Popular Posts

Wednesday, 30 July 2025

நான் ரசித்த கம்பன். பாகம் 7

அனுமனின் பெருமை.


சென்ற பதிவில் வாலியின் வீரத்தைப் பற்றிப் பார்த்தோம். வீரம் இருந்தும் விவேகம் இல்லாததால் வாலி வதம் செய்யப்பட்டான். ஆனால் அனுமனோ வீரத்துடன், விவேகமும் பெற்றிருந்ததால் சிரஞ்சீவியானார். இருந்தும் ஒரு கட்டத்தில் அவர் தனது வீரம், பராக்கிரமம் அனைத்தையும் ஒரு ரிஷியின் சாபத்தால் மறந்திருத்தார்.


அனுமனின் குழந்தைப் பருவத்தில், ஒரு முனிவரை கேலி செய்ததற்காக சுதீட்சண முனிவர் அவருக்கு சாபம் கொடுத்தார். அந்த சாபத்தின் காரணமாக, அனுமன் தனது வலிமையையும், ஆற்றலையும் மறந்திருந்தார்.


பின்னர், சீதையைத் தேடி, கடல் தாண்டி இலங்கைக்கு தூது செல்வதற்கு அனுமானே சரியானவர் என்று ஜாம்பவான் தேர்வு செய்த போது, தயங்கிய அனுமனுக்கு அவர் திறமைகளை எடுத்துச் சொல்கிறார். இதைக் கம்பன், ஜாம்பவான் மூலமாக 11 பாடல்களில் விவரிக்கின்றார். ஜாம்பவான் நேரில் விளித்துச் சொல்வதுபோல் அமைந்த பாடல்கள். 

(கிஷ்கிந்தா காண்டம், மயேந்திர படலம், 9 – 19)


மேலை விரிஞ்சன் வீயினும் வீயாமிகை நாளீர்

நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல்தக்கீர்

காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர்

ஆலம் நுகர்ந்தானாம் என வெம்போர் அடர்கிற்பீர்.

(பாடல் 9)

முனிவர் சாபத்தால் தனது வல்லமையையுணராது தயங்கி நிற்கும் அனுமனை ஜாம்பவான் கடல் கடக்குமாறு கூறுதற்பொருட்டுத் துதிக்கின்றார். முதலடி அனுமனின் சிரஞ்சீவித் தன்மையையும் இரண்டாமடி பெருங்கல்வியால் அவன் சொல்வன்மை பெற்றிருப்பதையும், பின்னிரண்டடிகள் மேற்கொண்ட செயலைப் பின்வாங்காது நின்று போர் செய்தாவது முடிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதையும் விளக்கும்; இதனால், எவ்வகையாலும் இறப்பில்லாமல், அரக்கனாகிய இராவணன் ஊருக்குச் சென்று, அவனோடு நயமாகப் பேசி இடையூறு செய்யும் அரக்கர்களையழித்துச் சீதையைக் கண்டு மீளுகின்ற செயலை முடிப்பதற்கு உரியவன் நீயே, என்று குறிப்பாக உணர்த்தினான்.


வெப்புறு செந் தீ நீர் வளியாலும் விளியாதீர்,

செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்,

ஒப்புறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே,

குப்புறின் அண்டத்தப் புறமேயும் குதிகொள்வீர்.

(பாடல் 10)

நீங்கள் இளமையில் சூரியனைக் கனிந்த பழமென்று கருதித் தாவியபோது, இந்திரன் வச்சிராயுதத்தால் அடித்தான்; அதனால் உங்கள் கவுள் (கன்னம்) முறிந்து நீங்கள் மூர்ச்சையுற்தால் வாயுதேவன் சினங்கொண்டு, உலகில் காற்றின் இயக்கத்தையே நிறுத்திவிட்டான். அதனால் பிரமன், சிவன் முதலிய தேவர்களெல்லோரும் தோன்றி அந்த வாயுதேவனை மனங்குளிர்விப்பதற்காகத் தம் தம் படைக் கருவிகளால், நீங்கள் அழியாதிருக்க வரமளித்தனர். மேலும், நெருப்பாலும், நீராலும்,  அழிவில்லை என்றும் வரமளித்தனர். நீங்கள் ஒரே தாவலில் அண்டம் விட்டு அண்டம் தாவக்கூடியவர்.


நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவை தீரச்

சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர்,

வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே,

கொல்லவும் வல்லீர் தோள் வலிஎன்றும் குறையாதீர்.

(பாடல் 11)

நல்லனமட்டுமன்றித் தீயவற்றையும் நாடி, குற்றம் தீரும்வரையில் தீர்வு கூறும் திறம் உங்களிடம் உண்டு. செய்யத்தக்கது எது, என்று ஆராந்து அதை துணிவுடன் செய்யும் ஆற்றல் உடையவர். அக்கரை சென்று, எதிரிகளை அழித்து, மீண்டு வரும் வல்லமை பொருந்தியவர் நீரே என்கிறார்.

(அனுமனிடம் ஒரு சிறந்த அமைச்சனுக்கு உரியனவும், சிறந்த போர் வீரனுக்கு உரியனவுமான அரிய திறன்கள் அமைந்துள்ளமை காட்டப்பெற்றுள்ளது.)


மேரு கிரிக்கும் மீதுற நிற்கும் பெரு மெய்யீர்,

மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர்,

பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர்,

சூரியனைச் சென்று ஒண்கையகத்தும் தொட வல்லீர்.

(பாடல் 12)

உங்கள் உடம்பு வளரவேண்டுமென்று நினைத்தால், மேருமலையைக் காட்டிலும் உங்கள் உடம்பு பெரியதாகும்; அந்த உடம்பை மழைத் துளிகளிடையே செல்லும் அளவுக்கு சிறிதாக, ஒடுக்க விரும்பினால் உங்கள் உடலை அணுவைக் காட்டிலும்  சிரியதாக்கவும் வல்லீர்.

நீங்கள், பூமியையே பெயர்த்தெடுக்கும் வல்லமை உடையவர். மேலே சென்று சூரியனைத்  தொட வல்லவர். தான் பெற்ற வரங்களை தீய வழியில் செலுத்தாதவர். அதனால், பழியில்லாதவர்.


அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறழியாமை,

மறிந்து உருளப் போர் வாலியை வெல்லும் மதி வல்லீர்,

பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க

எறிந்துழி இற்றோர் புன் மயிரேனும் இழவாதீர்.

(பாடல் 13)

வாலி வதத்தில் தர்மம் பிறழவில்லை என்பதற்கு அனுமன் தக்க அறிவுரை கூறியிருக்க வேண்டும், என்பதற்கும் இத்தொடர் சான்றாகிறது. அனுமன் இராமனுடன் சுக்கிரீவனை நட்புச் செய்வித்தவுடனே, முதலில் வாலியை வதைசெய்து, பின்பு சீதையைத் தேடுவது மிகவும், நன்மை தருவது என்று கூறினானாதலால் அவனை “வாலியை வெல்லும் மதிவல்லீர்” என்றும் விளக்கலாம். 

நீங்கள் ஓர் பாலகனாய் இருந்தபோது, சூரியனை ஒரு கனியெனக் கருதி அதனைப் பறித்துண்ண வானில் எழுந்தபோது இந்திரன் உங்கள் மேல் தன் வச்சிரப் படையை ஏவியதை  இமையோர் கோன் வச்சிரபாணம் புக மூழ்க எறிந்துழி  என்றார். ஆனால், அதனால் உங்களுக்கு, ஒரு முடி கூட உதிரவில்லை.


போர்முன் எதிர்ந்தால் மூ உலகேனும் பொருள் ஆகா,

ஒர்வில் வலம் கொண்டு ஒல்கல் இல் வீரத்து உயர் தோளீர்,

பாருலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன்முன்,

தேர் முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர்.

(பாடல் 14)

நீங்கள் சூரியதேவனிடம் வியாகரணம் முதலிய கலைகளைக் கற்க விரும்ப, அவன், தான் எப்பொழுதும் வானவீதி வழியே உலகங்களைச் சுற்றிச் செல்பவனாதலால்,  ஓரிடத்திலிருந்து உங்களுக்கு பாடம் சொல்ல இயலாது என்று கூற, நீங்கள் அவன் எதிர் முகமாய், பின்னோக்கி நடந்து சென்றே பாடங்கேட்டு நவவியாகரண பண்டிதன் ஆனீர்.                                         

நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும்

மாதர் தவம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம்

ஓதி யுணர்ந்தீர் ஊழி கடந்தீர் உல கீனும்

ஆதி அயன்தானே என யாரும் அறைகின்றீர்.

(பாடல் 15)

நீங்கள் நித்தியப் பிரமச்சாரியாதலால், மகளிர் இன்பத்தை மனத்தாலும்  எண்ணாது வளர்ந்துள்ளீர்; நினைவாலு் மாதர்நலம் பேணாது வளர்ந்தீர் என்றும், சிரஞ்சீவி யாதலால் ஊழி கடந்தீர் என்றும், அடுத்த பிரம பட்டத்தைப் பெறக் கூறியவராதலால் ஆதி அயன்தானே யென யாரும் அறைகின்றீர் என்றும் கூறப் பெற்றீர். 


அண்ணல் அம் மைந்தர்க்கு அன்பு சிறந்தீர் அதனாலே,

கண்ணி உணர்ந்தீர் கருமுமம் நுமக்கே கடன் என்னத்

திண்ணிது அமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவு இன்றால்,

புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர்.

(பாடல் 16)

நீங்கள் பெருமையில் சிறந்த அந்த இராம, இலக்குவரிடத்தில் பேரன்புடையவர். அதனால்   சீதையைத் தேடிச்செய்தியறிந்து வருவது உமது கடமையென்று ஏற்றுக் கொண்டீர்.  எனவே அதைச் செய்து முடிப்பீர். புண்ணியம் ஒன்றையே எப்பொழுதும் அழியாமல் நிலைக்கக் கூடிய பொருளென்று  மனத்தில் உறுதியாகக் கருதியிருக்கின்றீர்.

(வானரர் யாவரும் இறப்பதாக இருந்த நிலையில் அதனைத் தடுத்து அனுமன் பின்னுந் தேடுமாறு ஆலோசனை கூறும் பொழுது சீதையுள்ள இடம் தெரிந்தனராதலால் கண்ணியுணர்ந்தீர் கருமம் என்றார் ஜாம்பவான்.


அடங்கபும் வல்லீர்காலமது அன்றேல் அமர்வந்தால்,

மடங்கல் முனிந்தாலன்ன வலத்தீர் மதி நாடித்

தொடங்கியது ஒன்றோ முற்றும் முடிக்கும் தொழில் அல்லால்,

இடங்கெட வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடை யாதீர்.

(பாடல் 17)

அது ஏற்ற காலமாய் இல்லாவிட்டால் அடங்கியிருக்கும் பொறுமையுடையீர். போர் மூளுமானால், ஓர் ஆண் சிங்கம் பொல் சினந்து எழும் வலிமையுடையவராவீர். செய்யத் தொடங்கிய ஒரு செயல் மட்டுமல்லாமல், அதற்குத் தொடர்பான எல்லாச் செயல்களையும் செய்து முடிக்கும்  திறமுடையவர். எந்த ஒரு இடையூறு நேர்ந்தாலும்  பின்வாங்காது நிற்பீர்.

ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர், தாக்கற்குப் பேருந் தகைத்து. (486)

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன், குத்தொக்க சீர்த்த விடத்து. (490)

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற, இடுக்கண் இடுக்கட் படும்*. (625) 

என்னும் குறட்பாக்கள் இங்கு ஒப்பிடத் தக்கது.】                                                   

ஈண்டிய கொற்றத் திந்திரன் என்பான் முதல் யாரும்,

பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறையானும்,

பண்டிதர் நீரே பார்த்தினிது உய்க்கும்படி வல்லீர்,

வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர்.

(பாடல் 18)

உமது ஒழுக்கம் இந்திரன் முதலோர்க்கும் வழி காட்டியாக உள்ளது என்பது முதலிரண்டடிகளின் கருத்து.  வீரம், வெற்றி முதலிய நற்பண்புகள் நிரம்பியிருப்பினும் அனுமன் அவற்றைச் சிறிதும் பாராட்டாமல் எளிய வானரன்போல இருப்பதால் அக் குணத்தைப் ’பொறையாலும்' என்று ஜாம்பவான் பாராட்டினார்.  கடல் கடந்து சீதையைக் கண்டு வரவேண்டுமென்று நினைத்தால் உடனே செய்து முடிக்கும் வல்லமை அனுமனுக்கு உண்டென்பதைப் பின்னிரண்டடிகள் குறிப்பிக்கும்.  வேண்டிய வேண்டியாங்கு எய்தலால், செய்தவம் ஈண்டு முயலப்படும். (265) என்ற குறளின்படி வேண்டிய போதே வேண்டுவன எய்தும் வினை எனத் தவ ஒழுக்கத்தைக் குறித்தார்.


"ஏகுமின் ஏகி எம்முயிர் நல்கி, இசைகொள்ளீர்,

ஓகை கொணர்ந்தும் மன்னையும் இன்னம் குறைவு இல்லாச்

சாகரம் முற்றும் தாவிமும் நீர் இக்கடல் தாவும்,

வேகம் அமைந்தீர்" என்று விரிஞ்சன் மகன் விட்டான்.

(பாடல் 19)

நீங்கள் இந்தக் கடலைக் கடந்து சென்று மீளுவதற்குரிய வலிமை பொருந்தியுள்ளீர். ஆதலால் விரைந்து சென்று சீதை இலங்கையில் உள்ள மகிழ்ச்சியான நல்ல செய்தியைக் கொண்டுவந்து எங்களையும், சீதையின் பிரிவால் வாடும் உம் தலைவன் ராமனையும் துன்பக் கடலைக் கடந்து கரையேறச் செய்வீர். மேலும் பலரது உயிரைக் காப்பாற்றுவதால் பெரும் புகழும் உமைக்குக் கிடைக்கும் என்று கூறி பிரமகுமாரனான ஜாம்பவான், கடலைக் கடந்து செல்லுமாறு) அனுமனைத் தூண்டிவிட்டார்.


ஜாம்பவானின் இந்த சொற்களைக் கேட்ட அனுமன், 

”இலங்கையை இடந்து வேரோடு இவ்வயின் தருக'' என்றாலும்,

''விலங்கினர் தம்மை எல்லாம் வேரொடும் விளிய நூறி,

பொலங் குழை மயிலைக் கொண்டு போது'' எனப் புகன்றிட்டாலும்,

கலங்கலீர்! உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது; காண்டிர்"!

(பாடல் 21)

அவற்றைக் கேட்ட பிறகு அனுமன் ஜாம்பவானைப் பார்த்து "இலங்கை நகரை வேரோடு பெயர்த்தெடுத்து, இந்த இடத்திற்குக் கொண்டு வரவேண்டுமென்று நீங்கள் கூறினாலும்; எதிர்த்துத் தடுப்போரையெல்லாம் அடியோடு அழியுமாறு பொடிப் பொடியாக்கி, பொன்னாற் செய்த குழையையணிந்த மயில்போன்ற சாயலையுடைய சீதையை எடுத்துக் கொண்டுவா என்று சொன்னாலும், நீங்கள் கூறிய சொற்படியே செய்து முடிப்பேன்; அதை விரைவிலே கண்கூடாகக் காண்பீர்கள்; ஆகவே கலங்காதீர்கள்." இவ்வாறு கூறி அனுமன் கடல் தாண்டத் தயாரானார்.


அனுமனின் பெருமையைப் பேச இந்த ஏழெட்டு பக்கங்கள் போதாது. மற்றொரு சந்தர்ப்பத்தில் மேலும் பார்ப்போம்.


மீண்டும் சந்திப்போம்.

நான் ரசித்த கம்பன் - பாகம் 6

 வாலியின் வலிமை.


ராமாயணத்தில், கைகேயி, வாலி, ராவணன் ஆகிய மூவரைப் பற்றியுள்ள பொதுவான கருத்து, அவர்கள் தீயவர்கள் என்பதுதான். விதிவசத்தால் அவர்கள் தவறிழைத்தாலும், அவர்களுக்கும் சில சிறப்புகள் உள்ளன. சென்ற பதிவில் கைகேகியை பற்றிப் பார்த்தோம். இந்தப் பதிவில் வாலியைப் பற்றி கம்பன் சொற்களில் பார்ப்போம். வாலியின் பெருமையை, கிட்கிந்தா காண்டம், நட்புக்கோட் படலத்தில் பதின்மூன்று பாடல்களில் (38 – 48 & 51,52) விவரிக்கின்றார். 

கிட்கிந்தையின் மன்னன் வாலி. வானரக் குலத் தலைவன். சூரிய பகவானின் புத்திரன். சிறந்த சிவபக்தன். பாற்கடலைத் தனியாகக் கடையும் வல்லமை உடையவன். போரில் தனது எதிரில் நிற்பவர்களின் வீரத்தில் பாதியைத் தனக்கு வர, வரம் பெற்றவன். இலங்கை வேந்தன் இராவணனையே, தன் வாலில் கட்டித் தூக்கிய வலிமை பொருந்தியவன். 

