*திருப்பாவை பாசுரம் 09*
எட்டாவது பாசுரத்தில் ஆண்டாளும் அவளது தோழிகளும் துயிலெழுப்பிய பெண், கண்ணனுக்கு உகந்தவள் மட்டுமே, ஆனால் இப்பாசுரத்தில் எழுப்பப்படும் பெண் ஞானமிக்கவள்! உறங்கும் பெண்ணின் சிறப்பு கருதியே, ஆண்டாள் அவளை "மாமான் மகளே" என்று சொந்தம் கொண்டாடுகிறாள் என்பதும் குறிப்பிடத்தக்கது!
தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்!
[மாசற்ற வைர வைடூரியங்கள் பதிக்கப்பெற்ற மாடத்தில், நாற்புறமும் தீபங்கள் ஒளிர, நறுமணப்புகை எங்கும் வீச, மென்மையான படுக்கையில் உறங்கும் மாமன் மகளே!மணிகள் பதித்த கதவினை திறப்பாயாக! மாமிமாரே! துயிலுறும் உங்கள் மகளை எழுப்ப மாட்டீர்களோ?
அவள் என்ன ஊமையோ, செவிடோ , (கர்வத்தால் உண்டான) சோம்பல் மிக்கவளோ? அல்லது, எழுந்திராதபடி காவலில் வைக்கப்படுள்ளாளோ? ஏதேனும் மந்திரத்திற்கு வயப்பட்டுள்ளாளோ? இப்பெண்ணை எழுப்பி பாவை நோன்பிற்கு கூட்டிச் செல்வதற்கு "வியத்தகு கல்யாண குணங்களை உடையவனே, வைகுண்டத்தில் உறைபவனே, திருமகளின் நாயகனே" என்றெல்லாம் எம்பெருமானின் ஆயிரம் நாமங்களை உரக்கச் சொல்வோம்!]
விளக்கவுரை:
தூமணி மாடத்து:
துவளின் மாமணி மாடமோங்கும் துலைவில்லிமங்கலம் என்றருளிச் செய்தார் நம்மாழ்வார். அதாவது (துவள் இல்) குற்றமில்லாத மிகுந்த ஒளி பொருந்திய இரத்தினக் கற்களாலே செய்யப்பட்ட மாடங்கள் எங்கும் உயர்ந்துள்ள “துலைவில்லி மங்களம் என்ற நகரமாகும். அதாவது, மணிகளின் குவியலிலிருந்து குற்றமுள்ள மணிகளை ஒத்துக்கிக் கழித்து, குற்றமில்லா மணிகளை தேர்வு செய்து, பதித்துக் கட்டப்பட்ட உயர்ந்த மாடங்கள், துலைவில்லிமங்கலத்தில் உள்ளனவாம்—இது திருவாய்மொழி.
ஆண்டாள் நாச்சியாரோ தூமணி மாடம் என்கிறாள். அவ்வாறு குற்றம் பார்த்து கழிக்க வேண்டாது எல்லாமே தூமணியாய் உள்ளபடியால், சிறக்க அமைந்த மாடம் என்று பொருள்.
சுற்றும் விளக்கெரிய:
அப்பெண்ணின் மாளிகையில் எப்பொழுதுமே இரத்தினங்கள் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. ஆயினும் மங்களகரமாக தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் கிருஷ்ணன் எப்போது வருவான் என்று தெரியாது. வந்தபின்னும், இவள் கை பற்றி எங்கு உலவுவான் என்று தெரியாது. எனவே சுற்றும் விளக்கேற்றி வைக்கிறார்கள்.
(உண்மையில் ஓரிடத்தில் மட்டுமே விளக்கிருந்தாலும் இத்திருமாளிகையில் சுற்றிலும் உள்ள ரத்தினங்களில் ஒளி பிரதிபலித்து, சுற்றிலும் விளக்குள்ளதுபோல் பிரகாசித்தது.)
துயிலணைமேல் கண்வளரும்:
இளைய பெருமாளைப்போல, *இமைப்பிலன் நயனம்*
என்று நாங்கள் வெளியே துன்புற, இவள் இவ்வாறு கிடந்து உறங்குவது எங்ஙனம்? என்று யோசித்தாள்.
இவள் தகப்பனார், அரங்கனின் பள்ளிகொண்ட அழகை, படுத்த பைந்நாகணைப் பள்ளிக்கொண்டான் என்று அனுபவித்தாற்போல, ஆண்டாள், இங்கு, தன்னை அடைய வேண்டிய பொறுப்பு கண்ணணுக்கல்லவோ” என்று மார்மீது கைவைத்து இவள் உறங்கும் அழகை அனுபவிக்கிறாள்.
மாமான் மகளே:
ஸ்வாமினியாகவும், தோழியாகவும் கருதி அழைத்த பின்பு, இப்பொழுது ஒரு உறவு முறையும் சொல்லி அழைக்கிறார்கள். இங்கு, மாமன் என்பது ஸ்ரீமாலாகாரரைக் குறிப்பதாக கொள்வர்.
