*திருப்பாவை பாசுரம் – 02*
கடந்த பதிவில் முதல் பாசுரத்தில் நாம் அடையவேண்டும் பேற்றினையும் அதை அடைவிக்கச் செய்யும் வழி, உபாயம் எதுவென்பதையும் பற்றி அறிந்தோம்.
இப்பதிவில் தொடரும் இரண்டாம் பாசுரத்தில், அப்படிப்பட்ட எண்ணமுடையவர்களின் இயற்கையான ஸ்வாபங்களைச் சொல்லுகிறது. இப்பாட்டில் இச்சையுடையவர்கள் செய்ய வேண்டியவற்றையும், செய்யக் கூடாதவற்றையும் சொல்கிறது' என்று பூர்வாச்சார்யர்கள் வழியில் அறிவோம்.
[அதாவது திருப்பாவையின் இந்த இரண்டாவது பாசுரமானது, பாவை நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விதி முறைகள் பற்றிப் பேசுகிறது.]
*பாசுரம் 02*
வையத்து வாழ்வீர்காள் ! நாமும்நம் பாவைக்குச்,
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி,
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி,
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்,
செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி,
உய்யுமா றெண்ணி யுகந்தேலோ ரெம்பாவாய்.
*பாசுர விளக்கம்:*
பூவுலக மாந்தர்களே, பாவை நோன்பு மேற்கொள்பவர்களுக்கான வழிமுறைகளைக் கேட்பீராக!
பாற்கடலில், பாம்பணையில் யோக நித்திரை கொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடியை வணங்கிப் போற்றுவோம். நோன்பு காலத்தில் நெய்யும், பாலும் உண்ண மாட்டோம். அதிகாலையிலேயே நீராடி, கண்களுக்கு மை இடாமல், கூந்தலில் மலர் சூடாமல், ஆகாத செயல்களைச் செய்யாமல், பொய்யுரைக்காமல், கோள் சொல்லாமல், பெரியோர்களுக்கும், ஏழைகளுக்கும் நம்மால் இயன்ற அளவு தானம் வழங்கி, நாம் உய்வதற்கான வழியை நாடி, மகிழ்ந்து, இவ்வாறு பாவை நோன்பிருப்போம்!
*பாசுர விசேஷம்:*
சேஷத்வமே (தொண்டு செய்வதே) நமது குறிக்கோள் என்று முதல் பாசுரத்தில் சொன்ன ஆண்டாள் அதை அடையும் மார்க்கத்தில் எதை செய்ய வேண்டும் – எதை செய்யக்கூடாது என்று க்ருத்யா, அக்ருத்ய விவேகம் பற்றி சொல்கிறாள். இதை செய்தால் அவனுக்கு உகக்கும்; – இதை செய்வதால் நாம் பந்தத்தில் சிக்கி உழலுவோம் என்று விவரமாக சொல்கிறாள்.
இப்பாசுரத்தில் திருமாலின் ஐந்துநிலைகளில் இரண்டாவதான வ்யூஹம் என்கிற நிலை பாற்கடலில் பையத்துயின்ற பரமன் என்ற அடிகளில் 'கோதை ஆண்டாள்' குறிக்கிறாள்.
இப்பாசுரத்தில் இறைவன் நமக்கு வீடு பேறளிக்க, *மனோ, வாக்கு, காயம்,* (எண்ணம், சொல், செயல்) இம்மூன்றின் வழியாக நாம் செய்ய வேண்டுவன, செய்ய வேண்டாதன பற்றி ஆண்டாள் அறிவித்தாள். கர்தவ்யம், (செய்ய வேண்டிய கடமைகள்) தியாஜ்ஜியம் (செய்யக்கூடாதவை), உபவாசம், (உண்ணாமை) ஜாகரணம் (விழித்திருத்தல்) என்பதான ஏகாதசி விரதத்திற்கு ஏற்ற வழிமுறைகளைச் சொல்லுதற் போல், பாவை நோன்பிற்குண்டான வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளன.
இப்பாசுரத்தில், அவதார பஞ்சகத்தின் பரமாத்ம நிலை குறிக்கப்பட்டுள்ளது; அர்த்த பஞ்சகத்தின் "விரோதி நிலை", அதாவது 'சரணாகதம் செய்வதற்கு உண்டாகும் இடையூறுகள்' இப்பாசுரத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
வைணவ அடியார்க்கு, பரமன் மேல் உள்ள பக்தியை விடவும், ஞானத்தை விடவும், உள்ளத் தூய்மையும், ஈகையும், எளிமையும் முக்கியமானவை என்பதை இப்பாசுரம் குறிப்பில் உணர்த்துகிறது.
மூன்று வகையான நோன்புக் கிரிசைகள் பற்றி இப்பாசுரம் பேசுகிறது.
அ) வாக்கு - பரமனடி பாடி என்பது வாசிகம்
ஆ) செயல் - நீராடுதல், ஈகை செய்தல் ஆகியவை காயிகம்
இ) மனம் - உய்யுமாறெண்ணி - அதாவது பரமனை சதாசர்வ காலமும் சிந்தையில் வைத்தல் என்பது மானசீகக் காரியம்.
“நோன்பின் போது விலக்க வேண்டிய ஆறு:”
நெய் உண்ணல், பால் உண்ணல், மையிடுதல், மலர் சூடல், செய்யாதனச் செய்தல், கோள் சொல்லல் ஆகியவை.
கடைபிடிக்க வேண்டிய ஆறு: பரமனடி பாடுதல், அதிகாலை நீராடல், ஐயம் இடல், பிச்சை இடல், அவற்றை இயன்றவரை இடல், உய்வதற்கு வேண்டி உகந்து இடல் ஆகியவை.
அடுத்த பதிவில் 3ம் பாசுரத்தை சேவிப்போம்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்,
ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்.
அடியேன்,
No comments:
Post a Comment