நூல் பல கற்ற சிறப்புடையவன். சிறப்புகள் பல பெற்றவனானாலும் தன் வீரத்தில் தற்பெருமைக் கொண்டவன். மனைவியின் மேல் பேரன்பு கொண்டவன். வரம் பல பெற்றாலும் மதங்க முனிவரிடம் சாபமும் பெற்றவன். கோபம், நம்பிக்கையின்மை, தம்பி மனைவியைக் கைப்பற்றுதல், பிடிவாதம், பிறரை மதிக்காதத் தன்மை, தன் வீரத்தின் மீது கொண்ட கர்வம், வரபலத்தால் தன்னை யாராலும் வெல்லவே முடியாது என்ற இறுமாப்பு, யார் பேச்சையும் கேட்காதத் தன்மை போன்ற சில தீய குணங்களால் வீழ்ச்சியைக் கண்டவன் வாலி.

இராமபிரானின் அம்பு பட்டதால், செய்த பாவத்தினின்று விடுபட்டு அமரரானான். இராமனின் அம்பு பட்டதால் மனமாற்றம் ஏற்பட்டு, இறக்கும் நிலையில் தம்பி சுக்ரீவனையும், மகன் அங்கதனையும் இராமனிடம் அடைக்கலப் படுத்தி விட்ட பின்பே, உயிர்த் துறந்தான். தம்பி சிலநேரம் மது அருந்திவிட்டு தீமை செய்தாலும் அவன் மேல் அம்பினை எய்து விடாதே என்றும், இராமபிரானிடம் கேட்டுக்கொள்கிறான்.அத்தகைய வாலியின் மாட்சியையும், வீழ்ச்சியையும் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.

கழலும் தேவரோடு அவுணர் கண்ணின் நின்று
உழலும் மந்தரத்து உருவு தேய முன்,
அழலும் கோள் அரா அகடு தீவிடச்
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்.
(நட்புக்கோட் படலம் - 38)

தேவர்களுடன் சேர்ந்து, அசுரர்களின் எதிரில் நின்று மத்தாய் இருந்து சுழல்கின்ற மந்திர மலையின் வடிவம் தேயவும், சீறும் தன்மை கொண்ட வாசுகி எனும் பாம்பின் நடுவுடலானது தேய்ந்து போகவும், திருப்பாற்கடலை முற்காலத்தில் தான் ஒருவனாய் நின்று கடைந்த தோள் வலிமை உடையவன்.


நிலனும் நீரும் மா நெருப்பும் காற்றும் என்று
உலைவில் பூதம் நான்கு உடைய ஆற்றலான்;
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா
மலையின் நின்றும் இம் மலையின் வாவுவான்.
(நட்புக்கோட் படலம் 39)

பூமியும், நீரும், தீயும் காற்றும் ஆகிய அழிவற்ற பூதங்கள் நான்கும் ஒன்று கூடியது போன்ற வலிமையுடையவன். அலைகளையுடைய எல்லைப்புறக் கடல்கள் சூழ்ந்துள்ள சக்கரவாளகிரி என்னும் மலையிலிருந்தும் இங்கு இருக்கும் மலையில் தாவும் வன்மையுடையவன்.


கிட்டுவார் பொராக் கிடைக்கின் அன்னவர்
பட்ட நல்வலம் பாகம் எய்துவான்;
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று
அட்டம் மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்.
(நட்புக்கோட் படலம் - 40)

அவன் போரில், தன்னை எதிர்ப்பவர் வந்தால் அவர்களிடம் உள்ள வலிமையில் பாதி அளவைத் தான் அடையும்படியான வரத்தைப் பெற்றவன். எட்டுத்திக்குகளின் எல்லை வரையும், நாள்தோறும் சென்று அங்குள்ள ’அட்ட மூர்த்தி’ எனப்படும் சிவபெருமானின் திருவடிகளை வணங்கும் அன்பை உடையவன்.

கால் செலாது அவன் முன்னர்; கந்தன் வேள்
வேல் செலாது அவன் மார்பில்; வென்றியான்
வால் செலாத வாய் அலது இராவணன்
கோல் செலாது; அவன் குடை செலாது அரோ.
(நட்புக்கோட் படலம் 41)

அந்த வாலியின் வேகத்திற்கு முன்னால் காற்றும் செல்லாது. அந்த வாலியின் மார்பிலே முருகப்பெருமானின் வேலும் நுழையாது. வெற்றியை உடைய அந்த வாலியின் வால் செல்லாத இடத்திலே அன்றி, வால் சென்ற இடத்திலேயும் அந்த இராவணனின் ஆட்சியும், வெற்றியும் செல்லாது.

மேருவே முதல் கிரிகள் வேரொடும்
பேருமே அவன் பேருமேல்; நெடும்
காரும் வானமும் கதிரும் நாகமும்
தூருமே அவன் பெரிய தோள்களால்
(நட்புக்கோட் படலம் 42)

அந்த வாலி இடம் விட்டு எழுவானால் அந்த அதிர்ச்சியால் மேரு முதலிய பெரிய மலைகள் எல்லாம் வேரோடு இடம் விட்டுப் பெயர்ந்து போகும். அவனுடைய பெரிய தோள்களினாலே பெரிய மேகமும், வானமும், சூரிய சந்திரர்களும், மலைகளும் மறைந்து போய்விடும். 

பார் இடந்த வெம் பன்றி பண்டை நாள்
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான்;
மார்பு இடந்த மா எனினும் மற்றவன்
தார் கிடந்த தோள் தகைய வல்லதோ
(நட்புக்கோட் படலம் 43)

அவன் பூமியைத் தன் கொம்பால் பெயர்த்து மேல் எடுத்த வலிய திருமாலாகிய பன்றியையும், பழங்காலத்தில் கடலில் கிடந்த திருமாலாகிய பெரிய ஆமையையும், சமமாகக் கொள்ளத் தக்கவன். இரணியனின் மார்பைப் பிளந்து அழித்த நரசிம்மமே என்றாலும், அந்த வாலியின் தோள்களைக் கட்டுப்படுத்தி அடக்கக்கூடிய வலிமை உடையதோ?


படர்ந்த நீள் நெடும் தலை பரப்பி மீது
அடர்ந்து பாரம் வந்து உற அனந்தனும்
கிடந்து தாங்கும்; இக் கிரியை மேயினான்
நடந்து தாங்கும்; இப் புவனம் நாள் எலாம்.
(நட்புக்கோட் படலம் 44)

பூமியைத் தாங்கும் இந்தக் கிட்கிந்த மலையில் வாழும் வாலியானவன் நடக்கும் பூமியில் பாரம் மிகுதல் காரணமாக, ஆயிரம் எண்ணுள்ள தன் தலைகளைப் பரப்பிக் கொண்டு ஆதிசேஷன் கீழே இருந்தபடியே வாலி நடக்கும் இடமெல்லாம் நடந்து நாள்தோறும் இவ்வுலகத்தைத் தாங்குகிறான்.


கடல் ஒலிப்பதும் கால் சலிப்பதும்
மிடல் அருக்கர் தேர் மீது செல்வதும்
தொடர மற்றவன் சுளியும் என்று அலால்
அடலின் வெற்றியாய்! அயலின் ஆபவோ?
(நடபுக்கோட் படலம் 45)

வலிமையையும் வெற்றியையும் உடையவனே! கடல் ஒலிப்பதும், காற்று உலவுவதும் வலிமையுடைய சூரியர்கள் தேரில் உலவுவதும் அந்த வாலி சினம் கொள்வானே என்ற அச்சத்தால் தான். அதுவன்றி வேறு காரணங்கள் உண்டோ? 

வெள்ளம் ஏழுபத்து உள்ள மேருவைத்
தள்ளல் ஆன தோள் அரியின் தானையான்;
உள்ளம் ஒன்றி எவ் உயிரும் வாழுமால்
வள்ளலே! அவன் வலியின் வண்மையால்.


வெள்ளம்** என்னும் கணக்கை உடைய குரங்குப் படையை உடையவன். இத்தகைய அவனது வலிமையின் மிகுதியால் எல்லா உயிர்களுக்கும் அவன் கருத்துக்கு வேறுபடாது மனம் ஒன்றி வாழ்கின்றன. அந்த வாலியின் கர்ஜனையாகிய குரலுக்கு என்றும் அஞ்சுவதால், அவன் வாழும் இடத்துக்கு எதிராக மேகங்கள் இடித்து ஒலியை எழுப்பா. வெற்றி மிக்க கொடிய சிங்கங்கள் தாம் வாழும் மலைக் குகைகளில் கர்ஜிக்க மாட்டா. வலிமை யுடைய கொடிய காற்றும் மென்மையான தழைகள் நடுக்கம் கொள்ள அவற்றின் பக்கத்தில் நெருங்காது.
**வெள்ளம்: வாலியின் பல கோடி அக்குரோணி அளவிலான சேனைப் படை. 


"மொய்க்கொள் வாலினால் மிடல் இராவணன்
தொக்க தோள்உறத் தொடர்ப்படுத்த நாள்
புக்கிலாதவும் பொழி அரத்த நீர்
உக்கிலாத வேறு உலகம் யாவதோ"
(நட்புக் கோட் படலம் - 48)

சிவபூசை செய்து கொண்டிருந்த வாலியை இராவணன் பின்புறமாக வந்து பற்ற எண்ணியபோது, வாலி அவனை வாலினால் கட்டிக் கொண்டு எல்லா உலகங்களிலும் அவன் இரத்தம் சிந்துமாறு சுற்றிவந்து, பின்னர் அவன் வருந்தி வேண்டியதால் விடுத்தான் என்பது வரலாறு. இராவணன் வாலியின் வாலில் கட்டுண்ட நிலையை 'ஓர் இராவணன் என்பான் தன்னை, சுந்தரத்தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றி, சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன்' (6997) என்ற அடிகளும் இதனை உணர்த்தும்.
அடுத்து,

மாயாவியைக் கொன்ற வாலி

மாயாவி என்ற அரக்கன் வாலியைப் போருக்கு அறைகூவி அழைத்தான். வாலியும் அவனோடு போரிடச் சென்றான். வாலியின் வலிமைக்கு முன் நிற்க முடியாத மாயாவி, ஒரு பிலத்துக்குள் சென்று, புகுந்து கொண்டான்.

முட்டி நின்று, அவன் முரண் உரத்தின் நேர்
ஒட்ட, அஞ்சி, நெஞ்சு உலைய ஓடினான்;
''வட்ட மண்டலத்து அரிது வாழ்வு'' எனா,
எட்ட அரும் பெரும் பிலனுள் எய்தினான்.
(நட்புக்கோட் படலம் - 51)

வாலியுடன் போரிடுகையில் மாயாவி தன் வலிமை குறைந்து, வாலியின் வன்மை மிகுவதைக் கண்டதும் புறமுதுகு காட்டி ஓடிப் பின் பிலத்தினுள் நுழைந்து ஒளித்தான். (பிலம் = சுரங்கம்.)
பின்பு,

எய்து காலை, அப்பிலனுள் எய்தி, ''யான்
நொய்தின் அங்கு அவற் கொணர்வென்; நோன்மையாய்!
செய்தி, காவல், நீ,சிறிது போழ்து'' எனா,
வெய்தின் எய்தினான், வெகுளி மேயினான்.
(நட்புக்கோட் படலம் – 52)

மாயாவி பிலத்தினுள் புகுந்ததைக் கண்ட வாலி, மிக்க சினங்கொண்டு, தம்பியிடம், வேறு வகையில் அவன் தப்பித்துச் செல்லாதவாறு காவல் செய்வாய்; என்று அந்த சுரங்க வாயிலில் காவல் வைத்து மாயாவியைத் தொடர விரைந்து சென்றான். வாலி, சுரங்கத்துக்குள் பதுங்கி இருந்த மாயாவியை கண்டு பிடித்துக் கொன்றான்.

துந்துபியைக் கொன்றவன்:

துந்துபி இரு கொம்புகளைத் தலையில் கொண்டவன். மந்திர மலையைப் போன்றத் தோற்றமுடையவன். அவன் திருமாலிடம் சென்று போர் செய்ய அழைக்க, அவர் தன்னால் இயலாது என்றும், உன் திறமைக்கு நீ சிவ பெருமானுடன் போரிட வேண்டும் என்று கூறினார். அவன் நேராகச் சென்று சிவனைப் போருக்கு அழைக்க, அவர் நீ தேவர்களுடன் போரிடு என்றார். அவன் தேவர்களைப் போருக்கு அழைக்க, அவர்கள் போருக்குரிய வாலியிடம் செல்வாயாக என்றனர். உடனே நேரடியாகச் சென்று வாலியைப் போருக்கு அழைத்தான். இருவருக்கும் போர் நடைபெற்றது.

புயல் கடந்து, இரவிதன் புகல் கடந்து, அயல் உளோர்
இயலும் மண்டிலம் இகந்து, எனையவும் தவிர, மேல்
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய, அன்று
உயிரும் விண் படர, இவ் உடலும் இப் பரிசுஅரோ!
(துந்துபி படலம் - 13)

வாலி மேக மண்டலத்தைத் தாண்டிக், கதிரவன் இருக்கும் இடத்தையும் தாண்டி, மற்றும் உள்ள வானவர்கள் வாழ்கின்ற மண்டலங்கள் எல்லாம் கடந்து, மற்ற மேலிடங்கள் எல்லாவற்றையும் கடக்குமாறு, தன் உறுதியான வலிமையான கையால் அந்தத் துந்துபியை இழுத்து வீசி எறிந்தான். அப்போது அவ்வரக்கனின் உயிர் மேல் உலகத்திற்குச் செல்ல, உடல் இம்மண்ணுலகத்தில் விழுந்தது. இறுதியில் வாலியே வென்றான்.

இவ்வளவு வலிமை மிக்க வீரனான வாலி, ஏன் சுக்ரீவனுடன் பகைமை கொண்டான்?
மாயாவியைக் கொல்ல சுரங்கத்துக்குள் சென்ற வாலி இருபத்தெட்டு மாதங்களாகியும் வெளியில் வராததால், சுக்ரீவன் வருந்தினான். வாலி இறந்திருக்க வேண்டும் என்று கருதி, அமைச்சர்கள் சுக்ரீவனை அரசாட்சியை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினர். ஆனால் சுக்ரீவன் இது குற்றமாகும் என்று கூறி, மறுத்தான். "நானும் பிலத்துக்குள் சென்று, தமையனை மீட்டுவருவேன். மாயாவி அண்ணனைக் கொன்றிருந்தால், நான் அவனைக் கொல்வேன், இல்லையென்றால் மாயாவி கையால் மடிவேன்" என்றான். அமைச்சர்கள் சுக்ரீவனுக்குக் கடமையை உணர்த்தி, அரசாட்சியை வற்புறுத்தி ஏற்கச் செய்தனர். மாயாவி வெளியே வராமல் இருக்க, பிலத்தின் வாயை, வானரர்கள் பாறைகளை வைத்து மூடினர். மாயாவியைக் கொன்றுவிட்டு வெளியே வந்த வாலி, பிலத்தின் வாய்ப்பகுதி பாறைகளால் மூடப்பட்டிருப்பதைக் கண்டு, கடும் சினம் கொண்டு, பாறைகளை உதைத்துத் தள்ளிவிட்டு வெளியே வந்தான். சுக்ரீவன் அவன் காலடியில் விழுந்து வணங்கினான். விருப்பமில்லாமல் அரசாட்சியைத் தான் ஏற்றுக்கொள்ள நேர்ந்த நிலையை விளக்கினான். இருப்பினும் அரசாட்சியை ஏற்றுக் கொண்டது தவறுதான் என்று கூறி, தன்னைப் பொறுத்தருள வேண்டினான். இது எதையும் நம்பாத வாலி, கோபத்தில் அவனைத் திட்டினான். அவனை அடிக்கத் தொடங்கினான். சுக்ரீவன் அதைத் தாங்க முடியாமல் தப்பி ஓடினான். வாலியும் விடாது பின் தொடர்ந்து சென்று, அவனைப் பிடித்துக் கொல்ல முயன்ற போது, சுக்ரீவன் அவனிடமிருந்து தப்பி, வாலி வர முடியாத ரிசியமுக பருவதத்தில் ஒளிந்து கொண்டான். அது மட்டுமல்லாமல் வாலி, தன் தம்பியின் மனைவியை கவர்ந்தான். பின்னர் இதுவே சகோதரர்களிடையே விரோதம் ஏற்பட்டு, வாலியின் வதத்தில் முடிந்தது.

மீண்டும் சந்திப்போம்,

Friday, 25 July 2025

நான் ரசித்த கம்பன் பாகம் 5

 தசரதனின் புத்திர பாசம்


பொதுவாகவே, அப்பாக்களுக்கு மகன்கள் மேல் உள்ள பாசம் சொல்லி மாளாது. மகள் மேல் உள்ள பாசத்தை அப்பாக்கள் கொட்டி தீர்த்து விடுகிறார்கள். ஆனால், மகன்கள் மேல் உள்ள பாசத்தை வெளியில் சொல்லுவது இல்லை. அது ஏனோ அப்படி ஆகி விடுகிறது. தசரதன் நிலையும் அப்படித்தான். இதைக் கம்பன் எப்படி சொல்கிறான் என்று பார்ப்போம்.

இராமன் சிறு குழந்தையாக தொட்டிலில் கிடக்கிறான். தசரதன் தன் மகனைப் பார்த்து உருகுகிறான். தசரதன் நினைக்கிறான், 'இவன் தான் உயிர்" என்று. மேலும் ஒரு படி மேலே சென்று "இவன் தான் என் உடலும்" என்கிறான். 

அதாவது அவனை தவிர்த்து தனக்கு எதுவும் இல்லை என்கிறான். உயிர் மட்டும் என்றால், உடல் தனது என்று ஆகி விடும். உயிரும், உடலும் என்றால் எல்லாம் அவனே. தசதரன் இராமனில் கரைந்து போகிறான். எப்படி, பாடலைப் பார்ப்போம்.

காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே,

ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர்

ஆவியும் உடலமும் இலது என அருளின்

மேவினன் உலகு உடை வேந்தர் தம் வேந்தன்.

(திரு அவதாரப் படலம் 304)

நீலோற்ப மலரும், ஒளி வீசும் தாமரை மலரும் போல, ஓவியத்தில் எழுதி வைத்த அழகைக் கொண்ட சிறந்த ஒருவனை, அவனைத் தவிர்த்து உயிரும் உடம்பும் இல்லை என்று கருணை மேலிட உலகத்தை ஆளுகின்ற வேந்தர்களுகெல்லாம் வேந்தனான தசரதன், ராமன் மீது பேரன்பு உடையவனாய் இருந்தான்.

சாதாரண அழகு என்றால் வயதாக வயதாக அது குன்றும். ஓவியத்தில் எழுதிய அழகு என்றால் எத்தனை யுகம் ஆனாலும் அப்படியே இருக்கும். இராமனின் அழகு அழியாத அழகு என்பதற்கு அதை உதாரணமாகச் சொல்கிறான்.

அடுத்து, விஸ்வாமித்திரர், வேள்வியைக் காக்க ராமனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டபோது, மின்னல் தாக்கியதுபோல் உணர்ந்தான். எப்படியென்றால்,

எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த

புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தாலெனச் செவியில் புகுதலோடும்.

உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த, ஆர் உயிர் நின்று ஊசலாட.

"கண் இலான் பெற்று இழந்தான்” என உழந்தான் கடுந் துயரம் – கால வேலான்.

 (பா.கா. கையடைப் படலம் 328)

தவஸ்ரேஷ்டரான விஸ்வாமித்திரர் சொன்ன இந்தச் சொற்களானது தசரதன் காதுகளில் புகுந்தபோது,  மார்பின் மேல் எறிந்த வேல் பாய்ந்த ஆழ்ந்த புண்ணில், கனன்று கொண்டிருக்கும் தீ நுழைந்தது போல உணர்ந்தான். (**அவன்உள்ளத்திலே நிலைத்துள்ள துயரம்**) உயிரை ஊசல்போல் ஆட வைத்ததாகவும். கண்கள் இல்லாதவன் அதனைப் பெற்றுப் பின்னர் இழந்தது போலவும், பகைவரை வேல் கொண்டு அழிக்கும் வேந்தர்க்கெல்லாம் வேந்தனான தசரதன், கடுமையான துன்பத்தினாலே மிகவும் வருந்தினான்.

(**உள்  நிலாவிய துயரமாவது, முன்பொருநாள் தசரதன் சிரவணனை அம்பால் கொல்ல அவனது  பெற்றோர்  தந்த  சாபத்தால்  நிலவிய  துன்பமாம்.**)          

வேல் பண்ண புண்ணில் தீப்பட்டது போல், பால ராமனைப்  பிரிய வேண்டுமே என்ற ஆதங்கத்தில் துயர் படுகிறான்.

விஸ்வாமித்திரரின் வேள்வியைக் காக்க வேண்டிய அவசியத்தையும், அங்கு நிகழப்போகும் தாடகை வதம், அகலிகை சாப விமோசனம், சீதாப்பிராட்டியின் சுயம்வரம், ராமன் – சீதை திருமணம் போன்ற நிகழ்வுகளை ஞான த்ரிஷ்டியில் கண்ட வசிட்டன், தசரதனுக்கு ராமன் செல்ல வேண்டிய அவசியத்தை விளக்கி, ராமனை விஸ்வாமித்திரருடன் அனுப்பி வைக்கிறார்.

மேற்சொன்ன நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. அடுத்து ராமனுக்கு மணிமுடி சூட்ட நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால் விதியின் செயல் வேறாக இருந்தது.

கைகேயி, தசரதன் வாக்களித்த இரண்டு வரங்களை கேட்டுப் பெற்றாள். அதில் முதல் வரம் பரதன் நாட்டை ஆள வேண்டும், இரண்டாவது வரம் ராமன் கானகம் போகவேண்டும்  என்பதே.

இந்த இரண்டாவது வரத்தைக் கேட்டவுடன் தசரதன் அடைந்த வேதனை உச்சத்தை அடைந்தது. கம்பன் இதை, முன்பு விஸ்வாமித்திரர் ராமனை கேட்டபோது, வேல் பாய்ந்த புண்ணில் தீப்பட்டது போல் இருந்தது என்றார். இப்போது மீண்டும் ராமனைப் பிரிய வேண்டும் என்று கேட்டவுடன், அந்த  தீப்பட்ட புண்ணில் வேல் பாய்ந்ததுபோல்  துடி துடித்தான் என்கிறார். இதை,

இந்த நெடுஞ் சொல் அவ் ஏழை கூறும் முன்னே,

வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்ப,

சிந்தை திரிந்து, திகைத்து, அயர்ந்து, வீழ்ந்தான்;

மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன்.

(கைகேயி சூழ்வினை படலம் 1603)

மகனாகிய இராமனைத் தவிர,  தன்னுயிர் என்று வேறு ஒன்று இல்லாத தசரதன், அந்த அறிவற்றவளான கைகேயி, இந்தக் கொடும் சொற்களை சொல்லி முடிக்கும் முன்னே, ஏற்கெனவே  தீயினால் சுட்ட கொடிய புண்ணில் (பாடல் 328) கூரிய வேல் பாய்ந்தாற்போல, மனம் தடுமாறி; அறிவு மயங்கி, அயர்ந்து சோர்ந்து தரையில் சாய்ந்தான்.

புத்திர பாசம் சில சமயம் சுகத்தையும், சில சமயம் சோகத்தையும் தரும் என்பதற்கு தசரதனே உதாரணம்.


மீண்டும் சந்திப்போம்.

நான் ரசித்த கம்பன் பாகம் 4

 சூர்ப்பனகையின் அழகு!!!


முந்தைய பதிவில் சீதையின் அழகைக் கண்டு ரசித்தோம். இந்தப் பதிவில் அவளை எதிரியாகக் கருதும் சூர்ப்பனகையின் அழகைக் (?) கண்டு ரசிப்போம். என்ன!! வியப்பாக உள்ளதா? அரக்கிக்கு ஏது அழகு? அங்கும் அவளுக்குத் திருமகள்தான் அருள் புரிகிறாள்.

கானகத்தில் ராமன் தங்கியிருந்த பர்ணசாலையின் பக்கம் வருகிறாள் சூர்ப்பனகை. தொலைவில் இருந்து ராமனைக் காண்கிறாள். ராமனின் தோளழகும், தாளழகும், வடிவழகும் அவளை மையலுறச் செய்கின்றன. அவன் மீது ஒரு தலையாய், நெறியற்ற, முறையற்ற காதல் கொள்கிறாள்..

அவனை நேரில் பார்த்து தன் காதலை வெளிப்படுத்த எண்ணுகிறாள். தன் குரூரமான அரக்கி உருவத்தைக் கண்டால், விளைவு எதிர்மறையாகிவிடும் என்று அஞ்சி, திருமகளை வேண்டி ஒரு அழகிய ரூபத்தைப் பெற்று ராமன் முன் வருகிறாள்.  அவளைத்தான் இங்கு கம்பன் வர்ணிக்கிறான்.

பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,

செஞ் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி,

அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்

வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.

(சூர்ப்பனகை படலம் 2762)

(கம்பன் இந்தப் பாடலை அற்புதமான சந்தக்கட்டில் அமைத்திருக்கிறார்)

செம்பஞ்சு போன்ற மிகச் செழித்த தளிர்களினும் மென்மையான அழகுள்ள தாமரைக்கு ஒப்பான சிறிய பாதங்கள் உடையவள்; அழகிய சொல்லுடைய இளமையான மயில் போலவும், அன்னம் போலவும், வஞ்சிக் கொடி போலவும், உருவம் கொண்டாலும், கொடிய விஷம் போலவும், வஞ்சனை புரியும் சூர்ப்பணகை அங்கு இராமன் முன் வந்தாள்.

அடுத்து,

பொன் ஒழுகு பூவில் உறை பூவை, எழில் பூவை,

பின் எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள்,

கன்னி எழில் கொண்டது, கலைத் தட மணித் தேர்,

மின் இழிவ தன்மை, இது விண் இழிவது என்ன,

(சூர்ப்பனகை படலம் 2763)

பொன்னிறமாய் விளங்கும் செந்தாமரை மலரில் வாழும் திருமகளின் அழகும்; அழகு மிக்க நாகணவாய்ப் பறவையின் அழகும், இரண்டு வாள்கள் போலக் கண்கள் மாறி மாறி ஒளி வீசும் முகத்தை உடையவளாம் சூர்ப்பணகை, அழகிய சீலைகளால் ஒப்பனை செய்யப் பெற்ற பெரிய அழகிய தேர் ஒன்று மின்னல் இறங்குவது போல் வானிலிருந்து கீழே இறங்கி வருவது போல் இருந்தது.,

அழகும், இளமையும், புதுமையான உருவும் கொண்ட சூர்ப்பணகை இளம் பெண் வடிவையும் மேகலை சூழ்ந்த அல்குலையும் கொண்ட மின்னல் ஒன்று வானிலிருந்து இறங்கி வந்தது போல் வந்தாள் எனவும் கூறுவர்.

அப்படி வந்த சூர்ப்பனகையைக் கண்ட ராமன் ஒரு கணம் நிலை குலைந்தான். அவன் மனதில் தோன்றிய எண்ணத்தை கம்பன் வார்த்தைகளில் வடிக்கிறான்.

பேர் உழைய நாகர்-உலகில், பிறிது வானில்,

பாருழையின், இல்லது ஒரு மெல் உருவு பாரா,

ஆருழை அடங்கும்? அழகிற்கு அவதி உண்டோ?

"நேரிழையர் யாவர், இவர் நேர்"என நினைத்தான்.

(சூர்ப்பனகை படலம் 2767)

பெரிய விஷமுடைய நாகங்கள் வாழும் பாதளத்திலும்; அதனில் வேறான சுவர்க்க லோகத்திலும்; நில உலகத்திலும் இல்லாததான ஒப்பற்ற மென்மை பொருந்திய பெண் வடிவைப் (இராமன்) பார்த்து, இவள் அழகு யாரிடத்து அமையும்? இவள் அழகிற்கு எல்லை உள்ளதோ? மகளிருள் இவளுக்கு ஒப்பானவர் யார் உள்ளார்? என்று எண்ணினான்.


மீண்டும் சந்திப்போம்,

நான் ரசித்த கம்பன் பாகம் 3

 சீதையின் அழகு


திரைப்படத்திலும், சின்னத் திரையிலும் கதாநாயகியை, மகாலக்ஷ்மியைப் போல இருக்கேன்னு விவரிப்பார்கள். அப்படியானால், உண்மையிலே மஹாலக்ஷ்மியான சீதையை எப்படி விவரிப்பார்கள்? வாருங்கள், கம்பன் எப்படி வர்ணிக்கிறான் என்று பார்ப்போம்.

செப்பும்காலை. செங்கமலத்தோன் முதல் யாரும்.

எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்.

அப் பெண் தானே ஆயின போது. இங்கு. அயல் வேறு ஓர்

ஒப்பு எங்கே கொண்டு. எவ் வகை நாடி. உரை செய்வோம்?

(மிதிலைக் காட்சி படலம் 503)

செந்தாமரை மலரில் வாழும் பிரமன் முதலாக, எளிய மாந்தர் வரை, எவரும் உவமையாகச் சொல்லும் அந்தத் திருமகளே இங்கு சீதையாய் வந்துள்ளதால், அத்திருமகளைவிட வேறு ஓர்  உவமைப்  பொருளை எந்த இடத்திலே கண்டு  எவ்வாறு  எடுத்து உரைப்போம்?

சீதைக்கு உவமை கூற இயலாது,, ஏனென்றால் அவள் உவமை கடந்தவள். எவ்வாறெனில்.  எல்லாப் பெண்களுக்கும்  எல்லாராலும் உவமையாக  எடுத்துச் சொல்லப்படுகிறவள்  திருமகள். அவளே இப்போது மிதிலையில் சீதையாகப் பிறந்திருக்கிறாளே! அப்படியிருக்க அவளுக்கு வேறுயாரை உவமையாகக் கூறமுடியும்?   

அடுத்து, ராமனும் சீதையும் கண்ணொடு கண் நோக்கி காதல் வயப்பட்டபிறகு, சுயம்வரம் முடிந்து, திருமணம் நிச்சயிக்கப் படுகிறது. அவள் திருமண மண்டபத்துக்கு வருகிறாள். எப்படி?

சிலையுடைக் கயல், வாள் திங்கள், ஏந்தி, ஓர் செம் பொன் கொம்பர்,

முலை இடை முகிழ்ப்ப, தேரின் முன் திசை முளைத்தது அன்னாள்,

அலை கடல் பிறந்து, பின்னை அவனியில் தோன்றி, மீள

மலையிடை உதிக்கின்றாள் போல், மண்டபம் அதனில் வந்தாள்.

(கடிமணப் படலம் 1238)

சீதையின் வரவு எப்படி இருந்ததென்றால், ஒரு சிவந்த பொன்னின் நிறமுடைய பூக்கொம்பு, வில் போன்ற புருவமும், கயல் போன்ற விழிகளும், பூரண நிலவைப் போன்ற முகமும், முல்லை அரும்பை போன்ற புன்னகையுடன், தேர் மேல் ஏறிக் கிழக்கில் தோன்றியதைப்போல, பிராட்டி, திருப்பாற்கடலில் திருமகளாய்த் தோன்றி, பின்பு மண்ணுலகில் சீதையாய் அவதரித்து, மலையிடை உதிக்கும் ஆதவன் போல் பிரகாசமாக மண்டபத்துள் வந்தாள்.

இவற்றுக்கெல்லாம் மேலே, ராமன் மீது  காமமுற்று சீதையைத் தன் எதிரியாக நினைக்கும் சூர்ப்பனகை சீதையை வர்ணிப்பது வேறே லெவல். அவள் குறிக்கோள் ராவணனைத் தூண்டி, சீதையைக் கவர்வதே. ஆனால் அவள் வர்ணனைகளில் வஞ்சம் இல்லை. அவற்றில் சில பாடல்களை பார்ப்போம்.

காமரம் முரலும் பாடல், கள் எனக் கனிந்த இன் சொல்,

தேம் மலர் நிரந்த கூந்தல், தேவர்க்கும் அணங்கு ஆம் என்னத்

தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள்;

யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை பாலது அன்றோ.

(சூர்ப்பனகை படலம் 3135)

அவளுடைய, மதுவைப் போல் மயக்கமூட்டும் இனிய மொழிகள் காமரம் என்னும் பண்ணிசை கமழும் பாடலை ஒக்கும்; இனிய மலர்கள் சூடப் பெற்ற கூந்தலை உடைய அவள், தேவமாதரும் போற்றும் அழகுமிக்கவளாம் என்று சொல்லலாம்; தாமரை மலரில் வசிக்கும் திருமகளும் அவளுக்கு தோழியாதற்குக் கூடத் தகுதி அற்றவள்; அவளுடைய அழகைக் குறித்து நான் எடுத்துச் சொல்லக் கருதுவது அறியாமையின் வெளிப்பாடு என்று ஆகும் அன்றோ?

அடுத்து,

மஞ்சு ஒக்கும் அளக ஓதி; மழை ஒக்கும் வடித்த கூந்தல்;

பஞ்சு ஒக்கும் அடிகள், செய்ய பவளத்தை விரல்கள் ஒக்கும்;

அம் சொற்கள் அமுதில் அள்ளிக் கொண்டவள் வதனம், ஐய!

கஞ்சத்தின் அளவிற்றேனும்,கடலினும் பெரிய கண்கள்

(சூர்ப்பனகை படலம் 3136)

அழகிய சொற்களை அமுதத்திலிருந்து முகந்தெடுத்துக் கொண்ட, அம்மங்கையின் கூந்தல் மேகத்தை நிகர்க்கும்; முடிக்காத தாழ்ந்த கூந்தலோ பூமியில் இறங்கும் மழைக்கால கார்மேகம் போன்றிருக்கும்; பாதங்கள் செம்பஞ்சினைப் போன்றிருக்கும்; விரல்கள் சிவந்த பவளத் துண்டுகள் போல அழகானவை; முகமானது (சேற்றில் உதிப்பதுபோன்ற களங்கங்கள் இல்லாத) தாமரைப்பூ போன்றதாயினும்; அம்முகத்துக் கண்களோ கடலைக் காட்டிலும் பெரியவை.

மேலும் சொல்கிறாள்,

வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும்,

பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும்,

சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்;

சொல்லல் ஆம் உவமை உண்டோ?

”நெல் ஒக்கும் புல்" என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ!

