ஒலிக்கும். குளிரில் உடல் சிலிர்க்கும் அந்த நேரத்தில், இந்தப் பாசுரங்களின் சொற்சுவையும், பொருட்சுவையும் நம்முள் புகுந்து ஏற்படுத்தும் இறையுணர்வு அளிக்கும் கதகதப்பான இளம் வெப்பம் அனுபவித்தால் மட்டுமே புரியும். 


அந்த அனுபவத்திற்கு முன்னுரையாக, இதில் சொல்லப்படும் பாவை நோன்பு பற்றியும், திருப்பாவையின் ஏற்றம் பற்றியும் பார்ப்போம்.


வேதப்பிரான் பட்டர் ஸ்வாமிகள் என்னும் வைணவ ஆச்சார்யரின் வாக்குப்படி,


ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரைவையம் சுமப்பதும் வம்பு என்பதிலிருந்தே இந்த திருப்பாவையின் ஏற்றம் புரியும்.


திருப்பாவை பாசுரங்களைப்பற்றி நான் அறிந்த சில விசேஷங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


(அ) முதலில் இத்திருப்பாவையைப் பற்றி நமக்கு கிடைத்துள்ள முக்கியமான சில உரைகள்:


1) மேல்கோட்டை ஜனன்யாச்சார் இரண்டாயிரப்படி மற்றும் நாலாயிரப்ப்டி (2000×24 & 4000×24),

2) பெரியவாச்சான் பிள்ளை மூவாயிரப்படி(3000),

3) அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் உரை,

4) ஸ்வாமி அண்ணங்கராச்சாரியாரின் திவ்யார்த்த தீபிகை,

5) உபநிஷத் பாஷ்யகாரர் ஸ்ரீ ரங்கரமானுஜரின் சமஸ்க்ருத உரை,

6) ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமியின் பிரபந்த ரக்ஷை.


அடுத்து, ஸ்ரீ ஆண்டாளின் அவதார காலம் பற்றிய குறிப்பு. அதில் முக்கியமாக கீழ் கண்ட இரண்டு ஸ்லோகங்கள்;


1) 

கர்கடே  பூர்வபல்குன்யாம்,  துளசி கானநோத்பாவாம்,

பாண்ட்யே விஸ்வம்பராம் கோதாம்

வந்தே ஸ்ரீ ரங்கநாயகீம்;


1a) ஸுசீ மாஸே பாண்ட்யபுவி பூர்வ பல்குநீகநபே,  நவீன துளஸீ வனாந்தராத்,

உதிதாமுதார குண ரங்கநாயகப் ப்ரியவல்லபாம் வசுமதீம் உபாஸ்மஹே;*_


இவற்றின்படி  ஸ்ரீ ஆண்டாளின் அவதார காலம் இவ்வாறு கணிக்கப் பட்டு உள்ளது.

( 97th year of Kaliyuga BCE 3004. A.D.716)

மேலும் கீழ் கண்ட வற்றின் மூலமும் அறியலாம்.


2) பட்டர் தனியனில் "பாண்டியன் கொண்டாட என்று குறிப்பிடப்பட்ட பாண்டியன்" அரிகேசரி பரங்குச மாறவர்மன் (ஸ்ரீவல்லபதேவன்) ஆண்ட காலம் கி.பி.710-765. Succeeded by நெடுஞ்சடையன் பராந்தகன் கி.பி 765-790.


3) வெள்ளியெழுந்து வியாழம் உறங்கிற்று. (புள்ளின் வாய் கீண்டானை- 13). காலக்கணக்கின்படி இந்த நிகழ்வு குறிக்கும் நாள் 18th Dec 731. ஆண்டாளுக்கு அப்போது 15 வயது. அதாவது அவள் பிறந்த வருடம் கி.பி 716  

(Ref: ஆழ்வார்கள் காலநிலை by மு. இராகவ ஐயங்கார் - page 80.)


(ஆ) திருப்பாவையின் ஏற்றம்:


1) ஈடு இணையற்ற ஆண்டாளின் புகழை அறிய, நமக்கு கிடைத்த வாய்ப்பு

2) ஸ்வாபதேசம், அதாவது த்வனி,

3) சரணாகதி நோன்பு,

4) வேத வித்து,

5) இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்தது

6) சக்தி மிக்க மந்திரம்.


