திருப்பாவை பாசுரம் 30
(வங்கக்கடல் கடைந்த மாதவனை, கேசவனை)
திருப்பாவையின் முப்பதாவது பாசுரம். திருப்பாவை சொல்லும் அடியார்கள் ஶ்ரீ கண்ணபிரானின் ப்ரேமைக்கும், க்ருபைக்கும் பாத்திரமாகி, பரமாத்ம ஆனந்தம் அடைவர் என்ற 'பலஸ்ருதி ' பாசுரம் இதுவாகும்.
இப்பாடலில் தான், தன்னை யாரென்று "பட்டர்பிரான் கோதை" ஆண்டாள் அறிவிக்கிறாள். முதல் பாசுரத்திலும் "நாராயணனே நமக்கே பறை தருவான்" என்று நூற்பயனைச் சொல்லுகிறாள். இந்தக் கடைசி பாசுரத்தில், “செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலை" எண்ணி தியானித்து வணங்கி சரணம் செய்பவர்கள், "எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்" என்று நூற்பயன் சொல்லி முடிக்கிறாள்.
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை,
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி,
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன,
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்,
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
பாசுர விளக்கம்:
"அழகிய கப்பல்கள் உலாவும் பாற்கடலை கடைந்த அந்த மாதவனை, கேசவனை, சந்திரனை ஒத்த அழகுடைய பெண்கள் பாடி தங்களுக்கு வேண்டிய வரங்களை (பறை) யாசித்துப் பெற்றதை பற்றி சொல்லும் பாசுரம்."
"ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த தாமரை மலர் மாலை சூடிய, பட்டர்பிரான் பெரியாழ்வாரின் மகளாகிய, கோதையின் (ஆண்டாள்) சங்க தமிழ் மாலையாம் இந்த முப்பது பாடல்களையும் தவறாமல் சொல்பவர்கள், நான்கு வலிமையான தோள்களையும் அழகிய சிவந்த கண்களையும் கொண்ட திருமாலின் அருள் பெற்று என்றும் இன்புறுவர்."
வங்கக் கடல்கடைந்த:
பாற்கடலைக் கடைந்தவர்கள் தேவர்களும் அசுரர்களுமென்று அவர்கள் எண்ணலாம். ஆயினும் அவர்களுக்கு ஆதாரமாக கூர்மமாக (ஆமை) நடுவில் நின்று, மந்தர மலையைத் தாங்கியவன், பரந்தாமன் அல்லவா? கூர்மமாக முதுகில் மலையைத் தாங்கித் திருப்பாற்கடலைக் கடைந்தது மட்டுமல்ல, மோஹினி அவதாரமெடுத்து அரக்கர்களை மயக்கி, அமிர்தமெல்லாம் தேவர்களுக்கேக் கிடைக்கும் படிச் செய்தவனும் இந்த மாதவன் தான். நாமும் எல்லாக் காரியங்களையும் நான் செய்தேன், நானே செய்தேன் என்று அகங்காரம் கொள்கின்றோமே! நமக்குள்ளே சக்தியாக இருந்து நம்மை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி இறைவனே அல்லவா?
மாதவனை:
தேவர்களும் அசுரர்களும் அமரத்துவம் தருகின்ற அமுதத்தை வேண்டிப் பாற்கடலைக் கடைவதான செயலுக்குக் கண்ணனிடம் (திருமால்) உதவி வேண்ட, அதைக் காரணமாக வைத்து, அந்த நாராயணன் தன்னுடைய மனதிற்கு உகந்தவளாகிய பிராட்டியெனும் பெண்ணமுதைப் பெற்றான். அதைக் குறிக்கும்படி 'மாதவன்' என்ற பெயரைச் சொல்கிறாள் ஆண்டாள்.
முக்கண்ணன் நஞ்சுண்ண, விண்ணவர் அமுதுண்ண, கண்ணன் பெண்ணமுது கொண்டான் என்பதாக 'ஶ்ரீபராசர பட்டர்' விளக்கம் தருகிறார். உண்மையிலேயே அமுதத்தை அடைந்தவன் திருமால் மட்டுமே.
கேசவனை:
சுருள்முடி கொண்டவனை. கேசவன் மற்றும் மார்கழி மாதத்தின் தொடர்பு பற்றி அறிமுகப் பகுதியிலேயே அறிந்தோமல்லவா?
அடியவருக்குத் துன்பமுண்டாக்கும் கேஸி (குதிரை வடிவம்) முதலான பல அசுரர்களை அழித்தவன்.
