*திருப்பாவை பாசுரம் 07*
ஆறாம் பாட்டில் பகவத் விஷயத்தில் புதியவளொருத்தியை எழுப்பினர். இந்த ஏழாம் பாசுரத்தில், தன்னை புதியவளாக பாவிக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள். மேலும் அந்த தோழியை எப்பாடு பட்டாவது எழுப்பி, பரமனடி பற்ற தங்களுடன் கூட்டிச் செல்ல அவளது தோழியர் விழைவது, கூட்டுச் சரணாகதி (ததீயரோடு சரண் புகுதல்) என்ற வைணவத்தின் உயரிய கோட்பாட்டை வலியுறுத்துவதாகும். இப்போது பாசுரத்தைப் பார்ப்போம்.
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்.
["கீசு கீசு என்று வலியன் குருவிகள் தங்களுக்குள் பேசும் இனிய ஒலி உன் காதுகளில் விழவில்லையா, பேதைப்பெண்ணே!
வாசனை வீசும் கூந்தலையுடைய ஆய்ச்சிமார்கள், தங்கள் அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் கல கலவென்று என்று ஒலிக்க, கைகளை மாற்றி மாற்றி மத்தினால் தயிர் கடையும் சப்தத்தை நீ கேட்டிலையோ? கோபியர் கூட்டத்திற்குத் தலைவியே! ஸ்ரீமந் நாராயணனின் திரு அவதாரமான (கேசவன் என்னும்) கண்ணன் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருக்க, நீ இன்னும் படுத்துறங்கலாகுமோ?
ஒளி வீசும் முகத்தைக் கொண்டவளே! எழுந்து கதவைத் திறந்து, பாவை நோன்பை மேற்கொள்ள வருவாயாக!]
இப்பாட்டில் பகவத் விஷயத்தில் ஈடுபாடு இருந்தாலும் அதை மறந்து உறங்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள். சிலரை எழுப்பி விட்டோம் என்று திருப்தி அடைபவர்களல்லர் இவர்கள். ஆயர்பாடியில் இருக்கும் பெண்களில் ஒருத்தி குறைந்தாலும் கிருஷ்ணனிடம் போகார்கள். ஏனெனில், கிருஷ்ண சம்பந்தம் அனைவருக்கும் கிட்டவேண்டும் என்று நினைப்பவர்கள். இப்போது அவர்களின் உரையாடலைக் கேட்போம்.
தோழியர்: (கீசு கீசென்று)
பெண்ணே! பொழுது விடிந்துவிட்டது. எழுந்து வா!
கோபி:
விடிந்ததற்கு என்ன அடையாளம்?
தோழியர்:
ஆனைசாத்தன் கீசு கீசு என்று குவியதன்றோ?
கோபி:
ஓர் ஆனைசாத்தன் கூவினதினால் பொழுது விடிந்ததாக ஆகிவிடுமா?
தோழியர்:
ஒன்றெங்கே? ஆனைசாத்தன் அனைத்தும் அல்லவா கலந்து பேசின? (விடியலில் பறவைகள் இரை தேடச்செல்லும்முன் ஒன்றுடன் ஒன்று சம்பாஷிக்கும் அல்லவா?) இந்த அடையாளம் போதாதா?
கோபி:
உங்களுடைய பேச்சு சப்தத்தினாலே, அவை விடிந்தது என நினைத்திருக்கலாமே? (இவர்களுக்கு இதுதான் வேலை என்று தனக்குள் சொல்லிக்கொண்டு மீண்டும் உறங்கலானாள்)
தோழியர்: (பேய்ப்பெண்ணே)
தோழிகளுடன் (பாகவதர்களுடன்) சேர்ந்து நோன்பிருந்து அடையப்படும் கிருஷ்ணானந்த அனுபவத்தை அறிந்திருந்தும் உறங்குகிறாயே, (ஆகவே) பேய்ப்பெண்ணே, எழுந்திரு!
கோபி:
"பொழுது விடியாமலிருக்கும் போது 'விடிந்தது' என்று சொல்லுகிற நீங்களன்றோ பேய்ப்பெண்கள். விடிந்ததற்கு வேறு அடையாளமுண்டாகில் சொல்லுங்கள்".
தோழியர்: (காசும் பிறப்பும்)
இவ்வூரில் பெண்கள் தயிர் கடையும்போது அவர்கள் அணிந்துள்ள அச்சுத் தாலியும், ஆமைத் தாலியும் கலகலவென்று எழுப்பும் ஒலி கூட உன் காதில் விழவில்லையோ? என்கிறார்கள். [அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும்.காசு, பிறப்பு எனப்படும்.
காசு - பொன்னைக் காசுகளாக அச்சில் அடித்துச் செய்து கோர்த்த அச்சுத்தாலி.
பிறப்பு – முளைகளாகச் செய்து அணிந்த கழுத்தில் தொங்கும் ஆமைத்தாலி]
கோபி:
அது நீங்கள் அணிந்துள்ள ஆபரணங்களின் ஒலியாகவும் இருக்கலாமே!
தோழியர்: (மத்தினால்....கேட்டிலையோ)
அப்படியானால், மந்திர மலையால் திருப்பாற்கடலைக்
கலக்கினாற்போலே முழங்கும் இந்த ஆய்ச்சியர் தயிர் கடையும் சப்தமும் உன் செவியில் புகவில்லையோ?
[தாமரைக்கண்ணனை நினைத்துப் பாடுகிற கோபஸ்த்ரீகளின் ஒலியானது, தயிர் கடையும் ஓசையுடன் கூடிக்கொண்டும், திசைகளின் அமங்களங்களைப் போக்கிக் கொண்டும் ஸ்ரீவைகுண்டத்தையும் எட்டியது.] என்று சொல்லப்பட்ட ஒலியின் ஓசை உன் செவியில் விழாமல் இருப்பதே, அதிசயம்.
