Popular Posts

Sunday, 29 December 2024

திருப்பாவை 11

 *திருப்பாவை பாசுரம் 11*


5 X 5 +5 இல் மூன்றாம் ஐந்தின் தொடக்கம் – இதில் இரண்டாவது ஐந்து பாசுரங்கள், முன்னமே இறைநெறியில் ஆழ்ந்து ஈடுபட்ட வழி வந்தவர்களை எழுப்பும் படி வருகின்றன- இப்பாசுரத்தில், கண்ணனைப் போன்றே குழந்தைத்தனமும் குறும்பும் கொண்ட, மிகவும் அழகு வாய்ந்த, பெயர் பெற்ற குடியில் பிறந்த அடியவரை எழுப்புகிறார்கள்.


கற்றுத் கறவைக் கணங்கள் பல கறந்து,

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றமொன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!

புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,

சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி- நீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.


[கன்றுகளுடன் இருக்கும் நிறைந்த எண்ணிக்கையிலுள்ள பசுக்களைக் கறந்து பால் சேர்க்கின்றவர்களும், (பசுச்செல்வம் நிறைந்த கோவலர்கள்) தம்முடைய பகைவர்களின் ஆற்றல் அழியுமாறு, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று போர் புரிபவர்களுமான, செல்வத்திற்கும் ஆற்றலுக்கும் ஒரு குறையுமில்லாத, இடையர்களின் குலத்தில் தோன்றிய தங்கக்கொடி போன்ற அழகிய பெண்ணே! புற்றிலிருந்து வெளிவந்து படமெடுக்கும் நாகம் போன்று, மென்மையும் அகலமும் உடைய நிதம்பத்தை உடையவளும், தோகை விரித்தாடும் அழகிய மயிலை ஒத்த சாயலையும் கொண்டவளே, விழித்தெழுந்து வருவாயாக! 

ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்து வந்து, உன் வீட்டின் முற்றத்தில் குழுமி, கார்மேக நிறக் கண்ணனின் திருநாமங்களை போற்றிப் பாடியபடி உள்ளோம்! 

நிறைந்த செல்வத்தை ஆளுகின்ற பெண்ணே , நீ சிறிதும் அசையாமலும் பேசாமலும் இவ்வாறு உறங்குவது எதற்காக என்று நாங்கள் அறியோம் ! உறக்கம் கலைந்து எழுந்து வா”]


பாசுரச் சிறப்பு:

•இப்பாசுரத்தில், அசாதாரணமான அழகுடையவளும், குலப்பெருமை வாய்த்தவளும் ஆன ஒரு கோபியர் குலப்பெண்ணை ஆண்டாள் துயிலெழுப்புகிறாள். "கண்ணனே உபாயமும் உபேயமும்" என்று உணர்ந்த உத்தம பக்தையை கோதை துயிலெழுப்புகிறாள்


புற்றரவல்குல் புனமயிலே* என்று அப்பெண்ணை வர்ணிக்க ஒரே நேரத்தில், பாம்பையும் அதன் பரம எதிரியான மயிலையும் துணைக்கு அழைத்ததில் ஆண்டாளின் கவிநயம் தெரிகிறது.

ஆண்டாள் பொற்கொடியே, புனமயிலே, செல்வப் பெண்டாட்டி என்றெல்லாம் போற்றுவதிலிருந்தே இந்த பாகவதை ஆச்சார்யனிடம் கற்றுணர்ந்த உத்தம அதிகாரி என்பது புலப்படுகிறது. பொற்கொடியே எனும்போது குலத்தாலும், புனமயிலே எனும்போது வடிவாலும், செல்வப்பெண்டாட்டி எனும்போது குணத்தாலும் என்று எல்லாவற்றிலும் சிறந்த அடியவள் இவள் என்பதும் தெளிவு.


பொற்கொடி = பக்தி; அல்குல் = பரபக்தி; புனமயில் = பரம பக்தி

ஆக, பொற்கொடி, புற்றரவல்குல், புனமயில் ஆகியவை அவ்வடியவளின் (ஜீவாத்மா) கண்ணன் (பரமாத்மா) மீதான உன்னதமான பக்திக்கான உருவகங்களே!

"புற்றரவல்குல்" என்பது குறித்து பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார், “நாகமானது தனது இருப்பிடமான புற்றுக்குள் இருக்கையில், தனது கம்பீரத்தை சுருக்கிக் கொண்டு அடக்கமாக இருப்பது போல, பக்தி மிகுந்திருக்கும்போது, ஞானமும் வைராக்கியமும் எளிதில் கைகூடுவதாக, அற்புதமாக அருளியிருக்கிறார்!

அதாவது, பக்தி, ஞானம், வைராக்கியம் என்ற மூன்றில் பக்திக்கே உயர்வான இடம் வைணவத்தில் வழங்கப்பட்டுள்ளது. கர்மம், ஞானம் இன்னபிற யோகங்கள் பெறப்படுபவை, ஆனால் பக்தி யோகம், அதுவாக வாய்க்க வேண்டும்! மேலும், மயிலானது மகிழ்ச்சியாக இருக்கையில் தன் தோகையை விரித்தாடுவது போல, நற்குணங்களுடைய சீடன் அமையும்போது ஆச்சார்யனின் ஞான விகாசம் வெளிப்பட்டு நன்மை பயக்கிறது என்று சுவாமிகள் அருளியிருக்கிறார்!


முற்றம் என்ற பதம் பரமனின் அடியார் கூடும் இடம் என்பதைக் குறிக்கிறது.

(முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட) வைணவர்க்கு பிடித்த இடம் முற்றம், அதாவது திவ்ய தேசங்கள், அங்கு சென்று பெருமாளை வணங்கி வழிபட்டு மங்களாசாசனம் செய்தல்!

மேலும், கறவை கணங்கள் உபநிஷதங்களைக் குறிப்பதாக பூர்வாச்சாரியரின் கருத்து. அதாவது,

ஸர்வோபநிஷதோ³ கா³வோ தோ³க்³தா⁴ கோ³பால நந்த³ந: ।


பார்தோ² வத்ஸ: ஸுதீ⁴ர்போ⁴க்தா து³க்³த⁴ம் கீ³தாம்ருʼதம் மஹத் ॥

இடையர்களை மகிழ்விக்கும் கண்ணன், உபநிடதங்களாகிய பசுக்களை கறந்து அர்ச்சுனனாகிய கன்றுக்குத் தந்தான்; அவன் கறந்த பாலே சிறந்த கீதை. அதுவே அமுதம். அதை அருந்துபவர்களே நல்ல புத்திமான்கள். 

அர்ச்சுனனாகிய கன்றை முன்னிட்டு, அந்தப் பாலைக் கறந்து நமக்கும் அளித்தான் கண்ணன். இங்கே கோதையும், கோபியரை முன்னிட்டு அந்த அமுதத்தை, திருப்பாவை பாசுரங்களாக நமக்கு அளிக்கிறாள். (திருப்பாவை பாசுரங்களுக்குள் பொதிந்து கிடைக்கும் உபநிடதங்களின் கருத்துக்களை மேற்கோள்களாகக் காட்டும் எண்ணம் அடியேனுக்கு இருந்தாலும், கட்டுரையின் நீளம் கருதி, அவற்றைத் தவிர்க்க வேண்டியிருந்தது.)


நாளை 12ம் பாசுரத்தை அனுபவிப்போம்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

அடியேன்,

No comments:

Post a Comment