(சூர்ப்பனகை படலம்3140)

வில்லைப் போல் நெற்றி அமைந்திருக்கிறது என்று சொன்னாலும்; கண்கள் வேல் போல் விளங்குகின்றன என்று சொன்னாலும்; பற்கள் முத்துக்கள் போன்றிருக்கும் என்று சொன்னாலும்; பவளமே இவள் இதழ்கள் என்று சொன்னாலும்; உவமிக்கப்படும் சொல் பொருத்தம் ஆகலாம்; அவ்வாறு பொருள் ஒவ்வாதால் சீதையின் உறுப்பழகை உணர்த்தும் முழுமையான பொருளால் பொருந்தாது; எனவே, சொல்லத்தக்க உவமை வேறு ஏதேனும் உளதாகுமோ?; புல்லைப் போன்றிருக்கும் நெல் என்று கூறினாலும் புல் நெல்லாகுமா?

வருணனைக்கு அப்பாற்பட்ட பொலிவும் அழகும் சீதையிடம் பொருந்தியுள்ளன எனவும், அதனால் நீயே நேரிற் காண்பதே பொருத்தம் எனவும் சூர்ப்பணகை உணர்த்துகின்றாள்.

இவை அனைத்தையும் தூக்கி அடிக்கும் வர்ணனை, சூர்ப்பனகை  ராமனின் பர்ணசாலையில் முதல் முறை சீதையைக் கண்டபோது வர்ணித்தது.

சீதையின் அழகு, அவளை சில கணம் மெய்மறந்து நிலை தடுமாறச் செய்கிறது. அவளையும் அறியாமல், சீதையை வர்ணிக்கிறாள்.

பண்புற நெடிது நோக்கி, ‘படைக்குனர் சிறுமையல்லால்,

எண்பிறங்கு அழகிற்கு எல்லையில்லை ஆம்’ என்று நின்றாள்;

கண் பிற பொருளில் செல்லா; கருத்து எனின் அஃதே;

கண்ட பெண் பிறந்தேனுக்கு என்றால், என்படும் பிறர்க்கு?’ என்றாள்.

(கரண் வதைப் படலம் 2791)

அவள் சொன்னது, “படைப்போர்க்கு குறைவே அல்லாமல் கருத்தில் விளங்கும் அழகிற்கு ஒரு வரையறையே கிடையாது. இவளைப் பார்த்த கண்கள் மற்றொன்றைப் பார்க்காது; இவளை நினைத்த நெஞ்சம் மற்றொன்றை நினைக்காது. பெண்ணாகப் பிறந்த எனக்கே இந்நிலை உண்டானால், இவளைக் கண்ட ஆடவர்க்கு என்னாகுமோ?” என்று வியந்து கூறினாள்.

[கண்ணதாசன் வரிகளில், உன்னழகைக் கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்;

பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன்]

அடுத்த பதிவில் மீண்டும் கம்பனை ரசிப்போம்.

நான் ரசித்த கம்பன் பாகம் 2

கண்ணொடு கண் நோக்கின்


விஸ்வாமித்திரரும், ராம லக்ஷ்மணர்களும் அரண்மனையை நெருங்குகிறார்கள். அங்கே கன்னிமாடத்தில் சீதை நிற்கிறாள். அந்தக் காட்சியைக் கம்பர் இப்படி வர்ணிக்கிறார்:

பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல்,

தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம்,

கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு

அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்.

(பாடல் 502)

தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியதுபோன்ற ஓர் உருவம், கன்னி மாடத்தில் நிற்கிறது. அங்கே அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே சீதை தோன்றுகிறாள்.

அப்பேர்ப்பட்ட சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்குகிறது:

எண்ண அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக்

கண்ணொடு கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று

உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட,

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.

(பாடல் 514)

நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள்.

[இந்தக் காட்சி வால்மீகியில் இல்லை. அங்கே ராமன் வில்லை உடைத்தபிறகுதான் சீதையைப் பார்க்கிறான். அதிலிருந்து சற்றே மாறுபட்டு, தமிழுக்காகக் கம்பர் வடித்துத் தந்த அற்புதமான பகுதி இந்த ‘மிதிலை காட்சிப் படலம்  பாடல்கள்.]

கண்களின் வழியே சீதைக்குள் நுழைந்த காதல் நோய், அவளுடைய உடல்முழுவதும் பரந்து வருத்தியது. அவள் துடிதுடித்தாள். சீதை பலவிதமாகப் புலம்பத் தொடங்குகிறாள். அவற்றுள் ஓர் அருமையான பாட்டு:

இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,

சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,

சுந்தர மணி வரைத் தோளுமே அல

முந்தி, என் உயிரை அம் முறுவல் உண்டதே!

(பாடல் எண் 536)

’என்னை வருத்துவது எது? இந்திர நீலம் என்ற உயர்ந்த கல்லைப்போல இருண்ட அவனுடைய தலைமுடியா? நிலவைப் போன்ற முகமா? நீண்ட கைகளா? அழகான ரத்தின மலை போன்ற தோள்களா?’

‘இவை எதுவுமே இல்லை, எல்லாவற்றுக்கும் முன்பாக, அவனுடைய உதட்டில் பரவிய அந்தப் புன்சிரிப்பு, அதுதான் என்னுடைய உயிரை உண்டுவிட்டது!’

சீதையைப் பார்த்துவிட்டு விசுவாமித்திரருடன் சென்ற ராமனும் அப்படிப்பட்ட ஒரு தவிப்பில்தான் சிக்கிக் கிடந்தான்.

விண்ணின் நீங்கிய மின் உரு. இம் முறை.

பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டேகொலோ?

எண்ணின். ஈது அலது என்று அறியேன்; இரு

கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால்.

(பாடல் எண் 619)

அதாவது, மின்னல் தோன்றித் தோன்றி மறைவதுபோல், சீதையின் உருவம் அடுத்தடுத்துத் தோன்றியும் மறைந்தும் நிகழ்வதை புறக்கண்ணாலும்    அகக்கண்ணாலும் காண்கிறானாம்.

திடீரென்று ராமனுக்கு ஒரு சந்தேகம். ‘ஒருவேளை, அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமானவளாக இருந்துவிட்டால்? என்னுடைய காதல் பிழையாகிவிடுமே!’ மறுகணம், அவனே தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்கிறான . இன்றைக்கு நான் இந்தப் பெண்ணைப் பார்த்துக் காதல்வயப்படுகிறேன் என்றால், அவள் எனக்கெனப் பிறந்தவளாகதான் இருக்கவேண்டும்.

பொழுது விடிகிறது. விசுவாமித்திரர் அவனை ஜனகரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்துகிறார். சிவ தனுசு கொண்டுவரப்படுகிறது. யாராலும் தூக்கக்கூடமுடியாத அந்த வில்லை ராமன் எடுத்துப் பூட்டி முறித்துவிடுகிறான்.

ராமனை எண்ணி மயக்கத்தில் இருக்கும் சீதைக்கு ராமன் வில்லை முறித்த செய்தியைக் தெரிவிக்க. ‘நீலமாலை’ என்ற தோழி சீதை இருக்கும் இடத்தை நோக்கி மூச்சு வாங்க ஓடுகிறாள். உற்சாகத்துடன் சீதையிடம் சொல்கிறாள்.

இராமன்’ என்பது பெயர்;  இளைய கோவொடும்.

பராவ அரு முனியொடும். பதி வந்து எய்தினான்;

(724)

மாத்திரை அளவில் தாள் மடுத்து. முன் பயில்

"சூத்திரம் இது” எனதோளின் வாங்கினான்;

ஏத்தினர் இமையவர்; இழிந்த. பூ மழை;

வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே!

(பாடல் 726)

"இளவரசியே, யாரோ ஒருவன், ராமன் என்று பெயராம் தம்பியோடும் முனிவரோடும் வந்தான், பெரிய சிவ தனுசைக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கையில் பிடித்துத் தூக்கினான், ஒரு பக்கத்து முனையைக் காலால் மிதித்தான், ஏற்கெனவே பலமுறை பழகிய ஒரு வில்லைக் கையாள்வதுபோல் சுலபமாக வளைத்தான், அதைப் பார்த்து வியந்த தேவர்கள் பூமாலை தூவிப் பாராட்டினார்கள், மறுகணம், அந்த வில் முறிந்து விழுந்தது, நம் அவையில் உள்ள எல்லாரும் நடுக்கத்துடன் அவனைப் பார்த்தார்கள்!"  என்றாள்.

சீதைக்கு மகிழ்ச்சி. காரணம், 'யாரோ ஒருவன், தம்பியோடும் முனிவரோடும் வந்தான்’ என்கிற வர்ணனை, அவள் மனத்தில் உள்ள அந்த ஆணுக்குப் பொருந்திப்போகிறது. வில்லை முறித்தவன் அவன்தானா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனாலும், அவனாகத்தான் இருக்கவேண்டும் என்று அவளுடைய உள்ளுணர்வுக்குத் தோன்றுகிறது.

மகிழ்ச்சி அடைந்த சீதை "நான் அவனை மனத்தில் நினைத்திருக்கிறேன், உடனே ஒருவன் தோன்றி என்னுடைய சுயம்வர வில்லை முறிக்கிறான், அப்படியானால் இருவரும் ஒருவராகதான் இருக்கவேண்டும்" என்று திருப்தி அடைகிறாள்.

ராமனுக்கும் அதே போன்ற ஒரு குழப்பம்தான். "வில்லை முறித்துவிட்டேன், அதற்காக ஓர் இளவரசியை எனக்குத் திருமணம் செய்து தரப்போகிறார்கள். ஆனால், இந்த இளவரசியும், நான் அன்றைக்குக் கன்னிமாடத்தில் பார்த்த அந்தப் பெண்ணும் ஒருவர்தானா? அதை எப்படி உறுதிசெய்துகொள்வது?"

இதற்கான வாய்ப்பு ராமனுக்கோ சீதைக்கோ உடனே கிடைக்கவில்லை. நெடுநேரம் கழித்து, (கோலம் காண் படலத்தில்) சீதையைத் தசரதன்முன்னால் அழைத்துவந்து அறிமுகப்படுத்தும்போதுதான், அவளும் ராமனும் மறுபடி சந்திக்கிறார்கள்.

ராமன் சீதையை நிமிர்ந்து பார்க்கிறான். குழப்பம் தீர்ந்து மகிழ்ச்சியடைகிறான். அந்தக் காட்சியை ஒரு மிக அழகான பாடலில் அளிக்கிறார் கம்பர்:

அன்னவளை அல்லள் என, ஆம் என அயிர்ப்பான்,

கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்,

உன்னு உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு,

இன் அமிழ்து எழக் களிகொள் இந்திரனை ஒத்தான்.

(பாடல் 1146)

சீதையை அங்கே பார்ப்பதற்கு முன்புவரை, ராமனின் மனத்தில் ஒரே தடுமாற்றம், "நான் அன்றைக்குப் பார்த்த பெண்ணும், இப்போது என் மனைவியாகப்போகிற இந்தப் பெண்ணும் ஒருவர்தானா? இல்லையா?" என்று தவிக்கிறான்.

இப்போது, அவளை நேரில் பார்த்தாகிவிட்டது. ‘அவள்தான் இவள்’ என்று ஆனந்தம் அடைகிறான். இங்கே ராமனை இந்திரனுக்கு ஒப்பிடுகிறார் கம்பர்.

இந்திரனுக்கும் ராமனுக்கும் என்ன சம்பந்தம்? பாற்கடலில் அமுதத்தைத் தேடிப் பல காலம் கடைந்தார்கள். அதிலிருந்து அமுதம் எழுந்து வந்தது. அதைக் கண்ட இந்திரன் மகிழ்ந்தான்.

அதுபோல, இன்றைக்குச் சீதை சபையில் எழுந்து நிற்கிறாள். அவளைக் கண்ட ராமனுக்குக் குழப்பம் தீர்ந்தது ஒருபக்கம், இன்னொருபக்கம், அவளைப் பார்த்து உறுதி செய்துகொண்டுவிட்ட காரணத்தால், போன உயிர் திரும்பக் கிடைக்கிறது, அதனால்தான் சீதையைக் ‘கன்னி அமிழ்தம்’ என்கிறார் கம்பர்.

ராமனின் சந்தேகம் தீர்ந்தது, சரி, ஆனால். சீதையின் நிலைமை என்ன?

எய்ய வில் வளைத்ததும், இறுத்ததும் உரைத்தும்,

மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடல் உற்றாள்,

ஐயனை அகத்து வடிவே அல, புறத்தும்,

கை வளை திருத்துபு கடைக்கணின உணர்ந்தாள்.

(பாடல் எண் 1153)

"ஒருவன் வில்லை வளைத்தான், உடைத்தான்" என்கிற செய்தி கேட்டதுமே சீதையின் சந்தேகம் பெருமளவு தீர்ந்துவிட்டது. என்றாலும், தன் மனத்தில் உள்ள அவன்தான் இங்கே நிஜத்திலும் இருக்கிறான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள அவள் விரும்பினாள். கையில் இருக்கும் வளையல்களைச் சரி செய்வதுபோல், ஓரக்கண்ணால் ராமனைப் பார்த்தாள், ’அவனே இவன்’ என்று மகிழ்ந்தாள்.

அப்புறமென்ன? காதல் நோயால் வாடிக் கிடந்த சீதையின் உடல் மீண்டும் பழையபடி ஆகிறது. 'ஆரமிழ்து அனைத்தும் ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள்’ என்கிறார் கம்பர். ‘அரிய அமுதம்' முழுவதையும் தனி ஆளாகக் குடித்துவிட்டவளைப்போலப் பூரித்துப்போனாள்.

இப்படியாக, அன்றைக்குக் கன்னிமாடத்தில் தொடங்கிய பார்வை நாடகம், இங்கே ஓர் ஓரப்பார்வையில் வந்து இனிதே முடிகிறது!

அடுத்த பதிவில் மீண்டும் கம்பனை ரசிப்போம்.

நான் ரசித்த கம்பன் பாகம் 1

சாளரம்தோறும் சந்திர உதயம்


கம்பனைப்போல் பெண்(களின்) முகத்தை நிலவோடு ஒப்பிட்டு வர்ணிப்பது கம்பனுக்கே உரித்தானது.


காட்சி: பால காண்டம்  

(மிதிலை காட்சிப் படலம்.)

சீதையின் சுயம்வரத்துக்காக விஸ்வாமித்திரர், ராமன் இலக்குவனுடன் மிதிலை நகருக்குள் நுழைகிறார். சுயம்வரத்துக்கு வரும் மன்னர்களையும், வீரர்களையும் காணும் ஆர்வத்துடன், அரண்மனைக்குச் செல்லும் சாலைகளின் இருபுறமும் மக்கள் கூட்டம்.  இருபுறமும் மாளிகைகளின் உப்பரிக்கைகளின் சாளரங்கள் வழியே பார்க்கும் அழகிய பெண்களின் ஒளிபொருந்திய முகங்களை வர்ணிக்கிறான் கம்பன். 

வாளரம் பொருத வேலும்,

மன்மதன் சிலையும், வண்டின்

கேளொடு கிடந்த நீலச்

சுருளும், செங் கிடையும். கொண்டு,

நீளிருங் களங்கம் நீக்கி,

நிரை மணி மாட நெற்றிச்

சாளரம்தோறும் தோன்றும்

சந்திர உதயம் கண்டார்.

 அரத்தால் (file) தீட்டப்பட்ட வேல் போன்ற கூர்மையான விழிகளும், மன்மதனின் வேல் போல வளைந்த புருவங்களும், வண்டுகளின் நிறத்தைப் போன்ற கருநீல மணிச்சுருளும், செந்நிற மணிகளால் ஆன நெற்றிச்சுட்டியும் அணிந்த முகங்கள், முத்து-மணிகளினாலும், ரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்ட மணி மாடங்களின் நெற்றிப் பகுதியான உப்பரிக்கைகளின் ஒவ்வொரு சாளரத்திலிருந்து பார்க்கும் ஒவ்வொரு பெண்ணின் முகமும் ஒவ்வொரு சந்திரன் உதயமாவது போலவே தோன்றுகிறதாம்.

அதுவும் எப்படிப்பட்ட சந்திரன்? நீளிருங்களங்கம் நீக்கிய, அதாவது, வானத்து நிலவுக்கும் கருமையானதொரு களங்கம் உண்டு. அதுகூட இல்லாமல் ஒளிரும் முகம்.

என்ன ஒரு கற்பனை! எத்தனை அழகிய வர்ணனை!! 

ஒரு கவியரங்கத்தில்நான் முதலில் கேட்ட இந்த ஒரு பாடலே என்னைக் கம்பனிடம் ஈர்த்தது.

அடுத்த பதிவில் மீண்டும் கம்பனை ரசிப்போம்.

Wednesday, 5 February 2025

திருப்பாவை 26a

திருப்பாவை பாசுரம் 26a

(இணைப்பதிவு)

{26ம் பாசுர விளக்கத்தை பதிவு செய்யும்போது, 26 என்ற எண்ணின் மஹத்வத்தைப் பற்றி இணைப்பதிவாக பதிவிட நினைத்தேன். ஆனால், ஓரிரு சந்தேகங்கள் எழுந்தன. பின்னர் இரண்டு உபன்யாஸகர்களின் உபந்யாஸத்தில் அவர்கள் அளித்த விளக்கங்களை கேட்டபின் தெளிந்தேன். ஆகவே இன்று இதை தனியாகப் பதிவு செய்கிறேன்.}


திருப்பாவை 26ம் பாசுரம் பற்றி, அடியேன் கேட்டறிந்த ஒரு சிறிய விசேஷத்தை இங்கு பதிப்பிடுகின்றேன்.

