Popular Posts

Wednesday, 30 July 2025

நான் ரசித்த கம்பன். பாகம் 7

அனுமனின் பெருமை.


சென்ற பதிவில் வாலியின் வீரத்தைப் பற்றிப் பார்த்தோம். வீரம் இருந்தும் விவேகம் இல்லாததால் வாலி வதம் செய்யப்பட்டான். ஆனால் அனுமனோ வீரத்துடன், விவேகமும் பெற்றிருந்ததால் சிரஞ்சீவியானார். இருந்தும் ஒரு கட்டத்தில் அவர் தனது வீரம், பராக்கிரமம் அனைத்தையும் ஒரு ரிஷியின் சாபத்தால் மறந்திருத்தார்.


அனுமனின் குழந்தைப் பருவத்தில், ஒரு முனிவரை கேலி செய்ததற்காக சுதீட்சண முனிவர் அவருக்கு சாபம் கொடுத்தார். அந்த சாபத்தின் காரணமாக, அனுமன் தனது வலிமையையும், ஆற்றலையும் மறந்திருந்தார்.


பின்னர், சீதையைத் தேடி, கடல் தாண்டி இலங்கைக்கு தூது செல்வதற்கு அனுமானே சரியானவர் என்று ஜாம்பவான் தேர்வு செய்த போது, தயங்கிய அனுமனுக்கு அவர் திறமைகளை எடுத்துச் சொல்கிறார். இதைக் கம்பன், ஜாம்பவான் மூலமாக 11 பாடல்களில் விவரிக்கின்றார். ஜாம்பவான் நேரில் விளித்துச் சொல்வதுபோல் அமைந்த பாடல்கள். 

(கிஷ்கிந்தா காண்டம், மயேந்திர படலம், 9 – 19)


மேலை விரிஞ்சன் வீயினும் வீயாமிகை நாளீர்

நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல்தக்கீர்

காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர்

ஆலம் நுகர்ந்தானாம் என வெம்போர் அடர்கிற்பீர்.

(பாடல் 9)

முனிவர் சாபத்தால் தனது வல்லமையையுணராது தயங்கி நிற்கும் அனுமனை ஜாம்பவான் கடல் கடக்குமாறு கூறுதற்பொருட்டுத் துதிக்கின்றார். முதலடி அனுமனின் சிரஞ்சீவித் தன்மையையும் இரண்டாமடி பெருங்கல்வியால் அவன் சொல்வன்மை பெற்றிருப்பதையும், பின்னிரண்டடிகள் மேற்கொண்ட செயலைப் பின்வாங்காது நின்று போர் செய்தாவது முடிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதையும் விளக்கும்; இதனால், எவ்வகையாலும் இறப்பில்லாமல், அரக்கனாகிய இராவணன் ஊருக்குச் சென்று, அவனோடு நயமாகப் பேசி இடையூறு செய்யும் அரக்கர்களையழித்துச் சீதையைக் கண்டு மீளுகின்ற செயலை முடிப்பதற்கு உரியவன் நீயே, என்று குறிப்பாக உணர்த்தினான்.


வெப்புறு செந் தீ நீர் வளியாலும் விளியாதீர்,

செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்,

ஒப்புறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே,

குப்புறின் அண்டத்தப் புறமேயும் குதிகொள்வீர்.

(பாடல் 10)

நீங்கள் இளமையில் சூரியனைக் கனிந்த பழமென்று கருதித் தாவியபோது, இந்திரன் வச்சிராயுதத்தால் அடித்தான்; அதனால் உங்கள் கவுள் (கன்னம்) முறிந்து நீங்கள் மூர்ச்சையுற்தால் வாயுதேவன் சினங்கொண்டு, உலகில் காற்றின் இயக்கத்தையே நிறுத்திவிட்டான். அதனால் பிரமன், சிவன் முதலிய தேவர்களெல்லோரும் தோன்றி அந்த வாயுதேவனை மனங்குளிர்விப்பதற்காகத் தம் தம் படைக் கருவிகளால், நீங்கள் அழியாதிருக்க வரமளித்தனர். மேலும், நெருப்பாலும், நீராலும்,  அழிவில்லை என்றும் வரமளித்தனர். நீங்கள் ஒரே தாவலில் அண்டம் விட்டு அண்டம் தாவக்கூடியவர்.


நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவை தீரச்

சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர்,

வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே,

கொல்லவும் வல்லீர் தோள் வலிஎன்றும் குறையாதீர்.

(பாடல் 11)

நல்லனமட்டுமன்றித் தீயவற்றையும் நாடி, குற்றம் தீரும்வரையில் தீர்வு கூறும் திறம் உங்களிடம் உண்டு. செய்யத்தக்கது எது, என்று ஆராந்து அதை துணிவுடன் செய்யும் ஆற்றல் உடையவர். அக்கரை சென்று, எதிரிகளை அழித்து, மீண்டு வரும் வல்லமை பொருந்தியவர் நீரே என்கிறார்.

(அனுமனிடம் ஒரு சிறந்த அமைச்சனுக்கு உரியனவும், சிறந்த போர் வீரனுக்கு உரியனவுமான அரிய திறன்கள் அமைந்துள்ளமை காட்டப்பெற்றுள்ளது.)


மேரு கிரிக்கும் மீதுற நிற்கும் பெரு மெய்யீர்,

மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர்,

பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர்,

சூரியனைச் சென்று ஒண்கையகத்தும் தொட வல்லீர்.

(பாடல் 12)

உங்கள் உடம்பு வளரவேண்டுமென்று நினைத்தால், மேருமலையைக் காட்டிலும் உங்கள் உடம்பு பெரியதாகும்; அந்த உடம்பை மழைத் துளிகளிடையே செல்லும் அளவுக்கு சிறிதாக, ஒடுக்க விரும்பினால் உங்கள் உடலை அணுவைக் காட்டிலும்  சிரியதாக்கவும் வல்லீர்.

நீங்கள், பூமியையே பெயர்த்தெடுக்கும் வல்லமை உடையவர். மேலே சென்று சூரியனைத்  தொட வல்லவர். தான் பெற்ற வரங்களை தீய வழியில் செலுத்தாதவர். அதனால், பழியில்லாதவர்.


அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறழியாமை,

மறிந்து உருளப் போர் வாலியை வெல்லும் மதி வல்லீர்,

பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க

எறிந்துழி இற்றோர் புன் மயிரேனும் இழவாதீர்.

(பாடல் 13)

வாலி வதத்தில் தர்மம் பிறழவில்லை என்பதற்கு அனுமன் தக்க அறிவுரை கூறியிருக்க வேண்டும், என்பதற்கும் இத்தொடர் சான்றாகிறது. அனுமன் இராமனுடன் சுக்கிரீவனை நட்புச் செய்வித்தவுடனே, முதலில் வாலியை வதைசெய்து, பின்பு சீதையைத் தேடுவது மிகவும், நன்மை தருவது என்று கூறினானாதலால் அவனை “வாலியை வெல்லும் மதிவல்லீர்” என்றும் விளக்கலாம். 

நீங்கள் ஓர் பாலகனாய் இருந்தபோது, சூரியனை ஒரு கனியெனக் கருதி அதனைப் பறித்துண்ண வானில் எழுந்தபோது இந்திரன் உங்கள் மேல் தன் வச்சிரப் படையை ஏவியதை  இமையோர் கோன் வச்சிரபாணம் புக மூழ்க எறிந்துழி  என்றார். ஆனால், அதனால் உங்களுக்கு, ஒரு முடி கூட உதிரவில்லை.


போர்முன் எதிர்ந்தால் மூ உலகேனும் பொருள் ஆகா,

ஒர்வில் வலம் கொண்டு ஒல்கல் இல் வீரத்து உயர் தோளீர்,

பாருலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன்முன்,

தேர் முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர்.

