*திருப்பாவை பாசுரம் 27*
(கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா)
இப்பாசுரத்தில் கண்ணன் இடைச்சியரது (நோன்பிருந்து செய்த) வேண்டுதலுக்கு இரங்கி அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ததால் அவர்களுக்கு வரும் பேரானந்தம் தெரிகிறது. இடைச்சியரின் பாவை நோன்பும் பூர்த்தி அடையும் நிலைக்கு வருகிறது.
முதலில் மார்கழி நோன்பு பற்றி 1- 5 பாசுரங்கள் மூலம் தெரிவித்த பின்னே, 6- 15 பாசுரங்கள் ஒவ்வொரு கோபியரையும் (இறையடியாரை) நோன்பிற்கு அழைத்து எழுப்பிய பின்னே, 16-20 பாசுரங்கள் நந்தகோபனுடைய இல்லத்திற்கு சென்று, நந்தகோபன், யசோதா, பலதேவன் நப்பின்னை பிராட்டி வரை எழுப்பியபின்னே, 21-25 பாசுரங்கள் கண்ணனையும் எழுப்பியதாக அமைந்தன. 26 ஆம் பாசுரத்தில் நோன்பிற்குரிய பொருட்களை அருளுமாறு கண்ணனை வேண்டிப் பெற்று, அந்நோன்பும் பூர்த்தியாகும் கட்டத்தில் இப்போது 27 ஆம் பாசுரத்தை சேவித்துக் கொண்டிருக்கிறோம். இப்பாவை நோன்பை நோற்ற இடைச்சியர்கள் தாங்கள் வேண்டும் பரிசுகளைக் கண்ணனிடம் பெற்றுக்கொள்வதைப் பற்றிய பாசுரமிது.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்,
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே,
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்,
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!
பாசுர விளக்கம்:
பகைவரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தனே! நாங்கள் உன்னிடம் பறை பெற்று உன்னை போற்றிப் பாடுவோம். அதனால் நீ அகமகிழ்ந்து, நாட்டவர் எல்லோரும் புகழும்படியாக, எங்களுக்கு பரிசாக வழங்கும், அழகான சூடகம், தோள்வளை, தோடு, காதில் அணியும் மடல், காற்சதங்கைகள் மற்றும் பல ஆபரணங்களை நாம் அணிந்து மகிழ்வோம்! அழகான புதிய ஆடைகளை உடுத்துவோம்!
பின்பு, பாற்சோறு மறையுமாறு அதன் மேல் நெய் வார்த்து செய்த அக்கார அடிசிலை, எங்கள் முழங்கையெல்லாம் நெய்யொழுக நாம் உண்போம் ! இவ்வாறு உன்னுடன் சேர்ந்திருந்து, உள்ளம் குளிர்ந்து, பாவை நோன்பை முடிக்கவே நாங்கள் வந்துள்ளோம் ! எங்களுக்கு அருள்வாயாக!
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா: "பகைவரை வெல்லும் சிறப்பு மிக்கவனே" எனும்போது, பகைவர்கள் வெல்லப்படவேன்டியவர் தானே, என்ற எண்ணம் எழுகிறதல்லவா? 'கூடார்' என்பவர் பகைவர் தாம் என்பதில்லை. பரமனை அறியாதவர்கள்; அறிந்தும் பயப்படுகிறவர்கள்; அறிந்தும் விபரீத குதர்க்க குயுக்திகளால் குழம்பினவர்கள்; அறிந்தும் பரமனை ஏற்காமல் விரோதம் பாராட்டுபவர்கள்; என்று கூடார் நால்வகைப்படுவர்.
உன் தன்னைப் பாடி யாம் பெறும் சம்மானம்:
நன்றாக கவனித்தால், இந்த கட்டத்தில், ஆண்டாள் "சம்மானமாக இதைக் கொடு அதைக் கொடு" என்று குறிப்பாக எதுவும் கண்ணனிடம் வேண்டவில்லை. ஆண்டாள் கண்ணனிடம், "நான் உனக்குச் சூடிக் கொடுத்த மாலைகளுக்கு இணையாக உன் சம்மானம் இருக்க வேண்டும்" என்று சொல்கிறாள் போலும்.
"உயர்ந்ததாக ஒன்றைக் கொடு" என்று குறிப்பில் சொல்கிறாள் ஆண்டாள்! அதன் பொருள் 'கண்ணனே சம்மானம்' என்பது தவிர வெறென்ன இருக்க முடியும்?
நாடு புகழும் பரிசினால் நன்றாக:
கண்ணன் "நாடு புகழும் பரிசை", அடியவரே பிரமித்துப் போகும் வண்ணம், அவர்களுக்கு அளிக்க வல்லவன். கண்ணன் குசேலனுக்கு (அவன் வாய் விட்டுக் கேட்காதபோதும் கூட) வழங்கியது நாடறியும் பரிசல்லவா? அது போலவே, திரௌபதிக்கும், தக்க தருணத்தில் அவள் மானத்தைக் காக்கும் விதமாக, கண்ணன் வழங்கியதும், ஆன்றோரும் சான்றோரும் போற்றிய பரிசு தானே! பஞ்சபாண்டவர்க்கோ யுத்த வெற்றியைப் பரிசாக வழங்கி தர்மத்தை நிலைநாட்டினான் ஸ்ரீகிருஷ்ணன்!