26 ஒரு விசேஷமான எண்:

26ல் , “2” என்பது “த்வயம்" என்று சொல்லலாம்.

26ல் , “6” என்பது, “விஷ்ணு மந்த்ரம்” என்று சொல்லலாம்

2 + 6 ஐக் கூட்டினால், வருவது, “8” இது அஷ்டாக்ஷரத்தைக் குறிக்கிறது.

2 × 6 ஐப் பெருக்கினால், வருவது , “12” .

இது, த்வாதசாக்ஷரத்தை, (அல்லது த்வாதச நாமங்களைக்) குறிக்கிறது.

நாராயண மந்த்ரம் — 8 அக்ஷரங்கள்

வாஸுதேவ மந்த்ரம் — 12 அக்ஷரங்கள்

விஷ்ணு மந்த்ரம் — 6 அக்ஷரங்கள்

இந்த மூன்றும் விஷ்ணு காயத்ரியில் அடக்கம்.

மொத்தம்–26 அக்ஷரங்கள்;

*26* என்றாலே, பகவான் — எப்படி என்றால்:

1. ப்ரக்ருதி — அதாவது, உலகம். இது மாறிக்கொண்டே இருக்கும் இயல்பை உடையது. இதற்கு, மூன்று குணங்கள் – ஸத்வம், ரஜஸ், தமஸ். இவற்றில், கூடுதல் குறைதல் ஏற்படும்போது, மஹத் என்கிற தத்வம் உண்டாகிறது.

2. மஹத்.

இந்தத் தத்வத்திலிருந்து,

அஹங்காரம் — என்கிற தத்வம் பிறக்கிறது.

3. அகங்காரம்.

இது ராஜஸ அஹங்காரம், தாமஸ அஹங்காரம், ஸாத்விக அஹங்காரம், என்று மூன்று வகை.

பிறகு, பஞ்ச தன்மாத்ரங்கள்;

4. ஆகாச தன்மாத்ரம் (ஒலி)

5. வாயு தன்மாத்ரம் (காற்று)

6.தேஜஸ் தன்மாத்ரம்.(நெருப்பு)

7. ஆப: (ஜல) தன் மாத்ரம்

8. ப்ருத்வி தன் மாத்ரம் (பூமி)

ஆகாசம் – (space) இதற்கு ஓசை என்ற தன்மை இருக்கிறது. 

வாயு – இதற்கு ஆகாயத்தின் தன்மையான ஓசையோடு ஸ்பரிசம் என்ற தன்மையும் (தொடு உணர்ச்சி) உண்டு. காற்று மேலே பட்டால் தொடு உணர்ச்சியால் உணர முடியும். 

தேஜஸ் – அதாவது நெருப்பு. நெருப்புக்கு ஒளி என்னும் தன்மையோடு ஆகாயத்துக்கும் வாயுவுக்கும் இருக்கும் தன்மைகளும் சேர்ந்து ஒளி, ஓசை, ஸ்பரிசம் என்னும் மூன்று தன்மைகள் இருக்கின்றன. 

ஆப: (ஜலம்) – அதாவது தண்ணீர். தண்ணீருக்கு சுவை என்னும் தன்மையோடு ஒளி, ஓசை, ஸ்பரிசம் என்னும் தன்மைகளுமாக மொத்தம் நான்கு தன்மைகள் உள்ளன. இவ்வாறே,

பிருத்விக்கு அதாவது மண்ணுக்கு வாசனை என்ற தன்மையோடு ஒளி, ஓசை, ஸ்பரிசம், சுவை என்ற நான்கு தன்மைகளும் சேர்ந்து மொத்தம் ஐந்து தன்மைகள் உள்ளன. இந்த தன்மைகளையே தன்மாத்திரைகள் என்பார்கள்.

இதன் பிறகு

பஞ்ச ஞானேந்த்ரியங்கள்;

9. சரீரம்

10. கண்

11. காது

12. மூக்கு

13. நாக்கு (ஆக 5 )

பிறகு, பஞ்ச கர்மேந்த்ரியங்கள்

14. வாக்கு

15. கை

16. கால்

17. குறி

18. ஆஸனம்

(ஆக 5 )

பிறகு, (உடலின்) பஞ்சபூதங்கள்,

19. ஆகாசம்

20. காற்று

21. நெருப்பு

22. ஜலம்

23. மண்

(ஆக 5), இதனுடன்,

24. மனம்

இவை அனைத்துஹ்ம் அடங்கிய நமது உடல். 25ம் தத்துவம், அதாவது,

25. ஜீவாத்மா.

பின்னர் 26ம் தத்துவம் அந்தப் பரமனேயாவான்.

26. பகவான் அதாவது, பரமாத்மா.

விஷ்ணு காயத்ரியை ஜபித்தாலும், அஷ்டாக்ஷரம், த்வாதசாக்ஷரம், என்கிற மந்த்ரங்களை ஜபித்தாலும், 26 வது அக்ஷரமாகிய, பகவானை, உபாஸிப்பதாக ஆகிறது.

ஆகவே, மாலே மணிவண்ணா என்னும் 26ம் பாசுரம் மிகவும் விசேஷமானதாகப் பெரியோர்களால், அனுசந்திக்கப் படுகிறது.

ஆண்டாள் திருவடிகளே சரணம்,

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

அடியேன்,

Thursday, 30 January 2025

திருப்பாவை 30

 திருப்பாவை பாசுரம் 30

(வங்கக்கடல் கடைந்த மாதவனை, கேசவனை)


திருப்பாவையின்  முப்பதாவது பாசுரம். திருப்பாவை சொல்லும் அடியார்கள் ஶ்ரீ கண்ணபிரானின் ப்ரேமைக்கும், க்ருபைக்கும் பாத்திரமாகி, பரமாத்ம ஆனந்தம் அடைவர் என்ற 'பலஸ்ருதி ' பாசுரம்  இதுவாகும்.

இப்பாடலில் தான், தன்னை யாரென்று "பட்டர்பிரான் கோதை" ஆண்டாள் அறிவிக்கிறாள். முதல் பாசுரத்திலும் "நாராயணனே நமக்கே பறை தருவான்" என்று நூற்பயனைச் சொல்லுகிறாள். இந்தக் கடைசி பாசுரத்தில், “செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலை" எண்ணி தியானித்து வணங்கி சரணம் செய்பவர்கள், "எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்" என்று நூற்பயன் சொல்லி முடிக்கிறாள்.


வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை,

திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி,

அங்கப் பறை கொண்ட ஆற்றை  அணி புதுவைப்

பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன,

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,

இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்,

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


பாசுர விளக்கம்:

"அழகிய கப்பல்கள் உலாவும்  பாற்கடலை கடைந்த அந்த மாதவனை, கேசவனை, சந்திரனை ஒத்த அழகுடைய பெண்கள் பாடி தங்களுக்கு வேண்டிய வரங்களை (பறை) யாசித்துப் பெற்றதை பற்றி சொல்லும் பாசுரம்."

"ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த தாமரை மலர் மாலை சூடிய, பட்டர்பிரான் பெரியாழ்வாரின் மகளாகிய, கோதையின் (ஆண்டாள்) சங்க தமிழ் மாலையாம் இந்த முப்பது பாடல்களையும் தவறாமல் சொல்பவர்கள், நான்கு வலிமையான தோள்களையும் அழகிய சிவந்த கண்களையும் கொண்ட திருமாலின் அருள் பெற்று என்றும் இன்புறுவர்."


வங்கக் கடல்கடைந்த: 

பாற்கடலைக் கடைந்தவர்கள் தேவர்களும் அசுரர்களுமென்று அவர்கள் எண்ணலாம். ஆயினும் அவர்களுக்கு ஆதாரமாக கூர்மமாக (ஆமை) நடுவில் நின்று, மந்தர மலையைத் தாங்கியவன், பரந்தாமன் அல்லவா? கூர்மமாக முதுகில் மலையைத் தாங்கித் திருப்பாற்கடலைக் கடைந்தது மட்டுமல்ல, மோஹினி அவதாரமெடுத்து அரக்கர்களை மயக்கி, அமிர்தமெல்லாம் தேவர்களுக்கேக் கிடைக்கும் படிச் செய்தவனும் இந்த மாதவன் தான். நாமும் எல்லாக் காரியங்களையும் நான் செய்தேன், நானே செய்தேன் என்று அகங்காரம் கொள்கின்றோமே! நமக்குள்ளே சக்தியாக இருந்து நம்மை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி இறைவனே அல்லவா?


மாதவனை:

தேவர்களும் அசுரர்களும் அமரத்துவம் தருகின்ற அமுதத்தை வேண்டிப் பாற்கடலைக் கடைவதான செயலுக்குக் கண்ணனிடம் (திருமால்) உதவி வேண்ட, அதைக் காரணமாக வைத்து, அந்த நாராயணன் தன்னுடைய மனதிற்கு உகந்தவளாகிய பிராட்டியெனும் பெண்ணமுதைப் பெற்றான். அதைக் குறிக்கும்படி 'மாதவன்' என்ற பெயரைச் சொல்கிறாள் ஆண்டாள்.


முக்கண்ணன் நஞ்சுண்ண, விண்ணவர் அமுதுண்ண, கண்ணன் பெண்ணமுது கொண்டான் என்பதாக 'ஶ்ரீபராசர பட்டர்' விளக்கம் தருகிறார். உண்மையிலேயே அமுதத்தை அடைந்தவன் திருமால் மட்டுமே.


கேசவனை:

சுருள்முடி கொண்டவனை. கேசவன் மற்றும் மார்கழி மாதத்தின் தொடர்பு பற்றி அறிமுகப் பகுதியிலேயே அறிந்தோமல்லவா?

அடியவருக்குத் துன்பமுண்டாக்கும் கேஸி (குதிரை வடிவம்) முதலான பல அசுரர்களை அழித்தவன்.


திங்கள் திருமுகத்து சேயிழையார்:

பால்நிலா முகமும், நகைகளும் அணிந்த ஆயர்பாடிப் பெண்டிர். ஶ்ரீகண்ணனைக் கண்டதாலே குளிர்ச்சியும், மலர்ச்சியும், மகிழ்ச்சியுமான பற்பல செல்வ நலங்களை அடைந்த அழகிய திங்கள் முகம் அந்த ஆயர்குலப் பெண்களுக்கு!

27ம் பாசுரத்திலே மார்கழி நோன்பிருந்து பெற்ற சூடகம், பாடகம் முதலான பற்பல அணிகலன்களை அணிந்த பெண்கள் அல்லவா? ஆகவே "சேயிழையார்" என்கிறாள் ஶ்ரீஆண்டாள்.


சென்று இறைஞ்சி:             

கடந்த 29 பாசுரங்களில் சொன்னதெல்லாம் செய்து, வணங்கி கண்ணனளித்த பறையினைப் பெற்ற வழிமுறைகளை குறிப்பிடுகிறாள்.


அப்பறை:

ஆயர்பாடியில், ஆயர்குலப் பெண்டிர், நந்தகோபனது மாளிகையில் இருந்த ஶ்ரீகண்ணனைக் கண்டு, அவன் மனைவியாகிய ஶ்ரீநப்பின்னை தேவியை முன்னிட்டுப் பெற்றப் பறை, அந்தப்பறை, அதுபோல வேறொன்று இல்லாத சிறப்பான பறை, அப்பேர்பட்ட பறை.


பட்டர்பிரான் கோதை:

இந்த பூவுலகிற்கே அணியான புதுவை என்கிற ஶ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த விஷ்ணுசித்தர் பெரியாழ்வாரின் திருமகள் கோதை பிற்காலத்தில் பக்தியால் உணர்ந்து பாடினாள். ஊரும் பேரும் சொல்லிப் பெருமை செய்கிறாள் ஶ்ரீஆண்டாள்.


பைங்கமலத் தண்தெரியல்:

குளிர்ச்சி பொருந்திய தாமரை மாலை அணிந்தவள். அலங்கல், ஆரம், இண்டை, கண்ணி, கோதை, தாமம், தார், தொங்கல், தொடையல், பிணையல், வடம், தெரியல் இவை பலவகை மாலைகள். அதில் தெரியல் என்பது தொங்குமாலை. இப்போது அது "ஆண்டாள் மாலை"யென்றே வெகுஜனங்களால் குறிக்கப்படுகின்றது.


சங்கத் தமிழ்மாலை:

வடமொழி கோலோச்சிய காலத்தில் வாழ்ந்தாலும், வடமொழி நன்கு தெரிந்தவளாயிருந்தாலும், அதிலே யாப்பிசைத்தால் பெருமையுண்டு என்று தெரிந்திருந்தாலும், எல்லோருக்கும் புரியும் வகையிலே,தெய்வத் திருமொழியாம், இனிமைத் தமிழிலே 'ஶ்ரீஆண்டாள்' தனது மேலான திருப்பாவையைப் பாடினாள்.

சங்கம் என்றால் கூட்டம் என்று பொருள். தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் பலர் கூடியிருந்த அவைக்கு சங்கம் என்று பெயர்.தமிழகத்தின் சங்க காலத்தில், புலவர்கள் இயற்றிய இலக்கியங்களைத் தரம் ஆராய்ந்து, இயற்றியவரைக் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்று, ஏற்றுக்கொள்வதா, புறந்தள்ளுவதா என்று சங்கப்புலவர்கள் கூடி முடிவு செய்வார்கள். கோதை வாழ்ந்த காலத்தில் சங்கம் இருந்ததா? இல்லையா? என்பது போன்ற சரித்திர ஆராய்ச்சியில் நாம் ஈடுபட வேண்டியதில்லை.

வேறொருவிதத்தில் ஶ்ரீவைஷ்ணவ நெறியினர் சொல்லும் விளக்கம், கூட்டமாய்க் கூடி அடியவர்களெல்லாம் ஒன்றாக  பாராயணம் செய்யப்பட்ட திருப்பாவை என்னும் தோத்திர மாலை என்று கொள்ளலாம் என்பர்.


முப்பதும் தப்பாமே:

ஒரு இரத்தினமாலையில், ஒரு மணி குறைந்தாலும் அதன் அழகுக்குக் குறைவு ஏற்படுமல்லவா? ஆகவே உயர்ந்த பாமாலையான இந்த 30 பாசுரங்களில் ஒன்றும் குறையாமல், அத்தனையும் பாட வேண்டும். முப்பதையும் இல்லாவிட்டாலும் 29வது பாசுரம் சிற்றஞ் சிறுகாலையை யாவது சொல்ல வேண்டுமென்பது பெரியோர் கூற்று.


இங்கு இப் பரிசுரைப்பார்:

இம்மண்ணுலகிலேயே ஓதிவர,  இறைவன் எங்கே எங்கே என்று அலைய வேண்டிய அவசியமில்லை. அவனுடைய அருளைப் பெறுவதற்கு, இம்மண்ணுலகிலேயே கோதையளித்த திருப்பாவையினை ஓதினால் போதுமே! நாம் ஆயர்பாடியிலிருந்த இடைச்சிகளாகவோ, பரந்தாமனைப் பாடிய ஆழ்வார்களாகவோ, அவன் பணியிலே இருக்கும் ஆச்சார்யர்களாகவோ, ஆண்டாளைப் போல அவனையே மணாளனாக வரிக்கின்றவர்களாகவோ இல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், இறையருள் பெறலாம்.


ஈரிரண்டு மால்வரைதோள்:         

வரை = மலை; மலை போன்ற பெரிதான நான்கு தோள்கள்.

சங்கும் சக்கரமும் தாங்கும் இரண்டு, அபயமும் வரமும் அருளும் இரண்டு என்று நான்கு கரங்களைத் தாங்கும் அகண்ட பெருந்தோள்கள்.


செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்: 

செவ்வரியோடிய விழிகளும், அழகுமுகமும் கொண்ட, திருமகள் நாயகன் பரமன் அருளால்,


எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர்:

எல்லா உலகிலும் இன்பமுற்று வாழ்வர். செங்கண், அங்கண், என்றெல்லாம் சொல்லுவது இறைவனது அருட்பார்வை மீதில் அடியவருக்கு இருக்கும் ஆசையினால்! இறைவனது கண்களைத் தாமரைக்கு ஒப்பாகவே பலரும் பாடியிருக்கிறவாறு ஆண்டாளும் பாடியுள்ளாள்.


பாசுர விசேஷம்:

சேயிழையார்:

ஆச்சார்யர் உபதேசம் பெற்று, அடியவர் குழுவோடு கூடி சரணாகதி செய்து, இறைத்தொண்டு செய்கின்றவர்களே சேயிழையார், நேரிழையீர்!

கோவிந்த நாமத்தைப் போலவே கோதா நாமத்திற்கு பொருளுண்டு. கோ என்றால் நல்ல உயர்ந்த கருத்துகள் என்று பொருள் கொண்டால், ததாயதே - தா- என்றால் தருவது என்று கொண்டால், கோதா - அத்தகைய "உயர்ந்த கருத்துக்களைத் தந்தவள்" என்று பொருள். திருப்பாவை முழுதுமே மிகவுயர்ந்த வேத ஸாரத்தை உள்ளடக்கியது தான்.


பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்கோதைசொன்ன:               

பசுமை பொருந்திய திருத்துழாய் மாலையும், செந்தாமரை மாலையும் அணிந்த கோதைக்கு, ஶ்ரீவில்லிப்புத்தூர் பட்டர்பிரானாகிய பெரியாழ்வார் தந்தை மட்டுமல்ல, ஆச்சார்யரும் அவரே! இங்கே தன்னை ஆண்டாள் குருவின் சிஷ்யையாகத் தான் அடையாளங் கூறிக்கொள்கிறாள். ஶ்ரீமதுரகவியாழ்வார் தன்னுடைய ஆசிரியரான ஶ்ரீநம்மாழ்வாரை முன்னிட்டே பாசுரங்கள் இயற்றியதைப் போலவே, ஶ்ரீஆண்டாளும் தன்னுடைய ஆசிரியரை முன்னிட்டே, சரணாகத சாரமாக விளங்கும் இந்தத் திருப்பாவையைப் பாடியிருக்கிறாள். இதுவே திவ்ய பிரபந்தங்களுள், திருப்பாவைக்கு இருக்கும் தனிச்சிறப்பு என்று ஶ்ரீவைஷ்ணவ குருபரம்பரையினர் கருத்து.


செல்வத் திருமாலால்:       

இப்பாசுரம் தொடங்கும் போதும் திருமகள் தொடர்பு, முடியும் போதும் திருமகளுடன் கூடிய திருமால், என்று உறுதியிடப் படுகிறது.


ஸ்ரீஆண்டாள் கருணையுடன்,  அடியேனுடைய திருப்பாவை பதிவுகளை, ஸ்ரீ ஆண்டாளின் மங்களாசாசனுத்துடன் நிறைவு செய்கிறேன்.


நல்ல திருமல்லி நாடியார்க்கு மங்களம்!

நால்திசையும் போற்றும் எங்கள் நாச்சியார்க்கு மங்களம்!

மல்லிகை தோள் மன்னனாரை மணம் புரிந்தார்க்கு மங்களம்!

மாலை சூடிக்கொடுத்தாள்  மலர்தாள்களுக்கு மங்களமே!!


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!!!

அடியேன்,

திருப்பாவை 29

 திருப்பாவை பாசுரம் 29

(சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை)


தன்னை ஒரு ஆயர்பாடிப் பெண்ணாக, கோபிகையாக உருவகப்படுத்திக் கொண்டு ஆண்டாள் சொன்ன கடைசி திருப்பாவைப் பாசுரம் இதுவாகும். அடுத்த பாசுரம், திருப்பாவைக்கான 'பலஸ்ருதி' ஆண்டாள் தன் வாய்மொழியாகவே உரைப்பது.


"நாராயணனே நமக்கே பறை தருவான்" என்று முதல் பாசுரத்தில் உரிமையோடு சொன்ன ஆண்டாள், இந்த 29-வது பாசுரத்தை, "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உனக்கே நாமாட் செய்வோம்" என்று தெளிவான நோக்கத்தோடு அறுதியிட்டு நிறைவு செய்கிறாள்!

எளிமையாகச் சொன்னால் பரமனிடம் அடியவர் கூட்டத்துடன் சரணாகதி, அவனுக்கு பல்லாண்டு பாடுதல், அவன் அருளும் மோட்சம், பின் சதாசர்வ காலமும் பகவத் சேவை,  இது தான் கோதையின் பிரபந்த சாரம்.


இந்த பாசுரம் பகவத் தாஸ்யத்தை (இறையடிமை செய்தல்) போற்றுகிற பாசுரம். பதினைந்தாம் பாசுரமான "எல்லே இளங்கிளியே" பாசுரத்தில் பாகவத தாஸ்யம் (அடியார்க்கு அடிமை செய்தல்) சொல்லப்பட்டது. இரண்டுமே, திருப்பாவைக்கு பெருமை சேர்க்கும் பாசுரங்களாக வைணவப் பெருந்தகைகளால் போற்றப்படுபவை. மிகவும் உயர்வான 'கோவிந்த' நாமத்தை மூன்றாவது முறையாக குறிப்பிடும் பாசுரம் இது . மற்ற பாசுரங்களில், இடைச்சிகள் இறைவனிடம் பறை தருமாறு வேண்டுகின்றனர், சரணாகதி செய்வதைப் பற்றிப் பேசுகின்றனர். இப்பாசுரத்தில் சரணாகதி செய்து நாம் பெறக்கூடிய பறை என்ன என்பதன் பொருளை, அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டியதைப் பற்றி விரிவாகப் விளக்குகின்றனர்.


சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்,

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து  நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது,

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*_

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்  உன் தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்,

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!


பாசுர விளக்கம்:  

"மிக்க விடியற்காலைப் பொழுதில் உன்னிடத்திற்கு வந்து உன்னை வணங்கி உனது தங்கத் தாமரை ஒத்த திருவடிகளை மங்களாசாசனம் செய்ய நாங்கள் வந்திருப்பதன் நோக்கத்தை நீ கேட்பாயாக ! மாடுகளை மேய்த்து அவை உண்ட பின் உண்ணுகின்ற குலத்தில் பிறப்பெடுத்த நீ எங்களின் பணிவிடைகளை ஏற்காமல் செல்லுதல் ஆகாது!"

"ஓ கோவிந்தனே ! இன்று உன் அருளை (பறை) பெறுவது மட்டும் எங்கள் விருப்பமன்று. என்றென்றும், ஏழேழு பிறப்புகளிலும் உன்னோடு பொருந்தியவராக, உனது நெருங்கிய உறவினராக நாங்கள் இருக்க அருள்வாயாக!  உனக்கு மட்டுமே அடிமை செய்பவராக நாங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும்! இவற்றுக்கு மாறுபட்ட எங்கள் ஆசைகளை நீக்கி அருள வேண்டும்!"

முதல் பாசுரத்தில் நாராயணனே நமக்கே பறை தருவான் என்று சொல்கிறாள். இந்தப் பாசுரத்தில் அந்த நாராயணனே பறை என்கிறாள். எப்போதும் இறைப்பணியே செய்வது என்ற தங்கள் உள்ளக்கிடக்கையை சொல்லும் இடைச்சியர்கள் பாசுரம் . ஸ்ரீமதே நாராயணாய நம: எனும் த்வய மந்திரத்தின் இரண்டாம் வரியைக் குறிக்கின்றது இப்பாசுரம். வைணவக் கோயில்களில் 'சாற்றுமுறையாக' ஓதப்படும் பாசுரங்கள் 29 மற்றும் 30 ஆவது பாசுரங்கள்.

15 ஆம் பாசுரத்தில் இறைவனின் அடியார்க்கு அடியாராக இருப்பதன், பாகவத தாஸ்யத்தின் பெருமை பேசப்படுகின்றது. இந்த 29 ஆவது பாசுரத்தில் ஆண்டவனுக்கு அடியாராக, பகவத் தாஸ்யத்தில் ஈடுபடுவதைப் பற்றிக் கூறி சரணாகதி தத்துவத்தின் பலனே இறைவனுக்கு என்றும் பணிசெய்வது தான் என்று முடிக்கப்படுகிறது. 28 ஆம் பாசுரத்தில் த்வய மந்திரத்தின் முற்பகுதியான உபாயம் (இறைவனை அடையும் வழி) குறித்து, அதாவது சரணாகதியை உபாயம்  என விளங்குகிறாள் ஆண்டாள்.

இப்பாசுரத்தில் த்வய மந்திரத்தின் பிற்பகுதியான உபேயம்  (அடையும் பேறாகிய இறைப்பணி) குறித்து விளக்குகிறாள். இறைவனைச் சரணம் செய்து அடையும் வீடுபேற்றின் நோக்கமே, என்றும் இறைவனோடு இருந்து நம்மாலான தொண்டினை செய்வதே உண்மையான பேரின்பம் என்ற தன் எண்ணத்தை உறக்கக் கூறி முடிக்கிறாள்.

பாசுர விசேஷம்:

சிற்றம் சிறுகாலை:  குளிரின்னும் நீங்காத விடியல் காலத்திலே, மிகவும் சிறிதாகவே கண்ணுக்குப் புலப்படக்கூடிய, அழகியதும் சிறியதுமான குட்டிக்கண்ணன் காலைக் காண, அவன் காலடியில் பணிந்து தொழ, இந்த ஆயர்பாடிப் சிறுமிகள் சிறுகாலைப் பொழுதில், அதாவது விடியல் வேளையிலேயே வந்தனராம்! முனிவர்களும் யோகிகளும் உள்ளத்தில் குடி கொண்டுள்ள இறைவனது யோக நித்திரை கலையாமல் மெல்லக் கண்விழித்து அரியென்னும் பேரரவம் செய்யும் காலை நேரம் என்பர்.


வந்துன்னை சேவித்து:

அடியவருக்கு அருளும் உன் கருணையை எண்ணித் தொழுது. ஏற்கனவே சொன்னது போல, இவர்கள் மார்கழிக் குளிரில் தன்னைத் காண வந்ததே கண்ணனுக்குப் பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது. வந்தவர்கள் மேலும் கண்ணனைக் கரங்கூப்பித் தொழுது (சேவித்து) நிற்பதைக் கண்டு அவன் மனம் பாகாய் உருகிவிடுமாம். அவன் அவ்வளவு கருணையாளன்.


பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்!:        

கண்ணனைப் பார்த்து "மிகவும் கஷ்டப்பட்டு உன்னைச் சரணடைந்தேன். ஆகவே, உன் தாமரைத் திருவடிகளை போற்றுவதற்கான காரணத்தை நீ கேட்டே ஆக வேண்டும். நீ எங்கள் குலத்தில் வந்து உதித்தவன். அதற்காகவேனும், நான் சொல்ல வருவதை நீ கேட்டுக் கொண்டாக வேண்டும். என்9 குற்றேவலை நீ கொள்ளத் தான் வேண்டும்" என்று தன்னை ஒரு இடைச்சிறுமியாக எண்ணிக் கொண்டு சூடிக் கொடுத்த ஶ்ரீகோதை ஆண்டாள் நாச்சியார் குறிப்பால் சொல்வது சிறப்பாகும்.


பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து:

பசுக்களை மேய்க்கும் ஆயர்குலத்தில் கண்ணனாகப் பிறந்த இறைவா. பசுக்கள் உணவு உட்கொள்ளாமல் இடையர்கள் உண்ணுவதில்லை. இடையர்களைக் காக்கும் பெரும் இடையனாம் கண்ணனும், அவனது பசுக்களான ஜீவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கக் கூடாது என்று குறிப்பாகத் தூண்டுகிறாள், ஆண்டாள்.


உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்:  

இங்கே 'போற்றும்' என்றால், இறைவனிடம் எதையோ எதிர்பார்த்துப் போற்றுவதல்ல. இறைவனைப் போற்றுவதே நாம் பெரும் பலன், இப்பிறவி பெற்றதன் பொருள் என்று உணர்ந்து, வேறு பலனெதுவும் எதிர்பாராமல் இறைப்புகழைப் போற்றுவது.


பொற்றாமரை அடியே: இறைவனை அடைவதற்கு ஒரே வழி - உபாயம் அவன் திருவடிகளில் சரணம் செய்வது தான். வேறெந்த வழியிலும்  ஈடுபடுவது  (உபாய விரோதி) பயனற்றது.


உன்தன்னோடு உற்றோம் ---- ஆட்செய்வோம்:               இறைவனை சரணடைந்த பின் நாம் அடையக் கூடிய ஒரே இன்பம் (ப்ராப்யம்), அவனுக்குப் பணி செய்வதே (கைங்கர்யம்). வேறெந்தப் பலனும் எதிர்பார்ப்பது தவறு (ப்ராப்ய விரோதி).


சென்ற 28ம் பாசுரத்தில் "உன்னுடனான உறவைப் பிரிக்கவே முடியாது" என்று பாடியவள் இப்பாசுரத்தில் ஒரு படி மேலே போய், "கண்ணா! “(எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்) எக்காலத்திலும்  நீயே எங்கள் உறவு, இதற்கு நீ அருள வேணும்! இந்த நோக்கத்திலிருந்து எங்கள் மனம் திரும்பாமல் இருக்கும்படியான வைராக்கியத்தை எங்களுக்கு அளிப்பதும் உன் சித்தமே" என்று இடைச்சியர் சொல்வதாக ஶ்ரீகோதை ஆண்டாள் நாச்சியார் சாதுர்யமாக எல்லா பொறுப்புகளையும் அப்பரந்தாமன் மேலேயே  விட்டு விடுகிறாள்.


இப்பாசுரத்தில் மூன்றாவது முறையாக கோவிந்த நாமம் (இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா) எழுப்பப்படுகிறது. இதற்கு முன், 27வது பாசுரத்தில், "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" என்றும், 28வது பாசுரத்தில் "குறைவொன்றும் இல்லாத கோவிந்தா" என்றும் ஶ்ரீஆண்டாள் பாடியுள்ளாள். பொதுவாக, சங்கல்பத்தின் போது, "கோவிந்த கோவிந்த கோவிந்த:" என்று மூன்று முறை சொல்வது ஶ்ரீவைஷ்ணவ மரபு.


நோன்புக்காக பறை வேண்டுவதின் சரியான அர்த்தம் இப்பாசுரத்தில் வெளிப்பட்டுள்ளது. அதாவது, உன் திருவடிகளில் கைங்கர்யம் செய்திருத்தல், உன்னை விட்டுப் பிரியாதிருத்தல், மேற்கூறிய இரண்டுக்கும் ஒவ்வாத எண்ணங்களை நீக்க வேண்டுதல் ஆகியவையே ஆகும்.


இப்பாசுரத்தில், சொரூப விரோதியும், பிராப்ய விரோதியும் விலகுவது சொல்லப்பட்டுள்ளது.

த்வயத்தின் முற்பகுதியான உபாய சொரூபம் சென்ற பாசுரத்தில் (கறவைகள் பின் சென்று) வெளிப்பட்டது. இதில், பிற்பகுதியான உபேய சொரூபம் (பரம்பொருள் வடிவம்) வெளிப்படுகிறது.


குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது:  

குற்றேவல் என்றால் - குறு ஏவல். இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற "சிறு தொண்டுகள்" செய்தல். காலால் இட்டதைத் தலையால் செய்வதே குற்றேவல்.

"எங்களுக்குப் பெருமை தந்த உனக்கு எம்மால் ஆனதான நாங்கள் புரியும் தொண்டினை ஏற்க வேண்டும். அப்படிப் பட்டத் தொண்டை உனக்கு நாங்கள் செய்ய வேண்டும் கண்ணா! அதை நீ மறுக்கக் கூடாது! இந்தப் பசுக்களைக் காப்பதற்கு நாங்கள் பலர் இருக்கிறோம். ஆனால் எங்கள் எல்லோரையும் சேர்த்துக் காப்பவன் நீ ஒருவன் தானே! உனக்கு அடி பணிந்து தொண்டு செய்வது எங்களுக்குப் பெருமை. அதை எங்களுக்குக் கட்டாயம் அளிக்காமல், தவிர்க்காதே! " என்கிறாள்.


உனக்கேநாம் ஆட்செய்வோம்:       

"எங்களைக் காப்பது உன் தொழிலே அன்றோ? அது போன்றே எங்களால் சேவகம் செய்யப்பெற வேண்டியவனும் நீயன்றோ? அதை ஏற்காமலிருப்பது உன் இயல்புக்கு அழகில்லையே,"என்று சொல்கிறாள்.


மற்றை நம் காமங்கள் மாற்று:

உனக்குப் பணி செய்யும் ஆசையைத் தவிர நாங்கள் கொள்ளுகின்ற வேறெந்த விருப்பங்களையும் போக்கிவிடு. "எப்போதும் எங்களைப் பற்றியே எண்ணிக்கொண்டு, ஆசை விருப்பம், கோபம் தாபமென்று சிற்றின்பங்களில் உழன்று கொன்டு, ஸம்ஸாரத்திலேயே நினைவை வைத்துக் கொண்டிருப்பது எங்கள் பிழை. உனக்குத் தொண்டாற்றுவதைத் தவிர்த்ததான எங்களது வேறு விருப்பங்களை, லௌகீக ஈடுபாடுகளை, மாற்றித் திருத்தி விடு!" என்கிறாள் நம் அன்னை ஶ்ரீகோதை ஆண்டாள்.


எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு:

பரமபதத்திலோ, தேவருலகிலோ, மண்ணுலகிலோ, நீயெங்கு தோன்றினாலும் தானும் கூடவே தோன்றும் உன்னை என்றும் நீங்காமல் இருக்கும் திருமகள் போல், நாங்களும் உன்னோடே எப்போதும் இருந்து பணி செய்யும் பேறு வேண்டும். இது  ஸ்ரீமதே நாராயணாய நம: எனும் த்வய மந்திரத்தின் இரண்டாம் வரியைக் குறிக்கின்றது.


உன்தன்னோடு உற்றோமே:  

திருமந்திரத்தின் பிரணவத்தை குறிக்கும் சொற்றொடர்.

உனக்கே நாம் ஆட்செய்வோம். உன்னையே சரணம் அடைந்தோம். மாம் ஏகம் சரணம்  எனக் கண்ணன் சொன்னதற்கிணங்க, பரமன் ஒருவனையே பணிதல்,

திருமந்திரத்தின் நாராயண ஒலியைக் குறிக்கும் சொற்றொடர்.


