Popular Posts

Tuesday, 28 January 2025

திருப்பாவை 22

 *திருப்பாவை பாசுரம் 22*

(அங்கண்மா ஞாலத்தரசர்)


நப்பின்னையின் வழிகாட்டலோடு கண்ணன் பள்ளி கொண்டிருக்கும் கட்டில் அருகில் சென்று, அவனைத் துயிலெழுப்புவதாக அமைந்த பாசுரம். அகந்தை மமதைகளை விட்டுவிட்டு, சிறு தெய்வங்களைப் பற்றாமல், பரந்தாமனையே சரணம் செய்ய வேண்டும் என உரைக்கும் பாசுரம். சரணாகதி செய்கின்ற அடியவரின் எண்ணம் முழுதும் பரந்தாமனின் கைங்கர்யம் என்கிற வீடுபேற்றில் (மோக்ஷம்) தான் உள்ளது என்று உறுதிப்படுத்தும் கருத்தைக் கூறும் பாசுரம்.


அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே

சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்!

கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே

செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ!

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,

அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்

எங்கள் மேல்சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!


பாசுர விளக்கம்:

"நல்லழகும், பெரும் பரப்பளவும் கொண்ட பூமியினை ஆண்ட மன்னர்கள், தம்மைக் காட்டிலும் உயர்ந்தவர் யாரும் இல்லை என்ற அகந்தையும் தற்பெருமையும் அழிந்துபட்டு , உன்னிடம் வந்து உன் அரியணையின் அருகே பணிவுடன் குழுமியிருப்பது போல, நாங்களும் உன்னைச் சரணடைந்தோம்! சலங்கை மணிகளைப் போன்ற, பாதி திறந்து பாதி மூடியிருக்கும், தாமரை மலர்களை ஒத்த உன் அழகிய சிவந்த கண்களை சிறிது சிறிதாகத் திறந்து எம்மைப் பார்த்து அருள் செய்யலாகாதா? குளிர்ந்த சந்திரனும், வெப்பம் தரும் சூரியனும் ஒரு சேர உதித்ததற்கு நிகரான அக்கண்களின் பார்வை, எங்கள் மேல் விழுமாகில், எங்களின் சாபங்களும் பாபங்களும் ஒழிந்து போய் விடும்."]


🔹 *பாசுர விசேஷம்:-*

🔹திருப்பாவையின் இந்த 22வது பாசுரத்தை தினமும் ஓதினால், நாம் செய்த பாவங்கள் அத்தனையும், பரமனின் திருவருளால் கரைந்து போய் விடும் என்று வைணவச் சான்றோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.


🔹தத்துவங்களின் வரிசையில் அகந்தைக்கு 22 ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதையொட்டியே இந்த திருப்பாவை 22 ஆவது பாசுரத்தில் அகந்தையை அகற்ற வேண்டியதன் அவசியத்தை ஸ்ரீஆண்டாள் அழகுற அமைக்கிறாள் என்பர்.


🔹ஜீவாத்மாக்கள் எல்லாமே தம்முடையவை என்றெண்ணும் மாயத் தூக்கம் கலைந்தெழுந்து, இறைவனுக்கே நாம் அடிமையென்னும் தெளிவுற்று, இறைக்கருணையாலே தம்முடைய கர்மவினைகள் நீங்கப்பெற்று, அவனோடே இருந்து தொண்டு செய்யும் பேறாகியன்ஸாயுஜ்யம்  அடைவதையே இந்த பாசுரம் சொல்கிறது.


🔹ஆச்சார்யர்களையும் அவர்கள் அருளும் உபதேசங்களையும், அதன் மூலம் அடியவர் பெறுவது ஸாலோக்யம் (இறை உலக வாழ்வு) ஆகும்.


🔹பின் பிராட்டியை அண்டி அவளிடம் சரணாகதி செய்தால் ஜீவர்கள் பெறுவது ஸாமீப்யம் (இறை அருகாமை) ஆகும்.


🔹இறைவனை நெருங்கித் தம்முடைய மற்ற அபிமானத்தை எல்லாம் விட்டு அனன்ய சரணமாக அடைந்தால் பெறுவது ஸாருப்யம் (இறை உருவடைதல்) ஆகும்.


🔹ஆனால் அவனுடனே இருந்து அவனுக்கே பணி செய்து கிடைக்கும் வீடுபேறு பெறுவதற்கு, ஸாயுஜ்யம் ஆகும். இறைவனருள் இருந்தால் மட்டுமே முடியும். ஆகையினால் தான் அவனது கண்களை சிறுச்சிறிதாகத் திறந்து தம் மேல் நோக்கச் சொல்கிறாள், ஏனென்றால் நீரில்லாமல் வாடியிருக்கும் பயிரின் மேல் மழை பெருவெள்ளமாய் பாய்ந்தால் தாங்குமோ? அதுபோல உன் கருணா சாகரத்தை ஒட்டு மொத்தமாக காட்டினால், எங்களிடம் அதை ஏற்க கொள்கலம் இல்லையே. எனவேதான் சிறுச்சிறிதாக என்கிறாள்..