சூடகமே தோள்வளையே--- என்றனைய பல்கலனும்:
சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாடகம் என்று அத்தனை நகைகளாலும் தங்களை அலங்கரித்துக் கொள்ளப் போவதாக கோபியர் கண்ணனிடம் சொல்கின்றனர். எந்தக் காலத்திலும் பெண்டிருக்கு நகை மேல் ஆசை உண்டு போலும் . நீலமேக வண்ணனின் சுந்தர வடிவத்திற்கு ஏற்றாற்போல் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஶ்ரீஆண்டாளின் விருப்பம் இதில் பளிச்சிடுகிறது.
காறை பூணும் கண்ணாடிகாணும் தன் கையில் வளைகுலுக்கும்
கூறையுடுக்கும் அயர்க்கும் தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்,
என்று தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆண்டாளின் ஆசையை, பெரியாழ்வார் தன் திருமொழி'யில் சொல்கிறார். (3-7-7)
மேலும் அவர் தன் பங்குக்கு, இப்பாசுரத்திற்கு இணையாக
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்,
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்,
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து,
என்று தனது திருப்பல்லாண்டில் பாடியுள்ளார். தந்தைக்கும் மகளுக்கும் என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்!
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்:
மேலும், பகவத் கைங்கர்யம் செய்யும் ஒரே விருப்பத்தில் கண்ணனை சரண் புகுந்த இடைச்சியர்க்கு, சிற்றின்பங்களான புத்தாடை உடுப்பதிலும், அக்கார அடிசிலை முழங்கையில் நெய் வழிய உண்ணுவதிலும் அப்படி என்ன ஆசை என்ற கேள்வி எழலாம். அவை எல்லாம் "பாவை நோன்பு" நிறைவடைவதற்கான குறியீடுகள் மட்டுமே. இடைச்சியரின் விருப்பம் கண்ணனோடு கூடியிருந்து குளிர்தல் மட்டுமே ஆகும். இதிலும், அடியவருடன் சேர்ந்து பகவத் அனுபவத்தில் திளைத்தல் என்ற "ஶ்ரீவைஷ்ணவக் கோட்பாடு" ஸ்ரீகோதை நாச்சியாரால் வலியுறுத்தப்படுகிறது.
இடைச்சியரின் நோன்பு பரமன் திருவருளால் சுபமாக நிறைவடையும் நிலைக்கு வந்து விட்டது. நோன்பு நோற்கும் முன், (2-வது பாசுரத்தில்) 'நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மலரிட்டு நாம் முடியோம்' என்ற இடைச்சியர் இப்போது நோன்பு பூர்த்தியாகி விட்டதால் 'பாற்சோறு மூட நெய் பெய்து' செய்த அக்கார அடிசிலை உண்போம் என்கின்றனர்.
பாசுர விசேஷம்:
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா:
அடியார்களை மட்டுமன்றி, தன்னுடைய திருக்கல்யாண (ஶௌர்யம், ஶௌஸில்யம், ஸௌந்தர்யம்) குணங்களால் ஆகாதவரைக் கூட பரந்தாமன் தன் வசப்படுத்தி ஆட்கொள்வான் என்பதை குறிப்பில் உணர்த்துகிறது.
இந்திரன் இறுமாப்போடு கொட்டிய பெருமழையிலிருந்து கோவர்த்தன கிரியினைக் குடையாகத் தாங்கிப் பிடித்து ஆயர்பாடியைக் காத்ததின் பின், இந்திரனே வருந்தி, மனந்திருந்தி, கண்ணனுக்கு "ஸ்ரீகோவிந்தராஜன்" என்று பெயர் சூட்டிப் பட்டம் கட்டினான். இதுவே "ஸ்ரீகோவிந்த பட்டாபிஷேகம்" என்று உயர்த்திக் சொல்லப்படுகின்றது.
சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே,
சூடகம் = காப்பு;
தோள்வளை = திரு இலச்சினை (ஒரு வைணவனின் சங்கு-சக்கர சின்னத்தைக் குறிப்பதாக உள்ளர்த்தம்)
தோடு = திருமந்திரம் (பிரணவாதார வடிவைக் குறிப்பதால், ஞானம் என்ற உள்ளர்த்தமும் உண்டு)
செவிப்பூ = த்வயம் (பக்தியைக் குறிப்பது)
பாடகம் = சரம சுலோகம் (காலில் அணியும் அணிகலனைக் குறிப்பதால், சரணாகதியைக் குறிப்பதாகவும் சொல்லலாம்)
பல்கலன் = (தோடு, செவிப்பூ, பாடகம் என்ற மூன்றும் ) ஒரு வைணவனுக்குரிய ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் என்ற குணங்களைக் குறிப்பதாம்.