இவ்வளவு அடையாளங்களை சொன்ன பிறகும் உள்ளிருப்பவள் அமைதியாகவே இருந்தாள்.
சென்ற பாசுரத்தைப் போலவே, இங்கும் வேறு ஒரு யுக்தியைக் கையாள நினைத்தனர்.
தோழியர்: (கேசவனைப் பாடவும்)
நம் நாராயணன் கேசி என்னும் அரக்கனை வதம் செய்து கேசவன் என்று பெயர் பெற்ற சம்பவத்தை சொல்வோம். அதைக்கேட்டு எழுவாய்.
அதைக்கேட்ட பின்னரும், உள்ளிருந்து எந்த சலனமும் இல்லை. எனவே சாளரம் வழியே பார்த்த தோழியர் அதிர்ந்தனர். உள்ளே, அவள் கண்ணனுக்கு ஆபத்து நீங்கியது என்று நிம்மதியாய் உறங்கக் கண்டார். என்ன செய்வது?
தோழியர்: (தேசமுடையாய் திற)
உன்னுடைய தேஜஸ் காட்டிலெரிந்த நிலவாகாமல், உன்னைக் காணாமல் இருட்டடைந்து கிடக்கிற எங்களுடைய அந்தகாரத்தைப் போக்கிக் கொண்டு திறப்பாயாக.
இதைக் கேட்டதும் உள்ளிருந்த கோபியும் எழுந்து வந்தாள்.
*பாசுர சிறப்புகள்:-*
🔷 காசு, பிறப்பு, தயிர் என்ற மூன்றும் முறையே அஷ்டாட்சரம், த்வயம் மற்றும் சரமசுலோகம் ஆகிய மூன்று மகா மந்திரங்களை உணர்த்துவதாகவும் ஒர் உள்ளர்த்தம் உண்டு.
🔷 தேசமுடையாய் என்பது தூங்கும் பெண்ணின் ஒளி வீசும் முகத்தை (தேஜஸ்) முன்னிறுத்திச் சொன்னது. அத்தகைய தேஜஸ் தாஸ்ய பாவமும், தாஸ்ய ஞானமும் உள்ளவருக்கே வாய்க்கும்! (பரமனே எஜமானன், அவனைச் சரண் புகுதலே உய்வதற்கான ஒரே உபாயம் என்று முழுமையாக உணர்ந்த தாஸ்ய பாவம்)
🔷 ஆனைசாத்தன் பறவை
கரிய குருவி,வலியன், கரிச்சான் குருவி, கஞ்சரீகிகா பஷி, ஆனைச்சாதம் எனவும் கூறுவர். 'செம்போத்து' என்றும் கூறுவாருண்டு. இதற்கு கண் அழகாக இருக்கும் என்பர். வலியன் குருவியை பாரத்வாஜப் பறவை என்றும் அழைப்பர். ஒரு முறை, வலியன் குருவி வடிவில் பாரத்வாஜ முனிவர், பெருமாளை வணங்கி வழிபட்டதாக ஒரு பழங்கதை உண்டு.
🔷 கேசவன் என்பதற்கு கேசி என்னும் கம்சனால் அனுப்பப்பட்ட குதிரை வடிவ அரக்கனைக் கொன்றவன். சிறந்த கேசத்தை உடையவன். பிரம்மா, சிவன் ஆகியோர்க்கு தலைவன் என்று மூவகைப் பொருளுண்டு என்பார் காஞ்சீபுரம் வித்வான் ஸ்வாமி.
🔷 இந்த "கீசு கீசென்று" ஏழாம் பாசுரத்தில் பேய்ப்பெண் என்கிறது பேயாழ்வாரையே என்கிறார் ஸ்வாபதேச வ்யாக்யானத்தில் ஒன்னான வானமாமலை ராமாநுஜ ஜீயர் ஸ்வாமிகள்.
நமது பூர்வாச்சார்யர்களின் விளக்கப்படி, காசு என்பதை வேதம். பிறப்பு என்பது அதனடியாகப் பிறந்த ஸ்ம்ருதி, இதிகாச புராணங்கள் எனக் கொண்டு, இவை ஒலிப்ப, நருங்குழல் வாசம் என்பது ஆசார்யர்கள் உபதேசிக்கும் ஞானம் எனலாம்.
அனைத்துக்கும் ஆதாரம் வேதம். அந்த வேதத்துக்கு ஆதாரம் நாராயணன். அவன் நாமமே அஷ்டாக்ஷரம். (ஓம் நமோ நாராயணாய)
அவனை அடைய ஸ்ம்ருதி முதலானவை உரைக்கும் வழி சரணாகதி, த்வயம் (ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்தயே). இதை நமக்கு உபதேசிப்பவர், அச்சார்யர்கள்.
அடுத்து, இவற்றின் பலன், கைவல்யம்.
இப்பாசுரத்தில் நாம் கேட்கும் ஒலிகள் பக்ஷி நாதகோஷம் (பறவைகளின் ஒலி), ததி மதன கோஷம் (தயிர் கடையும் ஒலி). சமுத்திர மதனத்துக்கு ஆதாரமான பாற்கடலைப் போல, இங்கே தயிர் சொல்லப்படுகிறது. அங்கு கிடைத்த அமுதம் போல் இங்கு கிடைப்பது மாஸுச: (சரமஸ்லோகம்) கண்ணனின் வாக்குறுதி.
நாளை எட்டாம் பாசுரத்தை அனுபவிப்போம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்
அடியேன்,
No comments:
Post a Comment