மற்றை நம் காமங்கள் மாற்று:

தன்னைச் சரணடைந்த பின்னர், அந்த ஜீவனை வேறெதிலும் சிக்கவிடாமல், அப்படி வழிமாறிப் போனாலும் தடுத்தாட்கொண்டு அருள் செய்யும் கருணை உடையவன் இறைவன் என்று பொருள். திருமந்திரத்தில், எதுவும் எனதல்ல எல்லாம் பரமனுடையதே என்பதைக் குறிக்கும் 'நமஹ'என்ற ஒலியினைக் குறிக்கும் சொற்றொடர்.


மற்றைக் காமங்கள் மாற்று:                                நமக்கு நம் மனத்தைக் கட்டுப்படுத்தி, ஒருமுகப்படுத்தி தியானத்திலாழ்ந்து, இறைவனைக் காண வேண்டுமானாலும், அதுவும் இறைவன் அருளால் தான் முடியும். ஆகவே தான் ஆசைகளால் அலைப்புறுத்தப் பட்டு அங்குமிங்கும் பாய்கின்ற மனத்தைக் கட்டுப்படுத்த, ஆண்டவனிடமே முறையிடுகிறாள் ஶ்ரீஆண்டாள்.

அர்ஜுனன் கீதையில் கண்ணனிடம் சொன்னதையொட்டியே இவ்வரி உள்ளதென்பர்.

1ஞ்ச1லம் ஹி மன: க்1ருஷ்ண ப்1ரமாதி2 3லவத்3த்3ருடம் |
1ஸ்யாஹம் நிக்3ரஹம் மன்யே வாயோரிவ ஸுது3ஷ்க1ரம் ||

"(பகவத் கீதை 6-34)

"கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உன்னுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்." என்கிறான் அர்ச்சுனன்.


தன்னை அடைந்த அடியவரின் குறைபாடுகளைக் கண்டு வெறுத்து ஒதுக்காதவன் பரந்தாமன். ஆகவே, அவன் மீதான பற்றுதலைத் தவிர அடியார்களுக்கு இருக்கக் கூடிய வேறு ஆசைகளை, குறைகளை நீக்கி, எப்போதும் தன்னையே நாடும் குணத்தை அருள்வான். ஆகவே இப்படியொரு கோரிக்கையை வைக்கிறாள் ஶ்ரீகோதை ஆண்டாள்.


அடுத்த பதிவில், திருப்பாவை பிரபந்தத்தின் பலஸ்துதியான 30ம் பாசுரத்தை சேவிப்போம்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்,

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

அடியேன்,

திருப்பாவை 28

 திருப்பாவை பாசுரம் 28

(கறவைகள் பின் சென்று)    


சென்ற பாசுரத்தில் (கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!) கோபியர், ஆபரணங்கள் ஆடைகள், பால் சோறு போன்றவற்றைக் கண்ணனிடம் கேட்டதால், அம்மாயவன், "நீங்கள் அழியக்கூடிய சிற்றின்பங்களை என்னிடம் வேண்டுவது போல் தோன்றுகிறதே" என்று புன்னகைக்க, கோபியர் அதற்கு பதிலாக, தங்களது உள்ளார்ந்த விருப்பம், கண்ணனுக்கு கைங்கர்யம் செய்து எப்போதும் அவன் உடன் இருப்பதே என்று கூறுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது சிறப்பு ஆகும். சரணாகதித்துவத்தின் பெருமையை இப்பாசுரம் சொல்வதை விட அருமையாக விளக்க முடியாது.


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்,

அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்,

குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன் தன்னோடு

உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது,

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்

சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே,

இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.


பாசுர விளக்கம்:

"பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்டு உடல் வளர்ப்பவர்களும், ஞானமிலாத சொற்ப அறிவு படைத்தவர்களும் ஆன நாங்கள், எங்கள் பழந்தமிழ் தொல்குடியான ஆயர் குலத்தவனாக உன்னைப் பெற்றடைய பெரும் புண்ணியத்தைச் செய்துள்ளோம். யாதொரு குறையும் இல்லாத 'கோவிந்தன்' என்னும் பெயரினைக் கொண்ட கண்ணபிரானே!"

"உன்னுடன் நாங்கள் கொண்டுள்ள உறவை யாராலும் எக்காலத்திலும் பிரிக்க முடியாது. அற்ப அறிவுடைய, சூதுவாது தெரியாத சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மாதவன் போன்ற பெயர்களிட்டு) ஒருமையில் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களை நீ தந்தருள்வாயாக!" என்கிறாள்.

கண்ணனுக்குத் தர தங்களிடம் ஏதும் இல்லை என்ற தங்கள் "கை முதல் இல்லா" தன்மையை இடைச்சியர் "கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்" என்று முதலடியிலேயே சொல்லி விடுகின்றனர்! ஒரு விதத்தில் ஶ்ரீஆண்டாள் நாச்சியாரின் ஆற்றாமை இப்பாசுரத்தில் இழையோடுகிறது.

அவர்கள் கேட்பது, “உந்தன் கருணைக்கு குறைவுண்டோ? எங்கள் குற்றம் குறைகளை மன்னித்து, நாங்கள் விரும்புவதை அருளி, எங்களை உன்னுடன் சேர்த்துக் கொள்" என்று சரணாகதியின் உன்னதத்தை கோபியர் வெளிப்படுத்துவதாக கோதை நாச்சியார் இயற்றியுள்ள இப்பாசுரம், வைணவப் பெருந்தகைகளால், மிகவும் சிலாகிக்கப்பட்ட ஒன்றாகும்!


இப்பாசுரத்தில் கோபியர் மூன்று முறை, பேரன்பில் கண்ணனை ஒருமையில் விளிக்கின்றனர். அதாவது, 

1) உன்றன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்.

2) உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது.

3) அன்பினால் உன் தன்னைச் சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே.


துயிலெழுந்து கோபிகைகளை அரவணைத்துக் கொண்ட கண்ணன், "நான் உங்களுக்கு நீங்கள் கேட்டதையெல்லாம் அளிக்கிறேன், பதிலுக்கு நீங்கள் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்று கேட்க அதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஆண்டாள் இயற்றிய இந்தப் பாசுரம் மிக உயர்ந்த பொருட்செறிவு கொண்டது.


இந்தப் பாசுரமும், அடுத்து வரவிருக்கும  இருபத்தொன்பதாம் பாசுரமும் ஶ்ரீவைஷ்ணவ நெறியின் மந்திர இரத்தினம் என்று கொண்டாடப்படும் "த்வய மந்திரத்தின்" விளக்கப் பாசுரங்கள். முதல் பாசுரத்தில் "நாராயணனே நமக்கே பறை தருவான்" என்று சொன்னதற்கான ஆழமான விளக்கமாக இந்த இரண்டு பாசுரங்களும் அமைகின்றன.

அதாவது, இறைவனே அடையத் தக்கவன், - ப்ராப்யம், உபேயம். அவனை அடைகின்ற வழியும் அவனே, ப்ராபகம் உபாயம். ஸம்ஸாரமென்னும் கடலைக் கடப்பதற்கு ஜீவாத்மாக்களுக்குப் படகாக இருப்பவனும் ஆண்டவனே, அந்தக் கடலைக் கடந்து, ஜீவர்கள் அடையக்கூடிய பரமாத்ம நிலையும் ஆண்டவனே! வழியாகவும், வழி சென்று சேர்க்கும் இடமாகவும் ஒரு பயணம் உண்டென்றால் அது ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் பயணமே!


இப்பாசுரத்தில் தான் ஆண்டாள் முதன்முதலாக 'இறைவன்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறாள் . "நாங்கள் பறையும், பரிசுகளும் வேண்டி உன்னைத் தொழுது வந்ததெல்லாம் உனக்குக் குற்றேவல் செய்யவே அன்றி வேறொன்றும் இல்லை" என்று கண்ணனிடம் உளப்பூர்வமாகத் தெரிவிக்கிறாள். "அறிவற்ற எங்களின் பிழைகளைப் பொறுத்து எங்களுக்கு அருள் செய்" என்று மன்றாடுகிறாள். "எங்களிடம் பல குறைகளிருப்பினும், உன் கருணைக்கு ஒரு குறைவுமில்லை ஆதலால் எங்களைக் காத்தருள் கோவிந்தா" என்று கோவிந்த நாமத்தைக் கொண்டாடும் பாசுரம்.


ஆகிஞ்சன்யம் (கையறு நிலை), நைச்சியம் (தங்கள் சிறுமையை உணரும் அறிவு), பரமனின் ஸௌலப்யம் (அனைத்து அடியவராலும் சுலபமாக அடையத் தக்கவன் இறைவன் எனும் தெளிவு), பரத்துவம் (நாராயணனே இறையென அறிதல்), ஜீவாத்மா-பரமாத்மாவுக்கு உள்ள சம்பந்தம், அபராத க்ஷமணம்: (நம் தவறுகளை இறைவன் மன்னிப்பான் என்ற தெளிவு), சித்தோபாயம் -பரமனை அடைவதற்கு ஆகிய பரமனே வழி என்று தெளிதல் என்றிவையான இறைவனை சரணாகதி செய்வதற்கான அறிவுத்தெளிவுகள், போன்ற ஏழு நிலைகளை இப்பாசுரம் விளக்குகிறது. 

த்வயத்தின் முதல் வரியின் விளக்கத்தை, அடியவர் இறைவனை அடையத் தாமாக செய்ய வேண்டியது என்ன என்பதற்கான விடையை இப்பாசுரம் கொண்டுள்ளது. இறைவனை அடைவதற்குத் தாங்கள் செய்யக்கூடியது சரணாகதி மட்டுமே என்று அறிவிக்கும் பாசுரம். வைணவ நெறியின் இரஹஸ்யத் த்ரயத்தின் மிக முக்கியமான மந்த்ரமான த்வய மந்திரத்தின் முதல் வரியின் விளக்கமே இப்பாசுரத்தின் உட்பொருள். (இரண்டாவது வரி அடுத்த பாசுரம்). த்வயத்தின் முதல் வரி (ஸ்ரீமன் நாராயண ஶரணெள சரணம் ப்ரபத்யே)


கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்:                              "இறைஞானமெல்லாம் அறியக்கூடிய வாய்ப்பினை நல்கும் அறிஞர்களின் நட்பெதுவும் எங்களுக்கு இல்லை. வாய்பேசாத ஆநிரைகள் மேய்த்துண்ணும், மாலையானதும் மேய்ச்சல் முடித்து வீடு திரும்பி அடையும் சாதாரணர்கள்.

ஆகையினாலே அறிவு பெறுவதற்கு நாங்கள் விரும்பினாலும் அதற்கான வழியே இல்லாதவர்கள் நாங்கள்!" என்று தங்களைப் பற்றி அறிவித்துக் கொள்கிறாள் ஆண்டாள்.


அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து:

 "உங்களுக்குத் தான் அறிவில்லை, உங்கள் குலத்திலாவது யாருக்காவது அறிவுண்டா?" எனக் கண்ணன் கேட்க அப்படியும் இல்லையென்று கூறுகிறார்கள். சரி தவறுகள் என்னவென்றெல்லாம் தெரியாதவர்கள், சூது வாதற்றவர்கள், இறைஞானம் பெறாதவர்கள் எங்கள் குலத்தினர் என்கிறீர்கள். "நீங்களே பிறவியில் அறிவு பெறாவிட்டாலும், பெரியோர் கூறியிருக்கும் கருத்துகளைப் படித்தாகிலும் இருக்கிறீர்களா?" என்றால் இல்லையென்றே கூறுகிறார்கள். "எங்களைப் பற்றிய அறிவே எங்களுக்கு இல்லை, இதில் இறையறிவு எங்கிருந்து வருவது?" என்று கூறுகிறார்கள்.


உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்:                          என்னதான் பெருமையென்று பார்த்தால், ஆயர்குலத்தில் கண்ணன் தோன்றியதே பெருமை. "எங்களுக்கு அறிவெதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் எங்கள் மத்தியில் நீ வந்து தோன்றி பெருமை செய்கின்ற அளவுக்குப் புண்ணிய பலன் எங்களுக்கு இருக்கிறது. அது தான் கண்ணா எங்களுக்கு இருக்கும் ஒரே ஏற்றம் !" என்கிறார்கள். இறைவனே நமக்கு இரங்கி (ஸௌஸீல்யம்) நம்மிடையே வருகின்ற எளிமைத்தன்மையும் (ஸௌலப்யம்) சுலபமாய் அவனை அண்டிப் பணிய நமக்கிருக்கும் வாய்ப்பையும் குறிக்கிறது.


குறையொன்றுமில்லாத கோவிந்தா:

எங்களிடம் மேற்கண்ட குறைகளிருந்தாலும், எமக்கருளும் உன்னிடம் ஒரு குறைவும் இல்லை, இறைவா! கண்ணனைக் காண வந்த ஆய்ச்சிகளுக்கு அவன் என்ன இப்படிக் கேள்வி கேட்டு ஆராய்கிறானே என்று தோன்ற, ஆண்டாளும் "கண்ணா, எங்களிடம் நீ நிறை குறை என்று பார்த்தால் பற்பல குறைகள் இருக்கிறது. எங்களை, எங்கள் தகுதியைப் பார்த்து ஏற்றுக் கொள்ளவும், தள்ளி விடவும் எண்ணாதே ! எங்களிடையே வந்து நீ தோன்றியிருந்தாலும், எங்களைப் போன்ற குறைகள் உன்னிடம் இல்லையே இறைவா! குறைவாயிருப்பவர்களுக்கு, குறையொன்றுமில்லாமல் நிறைய இருப்பவர்கள் தருவது தானே முறை?" என்கிறாள்.

எங்கள் எல்லோரையும் காப்பவன் என்பதால் கோவிந்த நாமத்தைப் பெற்றவன் ஆயிற்றே?" அவனே அடையும் இடமாகவும் (ப்ராப்ய), பயணிக்கும் வழியாகவும் (ப்ராபக)  இருக்கும் ஒருமித்தத் தன்மையினை (ஸங்க்ரஹம்) இச்சொல்லாடல் உணர்த்துகிறது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போலே.


உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது:                "நாங்கள் எல்லோரும் உன்னைச் சேர்ந்தவர்கள். அப்படியே நாங்கள் குற்றங்குறை செய்திருந்தாலும், எங்கள் மீது சினங்கொண்டு நீ தண்டிக்க முற்பட்டால், அது உன்னில் ஒரு பகுதியையே கடிந்து கொள்வதாகாதா? இதை உன்னாலும் கூட மறுக்கவோ, மாற்றவோ முடியாதே! "இற்றைக்கும் ஈரேழ் பிறவிக்கும் இறைவன் ஒருவனே நம் உறவு, அது என்றும் மாறாது. கண்ணனே இறைவனென்று உணர்ந்து கொண்டார்களல்லவா?


அறியாத பிள்ளைகளோம்: 

ஆணவத்தினால் அல்லாமல் ஆண்டவன் மீதில் அவர்களுக்கு இருக்கும் அன்பினால் ஏற்பட்ட உரிமையினால் அவ்வாறு செய்வதும், அப்படியானவர்களின் கர்ம ஞான பக்தி யோகங்கள் எதுவும் தெரியாத, உலக வழக்கங்கள் அறியாத நிலையும் குறிக்கப்படுகின்றது.


அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனவும்:  பெரியனவாம் மறைகளுக்கும், பெரியவனான உன்னை எளிமையாக நீயாரென்று தெரியாமல், உன்மேல் கொண்ட அன்பு மிகுதியால் இறைவனான உன்னை நாராயணனென்றும், கண்ணனென்றும்,மாயன், மாதவன், தாமோதரனென்றும், பெயரிட்டு ஒருமையில் அழைத்தோம். இது அறியாமையாலும், சிறுவயதின் காரணமாகவும், அன்பினால் ஏற்பட்ட பிழைகள், இவற்றைக் கண்டு கோபம் கொள்ளாமல் மன்னித்துவிடு என்று கேட்கிறார்கள்.


கோவர்தன மலையைக் குடையாய்த் தாங்கி கோகுலத்தைக் காத்த பின்னே, கண்ணனுக்கு மிகவும் உயர்ந்ததான கோவிந்த நாமத்தைச் சூட்டி, இந்திரனே "ஶ்ரீகோவிந்தராஜ பட்டாபிஷேகம்" செய்த பின்னே வேறு பெயர்களைச் சொல்லி அழைப்பது தவறல்லவா?


அறியாத பிள்ளைகளோம்:

(அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனவும்)   என்ற கோதையின் கீதையின் இந்த வரி, ஶ்ரீகண்ணனின் கீதையில் அர்ச்சுனன் ஶ்ரீகண்ணனிடம் கோரும் மன்னிப்பின் சாயலே என்பர் நம் பூர்வர்கள்.

ஸகே2தி1 மத்1வா ப்1ரஸப4ம் யது3க்11ம் ஹே க்1ருஷ்ண ஹே யாத3வ ஹே ஸகே2தி1 |

அஜானதா1 மஹிமானம் த1வேத3ம் மயா ப்1ரமாதா3த்1ப்1ரணயேன வாபி1 ||

_ (பகவத் கீதை 11:41)

[இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, ‘ஏ கண்ணா, ஏ இடையா, ஏ தோழா’ என்று தவறுதலாலேனும் அன்பாலேனும் நான் சொல்லியிருப்பதையும்,]

யச்சாவஹாஸார்தமஸத்க்ருதோऽஸி

விஹாரஸ²ய்யாஸநபோ⁴ஜநேஷு।

ஏகோऽத²வாப்யச்யுத தத்ஸமக்ஷம்

தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம்।।   (பகவத் கீதை 11:42)

[விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னேயெனினும்) நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் அவற்றையெல்லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன் அளவற்றோய்!]


