Popular Posts

Wednesday, 25 December 2024

திருப்பாவை பாசுரம் 04

 *திருப்பாவை பாசுரம் 04*

திருப்பாவை மூன்றாவது பாசுரத்தில், 'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து' என்று ஆண்டாள் பாடி இருக்கிறாள். பயிர்களுக்கும் உயிர்களுக்கும் எந்த ஒரு துன்பமும் விளைவிக்காமல், மழை பெய்யவேண்டும் என்றும் வேண்டுகிறாள். அந்த மழை வளத்தைத் தந்தருளுமாறு கிருஷ்ணனை வேண்டுகிறாள். மார்கழி நீராட நீர்நிலைகளில் நீர் இருந்தால்தான் முடியும். அந்த நீர் வளத்தைத் தருவது மழைவளம்.  அந்த மழைவளத்தைத் தருபவன் வருணதேவன். அந்த வருணன் மழைவளம் தரவேண்டும் என்று  கிருஷ்ணரிடம் ஆண்டாள்  பிரார்த்திக்கிறாள்.


மழைக்கு அதிபதியாக நாம் வருணதேவனைக் குறிப்பிட்டுச் சொன்னாலும், அந்த வருணனும் கண்ணனின் ஆணைக்குக் கட்டுப்பட்டவன்தான்.  எனவே, ஆண்டாள் கண்ணனையே மழை வளம் தரக்கூடியவனாக அழைக்கிறாள். இப்போது பாசுரத்தைப் பார்ப்போம்.


ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்

பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

[மழைக்கு அதிபதியான வருணனே, நீ சிறிதும் ஒளிக்காமல் (கைகரவேல்) நடுக்கடலில் (ஆழியுள்) புகுந்து அங்கிருந்து நீரை மொண்டு (முகந்து), மேலே ஆகாயத்தில் ஏறி எல்லாவற்றிற்கும் ஆதி காரணமான இறைவனின் உருவம் போல் கறுத்து, அழகிய தோள்களையுடைய பத்மநாபன் கையில் மின்னும் சக்கரம் (ஆழி) போல் மின்னலடித்து, சங்கு (வலம்புரி) போல் ஒலித்து, சார்ங்கம் என்னும் வில்லிருந்து புறப்படும் அம்புகள் போல், உலகினர் மகிழ நாங்களும் மார்கழி நீராடி மகிழ மழை பொழிவாயாக.]    


ஸ்ரீமன் நாராணன் கிருஷ்ணனாய்ப் பிறந்து இவர்களுக்கு கையாளாய் கிடக்கிறபடியைக் கண்டான் வருணதேவன். "இவர்களுக்குக் கைங்கர்யம் செய்து  நாமும் நம் ஸ்வரூபத்தைப் பெறுவோம்" என்று நினைத்து "நான் உங்களுக்குச் செய்ய வேண்டியது என்ன?  என்று கேட்டான். அவன் செய்யவேண்டிய காரியத்தை இந்த பாட்டில் ஆண்டாள் கோஷ்டியினர் கூறுகிறார்கள். பகவத் ஸம்பந்தமுள்ளவர்களை தேவர்களும் மதித்து நடந்துகொள்கின்றனர்.

ஸர்வேsஸ்மை  தேவா பலிமாவஹந்தி

[இந்த ப்ரஹ்மஞானிக்கு எல்லா தேவர்களும் காணிக்கை செலுத்துகின்றனர்;] என்றும்

யஸ்த்வைவம் ப்ராஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸந் வசே

[ப்ரஹ்ம ஞானியான ஒருவன் இம்மாதிரி உன்னையறிந்தானாகில் அவனுக்கு எல்லா தேவர்களும் வசப்படுகிறார்கள்.] என்றும் வேதம் சொல்கிறதல்லவா?


ஒருமுறை ஸ்வாமி கூரத்தாழ்வானை ஒருவர் "மற்ற தெய்வங்களைக் கண்டால் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்" என்று கேட்க "சாஸ்திர வ்ருத்தமாக கேளுங்கள்! உங்களைக் கண்டால் மற்ற தெய்வங்கள் எப்படி நடந்து கொள்ளும், என்றல்லவோ நீவிர் கேட்கவேண்டுவது” என்று  பதிலுரைத்தாராம்.


