*திருப்பாவை பாசுரம் 06*
அடுத்த படியாக ஆண்டாள் அர்ச்சையையும் பாகவத விசேஷங்களையும் சொல்ல வருகிறாள். அடுத்த பத்து பாசுரங்களில் பத்து தோழிகளின் வீடுகளுக்கு சென்று கோபிகைகளை எழுப்புவதாக அமைந்துள்ளது. இந்தப் பாசுரத்தை ஓர் உரையாடல் வடிவில் அனுபவிப்போம்.
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
[அன்புத் தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி" என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.]
விடியுமுன்னரே எழுந்த கோபிகையர், அனைவரும் ஒன்று சேர்ந்து பாவை நோன்புக்கு முன் நீராடுவதற்காக ஒவ்வொரு கோபியாக எழுப்பிக்கொண்டு வருகின்றனர்.
முதல் கோபிகையின் வீட்டை அடைந்து அவளை
அழைக்கின்றனர்.
தோழிகள்:
விடியற்காலை எழுந்திருப்பதாக சொன்ன நீ இன்னும் உறங்கலாமோ?
கோபி:
இன்னும் விடியவில்லையே!
தோழிகள்:
விடியலை உணர்ந்துதானே நாங்கள் எழுந்து வந்தோம்!
கோபி:
நீங்கள்தான் (கண்ணனை நினைந்து) உறங்குவதே இல்லையே! ஆகவே விடியலுக்கு ஒரு அடையாளம் சொல்லுங்கோள்!
தோழிகள்:
(புள்ளும் சிலம்பின காண்) பறவைகளின் சப்தம் உனக்கு கேட்கவில்லையா?
கோபி:
நீங்கள் போட்ட இறைச்சலில் அவை விழித்திருக்கலாம். மேலும், அவை உங்கள் எல்லையைச் சேர்ந்த பறவைகள் தானே! அதனால் அவைகளும் உறங்குவதில்லை! ஆகவே வேறு அடையாளம் கூறுங்கோள்!
தோழிகள்:
(புள்ளரையன் கோயிலில்...) "அது கிடக்கட்டும்! பறவைகளின் தலைவனான கருடனின் ஸ்வாமியான நாராயணனின் (கண்ணனின்) கோயிலில் திருப்பள்ளியெழுச்சிக்கு ஊதப்படும் சங்கின் ஒலி உன் காதில் கேட்கவில்லையோ?"
கோபி:
சாமங்கள் தோறும் கோயிலில் முறையுடையாரை அழைக்கும் சங்கொலியாயிருக்கலாமே. அதைக் கொண்டு பொழுது விடிந்ததென்று எப்படி நிச்சயிப்பது?
தோழிகள்:
(பேரரவம்) "விடிந்தபின் ஒலிக்கும் பேரொலியன்றோ இப்போது ஒலிப்பது. பாஞ்சஜன்ய த்வனியிலும் அதிகமாகவன்றோ இப்பெரு முழக்கமிருப்பது. உன்னுடைய தூக்கத்தையும் தவிர்க்கக் கூடியதாகவன்றோ முழங்குகிறது".
தோழிகள்:
(பிள்ளாய்) நோன்பிற்கு (பகவத் விஷயத்துக்கு) புதியவளானதால் பகவதனுபத்தின் இனிமையை அறியாமல் கிடக்கிறாய். எங்களுடன் சேர்ந்து நீயும் நோன்பின் பலனை அடைய வேண்டாமா? எழுவாய்!
இவர்கள் இவ்வாறு சொன்னபின்பும் கோபிக்கு எழுவதற்கு மனமில்லாமலே கிடக்க, இவர்கள் வேறு உபாயத்தை கடைப்பிடித்தனர்.
தோழிகள்:
(பேய்முலை……கள்ளச்சகடம்) எம்பெருமானுக்கு வந்த ஆபத்துகள் நீ அறியாயோ! பெண்ணாய் வந்த பேரரக்கி, நஞ்சோடு கொடுத்த பாலையும் அவள் உயிரையும் சேர்த்து உறிஞ்சினானே! சக்கர வடிவில் வந்த சகடாசுரனை காலால் உதைத்து தூளாக்கினானே!
இதைக்கேட்டத்தும், துணுக்குற்று எழுந்த கோபிகையை ஆசுவாசப்படுத்தும் வகையில்,
தோழிகள்:
(வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை) இந்த அபாயங்கள் ஒன்றுமில்லாத இடத்தில் பரிவனான திருவனந்தாழ்வான் மேலே கண்வளர்கிறான். அவனை எழுப்ப முனிவர்களும் யோகிகளும் ஹரி ஹரி என்று ஒலியெழுப்புகிறார்கள். நீயும் வந்து எங்களுடன் சேர்ந்து வந்து கிருஷ்ணானுபவத்தை அனுபவிப்பாய் என்று கூற, உள்ளிருந்த கோபியும் எழுந்து வந்தாள்.
*பாசுரச் சிறப்பு:-*
இப்பாசுரம் தொடங்கி அடுத்த பத்து பாசுரங்கள், முதலில் விழித்தெழுந்தவர் இன்னும் உறக்கத்தில் இருப்பவரை எழுப்பும் நோக்கில் பாடப்பட்டவை. இவை பத்து ஆழ்வார்களைக் (ஆண்டாள், மதுரகவியார் தவிர்த்து) குறிப்பதாக ஓர் உள்ளர்த்தமும் உண்டு!
இந்த ஆறாம் பாசுரத்தில் திருமாலின் ஐந்து நிலைகளும் பாடப்பட்டுள்ளன.
வித்தினை எனும்போது பரம்பொருளான (1.பரம்) வைகுண்டநாதனையும்,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த எனும்போது (2.வ்யூஹம்) பாற்கடல் வியூஹ மூர்த்தியையும்,
சகடம் கலக்கழியக் காலோச்சி எனும்போது (3.விபவம்) விபவ அவதார கண்ணனையும்,
புள்ளரையன் கோயில் எனும்போது (4.அர்ச்சை) அர்ச்சாவதார ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமானையும்,
உள்ளத்துக் கொண்டு எனும்போது (5.அந்தர்யாமித்வம்) அந்தர்யாமியான பரமனையும் நம் அன்னை கோதை நாச்சியார் போற்றிப் பாடியிருப்பதாக நம் வைணவப் பெரியோர்கள் உள்ளுரையாக கூறுவர்.
அடுத்த பதிவில் 7வது பாசுரத்தை அனுபவிப்போம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்.
அடியேன்,
No comments:
Post a Comment