*திருப்பாவை பாசுரம் 13*
முந்தைய பாசுரத்தில், ராமபிரானின் கீர்த்தி (சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானை!) பாடப்பட்டது. ராமனும் கண்ணனும், ஸ்ரீமன் நாராயணனே என்னும் காரணத்தினால், கோதை நாச்சியார் இப்பாசுரத்தில் "(புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்)" என்று இருவரையுமே போற்றிப் பாடி, கபடத் துயிலில் உள்ளவளை எழுப்புகிறாள்.
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை,
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்,
வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று,
புள்ளும்சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்,
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்.
[பறவை உருக்கொண்டு வந்த பகாசுரனின் வாயைக்கிழித்துக் கொன்ற கண்ணன், மற்றும், பொல்லா அரக்கன் ராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளியெறிந்து அவனை வதம் செய்த ராமனுடைய புகழைப் போற்றிப்பாடி, ஊரிலுள்ள அனைத்துப் பெண்களும் நோன்பு நோற்க, குறித்த இடத்தில் வந்து சேர்ந்து விட்டனர். வெள்ளி (சுக்கிரன்) உதயமாகி, வியாழன் (குரு கிரகம்) அஸ்தமித்து விட்டது. இரையைத் தேடிச் செல்லும் காலைப்பறவைகளின் இறக்கைகள் உண்டாக்கும் சப்தம் உன் காதுகளில் விழவில்லையா?
வண்டுகள் மொய்க்கும் அழகிய தாமரை மலர் போன்ற கண்களையுடையவளே! உள்ளமும் உடலும் குளிர, எங்களுடன் சேர்ந்து குளிர்ந்த நீரில் அமிழ்ந்து நீராடாமல் இப்படி படுக்கையில் கிடக்கலாமோ, அழகிய பெண்ணே! இந்நன்னாளில் தூங்குவது போல பாவனை செய்வதை விடுத்து, எங்களுடன் கலந்து நோன்புக்கு வருவாயாக!]
பாசுரக் சிறப்பு:-
இப்பாசுரத்தில் பகவத் கீதையில் பகவான் சொன்ன "ஞானயோகம்" பற்றிச் சொல்லப்படுகிறது. ஒருவர் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் ஆராய்ந்து, கேள்வி கேட்டு, உண்மை என்ன என்று உணர்ந்து கொள்ளும் அறிவுத் தேடலே, ஞான யோகம். சரீரத்திற்கும் ஆன்மாவிற்குமான வேறுபாட்டை அறிவின் மூலமாக உணர்ந்து கொள்ளுபவர், உலகப்பற்றிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடைவதைப் பற்றியும் அறிந்து கொள்வதே, ஞானயோகம். ஆயினும் வைணவத்தின் 'விஸிஷ்டாத்வைத' கோட்பாட்டினை முன்னிறுத்திய இராமானுஜரோ, ஞானத்தை, இறைபக்தியின் ஒரு அங்கமாகவே வலியுறுத்தியிருக்கிறார். இந்தப் பாடலில் புள்ளின் வாய் கீண்டது க்ருஷ்ணன் என்றும் பொல்லா அரக்கனை கொன்றது ராமன் என்றும் சொல்வது ஒரு வகை அர்த்தம்.
இன்னொரு வகையில், புள்ளின் வாய் கீண்டது ராவணன். புள் என்னும் பட்சியாகிய ஜடாயுவை கொன்றான் ராவணன். அந்த பொல்லா அரக்கனைக் கொன்றவன் ராமன், என்று முழுவதுமே ராமனைப் பற்றித்தான் பாடுகிறார்கள் என்று வேறொரு வகையில் ரசிக்கும்படியும் பெரியோர் அர்த்தங்கள் அருளியிருக்கிறார்கள்.
அரக்கன் என்றாலே தீயவன் தானே பொல்லா அரக்கன் என்று சொல்வது ஏன் என்று கேட்டால், நல்ல அரக்கர்களும் இருந்திருக்கிறார்கள். விபீஷணன், பிரகலாதன், மாவலி என்று நல்லவர்களும் அரக்கர் குலத்தில் தோன்றி பகவத் பக்தர்களாகவும் நல்ல சிஷ்டர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதுவும் ராவணன் செய்த பாவங்களை நினைத்து பொல்லா அரக்கன் என்றார்கள்.
வியாழம் என்பது ப்ரஹஸ்பதியை குறிக்கும். நாஸ்தீக மதமான சார்வாகத்திற்கு ப்ரஹஸ்பதியே ஆசார்யனாகவும் அவர்களுடைய சித்தாந்தத்தை உருவாக்கியதாகவும் சொல்வர். ஆக அப்படி நாஸ்தீகம் ஒழிந்து நல்ல ஞானம் எழுந்ததை வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்று குறிப்பால் சொல்கிறாள்.
மேலும் ‘மாயனை…’ பாசுரத்தில் நோன்பில் எப்படி பரமனை மூன்று கரணங்களாலும் துதிக்க வேண்டும் என்று சொன்ன பிறகு, அடுத்த பாசுரத்தில் ஒவ்வொரு வீடாக பெண்பிள்ளைகளை எழுப்ப ஆரம்பித்த போது முதல் பாட்டாக ‘புள்ளும் சிலம்பின காண்’ என்று தொடங்குகிறாள். அதை இங்கே நினைவு கூர்ந்து, அந்த அடையாளங்களை மறுபடி நினைவூட்டுகிறாள்.
*புள்ளும் சிலம்பின காண்* என்று கோதை ஆறாம் பாசுரத்தில் சொல்லியதை மறுபடியும் இங்கு பாட என்ன காரணம்? அப்போது, பறவைகள் துயிலெழுந்து கூவுவதைப் பற்றிச் சொல்கிறார் ஆண்டாள். இப்போது, பறவைகள் கூட்டிலிருந்து புறப்பட்டு இரை தேடும் இடங்களுக்கு பறந்து செல்லும்போது இறக்கைகள் படபடத்து ஏற்படும் சப்தத்தைப் பற்றிப் பாடி, இன்னும் அதிக சமயமாகி விட்டதை உணர்த்துகிறாள்!
*போதரிக் கண்ணினாய்* என்னும் பதத்தை விதவிதமாக பிரித்து பெரியோர் அனுபவிக்கிறார்கள். போது என்றால் புஷ்பம் – பூவினுடைய துளிர். அரி என்றால் வண்டு. பூவில் வண்டு மொய்த்தாற் போல் அலையும் கண்களை – உன் கண்ணசைவை கண்டு கொண்டோம் – என்று சொல்கிறார்கள்.
போதரி என்பதை, போது+அரி என்று பிரிக்க வேண்டும். அரி என்றால் வண்டு. போது என்றால் மலரின் பருவம். காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் மலர் என்ற வழக்கும் உண்டல்லவா. அரும்பு - முழுதும் மூடியிருப்பது; மலர் - முழுதும் விரிந்திருப்பது; *போது* என்பது பாதி மூடியும் பாதி திறந்தும் இருப்பது. அதாவது “மலர்ந்தும் மலராத பாதி மலர்”. அப்படியிருக்கின்ற போதில் ஒரு கருவண்டு நுழைந்தது.
வேறொரு அர்த்தமாக போது என்றால் பூ, அரி என்றால் மான் – இவைகளைப்போன்ற விழிகளைக் கொண்டவளே என்றும் கொள்ளலாம். வேறொரு விதமாக போது என்றால் பூ, அதை அரி என்றால் அதிகமான– பூவின் அழகையும் விஞ்சக்கூடிய அழகான கண்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
அப்படியிருக்கின்ற போதில் ஒரு கருவண்டு நுழைந்தது. வெண்ணிறப் போதினுள் கருநிற வண்டு இருப்பது போன்ற அழகிய கண்களை உடைய தோழியைப் பாடி அழைக்கின்றால் ஆண்டாள்.
*கீர்த்திமைப் பாடி* என்பது பத்து இந்திரியங்களையும், மனத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஆச்சார்யனைப் போற்றுகிறது.
*பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்* என்பது (ஒருவனைத் தவிர) மற்ற சீடர்களெல்லாம் ஆச்சார்யனை அடைவதற்கு தயாராகி விட்டதை குறிக்கிறது.
*வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று* என்பது ஞானம் புலரும் மற்றும் அஞ்ஞான இருள் விலகும் சுப வேளையை குறிப்பில் உணர்த்துவதாம்.
*குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே* என்பது பகவத் அனுபவத்தில் திளைத்து மகிழ, முன் வைக்கப்படும் அழைப்பை உள்ளர்த்தமாக கொண்டது.
*பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்து* எனும்போது, கைவல்யமே போதும் என்று இருக்கும் அந்த ஒற்றைச் சீடனை, ஆச்சார்ய உபதேசத்திற்கு வந்து மோட்ச சித்தியின் உபாயத்தை அறிந்து கொள்ளுமாறு மற்ற சீடர்கள் அழைக்கிறார்கள் என்பது உள்ளுரையாம். ஆச்சார்ய சம்பந்தம் கிடைக்கும் நாள் என்பதால் "நன்னாள்" என்று கொண்டாடப்படுகிறது.
நாளை 14ம் பாசுரத்தை அனுபவிப்போம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
அடியேன்,