Popular Posts

Saturday, 4 January 2025

திருப்பாவை 14

 *திருப்பாவை பாசுரம் 14*

இப்பாசுரத்தால் எழுப்பப்படும் அடியவள் மிகவும் சாமர்த்தியமாகப் பேசுபவள். கண்ணனிடம் தங்கள் ஆசையை எடுத்துச் சொல்லி எப்படியேனும் நிறைவேற்றித் தருவாள் என்று அவளையும் எழுப்பிக் கூட்டிச் செல்லுமாறு அமைந்துள்ளது. 

வெட்கத்துக்குரிய தவறுகளை இழைத்தவர் கூட, கண்ணனைச் சரணடைந்து அவனிடம் முறையிட்டு, அவன் அருளுக்குப் பாத்திரமாக முடியும் என்பது இப்பாசுரத்தின் ஒரு செய்தி. 'நாக்கு' என்பது உண்பதற்கும், வீண் பேச்சு பேசுவதற்கும் அல்ல, இறைவனுடைய பெயர்களை சொல்லிப் பெருமை பாடுதலும், தாமறிந்த உயர்ந்த கருத்துகளைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லுதலுமே நாக்கு பெற்றதன் (பேச்சு வன்மை) காரணம், என்பது இப்பாசுரக் கருத்து.


உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்,

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்,

செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்,

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்,

நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்,

பங்கயக் கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்.

[உங்கள் வீட்டு புழக்கடைத் தோட்டத்தில் உள்ள சிறிய குளத்தில் செங்கழுநீர் மலர்கள் இதழ் விரிந்து, கருநெய்தல் மலர்கள் இதழ் குவிந்து (அழகாக) இருப்பதை காண்பாயாக! செங்கல் நிறத்தில் உடை (காவியுடை) தரித்த, வெண்மையான பற்களையுடைய தவசிகள், சங்கை முழங்கி அறிவித்தவாறு, தங்கள் திருக்கோயில்களைத் திறக்கச் செல்லுகின்றனர். அழகிய பெண்ணே! எங்களை முன்னரே எழுப்புவதாக நீ எங்களுக்கு வாக்களித்து விட்டு, அவ்வண்ணம் செய்யாமலிருந்தும், செய்யவில்லையே என்ற வெட்கம் துளியும் இல்லாதவளே! இனிமையான துடுக்கான பேச்சுடையவளே! துயிலெழுவாயாக! சங்கு, சக்கரம் தரித்து, விசாலமான திருக்கைகளையுடையவனும் தாமரை மலர் போன்ற சிவந்த கண்களையுடையவனுமான கண்ணபிரானின் பெருமைகளைப் பாடி நோன்பிருக்க வருவாயாக!]


*பாசுர விசேஷம்:*

அவதார பஞ்சகத்தின் கீழ் வரும் இப்பாசுரத்தில், "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்"என்பதன் மூலம் "பரவாசுதேவ நிலை" (பரம்) குறிக்கப்பட்டுள்ளது.


"இறைநெறியில் ஈடுபட்டு சரணம் புக" என்னும் ஜீவாத்மாக்களுக்கு, நல்லாசான் ஆனவர். இவர், இறைஞானத்தை அனுமானம், ப்ரத்யக்ஷம், சப்தமாகிய வேதம் (மறைகளனைத்தும் ஒலியின் வடிவிலேயே அருளப்பட்டவை) இவற்றின் வழியில், ஊட்டுகிறார். ஆசானைப் பணிந்து அணுகினால், இறைவனை அடைகின்ற சரணாகதி மார்கத்தை நமக்கு அவர் போதிப்பார் என்பது கருத்து.


ப்ரமாதா ஆகிய ஜீவாத்மா, அறிவைப் பெறுவது இந்தப் ப்ரமாணங்களால். அறிவைப் பெறும் வழிமுறைகளால், அடையும் ப்ரமேயமே (அறிந்துகொள்ளும் பொருள்) இறைவன். அவனே வீடு பேறை வழங்கவல்ல நாராயணன் என்பது இங்கு கருத்து.


மேலும், பிரத்யட்சம், அனுமானம், சப்தம் (சாத்திரம்) என்ற மூன்று பிரமாணங்களும் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டுள்ளன.


உங்கள் புழைக்கடை என்பது அனுமான பிரமாணம்


"தங்கள் திருக்கோயில் சங்கிடுவான்" என்பது பிரத்யட்ச பிரமாணம்.


எங்களை முன்னம் எழுப்புவான்" என்ற ஆப்த வாக்கியம் (சப்தம்) சாத்திரப் பிரமாணம்.


செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து: 

உலகப் பற்றுகளில் உழன்று கொண்டிருக்கும் ஒருவனுக்கு ஞானம் துளிர்க்கத் தொடங்குவது உள்ளர்த்தமாம்

ஆம்பல்வாய் கூம்பினகாண்  

காமம், குரோதம் போன்ற அஞ்ஞானம் சார் உணர்வுகள் விலகின.

செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்

 மிக்க ஞானமுடைய ஆச்சார்யனின் சம்பந்தம் ஏற்படப் போவதை குறிப்பில் உணர்துவதாம்.

எங்களை முன்னம் எழுப்புவான்  

நாங்கள் சம்சார பந்தம் என்ற நித்திரையிலிருந்து வெளிவர உத்தம அதிகாரியான நீயே அருள வேண்டும்!

நாணாதாய்

நாணம் என்பது தன்னடகத்தை மட்டும் குறிப்பதாகாது, அது அகங்காரத்தையும் குறிப்பதாம். அதனால், அகங்கார-மமகாரங்கள் அற்றவள் அப்பெண் என்பதால், "நாணாதாய்" என்ற பதம் அவளுக்கு பொருத்தமே!

நாவுடையாய்: 

சகல சாத்திரங்களையும், வித்தையையும் பேசும் (நல்வாக்கு அருளும் ஹனுமன், உடையவர் போன்ற) சான்றோர் அனைவரும் நாவுடையவரே! அதனால், இதுவும் உறங்கும் பெண்ணின் சிறப்பையே சொல்கிறதாக கூறுவார்.

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

சங்கும் சக்கரமும் பரமனது பரத்துவத்தை உணர்த்துவதாம். பெருமானை உபாசனை செய்யும் மார்க்கத்தை உபதேசிக்க வேண்டுவது என்பது உள்ளுரை.

அடுத்து, திருப்பாவை பிரபந்தத்துக்கே மணி விளக்காக அமைந்த எல்லே இளங்கிளியே என்று துவங்கும் 15ம் பாசுரத்தை அனுபவிப்போம்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்,

அடியேன்,

Sunday, 29 December 2024

திருப்பாவை 13

 *திருப்பாவை பாசுரம் 13*


முந்தைய பாசுரத்தில், ராமபிரானின் கீர்த்தி (சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானை!) பாடப்பட்டது. ராமனும் கண்ணனும், ஸ்ரீமன் நாராயணனே என்னும் காரணத்தினால், கோதை நாச்சியார் இப்பாசுரத்தில் "(புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்)" என்று இருவரையுமே போற்றிப் பாடி, கபடத் துயிலில் உள்ளவளை எழுப்புகிறாள்.


புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை,

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,

பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்,

வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று,

புள்ளும்சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே,

பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்,

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்.


[பறவை உருக்கொண்டு வந்த பகாசுரனின் வாயைக்கிழித்துக் கொன்ற கண்ணன், மற்றும், பொல்லா அரக்கன் ராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளியெறிந்து அவனை வதம் செய்த ராமனுடைய புகழைப் போற்றிப்பாடி, ஊரிலுள்ள அனைத்துப் பெண்களும் நோன்பு நோற்க, குறித்த இடத்தில் வந்து சேர்ந்து விட்டனர். வெள்ளி (சுக்கிரன்) உதயமாகி, வியாழன் (குரு கிரகம்) அஸ்தமித்து விட்டது. இரையைத் தேடிச் செல்லும் காலைப்பறவைகளின் இறக்கைகள் உண்டாக்கும் சப்தம் உன் காதுகளில் விழவில்லையா?

வண்டுகள் மொய்க்கும் அழகிய தாமரை மலர் போன்ற கண்களையுடையவளே! உள்ளமும் உடலும் குளிர, எங்களுடன் சேர்ந்து குளிர்ந்த நீரில் அமிழ்ந்து நீராடாமல் இப்படி படுக்கையில் கிடக்கலாமோ, அழகிய பெண்ணே! இந்நன்னாளில் தூங்குவது போல பாவனை செய்வதை விடுத்து, எங்களுடன் கலந்து நோன்புக்கு வருவாயாக!]


பாசுரக் சிறப்பு:-

இப்பாசுரத்தில் பகவத் கீதையில் பகவான் சொன்ன "ஞானயோகம்" பற்றிச் சொல்லப்படுகிறது. ஒருவர் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் ஆராய்ந்து, கேள்வி கேட்டு, உண்மை என்ன என்று உணர்ந்து கொள்ளும் அறிவுத் தேடலே, ஞான யோகம். சரீரத்திற்கும் ஆன்மாவிற்குமான வேறுபாட்டை அறிவின் மூலமாக உணர்ந்து கொள்ளுபவர், உலகப்பற்றிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடைவதைப் பற்றியும் அறிந்து கொள்வதே, ஞானயோகம். ஆயினும் வைணவத்தின் 'விஸிஷ்டாத்வைத' கோட்பாட்டினை முன்னிறுத்திய இராமானுஜரோ, ஞானத்தை, இறைபக்தியின் ஒரு அங்கமாகவே வலியுறுத்தியிருக்கிறார். இந்தப் பாடலில் புள்ளின் வாய் கீண்டது க்ருஷ்ணன் என்றும் பொல்லா அரக்கனை கொன்றது ராமன் என்றும் சொல்வது ஒரு வகை அர்த்தம்.

இன்னொரு வகையில், புள்ளின் வாய் கீண்டது ராவணன். புள் என்னும் பட்சியாகிய ஜடாயுவை கொன்றான் ராவணன். அந்த பொல்லா அரக்கனைக் கொன்றவன் ராமன், என்று முழுவதுமே ராமனைப் பற்றித்தான் பாடுகிறார்கள் என்று வேறொரு வகையில் ரசிக்கும்படியும் பெரியோர் அர்த்தங்கள் அருளியிருக்கிறார்கள்.

அரக்கன் என்றாலே தீயவன் தானே பொல்லா அரக்கன் என்று சொல்வது ஏன் என்று கேட்டால், நல்ல அரக்கர்களும் இருந்திருக்கிறார்கள். விபீஷணன், பிரகலாதன், மாவலி என்று நல்லவர்களும் அரக்கர் குலத்தில் தோன்றி பகவத் பக்தர்களாகவும் நல்ல சிஷ்டர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதுவும் ராவணன் செய்த பாவங்களை நினைத்து பொல்லா அரக்கன் என்றார்கள்.

வியாழம் என்பது ப்ரஹஸ்பதியை குறிக்கும். நாஸ்தீக மதமான சார்வாகத்திற்கு ப்ரஹஸ்பதியே ஆசார்யனாகவும் அவர்களுடைய சித்தாந்தத்தை உருவாக்கியதாகவும் சொல்வர். ஆக அப்படி நாஸ்தீகம் ஒழிந்து நல்ல ஞானம் எழுந்ததை வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்று குறிப்பால் சொல்கிறாள்.


மேலும் ‘மாயனை…’ பாசுரத்தில் நோன்பில் எப்படி பரமனை மூன்று கரணங்களாலும் துதிக்க வேண்டும் என்று சொன்ன பிறகு, அடுத்த பாசுரத்தில் ஒவ்வொரு வீடாக பெண்பிள்ளைகளை எழுப்ப ஆரம்பித்த போது முதல் பாட்டாக ‘புள்ளும் சிலம்பின காண்’ என்று தொடங்குகிறாள். அதை இங்கே நினைவு கூர்ந்து, அந்த அடையாளங்களை மறுபடி நினைவூட்டுகிறாள்.


*புள்ளும் சிலம்பின காண்* என்று கோதை ஆறாம் பாசுரத்தில் சொல்லியதை மறுபடியும் இங்கு பாட என்ன காரணம்? அப்போது, பறவைகள் துயிலெழுந்து கூவுவதைப் பற்றிச் சொல்கிறார் ஆண்டாள். இப்போது, பறவைகள் கூட்டிலிருந்து புறப்பட்டு இரை தேடும் இடங்களுக்கு பறந்து செல்லும்போது இறக்கைகள் படபடத்து ஏற்படும் சப்தத்தைப் பற்றிப் பாடி, இன்னும் அதிக சமயமாகி விட்டதை உணர்த்துகிறாள்!


*போதரிக் கண்ணினாய்* என்னும் பதத்தை விதவிதமாக பிரித்து பெரியோர் அனுபவிக்கிறார்கள். போது என்றால் புஷ்பம் – பூவினுடைய துளிர். அரி என்றால் வண்டு. பூவில் வண்டு மொய்த்தாற் போல் அலையும் கண்களை – உன் கண்ணசைவை கண்டு கொண்டோம் – என்று சொல்கிறார்கள்.

போதரி என்பதை, போது+அரி என்று பிரிக்க வேண்டும். அரி என்றால் வண்டு. போது என்றால் மலரின் பருவம். காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் மலர் என்ற வழக்கும் உண்டல்லவா. அரும்பு - முழுதும் மூடியிருப்பது; மலர் - முழுதும் விரிந்திருப்பது; *போது* என்பது பாதி மூடியும் பாதி திறந்தும் இருப்பது. அதாவது “மலர்ந்தும் மலராத பாதி மலர்”. அப்படியிருக்கின்ற போதில் ஒரு கருவண்டு நுழைந்தது. 

வேறொரு அர்த்தமாக போது என்றால் பூ, அரி என்றால் மான் – இவைகளைப்போன்ற விழிகளைக் கொண்டவளே என்றும் கொள்ளலாம். வேறொரு விதமாக போது என்றால் பூ, அதை அரி என்றால் அதிகமான– பூவின் அழகையும் விஞ்சக்கூடிய அழகான கண்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

அப்படியிருக்கின்ற போதில் ஒரு கருவண்டு நுழைந்தது. வெண்ணிறப் போதினுள் கருநிற வண்டு இருப்பது போன்ற அழகிய கண்களை உடைய தோழியைப் பாடி அழைக்கின்றால் ஆண்டாள்.


*கீர்த்திமைப் பாடி* என்பது பத்து இந்திரியங்களையும், மனத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஆச்சார்யனைப் போற்றுகிறது.


*பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்* என்பது (ஒருவனைத் தவிர) மற்ற சீடர்களெல்லாம் ஆச்சார்யனை அடைவதற்கு தயாராகி விட்டதை குறிக்கிறது.


*வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று* என்பது ஞானம் புலரும் மற்றும் அஞ்ஞான இருள் விலகும் சுப வேளையை குறிப்பில் உணர்த்துவதாம்.


*குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே* என்பது பகவத் அனுபவத்தில் திளைத்து மகிழ, முன் வைக்கப்படும் அழைப்பை உள்ளர்த்தமாக கொண்டது.


*பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்து* எனும்போது, கைவல்யமே போதும் என்று இருக்கும் அந்த ஒற்றைச் சீடனை, ஆச்சார்ய உபதேசத்திற்கு வந்து மோட்ச சித்தியின் உபாயத்தை அறிந்து கொள்ளுமாறு மற்ற சீடர்கள் அழைக்கிறார்கள் என்பது உள்ளுரையாம். ஆச்சார்ய சம்பந்தம் கிடைக்கும் நாள் என்பதால் "நன்னாள்" என்று கொண்டாடப்படுகிறது.


நாளை 14ம் பாசுரத்தை அனுபவிப்போம்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

அடியேன்,

திருப்பாவை 12

 *திருப்பாவை பாசுரம் 12*


இன்றைய பாசுரத்தில், கண்ணனையே அண்டியிருந்த இடையன் ஒருவனை குறிப்பிட்டு சொல்கிறாள் ஆண்டாள். இந்த கோபாலன் கண்ணனுக்கு தொண்டு செய்வதில் – கைங்கர்யம் செய்வதில் மிகவும் ஆவல் கொண்டு அதிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறான். இவன் தன்னுடைய சொத்தான பசுக்களை மேய்ப்பது, பால் கறப்பது போன்ற காரியங்களை சரிவர செய்வதில்லை. ஸ்வதர்மத்தை சாமான்யமாக கொண்டு அதை விட்டு, கிருஷ்ணனுக்கு தொண்டு செய்வதை விசேஷ தர்மமாக பிடித்துக் கொண்டிருக்கிறான். கைங்கர்யஸ்ரீ எனும் செல்வத்தைப்பெற்ற நற்செல்வன் தங்காய்! என்று அவனுடைய தங்கையை எழுப்புகிறாள் ஆண்டாள்.


கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி,

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர,

நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்,

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற,

மனத்துக் கினியானை பாடவும் நீ வாய் திறவாய்!

இனித்தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்,

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.

