Popular Posts

Wednesday, 5 June 2024

ஆழ்வார்கள் அவதாரம்

 

Azhwargal Avataram - 1

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

 

ஆழ்வார்கள் அவதாரம் (முன்னுரை)

 

"ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி

தாழ்வாதுமில் குரவர்தாம் வாழி - ஏழ்பாரும்

உய்ய அவர்கள் உரைத்தவைகள்தாம் வாழி

செய்யமறை தன்னுடனே சேர்ந்து"

 

என்று ஆழ்வார்களையும், அவர்கள் அருளிச்செய்த திவ்யப் பிரபந்தங்களையும், மேலும் அவற்றுக்கு உரை (விளக்கம்) செய்த ஆசார்யர்களையும் போற்றி ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களில் ஒருவரான மணவாள மாமுனிகள் என்பவர் தன்னுடைய உபதேசரத்தினமாலை என்னும் பிரபந்தத்தில் (இது, 4000க் கணக்கில் சேராது) போற்றிப் பாடியுள்ளார்.  இதன் எளிய விளக்கமானது,

 

"ஆழ்வார்களுக்குப் பல்லாண்டு; அவர்கள் பாடிய திவ்யப் பிரபந்தங்களுக்குப் பல்லாண்டு; அந்த திவ்யப் பிரபந்தங்களுக்கு விளக்க உரைநூல் செய்த (குரவர்) ஆசார்ய பெருமக்களுக்குப் பல்லாண்டு.  ஏழ்பாரும் உய்ய - ஏழு உலகங்களுக்கும் ஏற்பட்ட நன்மையான விஷயங்கள் இவை.  நான்கு வேதங்கள் எவ்வளவு சிறப்பு பெற்றதோ, அதே சிறப்புடன், அந்த வேதங்களுடன் சேர்ந்து ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப் பிரபந்தங்களும், அதன் விளக்க நூல்களும் ஒளிவீசட்டும்" என்பதாகும். 

 

இப்பேர்பட்ட சிறப்புடன் போற்றப்படும் ஆழ்வார்கள் பிறந்தது எதற்காக ?  ஆழ்வார்களைப் பிறப்பித்து, தன்னைப் பாடவைத்து, அனைவரும் உஜ்ஜீவனம் (நற்கதி) அடையவேண்டும் என்று ஒரு உயர்ந்த சங்கல்பத்தைச் (சிந்தனை) செய்துகொண்டார்  பகவான்.  பகவான் கண்ணனாய் அவதரித்து, வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கவேண்டிய அத்தனை தர்மங்களையும் கீதையை உரைத்தார்.   பகவானின் திருநாவிலிருந்து புறப்பட்ட மங்களமான இந்த ச்லோகங்கள் "ஸ்ரீபகவத்கீதை" என்று போற்றப்படுகிறது.  கண்ணனாய் அவதரித்து எத்தனையோ தர்மங்களை நிலைநாட்டினான் பகவான்; ஆனால், அவை அனைத்திலும் சிறப்பான தர்மம், அவன் அருளிய "ஸ்ரீபகவத்கீதை" ஆகும்.  மண்ணுலகில் பிறந்தவர்கள் கருமத்தின் (புண்ய பாவங்கள்) வசப்பட்டு  மீண்டும் மீண்டும் பிறந்து துன்பத்திற்கு ஆளாகக் கூடாது என்றும், அப்படி, இவ்வுலகத்தோர் பிறவி என்னும் சுழலை அறுத்துக் கொண்டு, தன்னை வந்தடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் கீதையை அருளிச்செய்தார்  கண்ணன் எம்பெருமான்.  வாழ்க்கையில் அனைவரும் கடைபிடிக்கவேண்டிய ஒரு சிறந்த வழியை கீதையின் "சரம ச்லோகத்தின்" மூலம் உரைத்தார் கண்ணன் எம்பெருமான்.  அந்த ச்லோகமானது,

  

"ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ |

அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:||" என்பதாகும்.