🔹இப்பாசுரமும் சரணாகதி தத்துவத்தையே பறைசாற்றுகிறது. இதுவரை தம் சொத்து, தம் மக்கள், தம் நாடு என்றெல்லாம் அபிமானித்துக் கொண்டிருந்த, மிகுந்த வலிமை வாய்ந்த, சிற்றரசர்களும் பேரரசர்களும் தமது சுயம் அழிந்து கண்ணனிடம் வந்து சேர்ந்தது போல், கோபியரும் தங்களின் கையறு நிலையை முழுமையாக உணர்ந்து, தாங்கள் இதுவரை சம்பாதித்துள்ள தீவினைகளையும், சாபங்களையும் போக்க வல்லவன் கண்ணனே என்று உறுதியாக நம்பி, அவனைச் சரண் அடைகின்றனர். இது நிபந்தனையற்ற பரிபூர்ண சரணாகதி ஆகும்.


🔹போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்  என்று திருப்பாவை  5வது பாசுரத்தில் பாடியதை, ஸ்ரீ கோதை ஆண்டாள் திங்களும் ஆதித்யனும் எழுந்தார்ப்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோரெம்பாவாய் என்று இன்னும் சற்று உறுதிபடச் சொல்கிறாள்!


🔹ஸ்ரீகோதை ஆண்டாள் "அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே சங்கமிருப்பார் போல்" என்று பாடும் போது, மகாபாரத யுத்தத்திற்கு முன்னால் ஸ்ரீகண்ணனின் உதவியை நாடி வந்த கௌரவ பாண்டவர், ஸ்ரீகண்ணன் துயில் விட்டு எழுவதற்காக அவன் கட்டிலுக்கு அருகே, தலைமாட்டில் பாண்டவ அர்ஜுனனும், கால்மாட்டில் கௌரவ துரியோதனனும் காத்திருந்த காட்சி நமக்கு புலனாகிறது. ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதரின் தலைமாட்டுப் பகுதியான திருவீதிகளில் பூர்வாச்சார்யர்கள் யாரும்  குடியிருப்பதில்லை. ஆளவந்தாரும் அரங்கனை திருவடிகளாகிய திருப்பாதங்கள் இருக்கும் வாசல் வழியே வந்தே சேவிக்குமாறு தம்மவர்களுக்கு உபதேசித்ததை குருபரம்பரைக் கதைகளில் காணலாம்.


🔹முப்பத்து மூவர் அமரர்க்கு பாசுரத்தில், ஸ்ரீகோதை ஆண்டாள் தேவர்கள், தங்களுக்கு காரியம் ஆக வேண்டி கண்ணனிடம் வருவதைக் குறிப்பில் சொல்லி, கோபியருக்கோ கண்ணனைத் தவிர வேறொன்றும் தேவையில்லை என்கிறாள். இப்பாசுரத்தில், பூவுலகச் சக்ரவர்த்திகளும் தேவர்களை போலத் தான் என்று குறிப்பில் உணர்த்துகிறார்.


🔹 திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல்  ஆண்டாள், பரமனின் கண்களில் ஒரு சேரக் காணப்படும் குளிர்ச்சியையும், வெப்பத்தையும் பற்றிச் சொல்வது, அடியவரைக் காப்பவனாகவும், அதே நேரம் பகைவர்க்கு நெருப்பாகவும் விளங்கும் பரமனின் தன்மையைச் சொல்வதாம்.   இதைத் தானே, "முப்பத்து மூவர்" பாசுரத்திலும் செப்பமுடையாய்! திறலுடையாய் என்று ஆண்டாள் போற்றிப் பாடுகிறாள்.


🔹முதல் பாசுரத்தில் வரும், "கதிர்மதியம் போல் முகத்தான்" என்ற பதமும் பரமனின் இந்த இருநிலைத் தன்மையையே குறிக்கிறது! நம்மாழ்வாரும்,

உளனென இலனென அவை குணமுடைமையில்

உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே  என்று திருவாய்மொழியில்    (1-1-9) அருளியிருக்கிறார்!


🔹அங்கண் இரண்டும் கொண்டு நோக்குதியேல்

கோபியர் பரமனை இரு கண்களைக் கொண்டு தங்களை பார்க்கச் சொல்வதிலும் ஒரு உள்ளர்த்தம் உள்ளது. அவர்கள் அவனது பரிபூர்ண அருளை வேண்டி நிற்கின்றனர், "குளிர்ச்சியான கண்" ஞானத்தை பெருக்க வல்லது; "வெப்பம் தரும் கண்" அஞ்ஞான இருளை விலக்க வல்லது!


சீற்றத்தோடருள் பெற்றவன்’ என்கிறார் ஸ்வாமி நம்மாழ்வார்.(திருவாய்மொழி 3-6-6). ஹிரண்யன் பக்கல் சீற்றமும், பிரகலாதன் பக்கல் வாத்சல்யமும் காட்டியவர், தங்கள் பாபத்தை ஒரு கண்ணாலும்,  தாபத்தை மற்றொரு கண்ணாலும்  தீர்க்கச் சொல்கிறாள்.


🔹இந்த 22ம் பாசுரத்தில் எல்லாரும் துயிலெழுந்து விட்டனர். ஆனால், பரந்தாமனாகிய ஸ்ரீகண்ணபிரான் இன்னும் துயிலெழவில்லை! அடுத்த 23ம் பாசுரத்தில்  தெளிவாக உறக்கம் விட்டு எழுந்து கொள்ளப்போகிறான்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

அடியேன்,

No comments:

Post a Comment