[பால் கறப்பார் இன்றி, இளங்கன்றுகளுடைய எருமைகளின் முலைக்காம்புகள் கடுத்து, அவை தங்களது கன்றுகளை நினைத்த மாத்திரத்தில், அவற்றின் முலைக்காம்புகளின் மூலம் பால் இடைவிடாது சுரந்து, வீட்டின் தரை ஈரமாகி, அதனால் வீடெங்கும் பாலும் மண்ணும் கலந்து சேறாகியிருக்கும் இல்லத்துக்குத் தலைவனான பெருஞ்செல்வனின் தங்கையே!

பனி எங்கள் தலையில் விழுவதை பொருட்படுத்தாமல், உன் மாளிகையின் வாசற்காலைப் பற்றி நின்ற வண்ணம், (சீதாபிராட்டியை தன்னிடமிருந்து பிரித்ததால்) பெருங்கோபம் கொண்டு, இலங்கை வேந்தன் ராவணனை மாய்த்தவனும், நம் உள்ளத்துக்கினியவனும் ஆன ஸ்ரீராமபிரானின் திருப்புகழை நாங்கள் பாடிக் கொண்டிருப்பதை கேட்டும் நீ ஏதும் பேசாதிருக்கலாமா! இப்போதாவது விழித்தெழுவாய்! ஊரில் உள்ளோர் அனைவரும் எழுந்து விட்ட பின்னரும் நீ பெருந்தூக்கத்தில் இருக்கலாமா! உன் ஆழ்ந்த உறக்கத்தின் பொருள் தான் என்ன?]

*பாசுர உள்ளுரை:*

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி -

இங்கு எருமை கருணை மிக்க (தன்னிடம் உள்ள ஞானத்தை வாரி வழங்கும்) ஆச்சார்யனைக் குறிப்பில் உணர்த்துகிறது. கன்றுகள் ஞானப்பாலால் உய்வு பெறும் சீடர்களைக் குறிக்கிறது.

முலைவழியே நின்றுபால் சோர - எருமையின் நான்கு முலைக் காம்புகளிலிருந்து வெளிப்படும் பாலானது, நான்கு வேதங்களின் சாரத்தைக் குறிப்பது என்பது இதன் உட்பொருளாம். இதையே, சுருதி, ஸ்மிருதி, பஞ்சராத்ரம், திவ்ய பிரபந்தம் என்ற நான்கை கற்றுணர்ந்து கிடைத்த ஞானமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

மனத்துக்கினியானை - 

கோகுலத்து கோபியர் கண்ணனைக் காணும் பெரும்பேறு பெற்றவர்கள். அதனால், அவர்களுக்கு கண்ணபிரான் ("கண்ணுக்கினியவன்"  ஆவான்:) ஆனால், ஸ்ரீராமபிரானை (ராம அவதாரம் முடிந்து விட்டபடியால்!) கோபியரால் நினைக்க மட்டுமே முடியும், அதனாலேயே அவர்களுக்கு சக்ரவர்த்தி திருமகன் "மனத்துக்கினியவன்" ஆகின்றான் என்று அபினவ தேசிகன் சுவாமிகள் கூறுவார்.


சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான் என்கிறாள். ஆண்டாள் இங்கே ராமனைப் பாடியதற்கு சிறப்பான அர்த்தங்களை பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள்.


கண்ணன் அவன் மீது ப்ரேமை கொண்ட கோபிகைகளை காக்க வைத்து, நிர்தாட்சண்யமாக ஏங்க வைத்து இரக்கமின்றி அலைக்கழிக்கிறான். ஆனால் ராமனோ, அவன் தாய் கெளசல்யை ஆகட்டும், சீதை ஆகட்டும், கைகேயி, சூர்ப்பனகை என்று எல்லோரிடமும் கருணை காட்டினான். அவர்களனைவரையும் மதித்தான்.

 கண்ணனைப்போல், ஆஸ்ரித விரோதிகளை வதம் பண்ணுவதில் ராமனும் மிகுந்த வேகம் கொண்டவன். அதனால் சினத்தினால், என்று அவனும் சினங்கொண்டு அழிக்கக்கூடியவன். சக்தியும் உண்டு. கருணையும் உண்டு. ஆகவே அவனைப் பாடுவோம் என்றார்களாம்.

இலங்கைக் கோமான் - என்று சொல்லும்போது, ராவணன் சக்தியை நினைத்துப்பார்க்கிறாள். ராவணன் மூன்றரைக்கோடி ஆண்டுகள் வாழ்ந்ததாக இதிகாசம் சொல்லும். அதிலும் அவன் தவமியற்றி சிவபெருமானை தரிசிக்கும் அளவுக்கு சிறந்த சிவபக்தன். நவக்கிரகங்களையும் காலில் போட்டு மிதித்தவன். குபேரனின் ஐஸ்வர்யத்தை கொள்ளை அடித்து அவனை துரத்தியவன். இப்படி தன் பலத்தால் பல பெருமைகள் கொண்டும், அகந்தையால் அழிந்தான். சிவபெருமானையே அசைத்துப்பார்க்க நினைத்து "சிவபெருமானின் கால் விரலுக்கு ஈடாகமாட்டோம் நாம்" என்பதை அவன் அறிந்தும் அகந்தையை குறைத்துக்கொள்ளவில்லை. ராமன் வந்து நிராயுதபாணியாக நிறுத்தி உயிர்ப்பிச்சை கொடுத்தும் அவனுக்கு அகந்தை போகவில்லை.


ராமன் ஏன் அவனை ஒரே பாணத்தில் கொல்லவில்லை?, அவனுக்கென்ன கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதில் ஒரு குரூர திருப்தியா? என்றால், அப்படியல்ல… இப்போதாவது திருந்துவானா என்று ஒவ்வொரு சண்டையிலும் அவனுக்கு சந்தர்ப்பம் கொடுத்து சரணாகதி செய்ய நேரம் கொடுத்துப்பார்க்கிறான் ராமன். அப்படியும் திருந்தாமல் வணங்காமுடியாகவே அழிந்தாலும், சிறந்த வீரன் என்ற காரணத்தால், கோமான் என்று குறிப்பிடுகிறாள்.


இது இராமாவதார செய்தி சொல்லும் 2வது பாசுரம். யோக பஞ்சகத்தின் கீழ் அமைந்த இப்பாசுரத்தில் கர்மயோகம் பற்றிச் சொல்லப்படுகிறது.


அவரவர்க்கு விதிக்கப்பட்டிருக்கும் கர்மங்களை, கடமைகளை (நித்ய நைமித்திக போன்றவைகளை) எந்தவித சுயநலமும் கருதாமல், நான் செய்கிறேன் என்ற அகந்தையில்லாமல் , எனக்காகச் செய்கிறேன் என்ற பற்றுதலில்லாமல் (மமதை) இதற்காகச் செய்கிறேன் என்று பலன் கருதாமல் (பேர்,புகழ்,செல்வம்) இறைச் சிந்தனையோடு பலனெதிர் பாராமல், பற்றின்றி செய்வதே கர்மயோகம். இதைத் தொடர்ந்து செய்வதினால், பிறவுயிர்களின் மீது கருணை பிறப்பதோடு, உள்ளத் தூய்மையும் அமைதியும் வாய்த்து, தன்னையும் (ஜீவாத்மா) தெரிந்து கொண்டு , இறைவனையும் (பரமாத்மா ) அடைய முடியும் (வீடுபேறு)!


இந்தப் பாசுரத்தில் இன்னொரு விசேஷம். ஆண்டாள் பசுவுக்கும் எருமைக்கும் உள்ள வேறுபாட்டினை எப்படி உணர்த்துகிறாள் என்று பார்ப்போம்.


ஆண்டாள் மூன்று இடங்களில் பசுவைக் குறிப்பிடுகிறாள்.

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் (பாசுரம் 3)

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து (பாசுரம் 11)

ஏற்ற குடங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப (பாசுரம் 21).

மூன்றிலுமே, சுரப்பது மிகுதியானாலும், கறப்பதனால் (முயற்சியினால்) மட்டுமே நிறைவேறும்.

ஆனால் இந்தப் பாசுரத்திலோ (12) 

கற்றெறுமை கன்றுக்கு இரங்கி நினைத்த உடனே பால் சொரிந்து இல்லம் சேறாக்கும்.


நாமும் பசுக்களைப் போன்றவர்கள். (இடையன் என்னும் ஆச்சார்யனை அடைந்து, அவர் மூலம் முயற்சித்தால் மட்டுமே ஞானம் பெற முடியும்.

