Popular Posts

Wednesday, 25 December 2024

திருப்பாவை 04 (a) இணைப்பதிவு

*திருப்பாவை -4(a)*

(இணைப்பதிவு)


இன்றைய பாசுரத்தில் ஸ்ரீஆண்டாள் மழையை, ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி, ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கருத்து என்றும், சார்ங்கம் உதைத்த சரமழைபோல் என்றும் வர்ணிக்கிறாள். இதையே பரஞ்சோதி முனிவரும் வர்ணிக்கிறார்; எப்படி?


திருவிளையாடல் படம் பார்த்தவர்கள், இந்தக் காட்சியை நினைத்துப் பாருங்கள்.  மன்னன் வரகுண பாண்டியன், பாணபட்டருக்கு, மேகநாதனை எதிர்த்துப் பாடுமாறு ஆணையிடுகிறார்.  தயங்கிய பட்டர், ஈசனிடம் வேண்ட கோயிலுக்குச் செல்கிறார். பயங்கரமாக மழை பொழிகிறது. அந்த மழையை பரஞ்சோதி முனிவர் எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்! 

கருங்கொண்மூ ஆர்த்து எழுந்து திசையெல்லாம்

கருங்கடலை விசும்பெடுத்துக் கவிழ்ப்பதென வெண்டாரை

நெருங்கிருளி னிருப்புக்கோ னிரைத்ததென நிறங்கருக

ஒருங்குசொரிந் துள்ளுணரா ருள்ளம்போ லுட்புறம்பு

மருங்கொடுகீழ் மேலென்று தெரியாத மயங்கிருள்வாய்.

(திருவிளையாடல் புராணம் – 43 – 6 – 2137)

*பொருள்:*

கருத்துத் திரண்டெழுந்த மேகங்கள் வானத்தில் எல்லாத் திசையிலும் பரவி, கடலின் நிறத்தை கருப்பாக மாற்றியது. (ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கருத்து). பின்னர், அந்தக் கடலை அப்படியே வானத்தில்  தூக்கி கவிழ்த்தால்போல, (ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி) பெய்த மழைத்தாரைகள் வானத்தையும் பூமியையும் இணைப்பது, இருப்புக் கோல்களை நிரைபட நட்டு வைத்தாற்போல உள்ளது.. (சார்ங்கம் உதைத்த சரமழைபோல்)

மனதில் தோன்றியதை எழுதினேன்.

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்,

அடியேன்,

No comments:

Post a Comment