*பாசுரச் சிறப்பு*

ஆழி மழைக்கண்ணா! என்று பர்ஜன்ய தேவனான வருணபகவானை அழைக்கிறாள். இந்த இடத்தில் அவனை அழைத்துப் பாடியதற்கு, ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசார்யர்கள், பர்ஜன்யனான வருண தேவனைப் பாடுவது போல், அவனுக்குள்ளே உள்ள 'அந்தர்யாமி'யான கண்ணனைத்தான் கோதை ஆண்டாள் குறிப்பிடுகிறாள் என்பர். இதன் மூலம் இப்பாசுரத்தில் திருமாலின் ஐந்து நிலைகளில் ஒன்றான "அந்தர்யாமித்வம்" சொல்லப்பட்டுள்ளது என அறியலாம்..


பகவத் கீதை [அத் 10 ஸ்லோ 29] யில் நானே வருணன் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். 

अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहम् ।*

पितॄणामर्यमा चास्मि यमः संयमतामहम् ॥*  (१०- २९)

அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் வருணோ யாத³ஸாமஹம் |

(நாகங்களில் நான் அனந்தன்; நீரைக் கட்டுப்படுத்தும் தேவனாக நான் வருணன்;)


ஸ்ரீகோதை ஆண்டாள் இந்தத் திருப்பாவை நான்காம் பாசுரத்தில் 11 முறை 'ழ'கரத்தைப் பயன்படுத்தியிருக்கிறாள். இப்பாசுரத்தில், தமிழுக்கே சொந்தமான "ழ" என்ற எழுத்து "ஆழி (3 தடவை) மழை (2 தடவை), ஊழி, பாழியம், தாழாதே, வாழ, மார்கழி, மகிழ்ந்து" என்று 'ழ'கரம் பதினோரு முறை வருவதைக் காணலாம்.

ஆண்டாளின் தந்தையார் பெரியாழ்வார் தனது ஒரே பாசுரத்தில் 10 முறை தமிழ் மொழியின் சிறப்பு மிகுந்த எழுத்தான , 'ழ'கரத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

[பெரியாழ்வாரின் "குழல் இருந்து" என்று தொடங்கும் 285-வது பாசுரத்தில்

"ழ"கரம் பத்து முறை வருகிறது.]


ஆர்த்தேறி என்பதற்கு பூர்வாசார்யர்கள் ‘இராமடம் ஊட்டுவார்போலே!’ என்கிறார்கள். அதாவது அந்த காலத்தில் பிள்ளைகள் வீட்டில் கோபித்துக்கொண்டு ஊர்க்கோடியில் சத்திரங்களில் போய் படுத்துக் கொள்ளுமாம். இரவில் வீட்டிலிருப்போர் பிள்ளைகள் பசி பொறுக்காதே என்று இரங்கி அன்னத்தை கையில் எடுத்துக்கொண்டு முக்காடிட்டு சத்திரங்களுக்கு சென்று குரலை மாற்றிக்கொண்டு ‘அன்னம் கொணர்ந்துள்ளோம்’ என்று ஆர்த்து கூவி அழைத்து அந்த பிள்ளைக்கு அடையாளத்தைக் காட்டிக்கொள்ளாமல் ஊட்டுவர்களாம்.  அதே போல் பர்ஜன்ய தேவனும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் எல்லோருக்கும் உணவளிக்கிறான்! என்பர்.


"நீரின்றி அமையாது உலகு" என்று திருவள்ளுவர் சொல்லிய படி மழை இல்லையேல் உலகம் இல்லவே இல்லை. இந்த பூமிதோன்றிய ஐந்து பில்லியன் வருடத்தில் முதல் ஒரு பில்லியன் வருடத்தில் பாதி நாள் மழைதான் பெய்ததாம். மழை பெய்து, பெய்து பூமி குளிர்ந்து போய், கடல் உருவாகி அக்கடலில் முதல் உயிர்வித்து தோன்றியிருக்கிறது. இம்மழை இல்லையேல் உலகில் உயிரே தோன்றியிருக்காது.


நாளை ஐந்தாம் பாசுரத்தை அனுசந்திப்போம்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்,

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்.

அடியேன்,

(பி.கு) 

இந்தப் பாசுரத்துக்கு விளக்கம் எழுதும்போது, வேறு ஒரு ஒப்பீடும் மனதில் தோன்றியது. அதை உங்களுடன் ஒரு இணைப்பதிவாக பகிர்ந்து கொள்கிறேன்.


அடியேன்,

No comments:

Post a Comment