ஆனால் இறைவனோ, எருமையைப் போன்றவன். ஒரு உத்தம அதிகாரியான பக்தனை நினைத்த கணமே தன் கருணையைச் சொரிவான்.


நாளை 13ம் பாசுரத்தை அனுபவிப்போம்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்,


அடியேன்,

திருப்பாவை 11

 *திருப்பாவை பாசுரம் 11*


5 X 5 +5 இல் மூன்றாம் ஐந்தின் தொடக்கம் – இதில் இரண்டாவது ஐந்து பாசுரங்கள், முன்னமே இறைநெறியில் ஆழ்ந்து ஈடுபட்ட வழி வந்தவர்களை எழுப்பும் படி வருகின்றன- இப்பாசுரத்தில், கண்ணனைப் போன்றே குழந்தைத்தனமும் குறும்பும் கொண்ட, மிகவும் அழகு வாய்ந்த, பெயர் பெற்ற குடியில் பிறந்த அடியவரை எழுப்புகிறார்கள்.


கற்றுத் கறவைக் கணங்கள் பல கறந்து,

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றமொன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!

புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,

சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி- நீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.


[கன்றுகளுடன் இருக்கும் நிறைந்த எண்ணிக்கையிலுள்ள பசுக்களைக் கறந்து பால் சேர்க்கின்றவர்களும், (பசுச்செல்வம் நிறைந்த கோவலர்கள்) தம்முடைய பகைவர்களின் ஆற்றல் அழியுமாறு, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று போர் புரிபவர்களுமான, செல்வத்திற்கும் ஆற்றலுக்கும் ஒரு குறையுமில்லாத, இடையர்களின் குலத்தில் தோன்றிய தங்கக்கொடி போன்ற அழகிய பெண்ணே! புற்றிலிருந்து வெளிவந்து படமெடுக்கும் நாகம் போன்று, மென்மையும் அகலமும் உடைய நிதம்பத்தை உடையவளும், தோகை விரித்தாடும் அழகிய மயிலை ஒத்த சாயலையும் கொண்டவளே, விழித்தெழுந்து வருவாயாக! 

ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்து வந்து, உன் வீட்டின் முற்றத்தில் குழுமி, கார்மேக நிறக் கண்ணனின் திருநாமங்களை போற்றிப் பாடியபடி உள்ளோம்! 

நிறைந்த செல்வத்தை ஆளுகின்ற பெண்ணே , நீ சிறிதும் அசையாமலும் பேசாமலும் இவ்வாறு உறங்குவது எதற்காக என்று நாங்கள் அறியோம் ! உறக்கம் கலைந்து எழுந்து வா”]


பாசுரச் சிறப்பு:

•இப்பாசுரத்தில், அசாதாரணமான அழகுடையவளும், குலப்பெருமை வாய்த்தவளும் ஆன ஒரு கோபியர் குலப்பெண்ணை ஆண்டாள் துயிலெழுப்புகிறாள். "கண்ணனே உபாயமும் உபேயமும்" என்று உணர்ந்த உத்தம பக்தையை கோதை துயிலெழுப்புகிறாள்


புற்றரவல்குல் புனமயிலே* என்று அப்பெண்ணை வர்ணிக்க ஒரே நேரத்தில், பாம்பையும் அதன் பரம எதிரியான மயிலையும் துணைக்கு அழைத்ததில் ஆண்டாளின் கவிநயம் தெரிகிறது.

ஆண்டாள் பொற்கொடியே, புனமயிலே, செல்வப் பெண்டாட்டி என்றெல்லாம் போற்றுவதிலிருந்தே இந்த பாகவதை ஆச்சார்யனிடம் கற்றுணர்ந்த உத்தம அதிகாரி என்பது புலப்படுகிறது. பொற்கொடியே எனும்போது குலத்தாலும், புனமயிலே எனும்போது வடிவாலும், செல்வப்பெண்டாட்டி எனும்போது குணத்தாலும் என்று எல்லாவற்றிலும் சிறந்த அடியவள் இவள் என்பதும் தெளிவு.


பொற்கொடி = பக்தி; அல்குல் = பரபக்தி; புனமயில் = பரம பக்தி

ஆக, பொற்கொடி, புற்றரவல்குல், புனமயில் ஆகியவை அவ்வடியவளின் (ஜீவாத்மா) கண்ணன் (பரமாத்மா) மீதான உன்னதமான பக்திக்கான உருவகங்களே!

"புற்றரவல்குல்" என்பது குறித்து பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார், “நாகமானது தனது இருப்பிடமான புற்றுக்குள் இருக்கையில், தனது கம்பீரத்தை சுருக்கிக் கொண்டு அடக்கமாக இருப்பது போல, பக்தி மிகுந்திருக்கும்போது, ஞானமும் வைராக்கியமும் எளிதில் கைகூடுவதாக, அற்புதமாக அருளியிருக்கிறார்!

அதாவது, பக்தி, ஞானம், வைராக்கியம் என்ற மூன்றில் பக்திக்கே உயர்வான இடம் வைணவத்தில் வழங்கப்பட்டுள்ளது. கர்மம், ஞானம் இன்னபிற யோகங்கள் பெறப்படுபவை, ஆனால் பக்தி யோகம், அதுவாக வாய்க்க வேண்டும்! மேலும், மயிலானது மகிழ்ச்சியாக இருக்கையில் தன் தோகையை விரித்தாடுவது போல, நற்குணங்களுடைய சீடன் அமையும்போது ஆச்சார்யனின் ஞான விகாசம் வெளிப்பட்டு நன்மை பயக்கிறது என்று சுவாமிகள் அருளியிருக்கிறார்!


முற்றம் என்ற பதம் பரமனின் அடியார் கூடும் இடம் என்பதைக் குறிக்கிறது.

(முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட) வைணவர்க்கு பிடித்த இடம் முற்றம், அதாவது திவ்ய தேசங்கள், அங்கு சென்று பெருமாளை வணங்கி வழிபட்டு மங்களாசாசனம் செய்தல்!

மேலும், கறவை கணங்கள் உபநிஷதங்களைக் குறிப்பதாக பூர்வாச்சாரியரின் கருத்து. அதாவது,

ஸர்வோபநிஷதோ³ கா³வோ தோ³க்³தா⁴ கோ³பால நந்த³ந: ।


பார்தோ² வத்ஸ: ஸுதீ⁴ர்போ⁴க்தா து³க்³த⁴ம் கீ³தாம்ருʼதம் மஹத் ॥

இடையர்களை மகிழ்விக்கும் கண்ணன், உபநிடதங்களாகிய பசுக்களை கறந்து அர்ச்சுனனாகிய கன்றுக்குத் தந்தான்; அவன் கறந்த பாலே சிறந்த கீதை. அதுவே அமுதம். அதை அருந்துபவர்களே நல்ல புத்திமான்கள். 

அர்ச்சுனனாகிய கன்றை முன்னிட்டு, அந்தப் பாலைக் கறந்து நமக்கும் அளித்தான் கண்ணன். இங்கே கோதையும், கோபியரை முன்னிட்டு அந்த அமுதத்தை, திருப்பாவை பாசுரங்களாக நமக்கு அளிக்கிறாள். (திருப்பாவை பாசுரங்களுக்குள் பொதிந்து கிடைக்கும் உபநிடதங்களின் கருத்துக்களை மேற்கோள்களாகக் காட்டும் எண்ணம் அடியேனுக்கு இருந்தாலும், கட்டுரையின் நீளம் கருதி, அவற்றைத் தவிர்க்க வேண்டியிருந்தது.)


நாளை 12ம் பாசுரத்தை அனுபவிப்போம்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

அடியேன்,

Saturday, 28 December 2024

திருப்பாவை 09

 *திருப்பாவை பாசுரம் 09*


எட்டாவது பாசுரத்தில் ஆண்டாளும் அவளது தோழிகளும் துயிலெழுப்பிய பெண், கண்ணனுக்கு உகந்தவள் மட்டுமே, ஆனால்  இப்பாசுரத்தில் எழுப்பப்படும் பெண் ஞானமிக்கவள்! உறங்கும் பெண்ணின் சிறப்பு கருதியே, ஆண்டாள் அவளை "மாமான் மகளே" என்று சொந்தம் கொண்டாடுகிறாள் என்பதும் குறிப்பிடத்தக்கது!


தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,

தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!

மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?

மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று  

நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்!

[மாசற்ற வைர வைடூரியங்கள் பதிக்கப்பெற்ற மாடத்தில், நாற்புறமும் தீபங்கள் ஒளிர, நறுமணப்புகை எங்கும் வீச, மென்மையான படுக்கையில் உறங்கும் மாமன் மகளே!மணிகள் பதித்த கதவினை திறப்பாயாக! மாமிமாரே! துயிலுறும் உங்கள் மகளை எழுப்ப மாட்டீர்களோ?

அவள் என்ன ஊமையோ, செவிடோ , (கர்வத்தால் உண்டான) சோம்பல் மிக்கவளோ? அல்லது, எழுந்திராதபடி காவலில் வைக்கப்படுள்ளாளோ? ஏதேனும் மந்திரத்திற்கு வயப்பட்டுள்ளாளோ? இப்பெண்ணை எழுப்பி பாவை நோன்பிற்கு கூட்டிச் செல்வதற்கு "வியத்தகு கல்யாண குணங்களை உடையவனே, வைகுண்டத்தில் உறைபவனே, திருமகளின் நாயகனே" என்றெல்லாம் எம்பெருமானின் ஆயிரம் நாமங்களை உரக்கச் சொல்வோம்!]


விளக்கவுரை:

தூமணி மாடத்து:

துவளின் மாமணி மாடமோங்கும் துலைவில்லிமங்கலம்  என்றருளிச் செய்தார் நம்மாழ்வார். அதாவது (துவள் இல்) குற்றமில்லாத மிகுந்த ஒளி பொருந்திய இரத்தினக் கற்களாலே செய்யப்பட்ட மாடங்கள் எங்கும் உயர்ந்துள்ள “துலைவில்லி மங்களம் என்ற நகரமாகும்.  அதாவது, மணிகளின் குவியலிலிருந்து குற்றமுள்ள மணிகளை ஒத்துக்கிக் கழித்து, குற்றமில்லா மணிகளை தேர்வு செய்து, பதித்துக் கட்டப்பட்ட உயர்ந்த மாடங்கள், துலைவில்லிமங்கலத்தில் உள்ளனவாம்—இது திருவாய்மொழி.

ஆண்டாள் நாச்சியாரோ தூமணி மாடம் என்கிறாள். அவ்வாறு குற்றம் பார்த்து கழிக்க வேண்டாது எல்லாமே தூமணியாய் உள்ளபடியால், சிறக்க அமைந்த மாடம் என்று பொருள்.

சுற்றும் விளக்கெரிய:

அப்பெண்ணின் மாளிகையில் எப்பொழுதுமே இரத்தினங்கள் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. ஆயினும் மங்களகரமாக தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் கிருஷ்ணன் எப்போது வருவான் என்று தெரியாது. வந்தபின்னும், இவள் கை பற்றி எங்கு உலவுவான் என்று தெரியாது. எனவே சுற்றும் விளக்கேற்றி வைக்கிறார்கள்.

(உண்மையில் ஓரிடத்தில் மட்டுமே விளக்கிருந்தாலும் இத்திருமாளிகையில் சுற்றிலும் உள்ள ரத்தினங்களில் ஒளி பிரதிபலித்து, சுற்றிலும் விளக்குள்ளதுபோல் பிரகாசித்தது.)

துயிலணைமேல் கண்வளரும்:

இளைய பெருமாளைப்போல, *இமைப்பிலன் நயனம்*

என்று நாங்கள் வெளியே துன்புற, இவள் இவ்வாறு கிடந்து உறங்குவது எங்ஙனம்? என்று யோசித்தாள்.

இவள் தகப்பனார், அரங்கனின் பள்ளிகொண்ட அழகை, படுத்த பைந்நாகணைப் பள்ளிக்கொண்டான்  என்று அனுபவித்தாற்போல, ஆண்டாள், இங்கு, தன்னை அடைய வேண்டிய பொறுப்பு கண்ணணுக்கல்லவோ” என்று மார்மீது கைவைத்து இவள் உறங்கும் அழகை அனுபவிக்கிறாள்.

மாமான் மகளே:

ஸ்வாமினியாகவும், தோழியாகவும் கருதி அழைத்த பின்பு, இப்பொழுது ஒரு உறவு முறையும் சொல்லி அழைக்கிறார்கள். இங்கு, மாமன் என்பது ஸ்ரீமாலாகாரரைக் குறிப்பதாக கொள்வர்.

[கிருஷ்ணனையும் பலராமனையும் அக்ரூரர் மதுரா நகருக்கு அழைத்து வருகிறார்கள். வழியில் மாலைகள் வாங்க,  சுதாமா என்னும் மாலாகாரர் (மாலைகள் தயாரிப்பவர்) இருப்பிடத்தை அடைந்தனர். இவர்களை அடையாளம் கண்டுகொண்ட மாலாகாரர், தன்னிடமுள்ளவற்றில் சிறந்த இரண்டு மாலைகளைக் கொண்டு வந்தார். அவர்களிடம் அவற்றைக் கொடுக்குமுன் தன் முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு கொடுத்தார். மாலையின் அழகில் மயங்கி, அதை தான் உபயோகிக்க எண்ணம் கொண்டால் அம்மாலை ஸ்ரீ கிருஷ்ணனை சென்று சேராமல் போய்விடும். மேலும், அதனால் தன் முகம் வாடினால் அது ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் வருத்தத்தை அளிக்கும். தனது சிறந்த படைப்பு, ஸ்ரீ கிருஷ்ணனுக்கே சமர்ப்பணம். எனவே, தனது முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு மாலைகளை கொடுத்தார். சுதாமாவின் இச்செயலை, அக்ரூரர் பாராட்டினார் என்கிறது கீதா பாஷ்யம்.] 

ஒருவேளை, ஆண்டாள் தானும் ஒரு மாலாகாரர் மகள்தானே என நினைத்து, *மாமான் மகளே* என்று அழைக்கிறாள்.

மாமீர் அவளை எழுப்பீரோ:

அங்குள்ள பெண்டிரை, மாமிமார்களே! நீங்களாவது அவளை எழுப்பக் கூடாதா? என்று கேட்டும் பயனில்லை. அந்தப் பெண்டிருள் ஒருத்தி அவள் தாயாக இருக்க அவளிடம் முறையிடுகிறார்கள்.

உன் மகள்தான் ஊமையோ, செவிடோ, அனந்தலோ:

வாக்கு, செவி, மனம் முதலிய எல்லாமே கண்ணனிடம் ஈடுபட்டிருப்பதால் இப்படிக் கிடக்கிறாளோ? மந்திர வசப்பட்டாளோ? அவன் நாமங்களைச் சொன்னாலாவது எழுகிறாளோ பார்ப்போம்.

மாமாயன், மாதவன், வைகுந்தன்:

"பேருமோராயிரம் பிற பல உடைய எம்பெருமான்" எனப்பட்ட நாமங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். உன்மகள் எழுந்திராத குறையேயொழிய நாங்கள் சொல்லாத குறையில்லை என்கிறார்கள்.


பாசுரச் சிறப்புகள்:

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய:

தூமணி மாடம் என்பது, அழிவில்லாத, ஞானத்தை உள்ளடக்கிய நான்மறையை (வேதம்) குறிப்பில் சொல்கிறது. "சுற்றும்" என்பது வேதத்தின் ஆறு அங்கங்களை (சிக்க்ஷை, கண்டம், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம்) குறிக்கிறது. விளக்கு என்பது வேதசாரத்தை புரிந்து கொள்ள உதவும் ஸ்மிருதி, புராண, உபநிடதங்கள் சார்ந்த ஞானத்தை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது. இப்போது உறங்குபவளின் ஞானச் சூழல் புரிகிறதல்லவா ?


ஞான தீபமாகிய "விளக்கு" என்ற பதத்தை ஆழ்வார் பாசுரங்களில் பல இடங்களில் காணலாம்.

ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன்,

உய்த்துணர்வென்னும் ஒளி கொள் விளக்கேற்றி,

மிக்கானை மறையை விரிந்த விளக்கை

என்று பல உதாரணங்களைக் காட்ட முடியும்.

தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்:

"தூபம் கமழ" என்பது, ஞானம், அனுஷ்டானம் மற்றும் வைராக்கியம் என்ற மூன்று விஷயங்களை குறிப்பில் உணர்த்துவதாக அபினவ தேசிகன் கூறுவார்.

"உன் மகள்" என விளிக்கப்படுவதால், அவ்வடியவள் வைணவ ஆச்சார்ய சம்பந்தம் உடையவள் என்பது புலப்படுகிறது.

ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?: 

அஷ்டாட்சர மந்திரத்தின் ஆதிக்கமே இந்த ஏமப் பெருந்துயிலுக்கு காரணம்!

இங்கு ஆண்டாள் உறங்கும் பாகவதையின் தாயாரை, துணைக்கு அழைப்பதால் (மாமீர் அவளை எழுப்பீரோ?), மோட்ச புருஷார்த்தத்தை அடைய புருஷகாரத்துடன் (பாகவதையின் தொடர்பு) ஆச்சார்ய அனுக்ரகமும் அவசியம் என்பது வலியுறுத்தப்படுகிறது!


மாமாயன் என்பது நீர்மையையும், மாதவன் என்பது திருமகளின் நாயகன் என்பதையும், வைகுந்தன் என்பது பரத்துவத்தையும் குறிப்பன.


இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய சங்கதி ஒன்றுண்டு. பெரிய பிராட்டியின் சம்பந்தத்தினாலேயே, நீர்மையும், பரத்துவமும் பகவானுக்கே சித்திக்கும் என்பதை கோதை நாச்சியார், 'மாதவன்' என்பதை நடுவண் (மாமாயன், வைகுந்தன் என்ற பதங்களுக்கு இடையில்) வைத்து மிக அழகாக நிலைநாட்டி விடுகிறார் !


நாளை 10ம் பாசுரத்தை அனுபவிப்போம்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்.

அடியேன்,

திருப்பாவை 10a (இணைப்பதிவு)

 *திருப்பாவை 10*

(இணைப்பதிவு)


*பகவானிடம் சவால் விட்ட கூரத்தாழ்வான்*


நாலூரான் செய்த சதியால் கூரத்தாழ்வான் கண்களை இழந்தார். அன்றைக்கு இருந்த அரசியல் நிலையால், இராமானுஜர் சோழதேசத்தில் இருக்க முடியாமல், மேல்நாடு என்று சொல்லப்படும் திரு நாராயணபுரம் சென்றார். கூரத்தாழ்வான் திருவரங்கத்தில் இருக்கப் பிடிக்காமல், திருமாலிருஞ்சோலைக்கு வந்தார். திருக்கோட்டியூரிலிருந்து பல யாதவர்களை அழைத்துக்கொண்டு சென்று நந்தவனம் ஏற்படுத்தி புஷ்ப கைங்கர்யங்களைச் செய்து கொண்டிருந்தார்.


 ஒரு நாள் அழகனுக்கு மாலை கைங்கர்யம் செய்துவிட்டு குடிலுக்குத் திரும்பினார். பூக்கூடையை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு அப்படியே அமர்ந்தார். மறுபடி மறுபடி ‘‘மாயனை மன்னு வடமதுரை” என்கின்ற பாசுரம் மனதைச் சுற்றிச்சுற்றி வந்து அழுத்தியது. ஏதோ இழந்தது போல நெஞ்சு தவித்தது.

ஏக்கம் பிறந்தது. கண்களில் கண்ணீர் சுரந்தது. 


இதே சமயம் திருமாலிருஞ்சோலை அழகர் கருவறையில் ஒரு காட்சி. அழகர் ஆனந்தமாக பட்டாடை உடுத்திக் கொண்டு அற்புத தேஜஸ்ஸோடு சேவை தந்து கொண்டிருந்தார்.  ஆனால், அழகர் மனதில் ஒரு காட்சி.


அட...இதென்ன இந்த கூரத்தாழ்வான் தன் குடிசையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். இப்பொழுது தானே நமக்கு மாலை சமர்ப்பித்துவிட்டுச் சென்றார். இப்பொழுது என்ன அழுகை? என்ன வருத்தம் அவருக்கு? அழகருக்கு மனம் கொள்ளவில்லை. என் பக்தன்... என் குழந்தை... என் உயிர்... (மச் சித்தா: மத் கத பிராணா:)


நம்மையே நம்பி வந்த அவருடைய வருத்தத்தை உடனே தீர்க்க வேண்டும் என்று துடித்தார். பூஜையில், அவர் மனம் லயிக்கவில்லை.  உடனே கூரத்தாழ்வான் வருத்தத்தின் காரணம் அறிய வேண்டும். அடுத்த நிமிடம் ஒரு முதியவராக வேடம் கொண்டார். கூரத்தாழ்வான் குடில் நோக்கிச் சென்றார்.


யாரோ முதியவர் நம்மைத்தேடி வருகிறார். இத்தனை நாளாக நம்மைத் தேடி யாரும் இங்கு வந்தது இல்லையே... ஓ... அழகர் சேவைக்கு வந்திருப்பார் போலும். சிரமப்பரிகாரம் செய்து கொள்ள இந்த குடிலுக்கு வந்து விட்டார். “சரி... இன்று ஒரு அதிதி வந்துவிட்டார்...கவனிப்போம்” என்று அவருக்கு ஒரு ஆசனத்தை இட்டார். ‘‘வாருங்கள் வாருங்கள்” என வரவேற்றார். முதியவர், சுற்றி வளைக்காமல் கூரத்தாழ்வானைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.


‘‘உம்மைப் பார்த்தால் பரம சாது போல் தெரிகிறது. எல்லா சாஸ்திரங் களிலும் கரை கண்டவராக உமது முகம் வித்வத் தேஜஸோடு தெரிகிறது. ஆயினும், இன்றைய தினம் நீர் துக்கப்படக் காரணம் என்ன?” என்று கேட்டதும் கூரத்தாழ்வான் பதில் சொன்னார்.


‘‘அதை தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஏதோ என்னுடைய விசாரம். நான் அழுகிறேன். நீங்கள் வந்ததற்கு அழகரை சேவித்துவிட்டுச் செல்லுங்கள்”.  


‘‘அதென்ன அப்படிச் சொல்லி விட்டீர்? உம்முடைய அழுகையின் காரணத்தை தெரிந்து கொள்ளாமல் நான் போகமாட்டேன்”


 ‘‘ஸ்வாமி... உமக்கு வயது அதிகமாகிவிட்டது. இதில் என் கஷ்டத்தை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்?”


‘‘உன்னுடைய துன்பத்தை நீக்குவதற்கு முயற்சி செய்யப் போகிறேன்”.


கூரத்தாழ்வான் விரக்தியாகச் சிரித்தார்.‘‘பெரியவரே, என் துன்பம் என்னோடு இருக்கட்டும். ஏன் மேலே மேலே பேசிக் கொண்டு போக வேண்டும்? என் துன்பத்தை நீக்குவதற்கு உம்மால் முடியாது?” 


‘‘சரி நீர் சொல்ல வேண்டாம். உம்முடைய துன்பத்தை யூகிக்கிறேன்”


‘‘என்னுடைய துன்பத்தை யூகிக்க முடியுமா?”


‘‘ஏன் யூகிக்க முடியாது?”


‘‘சரி சொல்லுங்கள்”.


‘‘இவ்வளவு பேர் இந்த அழகனை சேவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவரை சேவிப்பதற்கு கண்ணில்லை என்று நீர் வருந்துகிறீர். அதுதானே?”


எதைப் பார்க்கக் கூடாதோ அதை பார்க்காமல் இருப்பதற்காகத்தான் இந்த கண் போனது. நான் எப்பொழுதுமே எம்பெருமானை மனதிலே தியானிப்பவன். அதனால் எனக்கு இந்தப் புறக்கண் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அது தேவையில்லாத விஷயத்தை எல்லாம் இந்த கர்ம உலகத்தில் பார்க்க வைக்கும். அழகர் என் நெஞ்சிலே இருக்கின்றார். ஆகையினால் எனக்கு புறக்கண் வேண்டிய அவசியமில்லை. அதனால் அதை இழந்ததற்கான வருத்தமும் எனக்கு இல்லை” என்று அதிரடித்தார்  கூரத்தாழ்வான்.


‘‘கண்ணிழந்த வருத்தம் உமக்கு இல்லையா?


‘‘இல்லை” 


‘‘சரி ஒருவேளை உன்னுடைய வருத்தத்திற்கு காரணம் இப்படி இருக்குமா?”


‘‘எப்படி?”


‘‘அரங்கனின் அடிவாரத்தில் கிடந்தவர்கள் நீங்கள். அங்கே அரசாங்க எதிர்ப்புக்கு அஞ்சி இங்கே வந்து இருக்கும்படியாகிவிட்டதே, நாம் எப்பொழுது அரங்கனை சென்று சேவிப்பது என்கின்ற வருத்தமா?” 


‘‘அதுவும் இல்லை. என்னுடைய ஆசாரியன் ராமானுஜர் அரங்கனை சேவிக்க முடியாத நிலை இருக்கும் பொழுது, நான்மட்டும் அரங்கனை சேவிப்பதால் எனக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? ராமானுஜரை அங்கே இருந்து பிரிய அரங்கன் மனம் ஒப்பி விட்டான்.