(பாடல் 14)

நீங்கள் சூரியதேவனிடம் வியாகரணம் முதலிய கலைகளைக் கற்க விரும்ப, அவன், தான் எப்பொழுதும் வானவீதி வழியே உலகங்களைச் சுற்றிச் செல்பவனாதலால்,  ஓரிடத்திலிருந்து உங்களுக்கு பாடம் சொல்ல இயலாது என்று கூற, நீங்கள் அவன் எதிர் முகமாய், பின்னோக்கி நடந்து சென்றே பாடங்கேட்டு நவவியாகரண பண்டிதன் ஆனீர்.                                         

நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும்

மாதர் தவம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம்

ஓதி யுணர்ந்தீர் ஊழி கடந்தீர் உல கீனும்

ஆதி அயன்தானே என யாரும் அறைகின்றீர்.

(பாடல் 15)

நீங்கள் நித்தியப் பிரமச்சாரியாதலால், மகளிர் இன்பத்தை மனத்தாலும்  எண்ணாது வளர்ந்துள்ளீர்; நினைவாலு் மாதர்நலம் பேணாது வளர்ந்தீர் என்றும், சிரஞ்சீவி யாதலால் ஊழி கடந்தீர் என்றும், அடுத்த பிரம பட்டத்தைப் பெறக் கூறியவராதலால் ஆதி அயன்தானே யென யாரும் அறைகின்றீர் என்றும் கூறப் பெற்றீர். 


அண்ணல் அம் மைந்தர்க்கு அன்பு சிறந்தீர் அதனாலே,

கண்ணி உணர்ந்தீர் கருமுமம் நுமக்கே கடன் என்னத்

திண்ணிது அமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவு இன்றால்,

புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர்.

(பாடல் 16)

நீங்கள் பெருமையில் சிறந்த அந்த இராம, இலக்குவரிடத்தில் பேரன்புடையவர். அதனால்   சீதையைத் தேடிச்செய்தியறிந்து வருவது உமது கடமையென்று ஏற்றுக் கொண்டீர்.  எனவே அதைச் செய்து முடிப்பீர். புண்ணியம் ஒன்றையே எப்பொழுதும் அழியாமல் நிலைக்கக் கூடிய பொருளென்று  மனத்தில் உறுதியாகக் கருதியிருக்கின்றீர்.

(வானரர் யாவரும் இறப்பதாக இருந்த நிலையில் அதனைத் தடுத்து அனுமன் பின்னுந் தேடுமாறு ஆலோசனை கூறும் பொழுது சீதையுள்ள இடம் தெரிந்தனராதலால் கண்ணியுணர்ந்தீர் கருமம் என்றார் ஜாம்பவான்.


அடங்கபும் வல்லீர்காலமது அன்றேல் அமர்வந்தால்,

மடங்கல் முனிந்தாலன்ன வலத்தீர் மதி நாடித்

தொடங்கியது ஒன்றோ முற்றும் முடிக்கும் தொழில் அல்லால்,

இடங்கெட வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடை யாதீர்.

(பாடல் 17)

அது ஏற்ற காலமாய் இல்லாவிட்டால் அடங்கியிருக்கும் பொறுமையுடையீர். போர் மூளுமானால், ஓர் ஆண் சிங்கம் பொல் சினந்து எழும் வலிமையுடையவராவீர். செய்யத் தொடங்கிய ஒரு செயல் மட்டுமல்லாமல், அதற்குத் தொடர்பான எல்லாச் செயல்களையும் செய்து முடிக்கும்  திறமுடையவர். எந்த ஒரு இடையூறு நேர்ந்தாலும்  பின்வாங்காது நிற்பீர்.

ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர், தாக்கற்குப் பேருந் தகைத்து. (486)

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன், குத்தொக்க சீர்த்த விடத்து. (490)

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற, இடுக்கண் இடுக்கட் படும்*. (625) 

என்னும் குறட்பாக்கள் இங்கு ஒப்பிடத் தக்கது.】                                                   

ஈண்டிய கொற்றத் திந்திரன் என்பான் முதல் யாரும்,

பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறையானும்,

பண்டிதர் நீரே பார்த்தினிது உய்க்கும்படி வல்லீர்,

வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர்.

