திருப்பாவை பாசுரம் 01
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்,
நாராயணனே நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
பாசுர விளக்கம்:அழகிய ஆபரணங்களை அணிந்த கன்னிப் பெண்களே! வளமும் சிறப்பும் மிக்க ஆயர்பாடியில் உள்ள செல்வச் சிறுமியரே! மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில், முழு நிலவு வீசும் பௌர்ணமி நன்னாளில், பாவை நோன்பில் கலந்து கொண்டு நீராட விரும்புகின்றவர்கள், வாருங்கள், போகலாம்!
கூர்மையான வேலைக் கொண்டு பகைவர்க்கு கொடுமை செய்பவனாகிய நந்தகோபனுடைய குமாரனும், அழகிய விரிந்த விழிகளை உடைய யசோதைக்கு இளம் சிங்கக்குட்டி போன்றவனும், கரிய வண்ண மேனியனும், செந்தாமரை போன்ற கண்களையும், சூரியனைப்போல பிரகாசமாயும் நிலவைப்போல குளிர்ந்ததாயும் உள்ள திருமுகத்தையும், உடையவனும், ஆன நாராயணன், நம் நோன்புக்கு வேண்டிய பொருட்களையும், நாம் விரும்பிய வரங்களையும் தந்து அருள் புரிவான். எனவே உலகத்தார் நம்மை போற்றும் வண்ணம், நோன்பிருந்து அவன் திருவடி பணிவோம், வாருங்கள்!"
*பாசுர விசேஷம்:*
ஆண்டாள் முதல் ஐந்து பாசுரங்களில் ஸ்ரீமந்நாராயணனின், பர, வ்யூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை ஆகிய 5 நிலைகளைச் சொல்லி பாடியுள்ளாள். முதல் பாசுரத்தில் "நாராயணனே நமக்கே பறை தருவான்..." என்றதன் மூலம் திருமாலின் பரம் என்கிற முதல் நிலையினை ஆண்டாள் நமக்கு அறிவிக்கிறாள்.
*நாராயணனே நமக்கே பறை தருவான்:*
நாராயண பரம்ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர:
நாராயண பரோஜ்யோதிராத்மா நாராயண: பர:
நாராயணனே பரப்ரஹ்மம், நாராயணனே பரதத்வம், நாராயணனே பரஞ்சோதி, நாராயணனே பரமாத்மா என்று கூறுகிறது தைத்ரீய உபநிஷத் (11ம் அனுவாகம்)
மேலும், நாராயணனே நமக்கே பறை தருவான் என்றதன் மூலம் கீதையில் சரமச்லோகமாக கடைசியில் கூறியதை ஆண்டாள் இந்த முதல் பாசுரத்திலேயே கூறிவிடுகிறாள்.
சரமச்லோகம்
सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज ।
अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः ॥ (१८- ६६)
ஸர்வத⁴ர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸ²ரணம் வ்ரஜ। அஹம் த்வாம் ஸர்வபாபேப்⁴யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸு²ச: ।। (18- 66)
[எல்லா தர்மங்களையும் அறவே தியாகம் செய்து விட்டு, என் ஒருவனையே சரணடைக. உன்னை நான் எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன். கவலைப்படாதே.- [பகவத் கீதை - அத்தியாயம் 18 -ஸ்லோகம் 66]
கர்ம/ஞான யோகங்களை விடவும், 'பக்தி யோகமே' பரமனின் அருளைப் பெறவும், அவனை அடையவும் சிறந்த மார்க்கமாக, திருப்பாவையின் இந்த முதல் பாசுரம் அறிவிக்கிறது.
அடுத்த பதிவில் 2ம் பாசுரத்தை சேவிப்போம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
அடியேன்,
No comments:
Post a Comment