என்னுடைய ஆசாரியனை பிரித்த அரங்கனை நான் சேவிப்பதை விட சேவிக்காமல் இருப்பது தான் நல்லது. அதனால், அரங்கனை சேவிக்காத வருத்தம் எனக்கு கொஞ்சமும் இல்லை”


இதனை கேட்ட பெரியவருக்கு கோபம் வந்துவிட்டது.‘‘இதோபார். உனக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் வந்தேன். என்னால் உன்னுடைய வருத்தத்தைத் தீர்க்க முடியும்? எந்த வருத்தமாக இருந்தாலும் என்னால் போக்க முடியும்.


”மீண்டும் கூரத்தாழ்வான் சிரித்து விட்டார்.  “உம்மால் போக்க முடியாது என்று சத்தியம் செய்கின்றேன். பிறகு “என்னால் வருத்தத்தைத் தீர்க்க முடியும்” என்று திரும்பத் திரும்ப சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது? நீங்கள் போகலாம்” என்றார் கூரத்தாழ்வான். 


‘‘நான் யார் தெரியுமா? நான் யார் என்று தெரிந்தால், நீ போகச் சொல்ல மாட்டாய். நான் யார் என்று தெரிந்து விட்டால், என்னால் உன்னுடைய துன்பத்தைப் போக்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டு நீ பதில் சொல்வாய்” என மிகுந்த கோபம் வந்தது அந்த பெரியவருக்கு.


 ‘‘ஸ்வாமி...நீர் யாராக இருந்தாலும் சரி, உம்மால் என்னுடைய துன்பத்தை போக்க முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை. நீர் போகலாம்” என்றார் கூரத்தாழ்வான்.


 ‘‘என்னை யார் என்று தெரிந்து கொண்டு போகச் சொல்கிறாயா?”

‘‘ஆம்...தெரிந்துகொண்டுதான் போகச் சொல்லுகிறேன்”.


‘‘ நான் யார் என்று சொல். என்னுடைய பெயரைச் சொல்.”


‘‘நீர்தான் அந்த திருமாலிருஞ்சோலை அழகன். சுந்தர பாஹூ. சுந்தரத் தோளுடையான்” என்று கம்பீரமாக கூரத்தாழ்வான் சொன்னார். 


‘‘எம்மை எப்படி தெரிந்து கொண்டீர்?”

‘‘நாற்றத் துழாய் முடி நாரயணனை” தெரிந்து கொள்ளவா முடியாது? காலையில், திருப்பாவை ஐந்தாம் பாசுரம். அடியேன் திருமாலையைச் சமர்ப்பித்துவிட்டு நின்ற பொழுது, தேவரீர் சூடிய மாலையின் மணம் அறிந்து கொண்டேன். அதே மணம் தான் இப்பொழுதும் இங்கே இருக்கிறது. அப்படியானால், வந்தது யார் என்று தெரிந்து கொள்வதில் என்ன சிக்கல் இருக்க முடியும்?” என புன்சிரிப்போடு கூரத்தாழ்வான் சொன்னார்.


‘‘சரி, நான் யார் என்பதை தெரிந்து கொண்டு விட்டாய் அல்லவா. நான் சர்வசக்தன் அல்லவா! இப்பொழுது சொல், உனக்கு என்ன குறை? ஏன் அழ வேண்டும்? என்ன வருத்தம்?”


‘‘திருமாலிருஞ் சோலைப் பெருமானே! இந்த அடியவனைத் தேடி தேவரீர் வந்தது குறித்து மகிழ்ச்சி. அது போதும். என்னுடைய வருத்தம் குறித்து தேவரீர் கவலைப்பட வேண்டாம்.”


‘‘ இல்லை, சொல்.”


‘‘வருத்தத்தை நீக்க உம்மால் முடியாது. நீர் தேவாதிதேவனாக இருந்தாலும்...”


‘‘என்ன இந்த ஒரு விஷயத்தை செய்ய நமக்கு சக்தி இல்லையா?”


‘‘ஆம்”.


‘‘ காரணம்?”


‘‘நீர்தான் காரணம். நீர் கொடுத்த வாக்கு தான் காரணம்.”


‘‘முதலில் உன்னுடைய துயரத்தைச் சொல்”.


‘‘விட மாட்டீர் போலிருக்கிறதே. சரி சொல்கிறேன். நீர் ஆயர்குலத்து அணி விளக்காகத் தோன்றினீர் அல்லவா”.


‘‘ஆமாம் கண்ணனாக தோன்றினோம்”.


‘‘அப்பொழுது உம்மோடு எத்தனை எத்தனை ஆயர்குல பிள்ளைகள்

விளையாடினார்கள்?”


‘‘ஆமாம்…

 தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடை இட்டு வருவான்

பொன் ஏய்  நெய்யோடு பால் அமுதுண்டொரு புள்ளுவன் பொய்யே தவழும்

மின்னேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே

அன்னே உன்னை அறிந்து கொண்டேன்.

என்று  பெரியாழ்வார் தான் இதையெல்லாம் பிள்ளைத் தமிழாகப் பாடியிருக்கிறாரே”.


‘‘அதைக் கேட்கும் பொழுதுதான் அடியேனுக்கு அந்த ஏக்கம் வந்தது. தாங்கள் அவதரித்த போது, ஒரு பிறவி வாய்க்கப் பெற வில்லையே என்கிற வருத்தம் தான் அடியேனை துன்புறுத்துகிறது. அப்படி பிறந்திருந்தால், ஆழ்வார் சொன்னதையெல்லாம் நேரில் அனுபவித்திருக்கலாமே என்கிற ஏக்கம் தான் காரணம்”.


‘‘இவ்வளவுதானே, உன்னுடைய ஏக்கத்தை நிறைவேற்றி வைப்போம். உனக்கு வேண்டியது ஆயர்குல பிறவி. கொடுத்து மகிழ்விப்போம்.” என்று மகிழ்ச்சியோடு அழகர் சொன்னார். 


‘‘தேவரீரால் முடியாது” என்று பலத்த சிரிப்புடன் கூரத்தாழ்வான் சொன்னார்.


‘‘ஏன் முடியாது? நான் சர்வ சக்தன்”.


‘‘அதனால்தான் சொல்லுகின்றேன். அடியேன் ராமானுஜர் சீடன். ராமானுஜருக்கு யாரெல்லாம் சீடர்களோ அவர்களுக்கு மறு ஜென்மம் கிடையாது என்று நீர் தானே வாக்கு தந்தீர். 

"புனர் ஜென்ம ந வித்யதே ந ச புனர் ஆவர்த்ததே"

என்பது தானே உண்மை. சத்தியம். உம்மாலும் மீற முடியாத சத்தியம். பிறவி இல்லாத ஒருவரை எப்படி மறுபடியும் பிறக்க வைப்பீர்? எனவே ராமானுஜர் அடியாராய் ஆனபிறகு நான் நினைத்தாலும் பிறக்க முடியாது. நீர் நினைத்தாலும் பிறக்க வைக்க முடியாது. அப்படி இருக்கும் பொழுது, ஒரு பிறவி எடுத்து, ஆயர் குலத்தில் பிறக்க வேண்டும் என்கின்ற அடியேன் எண்ணத்தை, ஆசையை, எப்படி உம்மால் நிறைவேற்ற முடியும்?” என கூரத்தாழ்வான் சொன்னதும், அழகர் வாய் பேச முடியாமல் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.


“அதனால்தான் சொன்னேன். அந்த எம்பெருமான் ஆனாலும் அடியேன் துக்கத்தைப் போக்க முடியாது. நாமே தான் கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டும்” என்று கூரத்தாழ்வான் சொன்னதும், அழகரின் முகத்தைப் பார்க்க வேண்டுமே.‘


“ஆழ்வான்.. உம்மிடம் நாம் தோற்றோம். நீர் சொன்ன வார்த்தை சத்திய வார்த்தை” என்று சொல்லி  விட்டு அழகர் அங்கிருந்து தன்னுடைய ஆஸ்தானத்துக்கு சென்றார். இந்த அழகரின் அழகின் மீது தான் 132 பாடல்களால் _*சுந்தர பாஹூஸ் தவம்*_ என்கின்ற நூலை இயற்றினார் கூரத்தாழ்வான். இப்படி எண்ணற்ற திருவிளையாடல்களை திருமாலிருஞ்சோலை சுந்தரராஜன் நடத்தி இருக்கின்றான். நம்முடைய மனமும் அவரிடத்தில் ஈடுபட்டால் நம்மையும் அவன் ஆட் கொள்வான்.


கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம்.

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்.

