Popular Posts

Saturday, 28 December 2024

திருப்பாவை 10

 *திருப்பாவை பாசுரம் 10*


இப்பாசுரத்தில் துயிலெழுப்படும் இடையர் குலப்பெண் தன்னை பகவத் பக்தியில் மூழ்கித் திளைத்தவளாக எண்ணிக் கொண்டிருப்பவள்! இவ்வடியவள் ஓர் உத்தம அதிகாரி ஆவாள். இவள் கண்ணனுக்கே ஆனந்தம் தரும் அடியவள்!


இவள் முதல் நாள், நோன்பைப்பற்றியும் அதன் ப்ரயோஜனத்தைப் பற்றியும் நிறைய பேசிவிட்டு இப்போது தூங்குகிறாள். கும்பகர்ணனையே ஜெயித்தவள் போல் தூங்குகிறாள். இவர்கள் அவளை எழுப்ப குரல் கொடுத்தும், ஆற்ற அனந்தலுடன் பதில் பேசாமல் உறங்குகிறாள். அதனால் வெளியே ஆண்டாள் இவளை சிறிது கிண்டல் செய்து பாடுகிறாள். உயர்ந்த மோக்ஷ புருஷார்த்தம் இருக்க தாழ்ந்த சுவர்க்கானுபவத்துக்கு ஆசைப்படுவதுபோல், க்ருஷ்ணனை அனுபவிப்பது இருக்க இப்படி தூக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாயே! ஏ.. ஸ்வர்க்கம் போகின்ற அம்மனே! என்று கேலி செய்கிறாள்.


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்மால்

போற்றப்பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?

ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!


[பாவை நோன்பிருந்து இப்பிறப்பில் சொர்க்கம் அடைந்து சுகம் பெறப்போகும் பெண்ணே! வாசல் கதவை நீ திறக்காவிட்டாலும் கூட எங்களோடு ஒரு வார்த்தையும் பேசலாகாதோ? நறுமணமுள்ள துளசி மாலையை தலையில் சூடிய நாராயணன், நம்மால் போற்றி வணங்கப்படத் தக்கவனும், நமக்கு வேண்டிய பலன்களைத் தந்தருளும் தர்ம பரிபாலகனும் ஆவான் !


ராமனாக அவதரித்த காலத்தில், எம்பெருமானால் மரணத்தின் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன், தனக்கே உடைமையாகிய பெருந்தூக்கத்தை (உறக்கத்தில் உன்னை மிஞ்ச முடியாமல் தோற்றுப் போய்!) உன்னிடம் தந்து விட்டுச் சென்றுவிட்டானோ? எல்லையில்லாச் சோம்பல் கொண்டவளே! எங்களுக்கு கிடைத்தற்கரிய ஆபரணம் போன்றவளே! தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக!]


பாசுரச்சிறப்பு:-


திருப்பாவை முப்பது பாசுரங்கள் பெரும்பாலும் பரமனின் கிருஷ்ணாவதாரத்தின் பெருமை சொன்னாலும், நான்கு பாசுரங்கள் ஸ்ரீராமாவதாரப் பெருமையைப் பாடுகின்றன. அவற்றில் இது முதலாவது ஆகும்.(மற்றவை,12வது, 13வது, 24வது பாசுரங்கள்.)


மேலே, இவள் உறக்கத்திற்கு கும்பகர்ணனை உதாரணமாக சொல்கிறாள். நாற்றத்துழாய் முடி நாராயணன் எனும்போது ஓரிரு நிகழ்வுகளை நினைவு கூர்கிறேன்.


வில்லி பாரதத்தில், அருச்சுனன் தீர்த்த யாத்திரையாக ராமேசுவரத்தை அடைந்தார். உடனே, சக்ரவர்த்தி திருமகன் திருவடி கலந்த அம்மண்ணை வணங்கி, அதில் சிறிது எடுத்து முகர்ந்து பார்த்தார். அருகிலிருந்தோர் வியக்க, அருச்சுனன் "சென்றவிடம் துளவம் நாறும்" என்றார். இராமாயண காலம் திரேதா யுகம். அருச்சுனன் காலம் துவாபர யுகம். ஆனாலும் பகவான் நடந்த இடத்தில் திருத்துழாய் மணம் இருக்குமென எதிர் பார்த்தால், அத்திருத்துழாயின் பெருமைதான் என்னே!


