திருப்பாவை பாசுரம் 15
(எல்லே இளங்கிளியே)
பத்து அடியவர்களை எழுப்பும் வகையால் அமைந்த 6 முதல் 15 வரையிலான பாசுரங்களில் இதுவே இறுதியான பாசுரம். முந்தைய பாசுரங்களில் இருந்து சற்றே இப்பாசுரம் மிகவும் ஆழமான உட்பொருள் கொண்டது. திருப்பாவையில் திருப்பாவை என்று இப்பாசுரத்தை வைணவ பூர்வாச்சார்யர்கள் கொண்டாடுகின்றனர்.
தோழியருக்கும் அப்போதுதான் துயிலெழுந்த, விவரம் அறிந்த ஒரு கோபிக்கும் இடையேயான சுவாரசியமான உரையாடல் வடிவில் அமைந்துள்ள பாசுரமிது.
இதுவரை வந்த பாசுரங்களில், ஒவ்வொரு இடைச்சியை எழுப்பும்போதும், வெளியிலே இருந்து எழுப்புகிறவர்கள் சொல்வது மட்டும் பாசுரத்தில் இருக்க, உள்ளே இருக்கும் பெண் பேசுவதை யூகிக்குமாறு விட்டு விடுகிறாள். ஆனால் இந்த பாசுரத்தில் உள்ளே இருப்பவள் பேசுவதும், வெளியே இருப்பவர்கள் பேசுவதும் விளங்கும்படியாக, உரையாடல் வடிவில் அமைந்திருக்கிறது.
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதர்கின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்,
வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக் கொள்,
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
பாசுர விளக்கம்;
சென்ற பாடல் வரை ஆண்டாள் இடைச்சியரை துயிலெழுப்பிக் கொண்டிருந்தாள். முதல் முறையாக இப்பாடலில் உறக்கம் விட்டெழுந்த இடைச்சியாகிய தோழி ஒருத்தியுடன் ஆண்டாளும் தோழியரும் உரையாடுவதைக் காணலாம். (தோழியர், கோபி என்றே குறிப்பிடுவோம்)
தோழியர்:
(எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!) இளங்கிளி போல பேச்சுடையவளே! இன்னமும் உறங்குகின்றாயோ?”
கோபி: (சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்!). அறிவார்ந்த என் தோழிமாரே! 'சில்' என்று ஆரவாரித்து என்னைக் கூப்பிட வேண்டாம். இதோ வந்து கொண்டே இருக்கிறேன்"!
தோழியர்:
(வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்.) உன் வாய்ப்பேச்சைக் கேட்பதற்கு நாங்கள் வரவில்லை.
திறம்பட நீ உதிர்க்கும் உறுதிமொழிகளையும் உன் பேச்சு திறனையும் நாங்கள் வெகு காலமாகவே அறிவோமே!
கோபி:
(வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!). நீங்கள் தான் பேச்சுத் திறனுடையவர்கள்! சரி விடுங்கள், நீங்கள் கூறியபடி நானே வாயாடியாக இருந்து விட்டுப் போகிறேன்!
தோழியர்:
(ஒல்லை நீ போதாய்) விரைவாகத் தயாராகி எங்களுடன் சேர்ந்து கொள்!
கோபி: (உனக்கென்ன வேறுடையை) உங்களுக்கு வேறு வேலையில்லையா?
(எல்லாரும் போந்தாரோ?) அது இருக்கட்டும். எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா?
தோழியர்: (போந்தார் போந்தெண்ணிக் கொள்) வந்துவிட்டார்கள். (சந்தேகமிருந்தால்) நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள்வாய்! (அப்படியாவது வெளியே வருவாள் அல்லவா?)
(வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்) கம்சனின் மாளிகையின் வாசலில் தன்னை மிதித்தழிக்கக் காத்திருந்த குவலயாபீடம் எனும் யானையைக் கொன்று, கம்சன், சாணூரன், முஷ்டிகன் ஆகிய பகைவர்களின் அகந்தையை அழித்தவனும், மாயச்செயல்கள் புரிந்து நம்மை ஆட்கொள்பவனுமான கண்ணனின் புகழைப் பாட விரைவில் எழுந்து வருவாயாக!]
