Popular Posts

Sunday, 29 December 2024

திருப்பாவை 12

 *திருப்பாவை பாசுரம் 12*


இன்றைய பாசுரத்தில், கண்ணனையே அண்டியிருந்த இடையன் ஒருவனை குறிப்பிட்டு சொல்கிறாள் ஆண்டாள். இந்த கோபாலன் கண்ணனுக்கு தொண்டு செய்வதில் – கைங்கர்யம் செய்வதில் மிகவும் ஆவல் கொண்டு அதிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறான். இவன் தன்னுடைய சொத்தான பசுக்களை மேய்ப்பது, பால் கறப்பது போன்ற காரியங்களை சரிவர செய்வதில்லை. ஸ்வதர்மத்தை சாமான்யமாக கொண்டு அதை விட்டு, கிருஷ்ணனுக்கு தொண்டு செய்வதை விசேஷ தர்மமாக பிடித்துக் கொண்டிருக்கிறான். கைங்கர்யஸ்ரீ எனும் செல்வத்தைப்பெற்ற நற்செல்வன் தங்காய்! என்று அவனுடைய தங்கையை எழுப்புகிறாள் ஆண்டாள்.


கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி,

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர,

நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்,

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற,

மனத்துக் கினியானை பாடவும் நீ வாய் திறவாய்!

இனித்தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்,

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.

[பால் கறப்பார் இன்றி, இளங்கன்றுகளுடைய எருமைகளின் முலைக்காம்புகள் கடுத்து, அவை தங்களது கன்றுகளை நினைத்த மாத்திரத்தில், அவற்றின் முலைக்காம்புகளின் மூலம் பால் இடைவிடாது சுரந்து, வீட்டின் தரை ஈரமாகி, அதனால் வீடெங்கும் பாலும் மண்ணும் கலந்து சேறாகியிருக்கும் இல்லத்துக்குத் தலைவனான பெருஞ்செல்வனின் தங்கையே!

பனி எங்கள் தலையில் விழுவதை பொருட்படுத்தாமல், உன் மாளிகையின் வாசற்காலைப் பற்றி நின்ற வண்ணம், (சீதாபிராட்டியை தன்னிடமிருந்து பிரித்ததால்) பெருங்கோபம் கொண்டு, இலங்கை வேந்தன் ராவணனை மாய்த்தவனும், நம் உள்ளத்துக்கினியவனும் ஆன ஸ்ரீராமபிரானின் திருப்புகழை நாங்கள் பாடிக் கொண்டிருப்பதை கேட்டும் நீ ஏதும் பேசாதிருக்கலாமா! இப்போதாவது விழித்தெழுவாய்! ஊரில் உள்ளோர் அனைவரும் எழுந்து விட்ட பின்னரும் நீ பெருந்தூக்கத்தில் இருக்கலாமா! உன் ஆழ்ந்த உறக்கத்தின் பொருள் தான் என்ன?]

*பாசுர உள்ளுரை:*

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி -

இங்கு எருமை கருணை மிக்க (தன்னிடம் உள்ள ஞானத்தை வாரி வழங்கும்) ஆச்சார்யனைக் குறிப்பில் உணர்த்துகிறது. கன்றுகள் ஞானப்பாலால் உய்வு பெறும் சீடர்களைக் குறிக்கிறது.

முலைவழியே நின்றுபால் சோர - எருமையின் நான்கு முலைக் காம்புகளிலிருந்து வெளிப்படும் பாலானது, நான்கு வேதங்களின் சாரத்தைக் குறிப்பது என்பது இதன் உட்பொருளாம். இதையே, சுருதி, ஸ்மிருதி, பஞ்சராத்ரம், திவ்ய பிரபந்தம் என்ற நான்கை கற்றுணர்ந்து கிடைத்த ஞானமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

மனத்துக்கினியானை - 

கோகுலத்து கோபியர் கண்ணனைக் காணும் பெரும்பேறு பெற்றவர்கள். அதனால், அவர்களுக்கு கண்ணபிரான் ("கண்ணுக்கினியவன்"  ஆவான்:) ஆனால், ஸ்ரீராமபிரானை (ராம அவதாரம் முடிந்து விட்டபடியால்!) கோபியரால் நினைக்க மட்டுமே முடியும், அதனாலேயே அவர்களுக்கு சக்ரவர்த்தி திருமகன் "மனத்துக்கினியவன்" ஆகின்றான் என்று அபினவ தேசிகன் சுவாமிகள் கூறுவார்.


சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான் என்கிறாள். ஆண்டாள் இங்கே ராமனைப் பாடியதற்கு சிறப்பான அர்த்தங்களை பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள்.


கண்ணன் அவன் மீது ப்ரேமை கொண்ட கோபிகைகளை காக்க வைத்து, நிர்தாட்சண்யமாக ஏங்க வைத்து இரக்கமின்றி அலைக்கழிக்கிறான். ஆனால் ராமனோ, அவன் தாய் கெளசல்யை ஆகட்டும், சீதை ஆகட்டும், கைகேயி, சூர்ப்பனகை என்று எல்லோரிடமும் கருணை காட்டினான். அவர்களனைவரையும் மதித்தான்.

