தசரதனின் புத்திர பாசம்
பொதுவாகவே, அப்பாக்களுக்கு மகன்கள் மேல் உள்ள பாசம் சொல்லி மாளாது. மகள் மேல் உள்ள பாசத்தை அப்பாக்கள் கொட்டி தீர்த்து விடுகிறார்கள். ஆனால், மகன்கள் மேல் உள்ள பாசத்தை வெளியில் சொல்லுவது இல்லை. அது ஏனோ அப்படி ஆகி விடுகிறது. தசரதன் நிலையும் அப்படித்தான். இதைக் கம்பன் எப்படி சொல்கிறான் என்று பார்ப்போம்.
இராமன் சிறு குழந்தையாக தொட்டிலில் கிடக்கிறான். தசரதன் தன் மகனைப் பார்த்து உருகுகிறான். தசரதன் நினைக்கிறான், 'இவன் தான் உயிர்" என்று. மேலும் ஒரு படி மேலே சென்று "இவன் தான் என் உடலும்" என்கிறான்.
அதாவது அவனை தவிர்த்து தனக்கு எதுவும் இல்லை என்கிறான். உயிர் மட்டும் என்றால், உடல் தனது என்று ஆகி விடும். உயிரும், உடலும் என்றால் எல்லாம் அவனே. தசதரன் இராமனில் கரைந்து போகிறான். எப்படி, பாடலைப் பார்ப்போம்.
காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே,
ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர்
ஆவியும் உடலமும் இலது என அருளின்
மேவினன் உலகு உடை வேந்தர் தம் வேந்தன்.
(திரு அவதாரப் படலம் 304)
நீலோற்ப மலரும், ஒளி வீசும் தாமரை மலரும் போல, ஓவியத்தில் எழுதி வைத்த அழகைக் கொண்ட சிறந்த ஒருவனை, அவனைத் தவிர்த்து உயிரும் உடம்பும் இல்லை என்று கருணை மேலிட உலகத்தை ஆளுகின்ற வேந்தர்களுகெல்லாம் வேந்தனான தசரதன், ராமன் மீது பேரன்பு உடையவனாய் இருந்தான்.
சாதாரண அழகு என்றால் வயதாக வயதாக அது குன்றும். ஓவியத்தில் எழுதிய அழகு என்றால் எத்தனை யுகம் ஆனாலும் அப்படியே இருக்கும். இராமனின் அழகு அழியாத அழகு என்பதற்கு அதை உதாரணமாகச் சொல்கிறான்.
அடுத்து, விஸ்வாமித்திரர், வேள்வியைக் காக்க ராமனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டபோது, மின்னல் தாக்கியதுபோல் உணர்ந்தான். எப்படியென்றால்,
எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தாலெனச் செவியில் புகுதலோடும்.
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த, ஆர் உயிர் நின்று ஊசலாட.
"கண் இலான் பெற்று இழந்தான்” என உழந்தான் கடுந் துயரம் – கால வேலான்.
(பா.கா. கையடைப் படலம் 328)
தவஸ்ரேஷ்டரான விஸ்வாமித்திரர் சொன்ன இந்தச் சொற்களானது தசரதன் காதுகளில் புகுந்தபோது, மார்பின் மேல் எறிந்த வேல் பாய்ந்த ஆழ்ந்த புண்ணில், கனன்று கொண்டிருக்கும் தீ நுழைந்தது போல உணர்ந்தான். (**அவன்உள்ளத்திலே நிலைத்துள்ள துயரம்**) உயிரை ஊசல்போல் ஆட வைத்ததாகவும். கண்கள் இல்லாதவன் அதனைப் பெற்றுப் பின்னர் இழந்தது போலவும், பகைவரை வேல் கொண்டு அழிக்கும் வேந்தர்க்கெல்லாம் வேந்தனான தசரதன், கடுமையான துன்பத்தினாலே மிகவும் வருந்தினான்.
(**உள் நிலாவிய துயரமாவது, முன்பொருநாள் தசரதன் சிரவணனை அம்பால் கொல்ல அவனது பெற்றோர் தந்த சாபத்தால் நிலவிய துன்பமாம்.**)
வேல் பண்ண புண்ணில் தீப்பட்டது போல், பால ராமனைப் பிரிய வேண்டுமே என்ற ஆதங்கத்தில் துயர் படுகிறான்.
விஸ்வாமித்திரரின் வேள்வியைக் காக்க வேண்டிய அவசியத்தையும், அங்கு நிகழப்போகும் தாடகை வதம், அகலிகை சாப விமோசனம், சீதாப்பிராட்டியின் சுயம்வரம், ராமன் – சீதை திருமணம் போன்ற நிகழ்வுகளை ஞான த்ரிஷ்டியில் கண்ட வசிட்டன், தசரதனுக்கு ராமன் செல்ல வேண்டிய அவசியத்தை விளக்கி, ராமனை விஸ்வாமித்திரருடன் அனுப்பி வைக்கிறார்.
மேற்சொன்ன நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. அடுத்து ராமனுக்கு மணிமுடி சூட்ட நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால் விதியின் செயல் வேறாக இருந்தது.
கைகேயி, தசரதன் வாக்களித்த இரண்டு வரங்களை கேட்டுப் பெற்றாள். அதில் முதல் வரம் பரதன் நாட்டை ஆள வேண்டும், இரண்டாவது வரம் ராமன் கானகம் போகவேண்டும் என்பதே.
இந்த இரண்டாவது வரத்தைக் கேட்டவுடன் தசரதன் அடைந்த வேதனை உச்சத்தை அடைந்தது. கம்பன் இதை, முன்பு விஸ்வாமித்திரர் ராமனை கேட்டபோது, வேல் பாய்ந்த புண்ணில் தீப்பட்டது போல் இருந்தது என்றார். இப்போது மீண்டும் ராமனைப் பிரிய வேண்டும் என்று கேட்டவுடன், அந்த தீப்பட்ட புண்ணில் வேல் பாய்ந்ததுபோல் துடி துடித்தான் என்கிறார். இதை,
இந்த நெடுஞ் சொல் அவ் ஏழை கூறும் முன்னே,
வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்ப,
சிந்தை திரிந்து, திகைத்து, அயர்ந்து, வீழ்ந்தான்;
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன்.
(கைகேயி சூழ்வினை படலம் 1603)
மகனாகிய இராமனைத் தவிர, தன்னுயிர் என்று வேறு ஒன்று இல்லாத தசரதன், அந்த அறிவற்றவளான கைகேயி, இந்தக் கொடும் சொற்களை சொல்லி முடிக்கும் முன்னே, ஏற்கெனவே தீயினால் சுட்ட கொடிய புண்ணில் (பாடல் 328) கூரிய வேல் பாய்ந்தாற்போல, மனம் தடுமாறி; அறிவு மயங்கி, அயர்ந்து சோர்ந்து தரையில் சாய்ந்தான்.
புத்திர பாசம் சில சமயம் சுகத்தையும், சில சமயம் சோகத்தையும் தரும் என்பதற்கு தசரதனே உதாரணம்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment