Popular Posts

Sunday 23 June 2024

திருமழிசை ஆழ்வார்

 

ஆழ்வார்கள் வைபவம் 04

 

*திருமழிசை ஆழ்வார்*

 

தையில் மகம் இன்று தாரணியீர்!* ஏற்றம் இந்தத்

தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் * –துய்ய மதி

பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று *

நற்றவர்கள் கொண்டாடும் நாள்

(உபதேச ரத்தினமாலை – 12)

அத்ரி,பிருகு, வசிஷ்டர், பார்கவர் ஆகிய முனிவர்கள் பூமியில் தவம் செய்ய ஒரு சிறந்த தலத்தை காட்ட வேண்டி பிரம்மனை கேட்டனர். அவர் மஹிசாரண்யம் என்னும் இந்த க்ஷேத்திரத்தை காட்டினார். அதுமட்டுமன்றி இந்த தலத்தின் மேன்மையை  ஒரு துலாக்கோலில் மற்ற தலங்களுடன் ஒப்பிட்டு நிரூபித்தார். இதன் பெருமையை உணர்த்திய செய்தியை, திருக்கச்சி நம்பிகள் தம்முடைய ஒரு வெண்பா மூலம் சுட்டிக்காட்டுகிறார்:

 

*உலகு மழிசைய முள்ளுணர்ந்து தம்மில்*

*புலவர் புகழ்க் கோலால் தூக்க – உலகுதன்னை*

*வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே*

*வைத்தெடுத்த பக்கம் வலிது.*

 

*பார்க்கவ முனிவர், கனகாங்கி:*

 

பிரம்ம தேவன் மூலம் இந்தத் தலத்தின் சிறப்பைக் கேட்டறிந்த பார்க்கவர் முதலிய சில முனிவர்கள் அந்தத் தலத்தில் வந்து தவம் செய்யலாயினர். பார்க்கவ முனிவர் திருமாலை நோக்கி தீர்க்கசத்திர யாகம் புரிந்தார். அந்த நேரத்தில் தான், கந்தர்வப் பெண்ணான அவருடைய மனைவியார் கருவுற்று தைத் திங்களில் மகம் நாளில் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு இடைப் பகுதியில்) ஒரு பிள்ளையைப் பெற்றார்.முழுமையற்ற நிலையில் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல் இருந்ததால், அதை ஒரு மூங்கில் புதரில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

 

அவர்கள் சென்ற பின்பு, அன்னை மஹாலக்ஷ்மி, அய்யன் விஷ்ணுவுடன் வந்து அக்குழந்தையை எடுத்து ஆசீர்வதித்து விட்டுச் சென்றனர். அவர்களின் அருளால் அக்குழந்தை ஞானமும், முழு வடிவமும் பெற்றது. அவரது வலது கால் கட்டை விரலில் கூடுதலான ஒரு கண்ணும் இருக்கும்.

 

*திருவாளன் பங்கயச்செல்வி*

 

ந்தப் பிள்ளையை, பிரம்புத் தொழில் புரியும் திருவாளன் என்பவன் பிரம்பு அறுத்துப் போவதற்காக அங்கே வந்தபோது கண்டான். குழந்தை ஒன்று அந்தப் பிரம்புப் புதரில் அழுவதைக் கண்டதும் பரிவோடு அள்ளியெடுத்தான்.

 

பிள்ளையில்லாத தன்னுடைய குறையைத் தீர்ப்பதற்காகவே இறைவன் இக் குழந்தையைக் கொடுத்தருளியிருக்கிறான் என்று எண்ணி, பெருமகிழ்வோடு வீட்டுக்கு எடுத்துச் சென்றான். தன் மனைவியான பங்கயச்செல்வியிடம் குழந்தையைக் கொடுத்து, அந்தக் குழந்தை கிடைத்த விவரத்தையும் கூறினான்.

 

பங்கயச்செல்வி தாய் உள்ளத் தவிப்போடு பால் புகட்ட முயன்றும் குழந்தை அப்பாலைக் குடிக்க மறுத்தது. அந்தக் குழந்தை பால் உண்ணவில்லையே தவிர, அதன் மேனி சிறிதும் வாட்டமடையவில்லை! பூரண வளர்ச்சியோடு மேன்மேலும் பொலிவுற்றது. அதைக் கண்டு அவர்களிருவரும் பெரும் வியப்படைந்தார்கள். இந்தச் செய்தி ஊர் மக்களுக்குப் பரவியது.


திருமழிசை இறைவன் அருளால் தோன்றிய அந்தக் குழந்தையை ‘திருமழிசைப் பிரான்’ என்ற பெயராலேயே கூப்பிட்டுக் கொண்டாடினார்கள்.

 

ஒரு நாள், குழந்தை பாக்கியமற்ற, வயது முதிர்ந்த தம்பதியர் வந்து அக்குழந்தையைக் கண்டனர். அவர்கள் குழந்தைக்கு, பாலமுது கொடுத்த போது அக்குழந்தை அதை ஏற்றுக் கொண்டது.

 

இதைக் கண்ட பங்கயச்செல்வி வியப்புற்றாள். தன் மார்பிலே சுரந்த பாலைக் குடிக்காமல் இவர்கள் கொண்டுவந்த பாலைக் குடிக்கிறதே. சரி, எப்படியாவது இந்தக் குழந்தை உண்டால் சரி என்று எண்ணிய அவள், தன் கணவரிடம்,  “இனி தினமும் அந்தப் பெரியவரை நம் குழந்தைக்கு பால் கொண்டுவந்து ஊட்டும்படி கேட்டுக்கொண்டாள்.

 

அவரும் அதற்கு இணங்கி அன்றுமுதல் நாள்தோறும் தன் வயதான மனைவியுடன் குழந்தைக்கு காய்ச்சிய பால் கொண்டு வந்து கொடுத்தார். குழந்தையும் புன்சிரிப்போடு பருகி மகிழ்ந்தது.

 

*கணிகண்ணன்*

 

தினமும் பால் காய்ச்சி சமர்ப்பித்துக் கொண்டிருந்த அந்த வயதான தம்பதியருக்கு பிள்ளையில்லா குறையை தீர்க்க திருவுள்ளம் பற்றியது அக்குழந்தை.  எப்போதும் பால் முழுவதையும் அருந்தி விடும் அக்குழந்தை அன்று அந்த பாலை மீதம் வைத்துவிட்டது. நீங்களும் அருந்துங்கள் என்று சொல்வது போல் ஜாடைக் காட்டியது. அதை அருந்தி விட்டு அவர்களும் வீடு திரும்பினர். அந்த பாலின் சக்தியினால் அவர்கள் இருவருக்கும் வியோதிகம் நீங்கி வாலிபம் திரும்பியது. வாழ்க்கையில் இருவரும் இன்புற்றிருந்த சமயம் மனைவி கருவுற்றாள். தெய்வக் குழந்தையின் சக்தியால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு *கணிகண்ணன்* என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.

 

அந்த தம்பதியர் கணிகண்ணனை திருமழிசையார் முன்னிலையில் கொண்டு வந்து விட, அவரது கடாக்ஷத்திலே நல்ல அறிவைப் பெற்று, அவருக்கு சிஷ்யன் ஆகி பாகவத நிஷ்டனாகி, இருவரும் தோழர்களாக வளர்ந்து வந்தார்கள்.  கனிகண்ணன், வேதங்கள், சமய நூல்கள் அனைத்தும் நன்கு கற்றான். அவன் திருமழிசை ஆழ்வாரின் நெருங்கிய நண்பனாகவும், நாளடைவில் அவரையே குருவாகவும் ஏற்றுக்கொண்டான்.

 

*பரம்பொருள்*

 

முனி குமாரராகையால், திருமழிசையார் வயது ஏழு வந்தவுடனேயே ஐம்புலன் அடக்கி அஷ்டாங்க யோகம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதற்கு இந்த உலகுக்கெல்லாம் மூலகாரணமான பரம்பொருள் யார் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே அத்தகைய பரம்பொருளைத் தியானித்து யோக நிஷ்டையில் அமர வேண்டும் என்று எண்ணிய அவர் அதற்குரிய வழியை ஆராய எல்லா சமய நூல்களையும், தத்துவங்களையும் கண்டறிய எண்ணினார்

 

அதன் அடிப்படையில், சாக்கியம், சமண மதங்களின் நூல்களைக் கற்றார். பின் அவற்றை விட்டு, சைவ சமயத்தில் புகுந்து சைவம் தொடர்பான நூல்களை ஆராய்ந்தார். பிறகு  “உலகுக்கெல்லாம் மூலகாரணமான முழுமுதற்பொருள் சிவபெருமானே!”  என்று தீர்மானித்து சைவ சமயத் தத்துவங்களுக்கு ஓர் அவதார புருஷராகவும் மகானாகவும் விளங்கினார்.

 

இவர் சமணம், சாக்கியம், சைவம் முதலிய மதங்களை கற்று பின்னர் பேயாழ்வாருடன் ஏற்பட்ட சம்பத்தத்தினால், மீண்டும் வைணவத்திற்கு வந்தார்.

இதை,இவரே பாடினார்-

 

*சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் அச்சங்கரனார்*

 

*ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம் – பாக்கியத்தால்*

 

*செங்கட் கரியானை சேர்ந்துயாம் தீதிலோம்*

 

*எங்கட்கு அரியதொன்றும் இல்*

 

*திருமழிசையாழ்வாரும் சொன்னவண்ணம் செய்த பெருமாளும்:-*

 

ஆழ்வார் தமது சீடர் கணிகண்ணனுடன் சேர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள திருவெங்குடியில் உள்ள திருமாலுக்கு தொண்டு செய்துவந்தார். அவர்கள் குடிலை சுத்தம் செய்து வரும் வயதான கிழவிக்கு தன யோகபலத்தாலே அனுக்ரக்ஹிக்க விரும்பினார். கிழவிக்கு என்ன வரம் வேண்டும்மென கேட்க, அவளும் தன் வயது முதிர்வினால் ஏற்பட்ட ஆழ்வாருக்கு  சேவை செய்ய இயலாமையை நீக்குமாறு கேட்க, ஆழ்வார் எப்போதும் இளமையாக இருக்கும்படி வரம் கொடுத்தார். பல காலம் சென்றாலும் இளமைக்குன்றாத அப்பெண்ணின் அழகில் மயங்கிய காஞ்சியை ஆண்ட பல்லவராயன் அவளைத் திருமணம் செய்துகொண்டான்.

 

பலகாலம் சென்றாலும் தன் மனைவியின் இளமை மாறாததை கண்டு வியப்புற்ற அரசன் மனைவியிடம் வினவினான். அவள் ஆழ்வாரின்பெருமையை எடுத்துச் சொல்ல தனக்கும் இளமை கிடைக்க வேண்டும் என்று கணிகண்ணனிடம் சொல்ல, ஆழ்வார் அவ்வாறு செய்ய மாட்டார் என்று பதிலளிக்க, குறைந்தபட்சம் தன்னைப் பற்றி கவிதை பாடுமாறு சொல்ல, ‘அவர் நாராயணனையன்றி எந்த நரனையும் பாடேன்‘ என்று சொல்ல, இதைக் கேட்டு, கோபமுற்ற அரசன், கணிகண்ணை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.இதைக் கேள்வியுற்ற ஆழ்வார், தானும் நாட்டை விட்டு செல்வதாக முடிவுசெய்து, யதோக்தகாரி பெருமானிடம்-

 

*கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி*

*மணிவண்ணா நீ கிடக்கவேண்டா துணிவுடைய*

*செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்*

*பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள்.*

 

என்று பாடினார். கணிகண்ணைன் செல்கின்றான், நானும் செல்கிறேன்,  பெருமானே, நீயும் இங்கு இருக்க வேண்டாம். நீ அதிசேஷனாகிய உன்னுடைய பாயைச் சுருட்டிக்கொண்டு எங்களுடன் கிளம்பி வா என்று விண்ணப்பித்தார்.

 

பெருமானும் அவ்வாறு சென்றார்.அவர்கள் ஒருநாள் இரவு தங்கியிருந்த இடம் “ஓர் இரவு இருக்கை” என்று அழைக்கப்பட்டு, அப்பெயர் மருவி “ஓரிக்கை” என்று இப்போது வழங்கப்படுகிறது. இவ்விஷயத்தை கேள்வியுற்ற அரசன், தான் செய்த தவறை மன்னிக்குமாறு வேண்டி, நாடு திரும்ப வேண்டிக்கொண்டார். திருமழிசையாழ்வாரும் திருமாலை நோக்கி-

 

*கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி*

*மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் துணிவுடைய*

*செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்*

*பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.*

 

கணிகண்ணைன் திரும்புகிறான், நானும் திரும்புகிறேன், கச்சியெம் பெருமானே, நீயும் ஆதிசேஷனாகிய உன்னுடைய பாயைச் விரித்து படுத்துக்கொள்ள எங்களுடன் கிளம்பி வா என்று விண்ணப்பித்தார்.

 

திருமாலும் திரும்பினார். ஆழ்வார் சொன்னபடி செய்தமையால், பெருமானுக்கு “சொன்னவண்ணம் செய்த பெருமாள்என்ற பெயர் பெற்றார்.

 

*திருக்குடந்தையில் திருமழிசையாழ்வார்.*

 

கும்பகோணம் சென்று ஆராவமுதனை தரிசிக்கச் சென்றார். பெரும்புலியூர் என்னும் கிராமத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் சென்று அமர்தார். அங்கு வேதம் ஓதிக்கொண்டிருந்த சில பிராமணர்கள், ஆழ்வார் வேதத்தை கேட்க தகுதியற்றவர் என்று கருதி ஓதுவதை நிறுத்தினர். இதைப் புரிந்துக்கொண்ட ஆழ்வார் அவ்விடத்தை விட்டு வெளியேறினார். அதன்பின் பிராமணர்கள் தாங்கள் விட்டவிடத்தை மறந்தனர். ஆழ்வார் ஒரு கருப்பு நெல்லைக் நகத்தால் கீறி வேத வாக்கியத்தை குறிப்பாலே உணர்த்தினார்.கிருஷ்ணானாம் வ்ரீஹிணாம் நகநிர்பிந்நம்“ என்ற விட்ட இடம் ஞாபகம் வர, ஆழ்வாரிடத்தில் மன்னிப்பு வேண்டினர்.

 

ஆழ்வாரின் பெருமையறிந்த சிலர், அவரை அங்கு நடந்த யாகசாலைக்கு அழைத்துசென்று மரியாதை செய்தனர். யாகசாலையில் இருந்த சிலர், இவர் வருகையைப் பொறுக்கவில்லை. இதனால் கோபமுற்ற ஆழ்வார் தன்னுள் அந்தர்யாமியாய் இருக்கும் கண்ணனை இவர்களுக்கு காட்டுமாறு பாடினார்-

 

*அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது என்கொலோ*

*இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்கவல்லையேல்*

*சக்கரம் கோல்கையனே சதங்கர் வாய் அடங்கிட*

*உட் கிடந்தவண்ணமே புறம் பொசிந்து காட்டிடே*

 

(இவர்கள் அறியாமையை போக்குவதற்கு பயன்படாமல் இருக்கும் உன் கைககள் எதற்கு? சக்கரத்தை ஆயுதமாக கொண்ட திருமாலே, நீ கிடக்கும் கோலத்தை என்னுளே தோன்றி உன்னை இவர்களுக்கு காட்டு)

 

பெருமானும் இவருள்ளே தோன்றி அவர்களுக்கு தன்னைக் காட்டினார்.

 

பின்னர், ஆராவமுதனை சென்று சேவித்த அவர், பக்தியால் பாடினார்-

 

* கால்கள் நொந்தவோ? நடுங்கு ஞால மேனமாய்*

 

*இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைக்சுரம்*

 

*கடந்த கால் பரந்த காவிரிக்கரை குடந்தையுள்*

 

*கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே.*  

(திருச்சந்த விருத்தம்-61)

 

இப்பாடலில் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு எனப் பாடியபோது, ஆராவமுதன் தன் சயன கோலத்தை விட்டு எழுந்திருக்க, பதறிய ஆழ்வார், “வாழி கேசனே” என்று பாடி ஆராவமுதனை மீண்டும் கிடக்கச் சொன்னார்.

 

இவர், திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி  என்ற இரு பிரபந்தங்களை இயற்றினார்.

 

பின்னர், நீண்ட காலம் அங்கிருந்து பெருமாளுக்கு சேவை செய்து பெருமாளின் திருவடியை அடைந்தார்.

 

இனி, அடுத்து நம்மாழ்வாரின் வைபவத்தைப் பற்றி  வரும் பதிவுகளில் காண்போம்.

அடியேன்,

சந்தான சேகர்.