*திருப்பாவை பாசுரம் 08*
சிறந்த அடியவருடன் கூட்டாகச் சென்று பரமனை வழிபடுதலாகிய உயரிய வைணவக் கோட்பாட்டைத் தான் நம் அன்னை கோதை நாச்சியார் இப்பாசுரம் மூலம் முன்னிறுத்துகிறாள்.
கோதுகலமுடைய பாவாய் என்ற பதம் கண்ணனுக்கு மிக நெருக்கமான, அவனது பேரன்புக்குரிய இடைக் குலப்பெண்ணை குறிப்பில் உணர்த்துகிறது. அதனால் தான், மற்ற இடைச்சி, இவளை தங்களுடன் அழைத்துச் செல்வதன் வாயிலாக, கண்ணனின் அருளுக்கு எளிதில் பாத்திரமாகி விடலாம் என்றெண்ணி இவளை துயிலெழுப்புகின்றனர்.
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரைமாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்!
[கிழக்குத் திசையில் வானம் வெளுத்து பொழுது புலர ஆரம்பித்துள்ளது. எருமைகள் (பால் கறக்கப்படுவதற்கு முன்னர்) பனி படர்ந்த சிறு புல்வெளிகளில் மேய்வதை நீ பார்க்கவில்லையா? பாவை நோன்பு ஒன்றையே தலையாய கடமையாக எண்ணிக் கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி, உன்னையும் எங்களுடன் அழைத்துச் செல்ல உன் வாசலில் குரல் கொடுத்த வண்ணம் இருக்கிறோம்!
குதூகலம் நிறைந்த பெண்ணே! இனியும் உறங்காது எழுவாய்! குதிரை வடிவு கொண்ட கேசி என்ற அரக்கனின் வாயைக் கிழித்து மாய்த்தவனும், கம்சனால் ஏவப்பட்ட (சாணூரன், முஷ்டிகன் எனும்) மல்லர்களை அழித்தவனும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவனும் ஆன கண்ணனின் புகழைப் போற்றிப் பாடி, (அவனை அடைந்து) நாம் வணங்கினால், நம்மைக் கண்ட மாத்திரத்தில் 'ஐயோ' என்று மனமிரங்கி, கருணையோடு நம் குறைகளை ஆராய்ந்து அருள் புரிவான். எனவே பாவை நோன்பிருக்க வாராய்!]
இப்போது அவர்கள் உரையாடலை கேட்போம்.
*விளக்கவுரை:*
தோழியர்: (கீழ்வானம் வெள்ளென்று)
பெண்ணே! கிழக்கு வெளுத்தது, எழுந்து வா!
கோபி:
(இவள் சற்று சமத்காரமாகப் பேசக்கூடியவள்)
உண்மையில் கிழக்கு வெளுத்தால் அல்லவோ பொழுது விடிந்ததற்கு அடையாளம். நீங்கள் தான் "திங்கள் திரு முகத்து சேயிழையார்" ஆயிற்றே. உங்களின் முகத்தின் ஒளிபட்டு கீழ்வானம் வெளுத்திருக்கக் கூடும்.
தோழியர்: (எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்)
எருமைகள் சிறுவீடு மேய வயல்கள் எங்கும் பரவின. இது கூட விடிவிற்கு அடையாளமன்றோ? என்றார்கள்.
(விடிகாலையில் புற்களின்மீது பனி படர்ந்திருக்கும். இந்த பனிப்புல்லை மேய்வதற்கு ஆவினங்களை விடியலில் சிறிதுநேரம் வெளியில் விடும் ஆயர் வழக்கம் சிறுவீடு மேய்தல் எனப்படும். பகலில் நீண்ட நேரம் மேயவிடுவது பெருவீடு மேய்தல் எனப்படும்)
கோபி:
"உங்களுடைய முகப்பிரகாசத்தைக்கண்டு கண்டு சிதறிப் போகிற இருளைக் கண்டு எருமைகளென்று பிரமிக்கிறீர்களே ஒழிய, எருமைகள் இன்னும் மேயப் போகவில்லை. உங்களுடைய முகவொளியை கீழ்த்திக்கின் வெளுப்பு நிறமாக கருதினீர்கள். இது அந்யதா ஜ்ஞானம்.
இருளின் திரட்சியை எருமைகளென்று இப்போது நினைக்கிறீர்கள். இது விபரீத ஜ்ஞானம். ஆகையால் இவையெல்லாம் விடிவுக்கு அடையாளமன்று" என்றாள்.
தோழியர்:
அப்படியானால் விடியவில்லை என்று நீ அறிந்ததற்கான அடையாளம் கூறு.
கோபி:
ஆயர்பாடியில் உள்ள ஆயிரம் பெண்களில் எத்தனை பேர் இங்கு வந்துள்ளார்கள்? மற்றவரெல்லாம் உறங்குவதால் தானே வரவில்லை! இன்னும் விடியவில்லை என்பதற்கு இது போதாதா?
தோழியர்: (மிக்குள்ள பிள்ளைகளும்)
உன்னைத்தவிர மற்றவரெல்லாம் எழுந்துவந்து பாவைக்களம் போகத் தொடங்கியாயிற்று!
கோபி:
சரி! எதற்காகப் போனார்கள்?
தோழியர்:
உண்மையிலேயே உனக்குத் தெரியாதா? அர்ச்சிராதி மார்க்கத்தாலே வைகுந்தம் போவாரைப் போலவும், அக்ரூரர் கண்ணனைக் காண கிளம்பினாற் போலவும் போதலே பயனாக எண்ணிப் போகின்றார்கள்.