(பாடல் 18)

உமது ஒழுக்கம் இந்திரன் முதலோர்க்கும் வழி காட்டியாக உள்ளது என்பது முதலிரண்டடிகளின் கருத்து.  வீரம், வெற்றி முதலிய நற்பண்புகள் நிரம்பியிருப்பினும் அனுமன் அவற்றைச் சிறிதும் பாராட்டாமல் எளிய வானரன்போல இருப்பதால் அக் குணத்தைப் ’பொறையாலும்' என்று ஜாம்பவான் பாராட்டினார்.  கடல் கடந்து சீதையைக் கண்டு வரவேண்டுமென்று நினைத்தால் உடனே செய்து முடிக்கும் வல்லமை அனுமனுக்கு உண்டென்பதைப் பின்னிரண்டடிகள் குறிப்பிக்கும்.  வேண்டிய வேண்டியாங்கு எய்தலால், செய்தவம் ஈண்டு முயலப்படும். (265) என்ற குறளின்படி வேண்டிய போதே வேண்டுவன எய்தும் வினை எனத் தவ ஒழுக்கத்தைக் குறித்தார்.


"ஏகுமின் ஏகி எம்முயிர் நல்கி, இசைகொள்ளீர்,

ஓகை கொணர்ந்தும் மன்னையும் இன்னம் குறைவு இல்லாச்

சாகரம் முற்றும் தாவிமும் நீர் இக்கடல் தாவும்,

வேகம் அமைந்தீர்" என்று விரிஞ்சன் மகன் விட்டான்.

(பாடல் 19)

நீங்கள் இந்தக் கடலைக் கடந்து சென்று மீளுவதற்குரிய வலிமை பொருந்தியுள்ளீர். ஆதலால் விரைந்து சென்று சீதை இலங்கையில் உள்ள மகிழ்ச்சியான நல்ல செய்தியைக் கொண்டுவந்து எங்களையும், சீதையின் பிரிவால் வாடும் உம் தலைவன் ராமனையும் துன்பக் கடலைக் கடந்து கரையேறச் செய்வீர். மேலும் பலரது உயிரைக் காப்பாற்றுவதால் பெரும் புகழும் உமைக்குக் கிடைக்கும் என்று கூறி பிரமகுமாரனான ஜாம்பவான், கடலைக் கடந்து செல்லுமாறு) அனுமனைத் தூண்டிவிட்டார்.


ஜாம்பவானின் இந்த சொற்களைக் கேட்ட அனுமன், 

”இலங்கையை இடந்து வேரோடு இவ்வயின் தருக'' என்றாலும்,

''விலங்கினர் தம்மை எல்லாம் வேரொடும் விளிய நூறி,

பொலங் குழை மயிலைக் கொண்டு போது'' எனப் புகன்றிட்டாலும்,

கலங்கலீர்! உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது; காண்டிர்"!

(பாடல் 21)

அவற்றைக் கேட்ட பிறகு அனுமன் ஜாம்பவானைப் பார்த்து "இலங்கை நகரை வேரோடு பெயர்த்தெடுத்து, இந்த இடத்திற்குக் கொண்டு வரவேண்டுமென்று நீங்கள் கூறினாலும்; எதிர்த்துத் தடுப்போரையெல்லாம் அடியோடு அழியுமாறு பொடிப் பொடியாக்கி, பொன்னாற் செய்த குழையையணிந்த மயில்போன்ற சாயலையுடைய சீதையை எடுத்துக் கொண்டுவா என்று சொன்னாலும், நீங்கள் கூறிய சொற்படியே செய்து முடிப்பேன்; அதை விரைவிலே கண்கூடாகக் காண்பீர்கள்; ஆகவே கலங்காதீர்கள்." இவ்வாறு கூறி அனுமன் கடல் தாண்டத் தயாரானார்.


அனுமனின் பெருமையைப் பேச இந்த ஏழெட்டு பக்கங்கள் போதாது. மற்றொரு சந்தர்ப்பத்தில் மேலும் பார்ப்போம்.


மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment