Popular Posts

Friday, 7 June 2024

முதலாழ்வார்கள் (பாகம் 2)

 *முதலாழ்வார்கள்* (பாகம் 2)


*பொய்கையாழ்வார்*

வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார். காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவெஃகா எனும் பதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலுள்ள பொய்கையில் பிறந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப்படுகின்றது. முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.

 

*பெயர்காரணம்*

காஞ்சிபுரத்தில் பொற்றாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எனப் பெயர் பெற்றார்.

*பாஞ்சஜன்ய அம்சம்*

சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவ கொள்கை. இதன்படி பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கின் அம்சம் ஆவார்.

 

*பூதத்தாழ்வார்*

வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இது நூறு வெண்பாக்களால் ஆனது.

 

*அவதாரத்தலம்*

மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலை அண்டிய பகுதியிலேயே இவர் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இக் கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது. இக் கோயிலின் வெளிச் சுவரிலே அதனைப் பூதத்தாழ்வாரின் அவதாரத்தலம் எனக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

 

*கௌமோதகி அம்சம்*

திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார் என வைணவம் நம்புகின்றது. திருமாலின் மீது இவர் கொண்ட பக்தியைக் காட்டும் இவரது பாடல்களிலே இவருடைய தமிழ்ப் பற்றும் புலப்படுகின்றது.

 

*பேயாழ்வார்*

வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப்படும் மூன்று ஆழ்வார்களுள் ஒருவர். திருமயிலைஎன வழங்கிய மயிலாப்பூரைச் சேர்ந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் இவராவார், இது நூறு வெண்பாக்களைக் கொண்டது.

*நந்தக அம்சம்*

சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்று வைணவம் நம்புகின்றது. இதன்படி பேயாழ்வார் நந்தகம் எனப்படும் வாளின் அம்சம் கொண்டவர் என்கின்றனர்.

 

*சைவமும், வைணவமும்*

இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம், வைணவம் என்பவற்றுக் கிடையே போட்டி நிலவிய கால கட்டத்தில், இவ்விரு சமயப் பிரிவுகளிடையே ஒற்றுமை காண விழைந்தவர் பேயாழ்வார் எனக் கருதப்படுகிறார்.


இனி, திருமழிசை ஆழ்வாரின் வைபவத்தை அடுத்த பதிவில் காண்போம்.


ஆழ்வார், ஆச்சார்யன் திருவடிகளே சரணம்.

அடியேன்,

சந்தான சேகர்.

Thursday, 6 June 2024

முதலாழ்வார்கள் (பாகம் 1)

 

*முதலாழ்வார்கள் மூவர்* (பாகம் 1)

பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் எனும் மூன்று ஆழ்வார்கள்  வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதல் மூன்று ஆழ்வார்கள். ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார். இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள்.

 

ஆனந்தம் உள்ளடங்காமல் மேலே வழிந்து செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதி முறையே முதல் திருவந்தாதி (பொய்கையாருடையது), இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாருடையது), மூன்றாம் திருவந்தாதி (பேயாருடையது) எனப்பெயர் பெற்றன. இறைவனின் நாடகம் உண்மையில் நடந்தது என்று இந்து சமயத்தார் நம்புவதற்கு இம்மூன்று திருவந்தாதிகளிலுள்ள பாடல்களே முக்கிய சான்றுகளாகின்றன.

 

மூன்று ஆழ்வார்களையும் ஒரு சேர்ந்து போற்றப்படும் காரணங்கள் பின் வருமாறு.

 

பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகிய மூவரும் முறையே அடுத்தடுத்த மூன்று நாட்களில் அவதரித்தார்கள். இவர்கள் த்வாபர யுக முடிவுக்கும் கலியுக ஆரம்பத்திற்கும் இடையிலான யுக சந்தியில் அவதரித்தார்கள்.

 

இவர்கள் மூவருமே அயோனிஜர்கள் – அதாவது தாயின் கருவிலிருந்து பிறவாதவர்கள். இவர்கள் எம்பெருமானின் தெய்வீக கருணையால் பூமியிலிருந்து தோன்றினர்.


இவர்கள் பிறந்ததிலிருந்தே எம்பெருமான் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் – எம்பெருமானால் பரிபூரணமாக அனுக்கிரகிக்கப் பட்டு, நாள் திங்கள் ஊழிதோறும் (சர்வ காலமும்) பகவத் அனுபவத்தில் திளைத்திருந்தவர்கள்.வாழ்வின் ஒரு தருணத்தில் சந்தித்துக் கொண்ட இவர்கள் மூவரும், அப்போதிலிருந்து ஒன்றாகவே தங்கவும், பற்பல திவ்ய தேசங்களுக்கு பயணிக்கவும் செய்தனர். இவர்கள் “ஓடித் திரியும் யோகிகள்“ – அதாவது எப்போதும் யாத்திரை செய்பவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.


உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே,வெவ்வேறு இடங்களில் பிறந்து எம்பெருமானை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தார். தனது அடியார்களை தனது உயிராக கொண்டிருக்கும் எம்பெருமான் (கீதை *ஞானி து ஆத்ம ஏவ மே மதம்*) இவர்களை ஒரு சேர காண திருவுள்ளம் கொண்டான். ஆதலால் அவன் ஒரு தெய்வீக திருவிளையாடல் புரிந்து மூவரையும் திருக்கோவிலூருக்கு ஒரு இரவுப் பொழுதில் வரவழைத்தான்.

 

அந்த இரவு பலத்த மழை பெய்த காரணத்தால், நக்ஷத்திர ஒளியும் மறைந்து, எதிரில் இருப்பவர் தெரியாத அளவு மேலும் இருட்டானது. ஒருவர் பின் ஒருவராக ஒரு சிறிய கொட்டாரத்தை (இடை கழி) வந்தடைந்தனர். அந்த இடமோ ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்கிற அளவாகவே இருந்தது. மூவரும் வந்ததால் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் தங்கள் தங்கள் முகவரியை பற்றி விசாரித்துக் கொண்டனர். அவர்கள், எம்பெருமானின் கல்யாண குணங்களையும், தங்கள் இறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கையில் திடீரென்று எம்பெருமான் திருமாமகளோடு அந்த இருட்டு மிகுந்த இடை கழியில் புகுந்தான். தன் அடியார்கள் இருக்கும் இடத்தில் தான் எம்பெருமானுக்கு எவ்வளவு ஆசை! எவர் புகுந்தார் என்று பார்ப்பதற்காக, புகுந்தவன், அவர்களை நெருக்கத் தொடங்கினான். மூவரும் ஒருமித்த குரலில், “எம்மை யார் இப்படி நெருக்குவதுஎன்று வினவ, “விளக்கேற்றிப் பாரும்என்ற விடை கேட்டது. அந்த மழையிலும் இருட்டிலும் விளக்குக்கு எங்கே போவது? ஆனால் இவர்கள் தெய்வப் பிறவிகள் ஆயிற்றே!! உடனே, பொய்கை ஆழ்வார் வெளிச்சம் உண்டாக்க,

*வையம் தகளியா வார்கடலே நெய்யாக-*                       

*வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய* 

*சுடராழி யான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை–*

*இடராழி நீங்குகவே*

என்று இவ்வையத்தை (உலகத்தை) தகளியாக (விளக்கு), கடலை நெய்யாக மற்றும் கதிரவனை விளக்கொளியாக ஏற்றினார்.

 

பூதத்தாழ்வாரும் ஒளி உண்டாக்க,

*அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக*

*இன்புருகு சிந்தை இடுதிரியா … நன்புருகி*

*ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு*

*ஞானத் தமிழ் புரிந்த நான்.*

என்று,  தன் அன்பையே விளக்காக, ஆர்வத்தையே நெய்யாக மற்றும் தன் சிந்தையை (ஆன்மாவை) விளக்கொளியாக ஏற்றினார்.

மேலே கூறியபடி மற்ற இரண்டு ஆழ்வார்கள் ஏற்படுத்திய ஒளியில், பேயாழ்வார் கண்களில் முதலில் தென்பட்டது, நான்காவதாக வந்தவர் அணிந்திருந்த சால்வை சிறிதே விலக, அங்கே வீற்றிருந்த திருமகள்தான். திருமாமகளோடு கூடிய சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையனான எம்பெருமானின் ஒப்பற்ற அழகினை கண்டு, அதற்கு இவ்வாறு மங்களாசாசனம் செய்கிறார்.

 

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் – திகழும்*

*அருக்கண் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்*

*பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்–*

*என்னாழி வண்ணன் பால் இன்று”

கண்டதோடு மட்டுமல்லாமல் தான் கண்டதை மற்ற இரு ஆழ்வார்களுக்கு காட்டியும் மகிழ்ந்தார் (கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் என்ற பேயாழ்வாரைப் பற்றிய திருவரங்கத்தமுதனாரின் இராமானுச நூற்றந்தாதி பாசுர வரிகளை நினைவில் கொள்வது சுவை கூட்டும்)


இவ்வாறு இம்மூவரும் இந்த லீலா விபூதியில் (நித்ய லோகமான ஸ்ரீவைகுண்டத்தை தவிர்த்த மற்றைய லோகங்கள் லீலா விபூதியாகும்) இருக்கும் காலத்தில் திருக்கோவலூர் ஆயனையும் மற்றும் பல திவ்ய தேச எம்பெருமான்களையும் ஒன்று கூடி அனுபவித்து மகிழ்ந்தனர்.

 

தனது ஈடு வியாக்கியானத்தில் நம்பிள்ளை முதலாழ்வார்களின் பெருமைகளை தகுந்த இடங்களில் வெளிக்கொணர்கிறார். அவற்றில் சில உதாரணங்களை நோக்குவோம்:

 

நம்மாழ்வார் முதலாழ்வார்களைத் தான் புகழ்ந்து ஏற்றுவதாக தெரிவிக்கிறார். ஏனெனில் முதலாழ்வார்கள் தான் முதலில் எம்பெருமானின் பெருமைகளை தேனிலும் இனிய தமிழில் பாடினவர்கள்.

 

இன்கவி பாடும் பரமகவிகள் – இங்கு நம்பிள்ளை, ஆழ்வார்களின் தமிழ் பெரும்புலமையைத் தெரிவிப்பதற்காக, பொய்கையாரும் பேயாரும் பூதத்தாழ்வாரை எம்பெருமானின் கல்யாண குணங்களை பாடுமாறு விண்ணப்பிக்க, அவரும் அங்கே அப்பொழுதே பாடியதைக் கொண்டு குறிப்பிடுகிறார். இது எது போல் எனில்,

*பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன் நின்று*

*இரு கண் இளமூங்கில் வாங்கி, அருகிருந்த*

*தேன் கலந்து நீட்டும் ---*

பெண் யானை கேட்க ஆண் யானை எவ்வாறு, இரண்டு கணுக்களை உடைய இளசான மூங்கில் குருத்தைப் பிடுங்கி, அதை அருகிலுள்ள தேன்கூட்டிலுள்ள தேனில் தோய்த்துக் கொணருமோ அது போலவே, பூதத்தாழ்வாரும் தேன்போன்ற இனிய செந்தமிழ் பாக்களால் பாடினாராம் (இரண்டாம் திருவந்தாதி - 75 ஆம் பாசுரம்)

 முதலாழ்வார்களுக்கு “செந்தமிழ் பாடுவார்” என்னும் திருநாமமும் இருப்பதை குறிப்பிடுகிறார்.

 

பலரடியார் முன்பருளிய – நம்மாழ்வாரின் திருவுள்ளத்தை நம்பிள்ளை இங்கு மிக அழகாக வெளிக் கொணர்கிறார். இந்த பாசுரத்தில், ஸ்ரீ வேதவியாசர், ஸ்ரீ வால்மீகி, ஸ்ரீ பராசரர் மற்றும் முதலாழ்வார்களுக்கு பதிலாக தன்னை திருவாய்மொழி பாடுவிக்க எம்பெருமான் தேர்ந்தெடுத்து அருளாசி வழங்கியமையை ஆழ்வார் தெரிவிக்கிறார்.

 

*செஞ்சொற் கவிகாள்* – இங்கு நம்பிள்ளை முதலாழ்வார்களை “இன்கவி பாடும் பரமகவிகள்” “செந்தமிழ் பாடுவார்” என்றெல்லாம் குறிப்பிட்டு, இவர்கள் அநந்ய பிரயோஜனர்கள் (எம்பெருமானை பாடுவதற்கு கைம்மாறாக எதையும் எதிர்பாராதவர்கள்) என்று கண்டு கொள்கிறார்.

மாமுனிகள் தனது உபதேசரத்தினமாலையில் இவர்களை “முதலாழ்வார்கள்” என்று குறிப்பிட்ட காரணத்தை அருளிச்செய்கிறார்.


*மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து*

*நற்றமிழால் நூல் செய்து நாட்டையுய்த்த–*

*பெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும்*

*பெயரிவர்க்கு நின்றதுலகத்தே நிகழ்ந்து.*

 (சுருக்கமான மொழி பெயர்ப்பு):-

இம்மூன்று ஆழ்வார்களும் ஏனைய ஏழு ஆழ்வார்களுக்கு முன்னே அவதரித்து இந்த நாட்டை தமிழ் பாசுரங்களைக் கொண்டு உய்வித்தபடியால் இவர்களுக்கு “முதலாழ்வார்கள்” என்ற பிரபலமான பெயர் ஏற்பட்டது.

 

மேலும் ஐப்பசி ஓணம், அவிட்டம், சதயத்தின், புகழை முதலாழ்வார்கள் இந்த மூன்று நாட்களில் பிறந்தபடியால் வெளிக்காட்டுகிறார் மாமுனிகள்.

 

பிள்ளை லோகம் ஜீயர் தனது வியாக்கியானத்தில் சில அருமையான கருத்து கோணங்களை அருளிச்செய்கிறார். அவையாவன:-

 

முதலாழ்வார்கள் பிரணவம் போல – எப்பொழுதும் தொடக்கமாகிற படியால்.


திருமழிசை ஆழ்வாரும் இவர்கள் காலத்தில் அவதரித்தார் (துவாபர-கலியுக சந்தி / இடைவெளிக்காலம்). இவர்களையடுத்து கலியுக தொடக்கத்தில் மற்ற ஆழ்வார்கள் ஒருவர் பின் ஒருவர் அவதரித்தார்கள்.


முதலாழ்வார்களே திராவிட வேதமாம் திவ்ய பிரபந்தத்திற்கு உயர்ந்த திராவிட மொழியில் (தமிழ்) அஸ்திவாரம்/ அடித்தளம் இட்டனர்.


பெரியவாச்சான் பிள்ளையின் “திருநெடுந்தாண்டகம்” வியாக்கியான அவதாரிகையில் கண்டுகொண்டபடி, முதலாழ்வார்கள் எம்பெருமானின் பரத்துவத்தில் ஆழங்கால் பட்டு அதிலே அதிகம் ஈடுபட்டனர். இதனாலேயே இவர்கள் த்ரிவிக்ரமாவதாரத்தை அடிக்கடி போற்றி பாசுரங்கள் பாடினர். மேலும் இயற்கையிலேயே அர்ச்சாவதார எம்பெருமான்கள் மீது எல்லா ஆழ்வார்களுக்கும் ஈடுபாடு உண்டாதலால், பல அர்ச்சாவதார எம்பெருமான்களை இவர்கள் மங்களாசாசனம் செய்தனர்.


இனி, இந்த முதலாழ்வார்கள் மூவரின் வரலாற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.


அடியேன்,

சந்தான சேகர்

Wednesday, 5 June 2024

ஆழ்வார்கள் அவதாரம்

 

Azhwargal Avataram - 1

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

 

ஆழ்வார்கள் அவதாரம் (முன்னுரை)

 

"ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி

தாழ்வாதுமில் குரவர்தாம் வாழி - ஏழ்பாரும்

உய்ய அவர்கள் உரைத்தவைகள்தாம் வாழி

செய்யமறை தன்னுடனே சேர்ந்து"

 

என்று ஆழ்வார்களையும், அவர்கள் அருளிச்செய்த திவ்யப் பிரபந்தங்களையும், மேலும் அவற்றுக்கு உரை (விளக்கம்) செய்த ஆசார்யர்களையும் போற்றி ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களில் ஒருவரான மணவாள மாமுனிகள் என்பவர் தன்னுடைய உபதேசரத்தினமாலை என்னும் பிரபந்தத்தில் (இது, 4000க் கணக்கில் சேராது) போற்றிப் பாடியுள்ளார்.  இதன் எளிய விளக்கமானது,

 

"ஆழ்வார்களுக்குப் பல்லாண்டு; அவர்கள் பாடிய திவ்யப் பிரபந்தங்களுக்குப் பல்லாண்டு; அந்த திவ்யப் பிரபந்தங்களுக்கு விளக்க உரைநூல் செய்த (குரவர்) ஆசார்ய பெருமக்களுக்குப் பல்லாண்டு.  ஏழ்பாரும் உய்ய - ஏழு உலகங்களுக்கும் ஏற்பட்ட நன்மையான விஷயங்கள் இவை.  நான்கு வேதங்கள் எவ்வளவு சிறப்பு பெற்றதோ, அதே சிறப்புடன், அந்த வேதங்களுடன் சேர்ந்து ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப் பிரபந்தங்களும், அதன் விளக்க நூல்களும் ஒளிவீசட்டும்" என்பதாகும். 

 

இப்பேர்பட்ட சிறப்புடன் போற்றப்படும் ஆழ்வார்கள் பிறந்தது எதற்காக ?  ஆழ்வார்களைப் பிறப்பித்து, தன்னைப் பாடவைத்து, அனைவரும் உஜ்ஜீவனம் (நற்கதி) அடையவேண்டும் என்று ஒரு உயர்ந்த சங்கல்பத்தைச் (சிந்தனை) செய்துகொண்டார்  பகவான்.  பகவான் கண்ணனாய் அவதரித்து, வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கவேண்டிய அத்தனை தர்மங்களையும் கீதையை உரைத்தார்.   பகவானின் திருநாவிலிருந்து புறப்பட்ட மங்களமான இந்த ச்லோகங்கள் "ஸ்ரீபகவத்கீதை" என்று போற்றப்படுகிறது.  கண்ணனாய் அவதரித்து எத்தனையோ தர்மங்களை நிலைநாட்டினான் பகவான்; ஆனால், அவை அனைத்திலும் சிறப்பான தர்மம், அவன் அருளிய "ஸ்ரீபகவத்கீதை" ஆகும்.  மண்ணுலகில் பிறந்தவர்கள் கருமத்தின் (புண்ய பாவங்கள்) வசப்பட்டு  மீண்டும் மீண்டும் பிறந்து துன்பத்திற்கு ஆளாகக் கூடாது என்றும், அப்படி, இவ்வுலகத்தோர் பிறவி என்னும் சுழலை அறுத்துக் கொண்டு, தன்னை வந்தடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் கீதையை அருளிச்செய்தார்  கண்ணன் எம்பெருமான்.  வாழ்க்கையில் அனைவரும் கடைபிடிக்கவேண்டிய ஒரு சிறந்த வழியை கீதையின் "சரம ச்லோகத்தின்" மூலம் உரைத்தார் கண்ணன் எம்பெருமான்.  அந்த ச்லோகமானது,

  

"ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ |

அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:||" என்பதாகும்.

(அத்தியாயம் 18, ஸ்லோகம் 66)

 

விளக்கம்:   தர்மங்கள் அனைத்தையும், அதாவது செய்யவேண்டிய கர்மங்கள்                    அனைத்தையும் என்னிடம் அர்ப்பணம் செய்துவிட்டு, ஸர்வ வல்லமை பொருந்திய, எல்லாவற்றிற்கும் ஆதாரமான, என் திருவடிகளைச் சரண் அடைவாயாக!  நான் உன்னைப் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பேன்!  வருந்தாதே! என்று நமக்கு இந்தப் பிறவி என்னும் பெரும் சுழலிலிருந்து விடுதலை அடைவதற்கான உயர்ந்த வழியைக் காட்டியுள்ளான் கண்ணன் எம்பெருமான்.  

மா ஸுச!! அதாவது துன்பப்படாதே என்று நமக்கு தைர்யத்தை அளித்த உயர்ந்தவன் பகவான் கண்ணன்.  ஆனால்,

 

"மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில்லா" (திருவரங்கத்து அமுதனார் என்னும் ஆசாரியர் அருளிய இராமாநுச நூற்றந்தாதி, பாடல் 41) என்பதாய், பகவான் தர்மத்தை நிலைநாட்டவும், சாதுக்களை இரட்சிக்கவும் முன் யுகங்களில் எவ்வளவோ அவதாரங்கள் செய்திருந்தாலும், அப்படி அவன் அவதாரங்கள் செய்து எவ்வளவோ உபதேசங்கள் செய்திருந்தாலும், அவன் அவதாரம் செய்த காலங்களில் வாழ்ந்த சமகாலத்தவர்களில் பெரும்பாலானோர் அவனைத் தங்களில் ஒருவனாகத்தான் கருதினார்களே தவிர, அவனைத் தெய்வரூபமாய் அல்லது தெய்வமாய் அறிய எவரும் முற்படவில்லை.  வெகு சிலரே, த்ரேதா யுகத்தில் வசிஷ்டர், ஜனகர் (சீதையின் தந்தை) போன்றோரும், துவாபர யுகத்தில் பீஷ்மாசாரியார், விதுரர் போன்றோரும்தான் அவனைத் தெய்வம் என்று உணர்ந்தார்கள்; அப்படித் தாங்கள் உணர்ந்ததை மற்றோர்களிடம் உபதேசித்தும் (அறிவுறுத்தியும்) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல்தான் இருந்தார்கள்.  இதனால் மிகவும் வருத்தமுற்றான் பகவான்.  ஆகவே, இதுவரை தான் பிறந்து உபதேசங்கள் செய்தது போதும் என்று எண்ணி, ஆனால், எப்படியாவது உலகத்தாரைத் திருத்தி, நல்வழிப்படுத்த வேண்டும் என்று எண்ணி, சில பேரைத் தோற்றுவித்து, அவர்கள் மூலம் வேத வேதாந்தத தத்துவங்களை உரைக்கும் வகையில் பாடல்களைப் பாடச்செய்து, தனது அவதார மகிமைகளையும், தனது மேன்மையான குணங்களையும் அவர்கள் மூலம் உணர்த்தி, அதன்மூலம், உலகோர் உய்யுமாறு, அதாவது நற்கதி பெறுமாறு செய்ய எண்ணம் கொண்டான்.  அதன் விளைவாக ஏற்பட்ட விஷயமே "ஆழ்வார்கள் அவதாரம் ஆகும்". 