திங்கள் திருமுகத்து சேயிழையார்:
பால்நிலா முகமும், நகைகளும் அணிந்த ஆயர்பாடிப் பெண்டிர். ஶ்ரீகண்ணனைக் கண்டதாலே குளிர்ச்சியும், மலர்ச்சியும், மகிழ்ச்சியுமான பற்பல செல்வ நலங்களை அடைந்த அழகிய திங்கள் முகம் அந்த ஆயர்குலப் பெண்களுக்கு!
27ம் பாசுரத்திலே மார்கழி நோன்பிருந்து பெற்ற சூடகம், பாடகம் முதலான பற்பல அணிகலன்களை அணிந்த பெண்கள் அல்லவா? ஆகவே "சேயிழையார்" என்கிறாள் ஶ்ரீஆண்டாள்.
சென்று இறைஞ்சி:
கடந்த 29 பாசுரங்களில் சொன்னதெல்லாம் செய்து, வணங்கி கண்ணனளித்த பறையினைப் பெற்ற வழிமுறைகளை குறிப்பிடுகிறாள்.
அப்பறை:
ஆயர்பாடியில், ஆயர்குலப் பெண்டிர், நந்தகோபனது மாளிகையில் இருந்த ஶ்ரீகண்ணனைக் கண்டு, அவன் மனைவியாகிய ஶ்ரீநப்பின்னை தேவியை முன்னிட்டுப் பெற்றப் பறை, அந்தப்பறை, அதுபோல வேறொன்று இல்லாத சிறப்பான பறை, அப்பேர்பட்ட பறை.
பட்டர்பிரான் கோதை:
இந்த பூவுலகிற்கே அணியான புதுவை என்கிற ஶ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த விஷ்ணுசித்தர் பெரியாழ்வாரின் திருமகள் கோதை பிற்காலத்தில் பக்தியால் உணர்ந்து பாடினாள். ஊரும் பேரும் சொல்லிப் பெருமை செய்கிறாள் ஶ்ரீஆண்டாள்.
பைங்கமலத் தண்தெரியல்:
குளிர்ச்சி பொருந்திய தாமரை மாலை அணிந்தவள். அலங்கல், ஆரம், இண்டை, கண்ணி, கோதை, தாமம், தார், தொங்கல், தொடையல், பிணையல், வடம், தெரியல் இவை பலவகை மாலைகள். அதில் தெரியல் என்பது தொங்குமாலை. இப்போது அது "ஆண்டாள் மாலை"யென்றே வெகுஜனங்களால் குறிக்கப்படுகின்றது.
சங்கத் தமிழ்மாலை:
வடமொழி கோலோச்சிய காலத்தில் வாழ்ந்தாலும், வடமொழி நன்கு தெரிந்தவளாயிருந்தாலும், அதிலே யாப்பிசைத்தால் பெருமையுண்டு என்று தெரிந்திருந்தாலும், எல்லோருக்கும் புரியும் வகையிலே,தெய்வத் திருமொழியாம், இனிமைத் தமிழிலே 'ஶ்ரீஆண்டாள்' தனது மேலான திருப்பாவையைப் பாடினாள்.
சங்கம் என்றால் கூட்டம் என்று பொருள். தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் பலர் கூடியிருந்த அவைக்கு சங்கம் என்று பெயர்.தமிழகத்தின் சங்க காலத்தில், புலவர்கள் இயற்றிய இலக்கியங்களைத் தரம் ஆராய்ந்து, இயற்றியவரைக் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்று, ஏற்றுக்கொள்வதா, புறந்தள்ளுவதா என்று சங்கப்புலவர்கள் கூடி முடிவு செய்வார்கள். கோதை வாழ்ந்த காலத்தில் சங்கம் இருந்ததா? இல்லையா? என்பது போன்ற சரித்திர ஆராய்ச்சியில் நாம் ஈடுபட வேண்டியதில்லை.
வேறொருவிதத்தில் ஶ்ரீவைஷ்ணவ நெறியினர் சொல்லும் விளக்கம், கூட்டமாய்க் கூடி அடியவர்களெல்லாம் ஒன்றாக பாராயணம் செய்யப்பட்ட திருப்பாவை என்னும் தோத்திர மாலை என்று கொள்ளலாம் என்பர்.
முப்பதும் தப்பாமே:
ஒரு இரத்தினமாலையில், ஒரு மணி குறைந்தாலும் அதன் அழகுக்குக் குறைவு ஏற்படுமல்லவா? ஆகவே உயர்ந்த பாமாலையான இந்த 30 பாசுரங்களில் ஒன்றும் குறையாமல், அத்தனையும் பாட வேண்டும். முப்பதையும் இல்லாவிட்டாலும் 29வது பாசுரம் சிற்றஞ் சிறுகாலையை யாவது சொல்ல வேண்டுமென்பது பெரியோர் கூற்று.
இங்கு இப் பரிசுரைப்பார்:
இம்மண்ணுலகிலேயே ஓதிவர, இறைவன் எங்கே எங்கே என்று அலைய வேண்டிய அவசியமில்லை. அவனுடைய அருளைப் பெறுவதற்கு, இம்மண்ணுலகிலேயே கோதையளித்த திருப்பாவையினை ஓதினால் போதுமே! நாம் ஆயர்பாடியிலிருந்த இடைச்சிகளாகவோ, பரந்தாமனைப் பாடிய ஆழ்வார்களாகவோ, அவன் பணியிலே இருக்கும் ஆச்சார்யர்களாகவோ, ஆண்டாளைப் போல அவனையே மணாளனாக வரிக்கின்றவர்களாகவோ இல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், இறையருள் பெறலாம்.
ஈரிரண்டு மால்வரைதோள்:
வரை = மலை; மலை போன்ற பெரிதான நான்கு தோள்கள்.
சங்கும் சக்கரமும் தாங்கும் இரண்டு, அபயமும் வரமும் அருளும் இரண்டு என்று நான்கு கரங்களைத் தாங்கும் அகண்ட பெருந்தோள்கள்.
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்:
செவ்வரியோடிய விழிகளும், அழகுமுகமும் கொண்ட, திருமகள் நாயகன் பரமன் அருளால்,
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர்:
எல்லா உலகிலும் இன்பமுற்று வாழ்வர். செங்கண், அங்கண், என்றெல்லாம் சொல்லுவது இறைவனது அருட்பார்வை மீதில் அடியவருக்கு இருக்கும் ஆசையினால்! இறைவனது கண்களைத் தாமரைக்கு ஒப்பாகவே பலரும் பாடியிருக்கிறவாறு ஆண்டாளும் பாடியுள்ளாள்.
பாசுர விசேஷம்:
சேயிழையார்:
ஆச்சார்யர் உபதேசம் பெற்று, அடியவர் குழுவோடு கூடி சரணாகதி செய்து, இறைத்தொண்டு செய்கின்றவர்களே சேயிழையார், நேரிழையீர்!
கோவிந்த நாமத்தைப் போலவே கோதா நாமத்திற்கு பொருளுண்டு. கோ என்றால் நல்ல உயர்ந்த கருத்துகள் என்று பொருள் கொண்டால், ததாயதே - தா- என்றால் தருவது என்று கொண்டால், கோதா - அத்தகைய "உயர்ந்த கருத்துக்களைத் தந்தவள்" என்று பொருள். திருப்பாவை முழுதுமே மிகவுயர்ந்த வேத ஸாரத்தை உள்ளடக்கியது தான்.
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்கோதைசொன்ன:
பசுமை பொருந்திய திருத்துழாய் மாலையும், செந்தாமரை மாலையும் அணிந்த கோதைக்கு, ஶ்ரீவில்லிப்புத்தூர் பட்டர்பிரானாகிய பெரியாழ்வார் தந்தை மட்டுமல்ல, ஆச்சார்யரும் அவரே! இங்கே தன்னை ஆண்டாள் குருவின் சிஷ்யையாகத் தான் அடையாளங் கூறிக்கொள்கிறாள். ஶ்ரீமதுரகவியாழ்வார் தன்னுடைய ஆசிரியரான ஶ்ரீநம்மாழ்வாரை முன்னிட்டே பாசுரங்கள் இயற்றியதைப் போலவே, ஶ்ரீஆண்டாளும் தன்னுடைய ஆசிரியரை முன்னிட்டே, சரணாகத சாரமாக விளங்கும் இந்தத் திருப்பாவையைப் பாடியிருக்கிறாள். இதுவே திவ்ய பிரபந்தங்களுள், திருப்பாவைக்கு இருக்கும் தனிச்சிறப்பு என்று ஶ்ரீவைஷ்ணவ குருபரம்பரையினர் கருத்து.
செல்வத் திருமாலால்:
இப்பாசுரம் தொடங்கும் போதும் திருமகள் தொடர்பு, முடியும் போதும் திருமகளுடன் கூடிய திருமால், என்று உறுதியிடப் படுகிறது.
ஸ்ரீஆண்டாள் கருணையுடன், அடியேனுடைய திருப்பாவை பதிவுகளை, ஸ்ரீ ஆண்டாளின் மங்களாசாசனுத்துடன் நிறைவு செய்கிறேன்.
நல்ல திருமல்லி நாடியார்க்கு மங்களம்!
நால்திசையும் போற்றும் எங்கள் நாச்சியார்க்கு மங்களம்!
மல்லிகை தோள் மன்னனாரை மணம் புரிந்தார்க்கு மங்களம்!
மாலை சூடிக்கொடுத்தாள் மலர்தாள்களுக்கு மங்களமே!!
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!!!
அடியேன்,