அடுத்து, சோழ மன்னன் துன்புறுத்தலால், அநீதியால், கண் பார்வை இழந்த கூரத்தாழ்வான், திருமாலிருஞ்சோலையில் துளசியும் பூஞ்செடிகளும் நட்டு அழகருக்கு புஷ்ப கைங்கர்யம் செய்துவந்தார். அவரை சந்திக்க வந்த அழகர், ‘தாம் யார் என்று கேட்க’ ஆழ்வானும் அவரிடமிருந்து வந்த துழாய் மணத்தை வைத்து, "வந்தது அழகனே" என்றார். (இது கூரேசர் அழகனுக்கே சவால் விட்ட ஸ்வாரஸ்யமான வரலாறு. இதை இணைப் பதிவாகப் பதிவிடுகிறேன்.)


மேலும், நம்மாழ்வார் தம் திருவிருத்தத்தில், நாயகி பாவத்தில், கண்ணனைப் பிரிந்து நோய்வாய்ப் பட்டிருக்கும் நோய் தீர்க்க, கண்ணனது தொடர்பு கொண்ட திருத்துழாய் மாலையையோ, ஓர் இலையையோ, துழாய்க் கொம்பையோ, துழாய் வேரையோ அல்லது அவ்வேரில் சேர்ந்த மண்ணையோ இவள் மேல் இட நோய் தீரும் என்கிறார். (திருவிருத்தம் 53)


ஆகவே, திருத்துழாயின் பெருமை பற்றிச் சொல்வதானால், ஒரு முழு நீளக் கட்டுரையே எழுத வேண்டியிருக்கும். (சந்தர்ப்பம் கிடைத்தால் பின்னர் எழுதுகிறேன்)


பூரண சரணாகதியை அனுசரிக்கும் பட்சத்தில் (நோற்று) கர்மயோகத்தை கடைபிடிக்காவிடினும் (வாசல் திறவாதார்) எவ்வித தடங்கலுமின்றி (மாற்றமும் தாரார்) அவ்வடியவர்க்கு மோட்ச சித்தி வாய்க்கப் பெறுகிறது (சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்).


இங்கு "பெருந்துயில்" என்பது அறியாமையையும், "கூற்றம்" என்பது புலன்சார் இன்பங்களையும் குறிப்பவையாம். இவையே பரமனைப் பற்றுவதற்கு தடைகளாக இருக்கின்றன.


இப்பாசுரத்தில் "சுவர்க்கம்" என்பது பகவானுடன் ஐக்கியமாவதைக் (மோட்சம் சார்ந்த பகவத் அனுபவத்தை) குறிக்கிறது. இவ்வடியவள் பூரண சரணாகதிக்குரிய சடங்குகளை செய்து முடித்த திருப்தியுடன் பரமனின் நெருக்கம் தந்த ஆனந்த நிலையில் இருக்கிறாள்.

மற்றொரு விதத்தில் சுவர்க்கம் = சு + வர்க்கம் = நல்ல + சுற்றம்

அதாவது, உறங்கும் அடியவள் சிறப்பு மிக்க வைணவ அடியார்களின் நற்சுற்றத்தைச் சேர்ந்த பெருமை பெற்றவள் என்பது புலனாகிறதல்லவா?


"அருங்கலமே" என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.

கிடைத்தற்கரிய 1. பாத்திரம் 2. அணிகலன்

அதாவது, ஒரு வைணவ அடியார், இறையருளை தேக்கி வைக்கும் பாத்திரமாகவும், மனதூய்மை, பக்தி, தர்ம சிந்தனை, எளிமை, கர்வமின்மை போன்ற சத்வ குணங்களாகிய அணிகலன்களாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்.


பூரண சரணாகதி ஒன்றே மோட்சத்திற்கான ஒரே மார்க்கம் என்பதையும், புத்தி கூர்மையும் ஞானமும், அகங்காரத்தைத் தந்து (ஒருவரை) திசை திருப்பி விடும் அபாயத்தையும், இறை சேவையும், சமூக சேவையும் கைகோர்த்து இருக்க வேண்டிய அவசியத்தையும் கோதை நாச்சியார் கற்றறிந்த வைணவ அடியார்களுக்குத் தரும் செய்தியாக இப்பாசுரத்தை காண முடிகிறது.


அடுத்த 11வது பாசுரத்தை நாளை அனுபவிப்போம்.

ஆண்டாள்  திருவடிகளே சரணம்.

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்.

அடியேன்,

No comments:

Post a Comment