Popular Posts

Wednesday, 25 December 2024

திருப்பாவை பாசுரம் 03

 *திருப்பாவை பாசுரம் – 03*

முதல் பாசுரத்தில் எம்பெருமானின் பர ஸ்வரூபமும், இரண்டாம் பாடலில் வ்யூஹ ஸ்வரூபமும் சொல்லப்பட்டது. இந்த மூன்றாம் பாசுரத்தில் விபவ ஸ்வரூபம் சொல்லப்படுகிறது. இப்போது பாசுரத்தை அனுசந்திப்போம்.


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து

ஓங்குபெருஞ் செந்நெ லூடுகய லுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி*_

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!


*பாசுர விளக்கம்:*

மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி நாம் நோன்பிற்கு நீராடினால் நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும். அதனால் செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும். அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள் வள்ளலைப்போல் குடம் குடமாக பாலை நிறைக்கின்றன. "ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீராடி நோன்பிருந்து இத்தகைய செல்வங்களை எந்த நாளும் விட்டு நீங்காமல் பெற்று நிறைவோம்" என்று ஆண்டாள் பாடுகிறாள்.]     


தங்கள் நோன்பாலே பலிக்கும் பலன் இப்பாட்டில் சொல்லப்படுகிறது. முதற்பாட்டில் 'நாராயணனே' என்று ஸ்ரீவைகுண்டத்திலிருப்பு அனுபவிக்கப்பட்டது. இரண்டாம் பாட்டில் அவதாரம் செய்வதற்காகத் திருப்பாற்கடலில் சாய்ந்தருளின பரந்தாமனின் கிடைக்கை சொல்லப்பட்டது. மூன்றாவதான இப்பாட்டில் திருவிக்கிரமனாக அவதரித்து திருஉலகளந்தருளின விருத்தாந்தத்திலே ஈடுபடுகிறார்கள்.


*பாசுர விசேஷம்:*

1)  முதல் பாசுரத்தில் வைகுந்தநாதனான நாராயணனையும், 2வது பாசுரத்தில் பாற்கடலில் பையத்துயின்ற பரமனான வியூக மூர்த்தியையும் போற்றிப் பாடிய ஆண்டாள், இப்பாசுரத்தில் ஓங்கி உலகளந்த உத்தமன் ஆன விபவ அவதார மூர்த்தியைப் பாடுகிறாள்! அந்த உத்தமன், உலகளந்ததை இவர்களுக்கு உபகாரம் செய்ததாக எண்ணாமல், தன் பேறாக நினைத்திருப்பவன்.


அந்த உத்தமனை இப்படி வரையருக்கிறாள் கோதை.

ஒரு ப்ரயோஜனமுமில்லாமல் பரஹிம்சை செய்பவன் அதமாதமன். பரஹிம்சையினால் வயிறு வளர்ப்பவன் அதமன். "பிறரும் ஜீவிக்க வேணும் தாமும் ஜீவிக்க வேணும்" என்றிருக்குமவன் மத்யமன். தன்னை  அழித்தாவது பிறர்க்கு உதவுபவன் உத்தமன்.


ஸகலபலப்ரதனான இவன் தன் ஸ்வரூபத்தை அழித்து யாசகனாக மாறித் தன்னையடைந்தார்க்கு உதவினானாகையால் இவனே உத்தமனெனத் தகுந்தவன்.

ந தே ரூபம் ந  சாகாரோ நாயுதாநி ந சாஸ்பதம்|

[உன்னுடைய ஸ்வரூபமும், திவ்யமங்கள விக்ரஹமும், ஆயுதங்களும், இருப்பிடமும் உனக்கல்ல; பக்தர்களுக்காகவே!]

என்றல்லவோ ஜிதந்தே ஸ்தோத்திரத்தில் சொல்லப்பட்டது.


ஆண்டாள் நாச்சியார் இப்பாசுரத்தில், "உத்தமன் பேர் பாடி" என்று கூறுவது, பெருமாளின் புகழைப் பாடுவதை விட, அவனது திருநாமத்தைப் (அஷ்டாட்சர மந்திரம்) பாடுதல் தான் சிறந்தது என்ற உள்ளர்த்தத்தை உடையது!