[கிருஷ்ணனையும் பலராமனையும் அக்ரூரர் மதுரா நகருக்கு அழைத்து வருகிறார்கள். வழியில் மாலைகள் வாங்க, சுதாமா என்னும் மாலாகாரர் (மாலைகள் தயாரிப்பவர்) இருப்பிடத்தை அடைந்தனர். இவர்களை அடையாளம் கண்டுகொண்ட மாலாகாரர், தன்னிடமுள்ளவற்றில் சிறந்த இரண்டு மாலைகளைக் கொண்டு வந்தார். அவர்களிடம் அவற்றைக் கொடுக்குமுன் தன் முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு கொடுத்தார். மாலையின் அழகில் மயங்கி, அதை தான் உபயோகிக்க எண்ணம் கொண்டால் அம்மாலை ஸ்ரீ கிருஷ்ணனை சென்று சேராமல் போய்விடும். மேலும், அதனால் தன் முகம் வாடினால் அது ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் வருத்தத்தை அளிக்கும். தனது சிறந்த படைப்பு, ஸ்ரீ கிருஷ்ணனுக்கே சமர்ப்பணம். எனவே, தனது முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு மாலைகளை கொடுத்தார். சுதாமாவின் இச்செயலை, அக்ரூரர் பாராட்டினார் என்கிறது கீதா பாஷ்யம்.]
ஒருவேளை, ஆண்டாள் தானும் ஒரு மாலாகாரர் மகள்தானே என நினைத்து, *மாமான் மகளே* என்று அழைக்கிறாள்.
மாமீர் அவளை எழுப்பீரோ:
அங்குள்ள பெண்டிரை, மாமிமார்களே! நீங்களாவது அவளை எழுப்பக் கூடாதா? என்று கேட்டும் பயனில்லை. அந்தப் பெண்டிருள் ஒருத்தி அவள் தாயாக இருக்க அவளிடம் முறையிடுகிறார்கள்.
உன் மகள்தான் ஊமையோ, செவிடோ, அனந்தலோ:
வாக்கு, செவி, மனம் முதலிய எல்லாமே கண்ணனிடம் ஈடுபட்டிருப்பதால் இப்படிக் கிடக்கிறாளோ? மந்திர வசப்பட்டாளோ? அவன் நாமங்களைச் சொன்னாலாவது எழுகிறாளோ பார்ப்போம்.
மாமாயன், மாதவன், வைகுந்தன்:
"பேருமோராயிரம் பிற பல உடைய எம்பெருமான்" எனப்பட்ட நாமங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். உன்மகள் எழுந்திராத குறையேயொழிய நாங்கள் சொல்லாத குறையில்லை என்கிறார்கள்.
பாசுரச் சிறப்புகள்:
தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய:
தூமணி மாடம் என்பது, அழிவில்லாத, ஞானத்தை உள்ளடக்கிய நான்மறையை (வேதம்) குறிப்பில் சொல்கிறது. "சுற்றும்" என்பது வேதத்தின் ஆறு அங்கங்களை (சிக்க்ஷை, கண்டம், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம்) குறிக்கிறது. விளக்கு என்பது வேதசாரத்தை புரிந்து கொள்ள உதவும் ஸ்மிருதி, புராண, உபநிடதங்கள் சார்ந்த ஞானத்தை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது. இப்போது உறங்குபவளின் ஞானச் சூழல் புரிகிறதல்லவா ?
ஞான தீபமாகிய "விளக்கு" என்ற பதத்தை ஆழ்வார் பாசுரங்களில் பல இடங்களில் காணலாம்.
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன்,
உய்த்துணர்வென்னும் ஒளி கொள் விளக்கேற்றி,
மிக்கானை மறையை விரிந்த விளக்கை
என்று பல உதாரணங்களைக் காட்ட முடியும்.
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்:
"தூபம் கமழ" என்பது, ஞானம், அனுஷ்டானம் மற்றும் வைராக்கியம் என்ற மூன்று விஷயங்களை குறிப்பில் உணர்த்துவதாக அபினவ தேசிகன் கூறுவார்.
"உன் மகள்" என விளிக்கப்படுவதால், அவ்வடியவள் வைணவ ஆச்சார்ய சம்பந்தம் உடையவள் என்பது புலப்படுகிறது.
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?:
அஷ்டாட்சர மந்திரத்தின் ஆதிக்கமே இந்த ஏமப் பெருந்துயிலுக்கு காரணம்!
இங்கு ஆண்டாள் உறங்கும் பாகவதையின் தாயாரை, துணைக்கு அழைப்பதால் (மாமீர் அவளை எழுப்பீரோ?), மோட்ச புருஷார்த்தத்தை அடைய புருஷகாரத்துடன் (பாகவதையின் தொடர்பு) ஆச்சார்ய அனுக்ரகமும் அவசியம் என்பது வலியுறுத்தப்படுகிறது!
மாமாயன் என்பது நீர்மையையும், மாதவன் என்பது திருமகளின் நாயகன் என்பதையும், வைகுந்தன் என்பது பரத்துவத்தையும் குறிப்பன.
இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய சங்கதி ஒன்றுண்டு. பெரிய பிராட்டியின் சம்பந்தத்தினாலேயே, நீர்மையும், பரத்துவமும் பகவானுக்கே சித்திக்கும் என்பதை கோதை நாச்சியார், 'மாதவன்' என்பதை நடுவண் (மாமாயன், வைகுந்தன் என்ற பதங்களுக்கு இடையில்) வைத்து மிக அழகாக நிலைநாட்டி விடுகிறார் !
நாளை 10ம் பாசுரத்தை அனுபவிப்போம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்.
அடியேன்,
No comments:
Post a Comment