 

இவர்கள் ஏன் ஆழ்வார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்றால், பகவானது திருக்குணங்களில் ஆழ்ந்துபோய், அவன் புகழைப் பாடியதால், இவர்கள் ஆழ்வார்கள் என்று போற்றப்பட்டார்கள்.  அவதாரக் கிரமத்தில் (வரிசையில்) ஐந்தாவது ஆழ்வாராய் அவதரித்தாலும், பன்னிரு ஆழ்வார்களில் தலைவராகக் கருதப்படுபவர் நம்மாழ்வார் ஆவார்.  "உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்" என்று கிருஷ்ண பக்தியில் ஆழ்ந்து உய்ந்தவர் நம்மாழ்வார்.  "கிருஷ்ண கிருஷ்ணா தத்துவம்" என்பது இவ்வாழ்வார் பெற்ற பெருமையாகும்.  அதாவது, "கிருஷ்ண பக்தி" என்ற ஒன்றைச் சித்திரமாக வரைந்து காட்டச்சொன்னால், "நம்மாழ்வாரின்" படத்தை வரைவது பொருத்தமாய் இருக்கும் என்பதே "கிருஷ்ண கிருஷ்ணா தத்துவம்" ஆகும். 

 

பன்னிரு ஆழ்வார்கள் அருளிச்செய்த 4000 திவ்யப் பிரபந்தங்கள் ஒரு காலகட்டத்தில் மறைந்துபோய் ,  பின்னர் அவை அனைத்தையும் நம்மாழ்வார் அசரீரி ரூபத்தில் ஸ்ரீ நாதமுனிகள் என்னும் ஆசார்யருக்கு உபதேசித்து, அவற்றின் அர்த்த விஷயங்களையும் உபதேசித்து அருளினார்.  பின்னர், நாதமுனிகளால் இந்தப் பாடல்கள் அனைத்தும் ராக தாளங்கள் கொண்டு இசைக்கப்பட்டு, எங்கும் பரப்பப்பட்டு, இன்றளவும், திருமால் திருக்கோயில்களிலும், பலரது இல்லங்களிலும் ஓதப்பட்டு வருகிறது.    ஆழ்வார்கள் தாங்கள் பகவானின் புகழைப் பாடினாலும், அது தெய்வத்தின் அருள் என்றே கருதினர்.  "பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி" என்று, பகவானே தன் நாவில் இருந்து கொண்டு, தன் பெருமைகளைப் பாடிக் கொள்கிறான் என்று "திருவாய்மொழி" என்னும் பிரபந்தத்தில் நம்மாழ்வார் உரைத்துள்ளார். 

 

ஆழ்வார்கள் அனைவரும் பகவானிடத்தில் ஆழ்ந்தது, இந்த சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவதற்காகவே.  "சம்சார பந்தம்" என்பது கர்ம பலன்களால் (பாவ புண்ணியங்கள்) ஏற்படும் பிறவி என்னும் சுழற்சி ஆகும்.  "மா ஸுச"!" (துன்பப் படாதே) என்று கண்ணன் எம்பெருமான் கீதையில் உரைத்த வழியை நேரே கடைபித்துக் காட்டியவர்கள் ஆழ்வார்கள்.  தாங்கள் பெற்ற இன்பத்தை, தங்களோடு போக்கடிக்காமல், இவ்வைய்யத்தில் உள்ளோர் அனைவரும் பெறவேண்டும் என்று, பகவானைப் போற்றி, பாடல்கள் பல பாடி நமக்கு நல்லது செய்துள்ளனர்.

 

ஆழ்வார்களின் திருநாமங்களையும் அவர்களின் அவதார தினங்களையும் வைணவ ஆசார்யரான சுவாமி மணவாளமாமுனிகள் தம்முடைய உபதேச ரத்னமாலையில் அழகு வெண்பாவில் அமைத்துத் தந்திருக்கிறார்.

பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை

ஐயனருள்மாறன் சேரலர்கோன் – துய்யபட்ட

நாதன் அன்பர்தாள்தூளி நற்பாணன் நற்கலியன்

ஈதிவர் தோற்றத்தடைவா மிங்கு.

நாளை, முதலாழ்வார்கள் மூவரைப்பற்றி சிந்திப்போம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

அடியேன்,

சந்தான சேகர்.