பாசுர விசேஷம்:-
பெரியோர் இப்பாசுரத்தை திருப்பாவையிலும் திருப்பாவை என்று போற்றுவர். அதற்கு முக்கியக் காரணம், நானேதான் ஆயிடுக என்ற வாக்கியமாம். இதற்கு ஆழ்ந்த உட்பொருள் உள்ளது.
குற்றம் செய்த ஒருவனிடம் அவன் செய்த குற்றத்தைச் சுட்டிக்காட்டும் போது, அவன் அதை மறுத்ததோடல்லாமல், குற்றம் செய்யாத வேறொருவன் மீது பழி சுமத்துவானேயாகில், அவன் அதமாதமன் (மிகமிக கீழ்த்தரமானவன்). தான் செய்யவே இல்லை என்று குற்றத்தை மறுத்தால் அவன் அதமன் (கீழ்த்தரமானவன்). தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்பவன் மத்யமன் (நடுத்தரமானவன்). தான் செய்யாத குற்றத்தையும் (சில காரணங்களினால், குற்றவாளிக்குக் கருணை காட்டி) தானே செய்ததாகக்கூறுபவன் உத்தமன் (மிக உயர்ந்தவன்). செய்யாத குற்றத்தை, மற்றவர் தம்மீது சுமத்தினால், ஏற்றுக்கொள்வது ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம்.
எளிமையாகச் சொன்னால், இல்லாத குற்றத்தை ஒருவர் நம் மீது சுமத்தும்போது கூட, அதை மறுக்காமல் நமது குற்றமென்று இசைவதே ஒரு வைணவனின் குணமாகும் என்ற தாத்பர்யத்தை இந்த ஒரு வாக்கியம் சொல்லி விடுகிறது!
இதற்கு முன்னால் வந்த ஒன்பது துயிலெழுப்பும் பாசுரங்கள் போல் அல்லாமல், இப்பாசுரம் உரையாடல் நடையில் பாடப்பட்டு, மிக சுவையாக, பாகவத கைங்கர்யம் (அடியார் சேவை) பகவான் சேவையினும் சிறந்தது என்பதை வலியுறுத்துகிறது.
பகவத் சேவையும், அவனது திருவடியில் சரணடைதலும் சிற்றம் சிறுகாலே வந்துன்னை சேவித்து என்று திருப்பாவையின் இறுதியில் (29வது பாசுரத்தில்!) தான் ஆண்டாளால் கொண்டாடப்படுகிறது. அதற்கும் முன்னாலே இந்த 15வது பாசுரத்திலேயே, கோதை நாச்சியார் பாகவத சேவையைக் கொண்டாடி, சரணாகதித்துவத்தில் பாகவத சேவையின் உன்னதப் பங்கை சொல்லி விடுகிறார்!.
இந்தப் பாசுரம் பாகவத தாஸ்யம் (ஆண்டவனின் அடியார்க்கு அடியார்) பற்றிச் சொல்வதாகவும் , இருபத்தொன்பதாம் பாசுரம் பகவத் தாஸ்யம் (ஆண்டவனின் அடியார்) பற்றிச் சொல்வதாகவும் அமைந்திருக்கின்றன. இறைநெறியில் சேர்ந்தும், சம்சாரத்தில் சிக்கித் தவிக்கும் அடியவர்களுக்கு, இறைவனை அடைந்து பேரின்பம் பெறுவதற்கு ஏற்ற எளிய வழி "இறையடியார்களுடன், ஒன்றாய்க் கூடி, இறையடியார் சரிதங்களைக் கேட்டு, இறை நாமங்களைச் சொல்லி, இறைவனின் இயல்புகளைப் போற்றிப் பாடி, சரணம் புகுதலே" என்பதை ஆசிரியர் வாய் மொழியாகக் கூறும் விதத்தில், ஒரு விளக்கம் சொல்கிறார்கள்.
திருப்பாவையின் முப்பது பாசுரங்களின் சாராம்சம் இந்த 15ம் மற்றும் 29ம் பாசுரத்தில் அடங்கியுள்ளன, என்பது பூர்வாச்சாரியரின் வாக்கு. முப்பது பாசுரமும் தினமும் அனுசந்திக்காவிடினும், இந்த இரண்டு பாசுரங்களையாவது அனுசந்திக்க வேண்டும் என்பது பெரியோர் வாக்கு.
நாளை பதினாறாம் பாசுரத்தை அனுபவிப்போம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்.
அடியேன்,
No comments:
Post a Comment