*திருப்பாவை - பாசுரம் 05*
மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
[மாயங்கள் பல செய்பவன். மதுராபுரியில் பிறந்தவன். யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவன். ஆயர் குலவிளக் காகத் தோன்றியவன். தன்னைப் பெற்றத் தாயாரின் வயிற்றைப் பெருமைபடச் செய்தவன். அவனே நம் தலைவன் கண்ணன். நாம் தூய்மையாக நீராடியும், மலர் கொண்டு அவன் புகழ் பாடவும், வணங்கவும் புறப்படுவோம். அவனை மனதில் நிறுத்தி வாயாராப் புகழ்ந்து பாடினால் முன்பு செய்த பாவங்களும், இன்னாளில் நம்மை அறியாமல் செய்கின்ற பாவங்கள் அனைத்தும் தீயில் விழுந்த பஞ்சு போல் காணாமல் போய்விடும். அத்தகைய பெருமை வாய்ந்த நம் இறைவனை வணங்கி மேன்மையடைய வாருங்கள் நீராடப் போகலாம்.]
*பாசுர விசேஷம்;*
திருமாலின் ஐந்து நிலைகளினை, முதல் பாசுரத்தில் பரம்பொருளையும் (நாராயணன்), இரண்டாவது பாடலில் பாற்கடலில் பள்ளி கொண்ட வியூகப் பெருமாளையும் (பையத்துயின்ற பரமன்), மூன்றாவது பாடலில் விபவ மூர்த்தியான த்ரிவிக்ரமனையும் (ஓங்கி உலகளந்த உத்தமன்), நான்காவது பாடலில் அந்தர்யாமியாக எங்கும் வியாபித்திருக்கும் ஊழி முதல்வனையும் கொண்டாடிய நம் அன்னை கோதை ஆண்டாள் இப்பாசுரத்தில் திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் திருமாலின் அர்ச்சாவதாரத திருக்கோலத்தை (வடமதுரை மைந்தன்) பாடுகிறாள்!
அவதார பஞ்சகத்தின் மூன்று நிலைகள் இப்பாசுரத்தில் வருகின்றன. தூயப்பெருநீர்- (வைகுண்ட நிலை), தாமோதரன் - கிருஷ்ணாவதார (விபவ நிலை), தூமலர் தூவித் தொழுது -கோவிலுறையும் சிலையாக (அர்ச்சாவதார நிலை) இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
தாமோதரன்- உரலோடு யசோதை கட்டியதனால் வந்த பெயர் ஆகும். தாமம்- கயிறு, உதரம்- வயிறு. கண்ணன் செய்த குறும்பைக் கண்டித்து யசோதை அவனை உரலோடு பிணைத்துக் கயிற்றால் கட்ட, அப்படியே இழுத்துச் சென்று அங்கிருந்த மரங்களிரண்டை சாய்த்து, நலகுபேரன் , மணிகிரீவன் என்ற யட்சர்களுக்கு சாப விமோசனம் அளித்தான்.
(தாமோதரனை) கண்ணிநுண் சிறு தாம்பினால் கட்டுண்ணப் பண்ணியவன். ஆனால், அவன் நம்மைக் கட்டும் கட்டு நம்மால் அவிழ்க்க முடியாதது போலே, அவனடியார் அவனைக் கட்டின கட்டை அவனாலும் அவிழ்க்க முடியாது. அவன் கட்டுண்டதை நினைத்தால் நம்முடைய கட்டு கழன்று விடும். "சேஷியினுடைய திருவிலச்சனை" என்று பட்டர் அருளிச்செய்தாராம். "நாம் அவனுடைய அடியார் என்பதைக் காட்ட சங்க சக்கரங்களைத் தரிப்பது போல, அவனும் நமக்கு பரதந்திரன் என்பதைக் காட்டுவதற்காக யசோதைப்பிராட்டி கயிற்றினால் கட்டிய அடையாளத்தைத் தரித்துக்கொண்டிருக்கிறான்." என்று பொருள்.
இப்பாசுரத்தில் உபாயம் (அடையும் வழி), உபேயம் (அடைய வேண்டும் பொருள்), புருஷார்த்தம் ஆகிய மூன்றும் சொல்லப்பட்டுள்ளன.
*1.உபாயம்:* தூமலர் தூவித் தொழுதல், வாயினால் பாடுதல், மனத்தினால் சிந்தித்தல்
*2.உபேயம்:* மாயன், மன்னு வடமதுரை மைந்தன், தூயபெருநீர் யமுனைத் துறைவன், ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு, தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரன்
*3.புருஷார்த்தம்:*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்-
தூமலர் தூவித் தொழுது - இங்கு மலர் என்பது அடியவரின் உள்ளத்திலிருந்து ஆத்மார்த்தமாக மலரும் குணநலன்களை குறிப்பில் உணர்த்துகிறது
*முதல் ஐந்து பாசுரங்களின் சுருக்கம்:*
ஆண்டாள் முதல் ஐந்து பாசுரங்களில் பரமனுடைய, ஐந்து நிலைகளைச் சொல்லிப் பாடினாள். அதிலும் முதல் பாசுரத்தில் ப்ராப்ய, ப்ராபக சம்பந்தத்தையும், இரண்டாம் பாசுரத்தில் க்ருத்யா-அக்ருத்ய விவேகத்தையும், மூன்றாம் பாசுரத்தில் திருநாமசங்கீர்த்தனத்தையும், நான்காம் பாசுரத்தில் பாகவத ப்ரபாவத்தையும், ஐந்தாம் பாசுரத்தில் கர்ம கட்டிலிருந்து விடுபடும் மார்க்கத்தையும், (வித்யா ப்ரபாவம்) சொல்லி முதல் ஐந்து பாசுரங்களை முடித்தாள்.
அடுத்த பதிவிலிருந்து இரண்டாம் ஐந்து பாசுரங்களை (ஐயைந்தும் ஐந்தும் = 5×5+5) பார்ப்போம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
அடியேன்,
No comments:
Post a Comment