இங்கு, (2)வதாக ஸ்வாபதேசம்/த்வனியைப் பற்றி மட்டும் ஒரு சிறு விளக்கம். நமது வேதாந்த சாரமாக விளங்குவது திருப்பாவை. அடுக்கடுக்கான ஆழமான, எண்ணற்ற கருத்துக்களைக் கொண்டது. மறை பொருளான அந்தக் கருத்துக்களை விளக்குவதே ஸ்வாபதேசம்


வடமொழியில், அன்யாபதேசம், ஸ்வாபதேசம் என்ற இரு சொற்கள் பயன்படுத்தப்படும். ஒரு பாசுரத்தில், மேலோட்டமான பொருள் "அன்யாபதேசம்". ஆழமான பொருள் "ஸ்வாபதேசம்". இதற்கு ஒத்ததாக "த்வனி" (சப்தம் - இசை) என்னும் சொல்லும் உபயோகத்தில் உள்ளது.


சுருக்கமாகச் சொன்னால், ஒரு "ஆரஞ்சு பழத்தை தோலை உரித்து உண்பது "அன்யாபதேசம்". அதையே பிழிந்து சாறாகப் பருகுவது "ஸ்வாபதேசம்"


பாசுரங்களின் அமைப்பு:

எட்டடி நாற்சீர் ஒரு விகற்ப கொச்சகக் கலிப்பா

பாசுரங்களின் பகுப்பு:

ஐயைந்தும் ஐந்தும் 5×5+5=30

முதல் ஐந்து ; பரம்பொருளின் பர, வ்யூஹ, விபவ, அந்தர்யாமி & அர்ச்சை வெளிப்பாடுகள்.

2ம் மற்றும் 3ம் ஐந்து= தோழிகளை எழுப்புதல். 2ம் ஐந்து = கன்னிகள், 3ம் ஐந்து = குமரிகள்

4ம் ஐந்து = நந்தகோபன், யசோதை, நப்பின்னை, பலதேவன் இவர்களை எழுப்புதல்.

5ம் ஐந்து = கண்ணனை எழுப்பி - யாம் வந்த காரியம் வரை.

6ம் ஐந்து = சாதனங்கள், பரிசுகள், மற்றும் கைங்கர்யம்.


*(இ) "உள்ளடங்கிய தத்துவங்கள்;

அவதார பஞ்சகம் (1to5), அர்த்த பஞ்சகம்  கால பஞ்சகம், பாகவதஸ்வரூப பஞ்சகம்.

a) அர்த்த பஞ்சகம் = ஸ்வஸ்வரூபம், பரஸ்வரூபம், புருஷார்த்தஸ்வரூபம், உபாயஸ்வரூபம் & விரோதிஸ்வரூபம்.

b) கால பஞ்சகம் = அபிகமனம், உபாதானம், இஜ்யை, ஸ்வாத்யாயம் & யோகம் மற்றும்

c) பாகவதஸ்வரூப பஞ்சகம்.


(ஈ)  அடியேனின் பாசுர விளக்கங்களுக்கு, நற்றிணை, புறநானூறு, குறுந்தொகை போன்ற முதல் சங்க இலக்கியங்களில் இருந்தும், பின்னர் வந்த திருக்குறள் போன்ற இரண்டாம் சங்க நூல்களிலிருந்தும் மேற்கோள்களாகப் பயன் படுத்தப் பட்டுள்ளன.


(எ) வர்ணனைகளுக்கு ஒப்பாக, (ஒரு உதாரணத்துக்கு) அடியேன் திருவெம்பாவையை ஒப்பிட்டிருக்கிறேன்

(இந்த இரண்டு பிரபந்தங்களைப் பற்றி பின்னர் பதிப்பிடுகிறேன்)

மேலும், ஒவ்வொரு பாடலுக்கும் உள்ள தொடர்பு, இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் வெளிப்பாடு, உள்ளார்த்தமான உபநிஷத்துக்களின் விளக்கங்கள், ஆகியவற்றைப் பேசலானால் இந்த ஒரு ஜென்மம் போதாது.


இன்னமும் பின்னர் எழுதுகிறேன். ஆண்டாள் கருணையிருந்தால், அடுத்த பதிவில் திருப்பாவையின் இரு தனியன்களை சேவிப்போம்.


சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம். 🙏🏻


அடியேன்,

சந்தான சேகர தாசன். 🙏🏻

No comments:

Post a Comment