(அத்தியாயம் 18, ஸ்லோகம் 66)

 

விளக்கம்:   தர்மங்கள் அனைத்தையும், அதாவது செய்யவேண்டிய கர்மங்கள்                    அனைத்தையும் என்னிடம் அர்ப்பணம் செய்துவிட்டு, ஸர்வ வல்லமை பொருந்திய, எல்லாவற்றிற்கும் ஆதாரமான, என் திருவடிகளைச் சரண் அடைவாயாக!  நான் உன்னைப் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பேன்!  வருந்தாதே! என்று நமக்கு இந்தப் பிறவி என்னும் பெரும் சுழலிலிருந்து விடுதலை அடைவதற்கான உயர்ந்த வழியைக் காட்டியுள்ளான் கண்ணன் எம்பெருமான்.  

மா ஸுச!! அதாவது துன்பப்படாதே என்று நமக்கு தைர்யத்தை அளித்த உயர்ந்தவன் பகவான் கண்ணன்.  ஆனால்,

 

"மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில்லா" (திருவரங்கத்து அமுதனார் என்னும் ஆசாரியர் அருளிய இராமாநுச நூற்றந்தாதி, பாடல் 41) என்பதாய், பகவான் தர்மத்தை நிலைநாட்டவும், சாதுக்களை இரட்சிக்கவும் முன் யுகங்களில் எவ்வளவோ அவதாரங்கள் செய்திருந்தாலும், அப்படி அவன் அவதாரங்கள் செய்து எவ்வளவோ உபதேசங்கள் செய்திருந்தாலும், அவன் அவதாரம் செய்த காலங்களில் வாழ்ந்த சமகாலத்தவர்களில் பெரும்பாலானோர் அவனைத் தங்களில் ஒருவனாகத்தான் கருதினார்களே தவிர, அவனைத் தெய்வரூபமாய் அல்லது தெய்வமாய் அறிய எவரும் முற்படவில்லை.  வெகு சிலரே, த்ரேதா யுகத்தில் வசிஷ்டர், ஜனகர் (சீதையின் தந்தை) போன்றோரும், துவாபர யுகத்தில் பீஷ்மாசாரியார், விதுரர் போன்றோரும்தான் அவனைத் தெய்வம் என்று உணர்ந்தார்கள்; அப்படித் தாங்கள் உணர்ந்ததை மற்றோர்களிடம் உபதேசித்தும் (அறிவுறுத்தியும்) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல்தான் இருந்தார்கள்.  இதனால் மிகவும் வருத்தமுற்றான் பகவான்.  ஆகவே, இதுவரை தான் பிறந்து உபதேசங்கள் செய்தது போதும் என்று எண்ணி, ஆனால், எப்படியாவது உலகத்தாரைத் திருத்தி, நல்வழிப்படுத்த வேண்டும் என்று எண்ணி, சில பேரைத் தோற்றுவித்து, அவர்கள் மூலம் வேத வேதாந்தத தத்துவங்களை உரைக்கும் வகையில் பாடல்களைப் பாடச்செய்து, தனது அவதார மகிமைகளையும், தனது மேன்மையான குணங்களையும் அவர்கள் மூலம் உணர்த்தி, அதன்மூலம், உலகோர் உய்யுமாறு, அதாவது நற்கதி பெறுமாறு செய்ய எண்ணம் கொண்டான்.  அதன் விளைவாக ஏற்பட்ட விஷயமே "ஆழ்வார்கள் அவதாரம் ஆகும்". 