இவை ஶ்ரீவைஷ்ணவ நெறியில் இணைந்த ஒருவருக்கு ஆச்சாரியார் செய்து வைக்கும் பஞ்ச சம்ஸ்காரத்தின் உருவகமாகக் கொள்ளலாம்.
(தோள் வளையே) வலக்கையில் ஸுதர்ஸன சக்கரக் குறியீட்டையும், இடக்கையில் பாஞ்சஜன்ய சங்கின் குறியீட்டையும், திரு இலச்சினை, பொறித்துக் கொள்ளுதல்
(சூடகமே) - மேனியில் பரமனுடைய 12 உப-வ்யூஹங்களைக் குறிக்கும் வகையில் ஊர்த்துவபுண்டரங்கள் எனப்படும் திருமண் ஸ்ரீ சூர்ணம் இட்டுக் கொள்ளுதல் (திருமண் காப்பு )
(தோடே) பிரணவ வடிவைக் கொண்டிருக்கும் செவியினைக் குறிக்கின்றது. ரஹஸ்ய த்ரயத்தில் வைணவ நெறியின் மூலமந்திரத்தை குருவின் மூலம் உபதேசம் பெறுதல்
(செவிப்பூவே) திருமகளாகிய தாயாருடன் தொடர்புடைய இரண்டாவது இரஹஸ்யமான த்வய மந்த்ர உபதேசம் பெறுதல்
(பாடகமே) காலில் அணியும் அணிகலன், இறைவன் திருவடியில் சரணம் செய்வதைக் குறிக்கும் விதமாய், சரமஸ்லோகம் என்கின்ற இறை உறுதிமொழியைக் குறிக்கின்றது.
ஆடை உடுப்போம் -- பறையேலோ: கண்ணன் உடுத்திக் களைந்திட்ட ஆடையைக் காதலோடு ஆயர்குலப் பெண்கள் உடுத்துவார்களாம் ! அவ்வளவு உரிமை அவன் மேலே! இதையே, இவள் தந்தை பெரியாழ்வார், திருப்பல்லாண்டு பிரபந்தத்தில் உடுத்துக் களைத்த நின் பீதகஆடை உடுத்துக் கலத்ததுண்டு என்கிறார்.
பாற்சோறு = பகவத் சேவை (கைங்கர்யம்) என்று உள்ளர்த்தம்.
மூடநெய் பெய்து = ஆத்மார்த்தமாக, அகந்தையின்றி செய்யப்படும் (பகவத் சேவை)
(கூடியிருந்து குளிர்தல்) இடைச்சியர் குழுவினர் மோட்ச சித்தியை அடைதல்
'பறை' என்பது பொதுவாக பகவத் கைங்கர்யத்தைக் குறிக்கும் என்பர்.
இப்பாசுரத்தில் ஆரம்பித்து, 28-வது பாசுரத்தில் (குறைவொன்றுமில்லாத கோவிந்தா உன் தன்னோடு) மற்றும், 29-வது பாசுரத்தில் (இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!) என திருப்பாவையில் மூன்று முறை கோவிந்த நாமம் ஓதப்பட்டு நிறைவடைகிறது. (கோவிந்த நாம சங்கீர்த்தனம். கோவிந்தா கோவிந்தா கோவிந்தா!)
கோ வாகிய பசுக்கள் கண்ணனிடம் தம்மைக் காக்கச் சொல்லிக் கேட்கவில்லை, கண்ணன் அவற்றின் பின் சென்று காத்த போது, அவனைப் புகழவுமில்லை, இகழவுமில்லை. ஆயினும் கண்ணன் அவற்றைக் காத்தானல்லவா? அது போன்றேத் தன்னை அண்டியவர் அண்டாதவர், அறிந்தவர், அறியாதவர், இப்படி அனைவரையும் காப்பவன் என்பதைக் குறிக்கவே "கோவிந்த" நாமம்.
1-26 வரையிலான பாசுரங்கள் மூலமாக, கோபியர்கள் கண்ணனைப் பற்றியே சிந்தித்தும் (ஸாலோக்யம்) கண்ணனை நெருங்கியும் (ஸாமீப்யம்), கண்ணனை தரிஸித்தும் (ஸாருப்யம்) ப்ரபத்தி என்கிற சரணாகதியைச் செய்தனர். இந்தப் பாசுரத்தில் இவை மூன்றையும் தாண்டி, தாம் கண்ணனோடே ஒன்றாய்க் கூடிக் கலந்து மகிழ வேண்டும் என்ற விண்ணப்பத்தை வைக்கின்றனர். (ஸாயுஜ்யம்) = கூடிக் குளிர்ந்தே.
மேலும், இப்பாசுரத்தில் வீடுபேறு பெற்ற பின் அடியார்கள் வைகுண்டத்தில் பெறுகின்ற இன்பங்களைப் பரிசுகள் என்ற குறிப்பால் ஆண்டாள் உணர்த்துகிறாள். அதில் தலையாயது, இறைவனுக்குப் புரியும் தொண்டு (கைங்கர்யம்) என்று முடிக்கிறாள்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்,
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
அடியேன்,
No comments:
Post a Comment