சீறி அருளாதே: அறிவற்று நாங்கள் செய்த அச்செயலால் எங்களைக் கோபிக்காதே. இறைவா நீ தாராய் பறை, சீறுவது இறைத்தன்மையல்லவே! பொறுத்து அருள்வது தானே இறையியல்பு? நீயே எங்களைக் காக்கும் இறைவனாகையால், எம்மை மன்னித்துக் கருணையுடன் அருள் செய். நைச்சியமாகப் பேசி, "நீ பெரியவன் கண்ணா, நாங்கள் அறிவிலிகள். நீயே எம்மை மன்னித்துப் பறையென்னும் கருவியைத் தருவாய்!" என்று கேட்கிறார்கள்.


பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் அழியாது இருப்பதான நவ (ஒன்பது) வித சம்பந்தம் பற்றிக் கூறப்படுகிறது.

பரமாத்மா-ஜீவாத்மா இடையேயான நவவித சம்பந்தமாவன:

1) பிதா - புத்ர, (தந்தை-மகவு),

2).பர்தா - பார்யா (கணவன்- மனைவி)

3) இரக்ஷக - இரக்ஷ்யக (காப்பவன்- காக்கப்படுபவர்)

4) சேஷி - சேஷ (ஆண்டான்- அடிமை)

5) ஞேயம் - ஞேயர் (அறியப்படுபவர் -.அறிபவர்)

6) ஸ்வாமி - ஸ்வ (உரிமையுள்ளவர் - உரிமைப்பொருள்)

7) ஆதாரம் - ஆதேயம் (தாங்குபவர் - தாங்கப்படுபவர்)

8) சரீரி - சரீரம் (ஆத்மா - உடல்)

9) போக்தா - போக்யா (அனுபவிப்பவர்-அனுபவிக்கப்படுபவர்)


கடந்த  “எல்லே இளங்கிளியே” என்னும் 15ம் பாசுரத்தில், பாகவத தாஸ்யம் (அடியவர்க்கு அடியவர்) பற்றி பார்த்தோம். நாளை 29ம்  (சிற்றஞ் சிறுகாலே) பாசுரத்தில் பகவத் தாஸ்யம் பற்றிப் பார்ப்போம். இந்த இரண்டு (15, 17) பசுரங்களும் திருப்பாவையின் இரண்டு கண்களாகப், பெரியோர்களால் போற்றப்படுகிறன.


ஆண்டாள் திருவடிகளே சரணம்,

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்,

அடியேன்,

திருப்பாவை 27

 *திருப்பாவை பாசுரம் 27*

(கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா)


இப்பாசுரத்தில் கண்ணன் இடைச்சியரது (நோன்பிருந்து செய்த) வேண்டுதலுக்கு இரங்கி அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ததால் அவர்களுக்கு வரும் பேரானந்தம் தெரிகிறது. இடைச்சியரின் பாவை நோன்பும் பூர்த்தி அடையும் நிலைக்கு வருகிறது.


முதலில் மார்கழி நோன்பு பற்றி 1- 5 பாசுரங்கள் மூலம் தெரிவித்த பின்னே, 6- 15 பாசுரங்கள் ஒவ்வொரு கோபியரையும் (இறையடியாரை) நோன்பிற்கு அழைத்து எழுப்பிய பின்னே, 16-20 பாசுரங்கள் நந்தகோபனுடைய இல்லத்திற்கு சென்று, நந்தகோபன், யசோதா, பலதேவன் நப்பின்னை பிராட்டி வரை எழுப்பியபின்னே, 21-25 பாசுரங்கள் கண்ணனையும் எழுப்பியதாக அமைந்தன. 26 ஆம் பாசுரத்தில் நோன்பிற்குரிய பொருட்களை அருளுமாறு கண்ணனை வேண்டிப் பெற்று, அந்நோன்பும் பூர்த்தியாகும் கட்டத்தில் இப்போது 27 ஆம் பாசுரத்தை சேவித்துக் கொண்டிருக்கிறோம். இப்பாவை நோன்பை நோற்ற இடைச்சியர்கள் தாங்கள் வேண்டும் பரிசுகளைக் கண்ணனிடம் பெற்றுக்கொள்வதைப் பற்றிய பாசுரமிது.


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்,

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே,

பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்,

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!


பாசுர விளக்கம்:

பகைவரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தனே! நாங்கள் உன்னிடம் பறை பெற்று உன்னை போற்றிப் பாடுவோம். அதனால் நீ அகமகிழ்ந்து,  நாட்டவர் எல்லோரும் புகழும்படியாக, எங்களுக்கு பரிசாக வழங்கும், அழகான சூடகம், தோள்வளை, தோடு, காதில் அணியும் மடல், காற்சதங்கைகள் மற்றும் பல ஆபரணங்களை நாம் அணிந்து மகிழ்வோம்! அழகான புதிய ஆடைகளை உடுத்துவோம்!

பின்பு, பாற்சோறு மறையுமாறு அதன் மேல் நெய் வார்த்து செய்த அக்கார அடிசிலை, எங்கள் முழங்கையெல்லாம் நெய்யொழுக நாம் உண்போம் ! இவ்வாறு உன்னுடன் சேர்ந்திருந்து, உள்ளம் குளிர்ந்து, பாவை நோன்பை முடிக்கவே நாங்கள் வந்துள்ளோம் ! எங்களுக்கு அருள்வாயாக!


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா:                 "பகைவரை வெல்லும் சிறப்பு மிக்கவனே" எனும்போது, பகைவர்கள் வெல்லப்படவேன்டியவர் தானே, என்ற எண்ணம் எழுகிறதல்லவா? 'கூடார்' என்பவர் பகைவர் தாம் என்பதில்லை. பரமனை அறியாதவர்கள்; அறிந்தும் பயப்படுகிறவர்கள்; அறிந்தும் விபரீத குதர்க்க குயுக்திகளால் குழம்பினவர்கள்; அறிந்தும் பரமனை ஏற்காமல் விரோதம் பாராட்டுபவர்கள்; என்று கூடார் நால்வகைப்படுவர்.


உன் தன்னைப் பாடி யாம் பெறும் சம்மானம்:

நன்றாக கவனித்தால், இந்த கட்டத்தில், ஆண்டாள் "சம்மானமாக இதைக் கொடு அதைக் கொடு" என்று குறிப்பாக எதுவும் கண்ணனிடம் வேண்டவில்லை. ஆண்டாள் கண்ணனிடம், "நான் உனக்குச் சூடிக் கொடுத்த மாலைகளுக்கு இணையாக உன் சம்மானம் இருக்க வேண்டும்" என்று சொல்கிறாள் போலும்.

"உயர்ந்ததாக ஒன்றைக் கொடு" என்று குறிப்பில் சொல்கிறாள் ஆண்டாள்! அதன் பொருள் 'கண்ணனே சம்மானம்' என்பது தவிர வெறென்ன இருக்க முடியும்?


நாடு புகழும் பரிசினால் நன்றாக:

கண்ணன் "நாடு புகழும் பரிசை", அடியவரே பிரமித்துப் போகும் வண்ணம், அவர்களுக்கு அளிக்க வல்லவன். கண்ணன் குசேலனுக்கு (அவன் வாய் விட்டுக் கேட்காதபோதும் கூட) வழங்கியது நாடறியும் பரிசல்லவா? அது போலவே, திரௌபதிக்கும், தக்க தருணத்தில் அவள் மானத்தைக் காக்கும் விதமாக, கண்ணன் வழங்கியதும், ஆன்றோரும் சான்றோரும் போற்றிய பரிசு தானே! பஞ்சபாண்டவர்க்கோ யுத்த வெற்றியைப் பரிசாக வழங்கி தர்மத்தை நிலைநாட்டினான் ஸ்ரீகிருஷ்ணன்!


சூடகமே தோள்வளையே--- என்றனைய பல்கலனும்:

சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாடகம் என்று அத்தனை நகைகளாலும் தங்களை அலங்கரித்துக் கொள்ளப் போவதாக கோபியர் கண்ணனிடம் சொல்கின்றனர். எந்தக் காலத்திலும் பெண்டிருக்கு நகை மேல் ஆசை உண்டு போலும் . நீலமேக வண்ணனின் சுந்தர வடிவத்திற்கு ஏற்றாற்போல் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஶ்ரீஆண்டாளின் விருப்பம் இதில் பளிச்சிடுகிறது.

காறை பூணும் கண்ணாடிகாணும் தன் கையில் வளைகுலுக்கும்

கூறையுடுக்கும் அயர்க்கும் தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்,

என்று தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆண்டாளின் ஆசையை, பெரியாழ்வார் தன் திருமொழி'யில் சொல்கிறார். (3-7-7)

மேலும் அவர் தன் பங்குக்கு, இப்பாசுரத்திற்கு இணையாக

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்,

கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்,

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து,

என்று தனது திருப்பல்லாண்டில் பாடியுள்ளார். தந்தைக்கும் மகளுக்கும் என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்!


கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்:

மேலும், பகவத் கைங்கர்யம் செய்யும் ஒரே விருப்பத்தில் கண்ணனை சரண் புகுந்த இடைச்சியர்க்கு, சிற்றின்பங்களான புத்தாடை உடுப்பதிலும், அக்கார அடிசிலை முழங்கையில் நெய் வழிய உண்ணுவதிலும் அப்படி என்ன ஆசை என்ற கேள்வி எழலாம். அவை எல்லாம் "பாவை நோன்பு" நிறைவடைவதற்கான குறியீடுகள் மட்டுமே. இடைச்சியரின் விருப்பம் கண்ணனோடு கூடியிருந்து குளிர்தல் மட்டுமே ஆகும். இதிலும், அடியவருடன் சேர்ந்து பகவத் அனுபவத்தில் திளைத்தல் என்ற "ஶ்ரீவைஷ்ணவக் கோட்பாடு" ஸ்ரீகோதை நாச்சியாரால் வலியுறுத்தப்படுகிறது.

இடைச்சியரின் நோன்பு பரமன் திருவருளால் சுபமாக நிறைவடையும் நிலைக்கு வந்து விட்டது. நோன்பு நோற்கும் முன், (2-வது பாசுரத்தில்) 'நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மலரிட்டு நாம் முடியோம்' என்ற இடைச்சியர் இப்போது நோன்பு பூர்த்தியாகி விட்டதால் 'பாற்சோறு மூட நெய் பெய்து' செய்த அக்கார அடிசிலை உண்போம் என்கின்றனர்.


பாசுர விசேஷம்:

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா:

அடியார்களை மட்டுமன்றி, தன்னுடைய திருக்கல்யாண (ஶௌர்யம், ஶௌஸில்யம், ஸௌந்தர்யம்) குணங்களால் ஆகாதவரைக் கூட பரந்தாமன் தன் வசப்படுத்தி ஆட்கொள்வான் என்பதை குறிப்பில் உணர்த்துகிறது.

இந்திரன் இறுமாப்போடு கொட்டிய பெருமழையிலிருந்து கோவர்த்தன கிரியினைக் குடையாகத் தாங்கிப் பிடித்து ஆயர்பாடியைக் காத்ததின் பின், இந்திரனே வருந்தி, மனந்திருந்தி, கண்ணனுக்கு "ஸ்ரீகோவிந்தராஜன்" என்று பெயர் சூட்டிப் பட்டம் கட்டினான். இதுவே "ஸ்ரீகோவிந்த பட்டாபிஷேகம்" என்று உயர்த்திக் சொல்லப்படுகின்றது.


சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே,

சூடகம் = காப்பு; 

தோள்வளை = திரு இலச்சினை (ஒரு வைணவனின் சங்கு-சக்கர சின்னத்தைக் குறிப்பதாக உள்ளர்த்தம்)

தோடு = திருமந்திரம் (பிரணவாதார வடிவைக் குறிப்பதால், ஞானம் என்ற உள்ளர்த்தமும் உண்டு)

செவிப்பூ = த்வயம் (பக்தியைக் குறிப்பது)

பாடகம் = சரம சுலோகம் (காலில் அணியும் அணிகலனைக் குறிப்பதால், சரணாகதியைக் குறிப்பதாகவும் சொல்லலாம்)

பல்கலன் = (தோடு, செவிப்பூ, பாடகம் என்ற மூன்றும் ) ஒரு வைணவனுக்குரிய ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் என்ற குணங்களைக் குறிப்பதாம்.

இவை ஶ்ரீவைஷ்ணவ நெறியில் இணைந்த ஒருவருக்கு ஆச்சாரியார் செய்து வைக்கும் பஞ்ச சம்ஸ்காரத்தின் உருவகமாகக் கொள்ளலாம்.

(தோள் வளையே) வலக்கையில் ஸுதர்ஸன சக்கரக் குறியீட்டையும், இடக்கையில் பாஞ்சஜன்ய சங்கின் குறியீட்டையும், திரு இலச்சினை, பொறித்துக் கொள்ளுதல்

(சூடகமே) - மேனியில் பரமனுடைய 12 உப-வ்யூஹங்களைக் குறிக்கும் வகையில் ஊர்த்துவபுண்டரங்கள் எனப்படும் திருமண் ஸ்ரீ சூர்ணம் இட்டுக் கொள்ளுதல் (திருமண் காப்பு )

(தோடே) பிரணவ வடிவைக் கொண்டிருக்கும் செவியினைக் குறிக்கின்றது. ரஹஸ்ய த்ரயத்தில் வைணவ நெறியின் மூலமந்திரத்தை குருவின் மூலம் உபதேசம் பெறுதல்

(செவிப்பூவே) திருமகளாகிய தாயாருடன் தொடர்புடைய இரண்டாவது இரஹஸ்யமான த்வய மந்த்ர உபதேசம் பெறுதல்

(பாடகமே) காலில் அணியும் அணிகலன், இறைவன் திருவடியில் சரணம் செய்வதைக் குறிக்கும் விதமாய், சரமஸ்லோகம் என்கின்ற இறை உறுதிமொழியைக் குறிக்கின்றது.


ஆடை உடுப்போம் -- பறையேலோ:                          கண்ணன் உடுத்திக் களைந்திட்ட ஆடையைக் காதலோடு ஆயர்குலப் பெண்கள் உடுத்துவார்களாம் ! அவ்வளவு உரிமை அவன் மேலே! இதையே, இவள் தந்தை பெரியாழ்வார், திருப்பல்லாண்டு பிரபந்தத்தில்  உடுத்துக் களைத்த நின் பீதகஆடை உடுத்துக் கலத்ததுண்டு  என்கிறார்.

பாற்சோறு = பகவத் சேவை (கைங்கர்யம்) என்று உள்ளர்த்தம்.

மூடநெய் பெய்து = ஆத்மார்த்தமாக, அகந்தையின்றி செய்யப்படும் (பகவத் சேவை)

(கூடியிருந்து குளிர்தல்) இடைச்சியர் குழுவினர் மோட்ச சித்தியை அடைதல்

'பறை' என்பது பொதுவாக பகவத் கைங்கர்யத்தைக் குறிக்கும் என்பர்.


இப்பாசுரத்தில் ஆரம்பித்து, 28-வது பாசுரத்தில் (குறைவொன்றுமில்லாத கோவிந்தா உன் தன்னோடு) மற்றும், 29-வது பாசுரத்தில் (இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!) என திருப்பாவையில் மூன்று முறை கோவிந்த நாமம் ஓதப்பட்டு நிறைவடைகிறது. (கோவிந்த நாம சங்கீர்த்தனம். கோவிந்தா கோவிந்தா கோவிந்தா!)

கோ வாகிய பசுக்கள் கண்ணனிடம் தம்மைக் காக்கச் சொல்லிக் கேட்கவில்லை, கண்ணன் அவற்றின் பின் சென்று காத்த போது, அவனைப் புகழவுமில்லை, இகழவுமில்லை. ஆயினும் கண்ணன் அவற்றைக் காத்தானல்லவா? அது போன்றேத் தன்னை அண்டியவர் அண்டாதவர், அறிந்தவர், அறியாதவர், இப்படி அனைவரையும் காப்பவன் என்பதைக் குறிக்கவே "கோவிந்த" நாமம்.


1-26 வரையிலான பாசுரங்கள் மூலமாக, கோபியர்கள் கண்ணனைப் பற்றியே சிந்தித்தும் (ஸாலோக்யம்)  கண்ணனை நெருங்கியும் (ஸாமீப்யம்), கண்ணனை தரிஸித்தும் (ஸாருப்யம்)  ப்ரபத்தி என்கிற சரணாகதியைச் செய்தனர். இந்தப் பாசுரத்தில் இவை மூன்றையும் தாண்டி, தாம் கண்ணனோடே ஒன்றாய்க் கூடிக் கலந்து மகிழ வேண்டும் என்ற விண்ணப்பத்தை வைக்கின்றனர். (ஸாயுஜ்யம்) = கூடிக் குளிர்ந்தே.

மேலும், இப்பாசுரத்தில் வீடுபேறு பெற்ற பின் அடியார்கள் வைகுண்டத்தில் பெறுகின்ற இன்பங்களைப் பரிசுகள் என்ற குறிப்பால் ஆண்டாள் உணர்த்துகிறாள். அதில் தலையாயது, இறைவனுக்குப் புரியும் தொண்டு (கைங்கர்யம்) என்று முடிக்கிறாள்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்,

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

அடியேன்,