 கண்ணனைப்போல், ஆஸ்ரித விரோதிகளை வதம் பண்ணுவதில் ராமனும் மிகுந்த வேகம் கொண்டவன். அதனால் சினத்தினால், என்று அவனும் சினங்கொண்டு அழிக்கக்கூடியவன். சக்தியும் உண்டு. கருணையும் உண்டு. ஆகவே அவனைப் பாடுவோம் என்றார்களாம்.

இலங்கைக் கோமான் - என்று சொல்லும்போது, ராவணன் சக்தியை நினைத்துப்பார்க்கிறாள். ராவணன் மூன்றரைக்கோடி ஆண்டுகள் வாழ்ந்ததாக இதிகாசம் சொல்லும். அதிலும் அவன் தவமியற்றி சிவபெருமானை தரிசிக்கும் அளவுக்கு சிறந்த சிவபக்தன். நவக்கிரகங்களையும் காலில் போட்டு மிதித்தவன். குபேரனின் ஐஸ்வர்யத்தை கொள்ளை அடித்து அவனை துரத்தியவன். இப்படி தன் பலத்தால் பல பெருமைகள் கொண்டும், அகந்தையால் அழிந்தான். சிவபெருமானையே அசைத்துப்பார்க்க நினைத்து "சிவபெருமானின் கால் விரலுக்கு ஈடாகமாட்டோம் நாம்" என்பதை அவன் அறிந்தும் அகந்தையை குறைத்துக்கொள்ளவில்லை. ராமன் வந்து நிராயுதபாணியாக நிறுத்தி உயிர்ப்பிச்சை கொடுத்தும் அவனுக்கு அகந்தை போகவில்லை.


ராமன் ஏன் அவனை ஒரே பாணத்தில் கொல்லவில்லை?, அவனுக்கென்ன கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதில் ஒரு குரூர திருப்தியா? என்றால், அப்படியல்ல… இப்போதாவது திருந்துவானா என்று ஒவ்வொரு சண்டையிலும் அவனுக்கு சந்தர்ப்பம் கொடுத்து சரணாகதி செய்ய நேரம் கொடுத்துப்பார்க்கிறான் ராமன். அப்படியும் திருந்தாமல் வணங்காமுடியாகவே அழிந்தாலும், சிறந்த வீரன் என்ற காரணத்தால், கோமான் என்று குறிப்பிடுகிறாள்.


இது இராமாவதார செய்தி சொல்லும் 2வது பாசுரம். யோக பஞ்சகத்தின் கீழ் அமைந்த இப்பாசுரத்தில் கர்மயோகம் பற்றிச் சொல்லப்படுகிறது.


அவரவர்க்கு விதிக்கப்பட்டிருக்கும் கர்மங்களை, கடமைகளை (நித்ய நைமித்திக போன்றவைகளை) எந்தவித சுயநலமும் கருதாமல், நான் செய்கிறேன் என்ற அகந்தையில்லாமல் , எனக்காகச் செய்கிறேன் என்ற பற்றுதலில்லாமல் (மமதை) இதற்காகச் செய்கிறேன் என்று பலன் கருதாமல் (பேர்,புகழ்,செல்வம்) இறைச் சிந்தனையோடு பலனெதிர் பாராமல், பற்றின்றி செய்வதே கர்மயோகம். இதைத் தொடர்ந்து செய்வதினால், பிறவுயிர்களின் மீது கருணை பிறப்பதோடு, உள்ளத் தூய்மையும் அமைதியும் வாய்த்து, தன்னையும் (ஜீவாத்மா) தெரிந்து கொண்டு , இறைவனையும் (பரமாத்மா ) அடைய முடியும் (வீடுபேறு)!


இந்தப் பாசுரத்தில் இன்னொரு விசேஷம். ஆண்டாள் பசுவுக்கும் எருமைக்கும் உள்ள வேறுபாட்டினை எப்படி உணர்த்துகிறாள் என்று பார்ப்போம்.


ஆண்டாள் மூன்று இடங்களில் பசுவைக் குறிப்பிடுகிறாள்.

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் (பாசுரம் 3)

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து (பாசுரம் 11)

ஏற்ற குடங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப (பாசுரம் 21).

மூன்றிலுமே, சுரப்பது மிகுதியானாலும், கறப்பதனால் (முயற்சியினால்) மட்டுமே நிறைவேறும்.

ஆனால் இந்தப் பாசுரத்திலோ (12) 

கற்றெறுமை கன்றுக்கு இரங்கி நினைத்த உடனே பால் சொரிந்து இல்லம் சேறாக்கும்.


நாமும் பசுக்களைப் போன்றவர்கள். (இடையன் என்னும் ஆச்சார்யனை அடைந்து, அவர் மூலம் முயற்சித்தால் மட்டுமே ஞானம் பெற முடியும்.

ஆனால் இறைவனோ, எருமையைப் போன்றவன். ஒரு உத்தம அதிகாரியான பக்தனை நினைத்த கணமே தன் கருணையைச் சொரிவான்.


நாளை 13ம் பாசுரத்தை அனுபவிப்போம்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்,


அடியேன்,

No comments:

Post a Comment