Popular Posts

Wednesday, 25 December 2024

திருப்பாவை - தனியன்கள்

 🙏🏻திருப்பாவை - தனியன்கள்🙏🏻


திருப்பாவை பாசுரங்களை அனுசந்திப்பதற்கு முன்னர், இப்பாசுரங்களின் தனியன்களை அனுசந்தானம் செய்வது மரபு. இந்தப் பிரபந்தத்துக்காக, ஸ்ரீ பராசர பட்டர், ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிய தனியன்களை சேவிப்போம்.


ஸ்ரீ பராசர பட்டர் அருளிச்செய்தது:


நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்

பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ் ஸித்தம் அத்யா பயந்தீ

ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே

கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய :

(பொருள் :- நீளாதேவியின் அம்சமான நப்பின்னைப் பிராட்டியின் உயர்ந்து பருத்த முலைத்தடங்களாகிற மலையடிவாரத்திலே உறங்குகின்றவனும், தான் சூடிக் கொடுத்த மாலையாலே கட்டுப்பட்டவனும் ஆன கிருஷ்ணனுக்கு அவனுடைய பாரதந்த்ர்யத்தை (அதாவது ஆத்மாக்கள் அவனிட்ட வழக்காயிருந்து அவனுக்கே பயன்படுவதை) உணர்த்தி எம்மை அடிமை கொள்ள வேணும் என்று நிர்பந்தித்த ஆண்டாளை நமஸ்கரிக்கிறேன் என்று இந்தத் தனியனை சமர்ப்பிக்கிறார் ஸ்ரீ பராசர பட்டர்.)


ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச்செய்தது:


அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்

பன்னு திருப்பாவைப் பல்பதியம் இன்னிசையால்

பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை; பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.


(அன்னங்கள் உலவுகின்ற வயல்களை உடைய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள். அரங்கனுக்கு பல (முப்பது) பாசுரங்களை ஆராய்ந்தருளிய திருப்பாவையை இனிய இசையோடு கூட்டி நல்ல பாமாலையாக (பாட்டுக்களால் ஆன மாலையாக), பாடிக் கொடுத்தவளும், பூக்களாலான மாலையைத், தான் சூடிக் களைந்து கொடுத்தவளுமான ஆண்டாளின் புகழைச் சொல்லு!)


சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல்பாவை

பாடியருள வல்ல பல்வளையாய்! – நாடி நீ

வேங்டவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம்

நாம்கடவா வண்ணமே நல்கு.

பூமாலையை சூடிக்கொடுத்த சுடர்கொடியே! பழமையான பாவை நோன்பை (திருப்பாவை மூலமாக) பாடி எல்லோருக்கும் அருளவல்ல பல வளையல்களை அணிந்திருப்பவளே! நீ மன்மதனை நாடி “காமதேவா! திருவேங்கட பெருமானுக்கு வாழ்க்கைப்படுத்தவேணும்” என்று (காமனைக் குறித்து) சொன்ன இவ்வார்த்தையை, நாங்களும் தப்பாமல் பின்பற்றும்படி அருள் புரிவாயாக.  (வேங்கடவற் கென்ன விதிக்கிற்றியே., நாச்சியார் திருமொழி (504 (1:1) 

இனி, அடுத்த பதிவு முதல் பாசுரங்களை சேவிப்போம்.


ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்.


அடியேன்,

சந்தான சேகர தாசன்,

No comments:

Post a Comment