 

இவர்கள் ஏன் ஆழ்வார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்றால், பகவானது திருக்குணங்களில் ஆழ்ந்துபோய், அவன் புகழைப் பாடியதால், இவர்கள் ஆழ்வார்கள் என்று போற்றப்பட்டார்கள்.  அவதாரக் கிரமத்தில் (வரிசையில்) ஐந்தாவது ஆழ்வாராய் அவதரித்தாலும், பன்னிரு ஆழ்வார்களில் தலைவராகக் கருதப்படுபவர் நம்மாழ்வார் ஆவார்.  "உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்" என்று கிருஷ்ண பக்தியில் ஆழ்ந்து உய்ந்தவர் நம்மாழ்வார்.  "கிருஷ்ண கிருஷ்ணா தத்துவம்" என்பது இவ்வாழ்வார் பெற்ற பெருமையாகும்.  அதாவது, "கிருஷ்ண பக்தி" என்ற ஒன்றைச் சித்திரமாக வரைந்து காட்டச்சொன்னால், "நம்மாழ்வாரின்" படத்தை வரைவது பொருத்தமாய் இருக்கும் என்பதே "கிருஷ்ண கிருஷ்ணா தத்துவம்" ஆகும். 

 

பன்னிரு ஆழ்வார்கள் அருளிச்செய்த 4000 திவ்யப் பிரபந்தங்கள் ஒரு காலகட்டத்தில் மறைந்துபோய் ,  பின்னர் அவை அனைத்தையும் நம்மாழ்வார் அசரீரி ரூபத்தில் ஸ்ரீ நாதமுனிகள் என்னும் ஆசார்யருக்கு உபதேசித்து, அவற்றின் அர்த்த விஷயங்களையும் உபதேசித்து அருளினார்.  பின்னர், நாதமுனிகளால் இந்தப் பாடல்கள் அனைத்தும் ராக தாளங்கள் கொண்டு இசைக்கப்பட்டு, எங்கும் பரப்பப்பட்டு, இன்றளவும், திருமால் திருக்கோயில்களிலும், பலரது இல்லங்களிலும் ஓதப்பட்டு வருகிறது.    ஆழ்வார்கள் தாங்கள் பகவானின் புகழைப் பாடினாலும், அது தெய்வத்தின் அருள் என்றே கருதினர்.  "பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி" என்று, பகவானே தன் நாவில் இருந்து கொண்டு, தன் பெருமைகளைப் பாடிக் கொள்கிறான் என்று "திருவாய்மொழி" என்னும் பிரபந்தத்தில் நம்மாழ்வார் உரைத்துள்ளார். 

 

ஆழ்வார்கள் அனைவரும் பகவானிடத்தில் ஆழ்ந்தது, இந்த சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவதற்காகவே.  "சம்சார பந்தம்" என்பது கர்ம பலன்களால் (பாவ புண்ணியங்கள்) ஏற்படும் பிறவி என்னும் சுழற்சி ஆகும்.  "மா ஸுச"!" (துன்பப் படாதே) என்று கண்ணன் எம்பெருமான் கீதையில் உரைத்த வழியை நேரே கடைபித்துக் காட்டியவர்கள் ஆழ்வார்கள்.  தாங்கள் பெற்ற இன்பத்தை, தங்களோடு போக்கடிக்காமல், இவ்வைய்யத்தில் உள்ளோர் அனைவரும் பெறவேண்டும் என்று, பகவானைப் போற்றி, பாடல்கள் பல பாடி நமக்கு நல்லது செய்துள்ளனர்.

 

ஆழ்வார்களின் திருநாமங்களையும் அவர்களின் அவதார தினங்களையும் வைணவ ஆசார்யரான சுவாமி மணவாளமாமுனிகள் தம்முடைய உபதேச ரத்னமாலையில் அழகு வெண்பாவில் அமைத்துத் தந்திருக்கிறார்.

பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை

ஐயனருள்மாறன் சேரலர்கோன் – துய்யபட்ட

நாதன் அன்பர்தாள்தூளி நற்பாணன் நற்கலியன்

ஈதிவர் தோற்றத்தடைவா மிங்கு.

நாளை, முதலாழ்வார்கள் மூவரைப்பற்றி சிந்திப்போம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

அடியேன்,

சந்தான சேகர்.

No comments:

Post a Comment