கோபி:
அவர்கள் எல்லாம் கிளம்பிப்போன பிறகு நான் வந்து என்ன ஆகவேண்டும்.
தோழியர்: (போவான் போகின்றானை போகாமல் காத்து)
அவர்களை மடக்கி,”நீ இன்னும் எழுந்து வரவில்லை, சற்று நில்லுங்கள்” என்கிறோம். “அவளும் வரட்டும்” என்று சொல்லி அவர்களும் நின்று விட்டார்கள். உனக்காக காத்திருக்கிறார்கள்.
தோழியர்: (உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்)
அவர்கள் போவதையே பயனாக எண்ணிப் போவதுபோல், உன்னைக் கூவி அழைப்பதையே பயனாக எண்ணி உன்னை அழைக்கின்றோம்.
கோபி:
நான் வராமல் உறங்கும்பொழுது, என்னை வேண்டி அழைப்பானேன்? நான் வாராவிடில், நீங்கள் மேற்கொண்டு செயல்பட இயலாது என்று சொல்வானேன்?
தோழியர்: (கோதுகாலமுடைய பாவாய்)
கிருஷ்ணனுக்கு இனியவளே! உன்னை முன்னிட்டுக் கொண்டு சென்றால், கிருஷ்ணன் அருள் பெறலாம் என்று வந்து நின்றோம்.
பாவாய்: நீ பெண்பிள்ளைதானே! பெண்களின் வருத்தம் அறியாத கண்ணன் போலா நீ? ஒரு பதுமை போல் கிடக்காமல் எழுந்து வா!
இதைக் கேட்டதும் கோபியும் துரிதமாக எழுந்து வந்தாள்.
பாசுரச் சிறப்பு:
🔷 அதிகாலையில் கீழ்வானம் சட்டென்று வெளுப்பதில்லை. இருண்டிருந்த வானம், மெல்லச் சிவந்து, வண்ணக் கலவையாகிய நிலையிலிருந்து மெல்ல பூரண வெண்மையை அடைகிறது! அது போல, அடியார்களும் (ஆச்சார்யனின் துணையோடு!) பலவித அனுபவ நிலைகளைக் கடந்து பின் ஞானத்தெளிவு பெறுகிறார்கள்!
🔷அது எப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் பெண்ணுக்கு "சிறுவீடு மேய்வது" போன்ற மாடு மேய்க்கும் ஆயர்களின் பிரயோகங்கள் எல்லாம் தெரிந்தது?, ஆண்டாள் தன்னை ஒரு இடைச்சியாகவே வரிந்து கொண்டதே காரணம் ஆகும்.
🔷"தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் பரமனைப் பற்றினால், நம் குற்றம் குறைகளை கருணையுடன் ஆராய்ந்து நமக்கருளுவான்" என்ற தத்வத்தை இங்கு ஆண்டாள் உரைக்கிறாள். இந்த தத்வத்தைத் தான் பகவான் கண்ணன் கீதையில் இப்படி அருளுகிறான்:
மத்த: பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி த⁴னஞ்ஜய |
மயி ஸர்வமித³ம் ப்ரோதம் ஸூத்ரே மணிக³ணா இவ
(கீதை:07:07)
அதாவது, “தனஞ்ஜயனே, என்னைக்காட்டிலும் மேலானது வேறு ஒன்றுமில்லை, நூலிலே மணிக்கோவை போல அண்டங்கள் அனைத்தும் சர்வேஸ்வரன் என்ற நூலான (சூத்திரத்தால்) என் மீது தான் கோக்கப் பட்டு இருக்கின்றன”
[காஞ்சீபுரம் வரதராசப் பெருமாளுக்கும் "தேவாதி தேவன்" என்று ஓர் திருநாமம் உண்டு.]
🔷 எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்: பாகவத அனுபவத்தில் சதா சர்வகாலமும் திளைத்திருப்பதால், மோட்ச சித்தியை அடைய நிறைய சமயம் எடுத்துக் கொள்ளும் அடியவரை, பரபரப்பின்றி நிதானமாக மேயும் எருமை உருவகப்படுத்துகிறது.
'சிறுவீடு' என்பதை சிற்றின்பமாக அர்த்தப்படுத்திக் கொண்டால், தொடர்ச்சியாக 'பரந்தன காண்' எனும்போது தமோ குணங்கள் விலகிப் போவதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் என்பர்.
🔷 சிறு வீடு' என்று ஒன்றிருந்தால் "பெரு வீடு" இருக்க வேண்டுமே! இருக்கிறது. அதை ஆழ்வார்கள் பாடவில்லை. ஆனால் திருவரங்கத்தமுதனார் இராமாநுஜ நூற்றந்தாதியில் பாடியுள்ளார். (பாடல் 30)
இன்பந் தருபெரு வீடுவந் தெய்திலென்? எண்ணிறந்த
துன்பந் தருநிர யம்பல சூழிலென் தொல்லுலகில்
மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் எனமொழிந்த
அன்பன் அனகன் இராமா னுசனென்னை ஆண்டனனே!
[எம்பெருமானார் என்னை அடிமைகொண்டருளப்பெற்றபின்பு எனக்கு மோக்ஷம் கிடைத்தாலென்ன? பலப்பல நரகங்கள் நேர்ந்தாலென்ன? எனக்கு எது பரம ப்ராப்யமோ அது கிடைத்து விட்டது! ]
ஸ்ரீவைஷ்ணவத்தில் பெருவீடு என்றால் "மோக்ஷம்" என்பதைக் குறிக்கிறது.
நாளை ஒன்பதாம் பாசுரத்தை அனுபவிப்போம்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்.
அடியேன்,
No comments:
Post a Comment