2) முதல் பாசுரத்தில், அஷ்டாக்ஷர மந்திரத்தையும், இரண்டாவது பாசுரத்தில் த்வய மந்திரத்தையும் கொண்டாடிய ஆண்டாள், இம்மூன்றாம் பாசுரத்தில், சரம சுலோகத்தின் (மாம் ஏகம் சரணம் வ்ரஜ - மோக்ஷயிஷ்யாமி மாசுச ஹ) செய்தியை முன்னிறுத்துகிறாள் எனவும் பொருள் கூறுவர்.


3).நிலம் செழித்து, மக்கள் நலமுடனும், செழிப்படைந்து, மகிழ்ச்சியுடனும் வாழ மழை எவ்வாறு பொழிய வேண்டும் என்பது பற்றி அழகாக இப்பாசுரத்தில் *தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து* என்று சொல்லப்பட்டுள்ளது. 9 நாட்கள் வெயில், 1 நாள் மழையென (ஒரு மாதத்தில்)  மூன்று நாட்கள் "மழை" பெய்ய வேண்டும் என்பது கருத்து.


4) *மும்மாரி* என்பது மூன்று வகைப்பட்ட பகவத் காரியங்கள் வாயிலாக, நோன்பின் சரணாகதிப் பலனை பெற முடியும் என்பதை வலியுறுத்துகிறது. அதாவது,

அ) ஆச்சார்ய உபதேசம்

ஆ) திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைப் பாடுதல்

இ) திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனை வழிபடுதல்.


5) *ஓங்கு பெருஞ்செல்நெல் ஊடுகயல் உகள* 

இங்கு செந்நெல் என்ற  சொல்லுக்கு P.B.A ஸ்வாமிகள் அளிக்கும் விளக்கம்.

நெல்லில் மூன்று பகுதிகள் உண்டு. அரிசி, தவிடு, உமி என்பவை. இவை முறையே ஜீவாத்மா, ஸூக்ஷ்ம சரீரம்,  ஸ்தூல சரீரம் எனக்கொள்ள வேண்டும். 

உமி = ஸ்தூல சரீரம்; தவிடு = ஸூக்ஷ்ம சரீரம்; அரிசி = ஆத்மா.  

உத்தமன், தன் ஸ்தூலத்தை இங்கே கழித்து, சூக்ஷ்மத்தை விரஜையில் கழித்து எம்பெருமானுக்கு அன்னமாகிறான்

6). "பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப" என்பதில் சொல்லப்படும் வண்டு, அடியவர் நெஞ்சத்தில் (யோக நித்திரையில்) உறைந்திருக்கும் வைகுந்தப் பெருமானைக் குறிக்கிறது.


7). *வள்ளல் பெரும்பசுக்கள்*

தயாள குணம் உடைய, பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காத ஆச்சார்யர்களைக் குறிக்கிறது.


8) *நீங்காத செல்வம்* என்பது (திருமகளின் பரிந்துரையின் பேரில், அடியவர்க்கு பெருமாள் அருளும்!) பூவுலகில் வாழும் காலத்தில், குன்றாத ஞானத்தையும், அதன் பலனால் கிட்டிய மோட்ச சித்தியையும் குறிக்கிறது. ஏனெனில், மற்ற எல்லா செல்வங்களும் நீங்கக் கூடிய செல்வங்கள் ஆகும் என்று பொருள் கூறுவர்.


கண்ணன் மீதான பக்தியானது இப்படியான வளங்களையும், நீங்காத செல்வங்களையும் நமக்குத் தருமாம். நீங்காத செல்வம் என்று ஆண்டாள் குறிப்பிடுவது, வாழ்க்கையின் சுகபோகங்களை மட்டுமல்ல, நிறைவானதும் அதற்கு மேல் எதுவும் இல்லாததுமான "கண்ணனின் திருவடிகள் என்னும் செல்வத்தையே" ஆண்டாள் நீங்காத செல்வம்" என்று சிறப்பித்துக் கூறுகிறாள்.


நான்காம் பாசுரத்தை நாளை அனுபவிப்போம்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்,

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்.

அடியேன்,

No comments:

Post a Comment