வாலியின் வலிமை.
ராமாயணத்தில், கைகேயி, வாலி, ராவணன் ஆகிய மூவரைப் பற்றியுள்ள பொதுவான கருத்து, அவர்கள் தீயவர்கள் என்பதுதான். விதிவசத்தால் அவர்கள் தவறிழைத்தாலும், அவர்களுக்கும் சில சிறப்புகள் உள்ளன. சென்ற பதிவில் கைகேகியை பற்றிப் பார்த்தோம். இந்தப் பதிவில் வாலியைப் பற்றி கம்பன் சொற்களில் பார்ப்போம். வாலியின் பெருமையை, கிட்கிந்தா காண்டம், நட்புக்கோட் படலத்தில் பதின்மூன்று பாடல்களில் (38 – 48 & 51,52) விவரிக்கின்றார்.
கிட்கிந்தையின் மன்னன் வாலி. வானரக் குலத் தலைவன். சூரிய பகவானின் புத்திரன். சிறந்த சிவபக்தன். பாற்கடலைத் தனியாகக் கடையும் வல்லமை உடையவன். போரில் தனது எதிரில் நிற்பவர்களின் வீரத்தில் பாதியைத் தனக்கு வர, வரம் பெற்றவன். இலங்கை வேந்தன் இராவணனையே, தன் வாலில் கட்டித் தூக்கிய வலிமை பொருந்தியவன்.
நூல் பல கற்ற சிறப்புடையவன். சிறப்புகள் பல பெற்றவனானாலும் தன் வீரத்தில் தற்பெருமைக் கொண்டவன். மனைவியின் மேல் பேரன்பு கொண்டவன். வரம் பல பெற்றாலும் மதங்க முனிவரிடம் சாபமும் பெற்றவன். கோபம், நம்பிக்கையின்மை, தம்பி மனைவியைக் கைப்பற்றுதல், பிடிவாதம், பிறரை மதிக்காதத் தன்மை, தன் வீரத்தின் மீது கொண்ட கர்வம், வரபலத்தால் தன்னை யாராலும் வெல்லவே முடியாது என்ற இறுமாப்பு, யார் பேச்சையும் கேட்காதத் தன்மை போன்ற சில தீய குணங்களால் வீழ்ச்சியைக் கண்டவன் வாலி.
இராமபிரானின் அம்பு பட்டதால், செய்த பாவத்தினின்று விடுபட்டு அமரரானான். இராமனின் அம்பு பட்டதால் மனமாற்றம் ஏற்பட்டு, இறக்கும் நிலையில் தம்பி சுக்ரீவனையும், மகன் அங்கதனையும் இராமனிடம் அடைக்கலப் படுத்தி விட்ட பின்பே, உயிர்த் துறந்தான். தம்பி சிலநேரம் மது அருந்திவிட்டு தீமை செய்தாலும் அவன் மேல் அம்பினை எய்து விடாதே என்றும், இராமபிரானிடம் கேட்டுக்கொள்கிறான்.அத்தகைய வாலியின் மாட்சியையும், வீழ்ச்சியையும் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
கழலும் தேவரோடு அவுணர் கண்ணின் நின்று
உழலும் மந்தரத்து உருவு தேய முன்,
அழலும் கோள் அரா அகடு தீவிடச்
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்.
(நட்புக்கோட் படலம் - 38)
தேவர்களுடன் சேர்ந்து, அசுரர்களின் எதிரில் நின்று மத்தாய் இருந்து சுழல்கின்ற மந்திர மலையின் வடிவம் தேயவும், சீறும் தன்மை கொண்ட வாசுகி எனும் பாம்பின் நடுவுடலானது தேய்ந்து போகவும், திருப்பாற்கடலை முற்காலத்தில் தான் ஒருவனாய் நின்று கடைந்த தோள் வலிமை உடையவன்.
நிலனும் நீரும் மா நெருப்பும் காற்றும் என்று
உலைவில் பூதம் நான்கு உடைய ஆற்றலான்;
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா
மலையின் நின்றும் இம் மலையின் வாவுவான்.
(நட்புக்கோட் படலம் 39)
பூமியும், நீரும், தீயும் காற்றும் ஆகிய அழிவற்ற பூதங்கள் நான்கும் ஒன்று கூடியது போன்ற வலிமையுடையவன். அலைகளையுடைய எல்லைப்புறக் கடல்கள் சூழ்ந்துள்ள சக்கரவாளகிரி என்னும் மலையிலிருந்தும் இங்கு இருக்கும் மலையில் தாவும் வன்மையுடையவன்.
கிட்டுவார் பொராக் கிடைக்கின் அன்னவர்
பட்ட நல்வலம் பாகம் எய்துவான்;
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று
அட்டம் மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்.
(நட்புக்கோட் படலம் - 40)
அவன் போரில், தன்னை எதிர்ப்பவர் வந்தால் அவர்களிடம் உள்ள வலிமையில் பாதி அளவைத் தான் அடையும்படியான வரத்தைப் பெற்றவன். எட்டுத்திக்குகளின் எல்லை வரையும், நாள்தோறும் சென்று அங்குள்ள ’அட்ட மூர்த்தி’ எனப்படும் சிவபெருமானின் திருவடிகளை வணங்கும் அன்பை உடையவன்.
கால் செலாது அவன் முன்னர்; கந்தன் வேள்
வேல் செலாது அவன் மார்பில்; வென்றியான்
வால் செலாத வாய் அலது இராவணன்
கோல் செலாது; அவன் குடை செலாது அரோ.
(நட்புக்கோட் படலம் 41)
அந்த வாலியின் வேகத்திற்கு முன்னால் காற்றும் செல்லாது. அந்த வாலியின் மார்பிலே முருகப்பெருமானின் வேலும் நுழையாது. வெற்றியை உடைய அந்த வாலியின் வால் செல்லாத இடத்திலே அன்றி, வால் சென்ற இடத்திலேயும் அந்த இராவணனின் ஆட்சியும், வெற்றியும் செல்லாது.
மேருவே முதல் கிரிகள் வேரொடும்
பேருமே அவன் பேருமேல்; நெடும்
காரும் வானமும் கதிரும் நாகமும்
தூருமே அவன் பெரிய தோள்களால்
(நட்புக்கோட் படலம் 42)
அந்த வாலி இடம் விட்டு எழுவானால் அந்த அதிர்ச்சியால் மேரு முதலிய பெரிய மலைகள் எல்லாம் வேரோடு இடம் விட்டுப் பெயர்ந்து போகும். அவனுடைய பெரிய தோள்களினாலே பெரிய மேகமும், வானமும், சூரிய சந்திரர்களும், மலைகளும் மறைந்து போய்விடும்.
பார் இடந்த வெம் பன்றி பண்டை நாள்
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான்;
மார்பு இடந்த மா எனினும் மற்றவன்
தார் கிடந்த தோள் தகைய வல்லதோ
(நட்புக்கோட் படலம் 43)
அவன் பூமியைத் தன் கொம்பால் பெயர்த்து மேல் எடுத்த வலிய திருமாலாகிய பன்றியையும், பழங்காலத்தில் கடலில் கிடந்த திருமாலாகிய பெரிய ஆமையையும், சமமாகக் கொள்ளத் தக்கவன். இரணியனின் மார்பைப் பிளந்து அழித்த நரசிம்மமே என்றாலும், அந்த வாலியின் தோள்களைக் கட்டுப்படுத்தி அடக்கக்கூடிய வலிமை உடையதோ?
படர்ந்த நீள் நெடும் தலை பரப்பி மீது
அடர்ந்து பாரம் வந்து உற அனந்தனும்
கிடந்து தாங்கும்; இக் கிரியை மேயினான்
நடந்து தாங்கும்; இப் புவனம் நாள் எலாம்.
(நட்புக்கோட் படலம் 44)
பூமியைத் தாங்கும் இந்தக் கிட்கிந்த மலையில் வாழும் வாலியானவன் நடக்கும் பூமியில் பாரம் மிகுதல் காரணமாக, ஆயிரம் எண்ணுள்ள தன் தலைகளைப் பரப்பிக் கொண்டு ஆதிசேஷன் கீழே இருந்தபடியே வாலி நடக்கும் இடமெல்லாம் நடந்து நாள்தோறும் இவ்வுலகத்தைத் தாங்குகிறான்.
கடல் ஒலிப்பதும் கால் சலிப்பதும்
மிடல் அருக்கர் தேர் மீது செல்வதும்
தொடர மற்றவன் சுளியும் என்று அலால்
அடலின் வெற்றியாய்! அயலின் ஆபவோ?
(நடபுக்கோட் படலம் 45)
வலிமையையும் வெற்றியையும் உடையவனே! கடல் ஒலிப்பதும், காற்று உலவுவதும் வலிமையுடைய சூரியர்கள் தேரில் உலவுவதும் அந்த வாலி சினம் கொள்வானே என்ற அச்சத்தால் தான். அதுவன்றி வேறு காரணங்கள் உண்டோ?
வெள்ளம் ஏழுபத்து உள்ள மேருவைத்
தள்ளல் ஆன தோள் அரியின் தானையான்;
உள்ளம் ஒன்றி எவ் உயிரும் வாழுமால்
வள்ளலே! அவன் வலியின் வண்மையால்.
வெள்ளம்** என்னும் கணக்கை உடைய குரங்குப் படையை உடையவன். இத்தகைய அவனது வலிமையின் மிகுதியால் எல்லா உயிர்களுக்கும் அவன் கருத்துக்கு வேறுபடாது மனம் ஒன்றி வாழ்கின்றன. அந்த வாலியின் கர்ஜனையாகிய குரலுக்கு என்றும் அஞ்சுவதால், அவன் வாழும் இடத்துக்கு எதிராக மேகங்கள் இடித்து ஒலியை எழுப்பா. வெற்றி மிக்க கொடிய சிங்கங்கள் தாம் வாழும் மலைக் குகைகளில் கர்ஜிக்க மாட்டா. வலிமை யுடைய கொடிய காற்றும் மென்மையான தழைகள் நடுக்கம் கொள்ள அவற்றின் பக்கத்தில் நெருங்காது.
**வெள்ளம்: வாலியின் பல கோடி அக்குரோணி அளவிலான சேனைப் படை.
"மொய்க்கொள் வாலினால் மிடல் இராவணன்
தொக்க தோள்உறத் தொடர்ப்படுத்த நாள்
புக்கிலாதவும் பொழி அரத்த நீர்
உக்கிலாத வேறு உலகம் யாவதோ"
(நட்புக் கோட் படலம் - 48)
சிவபூசை செய்து கொண்டிருந்த வாலியை இராவணன் பின்புறமாக வந்து பற்ற எண்ணியபோது, வாலி அவனை வாலினால் கட்டிக் கொண்டு எல்லா உலகங்களிலும் அவன் இரத்தம் சிந்துமாறு சுற்றிவந்து, பின்னர் அவன் வருந்தி வேண்டியதால் விடுத்தான் என்பது வரலாறு. இராவணன் வாலியின் வாலில் கட்டுண்ட நிலையை 'ஓர் இராவணன் என்பான் தன்னை, சுந்தரத்தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றி, சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன்' (6997) என்ற அடிகளும் இதனை உணர்த்தும்.
அடுத்து,
மாயாவியைக் கொன்ற வாலி
மாயாவி என்ற அரக்கன் வாலியைப் போருக்கு அறைகூவி அழைத்தான். வாலியும் அவனோடு போரிடச் சென்றான். வாலியின் வலிமைக்கு முன் நிற்க முடியாத மாயாவி, ஒரு பிலத்துக்குள் சென்று, புகுந்து கொண்டான்.
முட்டி நின்று, அவன் முரண் உரத்தின் நேர்
ஒட்ட, அஞ்சி, நெஞ்சு உலைய ஓடினான்;
''வட்ட மண்டலத்து அரிது வாழ்வு'' எனா,
எட்ட அரும் பெரும் பிலனுள் எய்தினான்.
(நட்புக்கோட் படலம் - 51)
வாலியுடன் போரிடுகையில் மாயாவி தன் வலிமை குறைந்து, வாலியின் வன்மை மிகுவதைக் கண்டதும் புறமுதுகு காட்டி ஓடிப் பின் பிலத்தினுள் நுழைந்து ஒளித்தான். (பிலம் = சுரங்கம்.)
பின்பு,
எய்து காலை, அப்பிலனுள் எய்தி, ''யான்
நொய்தின் அங்கு அவற் கொணர்வென்; நோன்மையாய்!
செய்தி, காவல், நீ,சிறிது போழ்து'' எனா,
வெய்தின் எய்தினான், வெகுளி மேயினான்.
(நட்புக்கோட் படலம் – 52)
மாயாவி பிலத்தினுள் புகுந்ததைக் கண்ட வாலி, மிக்க சினங்கொண்டு, தம்பியிடம், வேறு வகையில் அவன் தப்பித்துச் செல்லாதவாறு காவல் செய்வாய்; என்று அந்த சுரங்க வாயிலில் காவல் வைத்து மாயாவியைத் தொடர விரைந்து சென்றான். வாலி, சுரங்கத்துக்குள் பதுங்கி இருந்த மாயாவியை கண்டு பிடித்துக் கொன்றான்.
துந்துபியைக் கொன்றவன்:
துந்துபி இரு கொம்புகளைத் தலையில் கொண்டவன். மந்திர மலையைப் போன்றத் தோற்றமுடையவன். அவன் திருமாலிடம் சென்று போர் செய்ய அழைக்க, அவர் தன்னால் இயலாது என்றும், உன் திறமைக்கு நீ சிவ பெருமானுடன் போரிட வேண்டும் என்று கூறினார். அவன் நேராகச் சென்று சிவனைப் போருக்கு அழைக்க, அவர் நீ தேவர்களுடன் போரிடு என்றார். அவன் தேவர்களைப் போருக்கு அழைக்க, அவர்கள் போருக்குரிய வாலியிடம் செல்வாயாக என்றனர். உடனே நேரடியாகச் சென்று வாலியைப் போருக்கு அழைத்தான். இருவருக்கும் போர் நடைபெற்றது.
புயல் கடந்து, இரவிதன் புகல் கடந்து, அயல் உளோர்
இயலும் மண்டிலம் இகந்து, எனையவும் தவிர, மேல்
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய, அன்று
உயிரும் விண் படர, இவ் உடலும் இப் பரிசுஅரோ!
(துந்துபி படலம் - 13)
வாலி மேக மண்டலத்தைத் தாண்டிக், கதிரவன் இருக்கும் இடத்தையும் தாண்டி, மற்றும் உள்ள வானவர்கள் வாழ்கின்ற மண்டலங்கள் எல்லாம் கடந்து, மற்ற மேலிடங்கள் எல்லாவற்றையும் கடக்குமாறு, தன் உறுதியான வலிமையான கையால் அந்தத் துந்துபியை இழுத்து வீசி எறிந்தான். அப்போது அவ்வரக்கனின் உயிர் மேல் உலகத்திற்குச் செல்ல, உடல் இம்மண்ணுலகத்தில் விழுந்தது. இறுதியில் வாலியே வென்றான்.
இவ்வளவு வலிமை மிக்க வீரனான வாலி, ஏன் சுக்ரீவனுடன் பகைமை கொண்டான்?
மாயாவியைக் கொல்ல சுரங்கத்துக்குள் சென்ற வாலி இருபத்தெட்டு மாதங்களாகியும் வெளியில் வராததால், சுக்ரீவன் வருந்தினான். வாலி இறந்திருக்க வேண்டும் என்று கருதி, அமைச்சர்கள் சுக்ரீவனை அரசாட்சியை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினர். ஆனால் சுக்ரீவன் இது குற்றமாகும் என்று கூறி, மறுத்தான். "நானும் பிலத்துக்குள் சென்று, தமையனை மீட்டுவருவேன். மாயாவி அண்ணனைக் கொன்றிருந்தால், நான் அவனைக் கொல்வேன், இல்லையென்றால் மாயாவி கையால் மடிவேன்" என்றான். அமைச்சர்கள் சுக்ரீவனுக்குக் கடமையை உணர்த்தி, அரசாட்சியை வற்புறுத்தி ஏற்கச் செய்தனர். மாயாவி வெளியே வராமல் இருக்க, பிலத்தின் வாயை, வானரர்கள் பாறைகளை வைத்து மூடினர். மாயாவியைக் கொன்றுவிட்டு வெளியே வந்த வாலி, பிலத்தின் வாய்ப்பகுதி பாறைகளால் மூடப்பட்டிருப்பதைக் கண்டு, கடும் சினம் கொண்டு, பாறைகளை உதைத்துத் தள்ளிவிட்டு வெளியே வந்தான். சுக்ரீவன் அவன் காலடியில் விழுந்து வணங்கினான். விருப்பமில்லாமல் அரசாட்சியைத் தான் ஏற்றுக்கொள்ள நேர்ந்த நிலையை விளக்கினான். இருப்பினும் அரசாட்சியை ஏற்றுக் கொண்டது தவறுதான் என்று கூறி, தன்னைப் பொறுத்தருள வேண்டினான். இது எதையும் நம்பாத வாலி, கோபத்தில் அவனைத் திட்டினான். அவனை அடிக்கத் தொடங்கினான். சுக்ரீவன் அதைத் தாங்க முடியாமல் தப்பி ஓடினான். வாலியும் விடாது பின் தொடர்ந்து சென்று, அவனைப் பிடித்துக் கொல்ல முயன்ற போது, சுக்ரீவன் அவனிடமிருந்து தப்பி, வாலி வர முடியாத ரிசியமுக பருவதத்தில் ஒளிந்து கொண்டான். அது மட்டுமல்லாமல் வாலி, தன் தம்பியின் மனைவியை கவர்ந்தான். பின்னர் இதுவே சகோதரர்களிடையே விரோதம் ஏற்பட்டு, வாலியின் வதத்தில் முடிந்தது.
மீண்டும் சந்திப்போம்,
No comments:
Post a Comment