*திருப்பாவை பாசுரம் 18*
(உந்து மதகளிற்றன்)
இதற்கு முந்தைய பாசுரத்தில் நந்தகோபரின் திருமாளிகையில் கண்ணனை எழுப்ப முயற்சித்த கோபிகைகள், தம் முயற்சியில் வெற்றி அடையவில்லை. அவர்களுக்கு அப்போது தான் பகவானை ஆஸ்ரயிக்க பிராட்டியின் புருஷாகாரம் தேவை என்ற புத்தி வருகிறது. பிறகு இப்பாசுரத்தால் நந்தகோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை (கண்ணன் நாயகி) புரு ஷாகாரம் செய்தருள எழுப்புகிறார்கள்.
உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!*_
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்,
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்,
பந்தார்விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப,
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
பாசுர விளக்கம்:
மதம் கொண்ட யானையின் நடையை உடையவரும், போரில் பகைவரைக் கண்டு பின்வாங்காத தோள் வலிமை மிக்கவருமான நந்தகோபருடைய மருமகளே! மணம் வீசும் கூந்தல் கொண்ட நப்பின்னை பிராட்டியே! நீயாகிலும் வந்து கதவைத் திற! எழுந்து வந்து கோழிகள் கூவுவதைக் கேள்!
குருக்கத்தி கொடி படர்ந்த பந்தல் மேலமர்ந்து, பலவகையான குயில்கள் சத்தமிடுவதைக் கேள்! மலர்ப் பந்தைப் பற்றியிருக்கும் மென்மையான விரல்களையுடையவளே! உன் கணவன் கண்ணனுடைய திருநாமங்களைப் போற்றிப் பாட வந்துள்ளோம். ஆகையால், தாமரை மலரை ஒத்த உன் சிவந்த, மென்மையான கையில் அணிந்த கைவளையல்கள் சீராக ஒலிக்க, உள்ளக் களிப்புடன் வந்து கதவைத் திறப்பாயாக!
பாசுரச் சிறப்பு:
ஐம்புலன்களில் "தொடுதல்" என்பது மேலே சொல்லப்பட்டது. அது போல, மற்ற நான்கு புலன்களின் அனுபவமும் சொல்லப்பட்டுள்ளது சிறப்பு!
கந்தம் கமழும் குழலி - மூக்கு;
உன் மைத்துனன் பேர் பாட - நாக்கு;
சீரார் வளையொலிப்ப - செவி;
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ - கண்;
வைணவத்தின் முக்கிய சித்தாந்தமான, திருமாலும், திருமகளும் பிரிக்க முடியாதவர் (ஒன்றே) என்பதையும், அவர்கள் இருவரும் சேர்ந்தே உபாயமாகவும் (வழிமுறை) உபேயமாகவும் (குறிக்கோள்) இருப்பதையும் இப்பாசுரம் உணர்த்துகிறது. இதை வடமொழியில், "ஏக சேஷித்வம்" என்றுரைப்பார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியின் முன்புறத்தில் மாதவிப்பந்தல் உள்ளது. ஆண்டாள், இந்த பந்தலுக்கு கீழ்தான் வளர்ந்தாள். இந்தப் பந்தல் மரங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள், தன்னை கோபிகையாக பாவித்து, கண்ணனை வேண்டி பாடிய சிற்பங்கள் இந்த பந்தலுக்கு அருகிலுள்ள விதான சுவரில் உள்ளது.
மாதவி = வசந்தமல்லி அல்லது செண்பகம் என்னும் கொடி! குருக்கத்திக் கொடி என்றும் சொல்வார்கள்.
ஆச்சார்யர்கள் விளக்கங்களில் மாதவிப் பந்தல்:
1) சுகப் பிரம்ம மகரிஷிகள் முதலான பல ஞான முனிவர்களும்,
2) சனகாதி மகரிஷிகள் முதலான கர்ம யோகிகளும்,
3) துருவன்,பிரகலாதன் போன்ற பக்த அன்பு உள்ளங்களும்,
4) ஆஞ்சநேயர் முதலான சரணாகத தொண்டு உள்ளங்களும், இன்னும் பலரும் வந்த அமரும் பந்தல் என்றே குறிப்பிடுகின்றனர்.
5) அவர்கள் வந்து அமரும் செண்பகக் கொடியானது வேத, வேதாந்த சாகை!
அதில் எந்தவொரு தடங்கலும் இல்லாமல், இன்பமாக அமர்ந்து கொண்டு, அவரவர் தமதமது அறிவறி வகைவகையாக பகவானைப் பாடிப் பரவும் கோஷப் பந்தல் என்றே வியாக்யானங்களில் குறிக்கிறார்.
இந்தப் பாசுரத்துடன் தொடர்புகொண்ட, ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
ஸ்வாமி ராமானுஜருக்கு "கோதா உபநிடதம்" (கோதையின் கீதை) என்று போற்றப்படும் திருப்பாவையின் மீது மிக்க ஈடுபாடு இருந்தது. எம்பெருமானாருக்கு "கோதக்ராஜர்" (ஆண்டாளுக்கு தமையன் என்ற முறையில்) என்று ஒரு திருநாமமுண்டு.
ராமானுஜரின் திருப்பாவை ஈடுபாடும், அவர் அடிக்கடி திருப்பாவைப் பாசுரங்களை உச்சரித்த வண்ணம் இருந்ததும், அவருக்கு திருப்பாவை ஜீயர் என்ற பட்டத்தை அவரது ஆச்சார்யனான பெரிய நம்பியிடம் பெற்றுத் தந்தது! உடையவரும் தன்னை அவ்வண்ணம் அழைப்பதையே மிகவும் விரும்பினார்.
பிட்சை பெறச் செல்லும்போது (பாதுகைகள் அணியத் தடையில்லாதபோதும்) ராமானுஜர் பாதுகைகள் அணியாமல் தான் செல்வார். அச்சமயங்களில் அவர் திருப்பாவையை உரக்கச் சொல்லியபடி செல்லும் பழக்கம் இருந்ததால், பாதுகைகள் அணிந்து செல்வதை ஆண்டாளுக்கும், திருப்பாவைக்கும் செய்யும் அவமரியாதையாகவே கருதினார்.“உந்துமத களிற்றன்” என்ற திருப்பாவை பாடிக்கொண்டு பிக்ஷைக்கு ஒரு நாள் பெரிய நம்பி திருமாளிகைக்கு (வீட்டிற்கு) சென்ற போது செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்துதிறவாய் என்று பாடி முடிக்க, நம்பியின் மகள் அத்துழாய் கைவளை குலுங்கக் கதவை திறப்பதும் ஒரே சமயம் நிகழ, ராமானுஜர் அவளை "நப்பின்னை" என்று நினைத்து ஸாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்ப்பித்தார்.
அத்துழாய் பயந்து போய், தன் தந்தையான பெரிய நம்பியைக் கூட்டி வர, அவர் மிகச் சரியாக ராமானுஜர் "உந்து மதகளிற்றன்" பாசுரத்தை பாடியபோது தான் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டு அவர் மயங்கியிருக்க வேண்டும் என்பதை கணித்து விட்டார்! என்ன இருந்தாலும், ராமானுஜருக்கே ஆச்சார்யன் அல்லவா பெரிய நம்பி. உடனே இராமாநுஜருக்கு மயக்கம் தெளிவித்து "திருப்பாவை ஜீயர்" என்ற பட்டத்தை அளித்து ஆச்சார்யனான பெரிய நம்பி பாராட்டினார் என்பதாக ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.
இப்பாசுரம் உடையவருக்கு மிகவும் உகந்தது ஆகும். அதனாலேயே, இப்பாசுரத்தை வைணவக் கோயில்களில் இரண்டு தடவை பாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
நாளை 19ம் பாசுரத்தை அனுபவிப்போம்.
ஆண்டாள் திருவடிகளே ஶரணம்.
ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்
அடியேன்,
No comments:
Post a Comment