அடியேன்,

திருப்பாவை 10

 *திருப்பாவை பாசுரம் 10*


இப்பாசுரத்தில் துயிலெழுப்படும் இடையர் குலப்பெண் தன்னை பகவத் பக்தியில் மூழ்கித் திளைத்தவளாக எண்ணிக் கொண்டிருப்பவள்! இவ்வடியவள் ஓர் உத்தம அதிகாரி ஆவாள். இவள் கண்ணனுக்கே ஆனந்தம் தரும் அடியவள்!


இவள் முதல் நாள், நோன்பைப்பற்றியும் அதன் ப்ரயோஜனத்தைப் பற்றியும் நிறைய பேசிவிட்டு இப்போது தூங்குகிறாள். கும்பகர்ணனையே ஜெயித்தவள் போல் தூங்குகிறாள். இவர்கள் அவளை எழுப்ப குரல் கொடுத்தும், ஆற்ற அனந்தலுடன் பதில் பேசாமல் உறங்குகிறாள். அதனால் வெளியே ஆண்டாள் இவளை சிறிது கிண்டல் செய்து பாடுகிறாள். உயர்ந்த மோக்ஷ புருஷார்த்தம் இருக்க தாழ்ந்த சுவர்க்கானுபவத்துக்கு ஆசைப்படுவதுபோல், க்ருஷ்ணனை அனுபவிப்பது இருக்க இப்படி தூக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாயே! ஏ.. ஸ்வர்க்கம் போகின்ற அம்மனே! என்று கேலி செய்கிறாள்.


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்மால்

போற்றப்பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?

ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!


[பாவை நோன்பிருந்து இப்பிறப்பில் சொர்க்கம் அடைந்து சுகம் பெறப்போகும் பெண்ணே! வாசல் கதவை நீ திறக்காவிட்டாலும் கூட எங்களோடு ஒரு வார்த்தையும் பேசலாகாதோ? நறுமணமுள்ள துளசி மாலையை தலையில் சூடிய நாராயணன், நம்மால் போற்றி வணங்கப்படத் தக்கவனும், நமக்கு வேண்டிய பலன்களைத் தந்தருளும் தர்ம பரிபாலகனும் ஆவான் !


ராமனாக அவதரித்த காலத்தில், எம்பெருமானால் மரணத்தின் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன், தனக்கே உடைமையாகிய பெருந்தூக்கத்தை (உறக்கத்தில் உன்னை மிஞ்ச முடியாமல் தோற்றுப் போய்!) உன்னிடம் தந்து விட்டுச் சென்றுவிட்டானோ? எல்லையில்லாச் சோம்பல் கொண்டவளே! எங்களுக்கு கிடைத்தற்கரிய ஆபரணம் போன்றவளே! தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக!]


பாசுரச்சிறப்பு:-


திருப்பாவை முப்பது பாசுரங்கள் பெரும்பாலும் பரமனின் கிருஷ்ணாவதாரத்தின் பெருமை சொன்னாலும், நான்கு பாசுரங்கள் ஸ்ரீராமாவதாரப் பெருமையைப் பாடுகின்றன. அவற்றில் இது முதலாவது ஆகும்.(மற்றவை,12வது, 13வது, 24வது பாசுரங்கள்.)


மேலே, இவள் உறக்கத்திற்கு கும்பகர்ணனை உதாரணமாக சொல்கிறாள். நாற்றத்துழாய் முடி நாராயணன் எனும்போது ஓரிரு நிகழ்வுகளை நினைவு கூர்கிறேன்.


வில்லி பாரதத்தில், அருச்சுனன் தீர்த்த யாத்திரையாக ராமேசுவரத்தை அடைந்தார். உடனே, சக்ரவர்த்தி திருமகன் திருவடி கலந்த அம்மண்ணை வணங்கி, அதில் சிறிது எடுத்து முகர்ந்து பார்த்தார். அருகிலிருந்தோர் வியக்க, அருச்சுனன் "சென்றவிடம் துளவம் நாறும்" என்றார். இராமாயண காலம் திரேதா யுகம். அருச்சுனன் காலம் துவாபர யுகம். ஆனாலும் பகவான் நடந்த இடத்தில் திருத்துழாய் மணம் இருக்குமென எதிர் பார்த்தால், அத்திருத்துழாயின் பெருமைதான் என்னே!


அடுத்து, சோழ மன்னன் துன்புறுத்தலால், அநீதியால், கண் பார்வை இழந்த கூரத்தாழ்வான், திருமாலிருஞ்சோலையில் துளசியும் பூஞ்செடிகளும் நட்டு அழகருக்கு புஷ்ப கைங்கர்யம் செய்துவந்தார். அவரை சந்திக்க வந்த அழகர், ‘தாம் யார் என்று கேட்க’ ஆழ்வானும் அவரிடமிருந்து வந்த துழாய் மணத்தை வைத்து, "வந்தது அழகனே" என்றார். (இது கூரேசர் அழகனுக்கே சவால் விட்ட ஸ்வாரஸ்யமான வரலாறு. இதை இணைப் பதிவாகப் பதிவிடுகிறேன்.)


மேலும், நம்மாழ்வார் தம் திருவிருத்தத்தில், நாயகி பாவத்தில், கண்ணனைப் பிரிந்து நோய்வாய்ப் பட்டிருக்கும் நோய் தீர்க்க, கண்ணனது தொடர்பு கொண்ட திருத்துழாய் மாலையையோ, ஓர் இலையையோ, துழாய்க் கொம்பையோ, துழாய் வேரையோ அல்லது அவ்வேரில் சேர்ந்த மண்ணையோ இவள் மேல் இட நோய் தீரும் என்கிறார். (திருவிருத்தம் 53)


ஆகவே, திருத்துழாயின் பெருமை பற்றிச் சொல்வதானால், ஒரு முழு நீளக் கட்டுரையே எழுத வேண்டியிருக்கும். (சந்தர்ப்பம் கிடைத்தால் பின்னர் எழுதுகிறேன்)


பூரண சரணாகதியை அனுசரிக்கும் பட்சத்தில் (நோற்று) கர்மயோகத்தை கடைபிடிக்காவிடினும் (வாசல் திறவாதார்) எவ்வித தடங்கலுமின்றி (மாற்றமும் தாரார்) அவ்வடியவர்க்கு மோட்ச சித்தி வாய்க்கப் பெறுகிறது (சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்).


இங்கு "பெருந்துயில்" என்பது அறியாமையையும், "கூற்றம்" என்பது புலன்சார் இன்பங்களையும் குறிப்பவையாம். இவையே பரமனைப் பற்றுவதற்கு தடைகளாக இருக்கின்றன.


இப்பாசுரத்தில் "சுவர்க்கம்" என்பது பகவானுடன் ஐக்கியமாவதைக் (மோட்சம் சார்ந்த பகவத் அனுபவத்தை) குறிக்கிறது. இவ்வடியவள் பூரண சரணாகதிக்குரிய சடங்குகளை செய்து முடித்த திருப்தியுடன் பரமனின் நெருக்கம் தந்த ஆனந்த நிலையில் இருக்கிறாள்.

மற்றொரு விதத்தில் சுவர்க்கம் = சு + வர்க்கம் = நல்ல + சுற்றம்

அதாவது, உறங்கும் அடியவள் சிறப்பு மிக்க வைணவ அடியார்களின் நற்சுற்றத்தைச் சேர்ந்த பெருமை பெற்றவள் என்பது புலனாகிறதல்லவா?


"அருங்கலமே" என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.

கிடைத்தற்கரிய 1. பாத்திரம் 2. அணிகலன்

அதாவது, ஒரு வைணவ அடியார், இறையருளை தேக்கி வைக்கும் பாத்திரமாகவும், மனதூய்மை, பக்தி, தர்ம சிந்தனை, எளிமை, கர்வமின்மை போன்ற சத்வ குணங்களாகிய அணிகலன்களாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்.


பூரண சரணாகதி ஒன்றே மோட்சத்திற்கான ஒரே மார்க்கம் என்பதையும், புத்தி கூர்மையும் ஞானமும், அகங்காரத்தைத் தந்து (ஒருவரை) திசை திருப்பி விடும் அபாயத்தையும், இறை சேவையும், சமூக சேவையும் கைகோர்த்து இருக்க வேண்டிய அவசியத்தையும் கோதை நாச்சியார் கற்றறிந்த வைணவ அடியார்களுக்குத் தரும் செய்தியாக இப்பாசுரத்தை காண முடிகிறது.


அடுத்த 11வது பாசுரத்தை நாளை அனுபவிப்போம்.

ஆண்டாள்  திருவடிகளே சரணம்.

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்.

அடியேன்,